கங்கை பிறக்கும் இடத்தில் கிடைத்த உன்னத அனுபவம்!
கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியின் சிறப்புகள் குறித்து விவரிக்கும் எழுத்தாளர், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கங்கையில் நீராட வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதையும், கடுமையான மலையேற்றமான கோமுக் பயணத்தில் தான் எதிர்கொண்ட இடர்பாட்டையும் இதில் கூறுகிறார்!
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 16
கங்கையின் பிறப்பிடமான கங்கோத்ரியின் சிறப்புகள் குறித்து விவரிக்கும் எழுத்தாளர், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கங்கையில் நீராட வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதையும், கடுமையான மலையேற்றமான கோமுக் பயணத்தில் தான் எதிர்கொண்ட இடர்பாட்டையும் இதில் கூறுகிறார்!
திரு. அஜயன் பாலா:
கங்கோத்ரி... இமயத்தின் நான்கு முக்கிய புனிதத்தலங்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இடம். கோமுக்கில் பிறக்கும் பாகீரதி நதி இங்குதான் கங்கை எனும் பெயர் பெறுகிறது. பாவங்கள் தீர்க்கும் நதியாக இந்த கங்கை காலம் காலமாக புராணங்கள் இதிகாசங்களில் போற்றப்பட்டு வருகிறது. தனிமனித வாழ்வின் அகவிசாரங்கள் அனைத்துக்கும் மனித மனம் கங்கையிடம்தான் விடையைத் தேடி காலம் காலமாக அலைகிறது. இந்தியாவில் உள்ள பலகோடி மக்கள் அன்றாடம் இந்தப் பெயரை ஏதாவது ஒருவழியில் கேட்கவோ, பேசவோ, படிக்கவோ செய்கிறார்கள். அப்படிப்பட்ட கங்கையை அதன் பிறப்பிடத்திலேயே சந்திப்பதுதான் எத்தனை பெரிய விஷயம்.
கங்கோத்ரிக்கு வந்து கங்கையை தரிசிப்பதில் நானும் மிக ஆவலாக இருந்தேன். காரணம், அதன் மேல் காலம் காலமாக கட்டமைக்கப்பட்டுவரும் புனிதம் எனும் பிம்பம். வந்தபின் நான் கண்டது என்ன. உண்மையில் இந்த கங்கை புனித நதிதானா?
ஆம் கங்கை உண்மையில் புனித நதிதான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைவருமே வாழ்வில் ஒருமுறையேனும் தொட்டு வணங்கி உடல் நனைக்க வேண்டிய நதி இந்த கங்கை என்பதை எனக்கு உணர வைத்த இடம் இந்த கங்கோத்ரி. இதை நான் எப்படி உணர்ந்தேன், வாருங்கள் என்னோடு..
இதோ நானும் என் சகாக்களும் இங்கு ஜீப்பை விட்டு இறங்கினோம். வழிநெடுக பார்த்த ஆபத்தான நிலச்சரிவும், குறுகலான மலைப்பாதையும், மனதில் உண்டாக்கிய பதட்டமும், பிரமிப்பும் அடங்காதவர்களாகக் கடும்குளிரின் வரவேற்புப் பாடலை எதிர்கொண்டழைத்தப்படி எங்களுக்கான விடுதிகள் நோக்கி கூட்டமாக சுமைகளை எடுத்துக்கொண்டு நடந்தோம்.
நாங்கள் இறங்கியதுமே கண்ணில் தென்பட்டது இரண்டு விதமான நபர்கள். ஒன்று காவிகட்டிய யோகியர் கூட்டம். சடை முடியும், ருத்ராட்சமுமாய் பலரும் அங்குமிங்குமாகத் திரிந்து கொண்டிருந்தனர். பொதுவாக இமயத்தில் உலவும் இதுபோன்ற யோகிகளில் பலர் தமிழகம் உள்ளிட்ட தென்பகுதிகளிலிருந்தே வந்திருக்கின்றனர்.
இன்னொரு கூட்டம் டோலி சுமப்பவர்கள். கோமுக்கிற்கு நடக்க முடியாதவர்களை சுமந்து செல்பவர்கள். கோமுக் இங்கிருந்து 18 கி.மீ. மலைப்பாதையில் நடக்க வேண்டும். நாளை காலைதான் இங்கிருந்து புறப்படப்போகிறோம்.
Subscribe
கடுமையான குளிரில் எங்களை வரவேற்க, அனைவரும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதிக்குள் நுழைந்தோம்.
சிலர் எப்படா அறைகிடைக்கும் எனக் காத்திருந்து அறை கிடைத்ததும் குளிருக்கு அடக்கமான அறைகளின் படுக்கைகளில் தங்களின் உடல் களைப்போடு கம்பளியால் போர்த்திக்கொண்டனர். பயணம் தந்த அசதியும் களைப்பும் அப்படியான உறக்கத்துக்கு அவர்களை ஏங்க வைத்துவிட்டிருந்தது.
நானும் அவர்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவனில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்படியான உறக்கத்துக்கு முதலில் ஏங்கியவனே நான்தான். படுக்கையில் கம்பளியை உடல்முழுக்க சுற்றிக்கொண்டு கொஞ்ச நேரம் உறங்கியபோதுதான் உறக்கத்தின் முழு சுகத்தை உணர முடிந்தது. துரையண்ணாவும், செந்திலும் கோவிலுக்குப் போக எழுப்பினர். வெளியே வந்தபோது பலரும் புதுமனிதர்களாக மாறியிருந்தனர்.
மாலைநேரம் இருட்டத் துவங்கியிருந்தது. அனைவரும் கங்கோத்ரி மாதா கங்காதேவியின் கோவிலில் மாலை நேர ஆரத்தியைக் காணவும் பின் கோவிலின் எதிரே பெருகி ஓடும் கங்கையை படித்துறையில் நின்று தரிசிக்கவும் புறப்பட்டனர். ஒரு அரை கிலோமீட்டர் தொலைவுக்கு குறுகலான மலைப்பாதை. இரண்டுபக்கமும் நெரிசலாக கடைகள். கங்கோத்ரி இவ்வளவுதான். ஒரு பக்கம் உயர்ந்து கிடக்கும் மலை, இன்னொரு பக்கம் கடைகளுக்கப்பால் கீழே பெரும் சத்தத்துடன் பெருகி ஓடும் கங்கை. காலாதிகாலமாய் அதன் இரைச்சல் சத்தம் தொடர்ந்து இங்கு சப்தித்துக்கொண்டே இருப்பதை ஒரு கணம் எண்ணி வியந்தபோது, மனம் ஒருமித்து அந்த சப்தத்தின் வழியாக கொஞ்ச தூரம் தியானத்தில் பயணிக்க மனம் ஏங்கியது.
எங்களுடன் கோவிலுக்குப் புறப்பட்ட பலரும், பாதியில் கடைகளுக்குப் பிரிந்து செல்ல நானும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆனந்தபாபுவும் மட்டும் கங்கையை தரிசிக்கும் ஆவலில் விரைந்தோம். ஆரத்திக்கு இன்னும் சற்று நேரம் இருந்த காரணத்தால் எதிரேயிருந்த படித்துறையில் இறங்கினோம். பிரம்மாண்டமாய் சுழித்து பெருகி ஓடும் அந்த ஆற்றின் வேகத்தை வியந்தபடி கங்கையில் இறங்கி குனிந்து நீரை அள்ளினேன், அவ்வளவுதான். என் உடலும் மனமும் வாழ்வில் இதுவரை காணாத ஒரு குளிரில் நடுங்கத் துவங்கியது. அந்த ஒரு கணத்தில் வார்த்தைக்கு ஆட்படாத பலவித அக நிலைகள் மனதுள் உட்புகுந்து கொண்டன.
பெரும் பனிக்கட்டிகள் உடைந்து தண்ணீராக நேரடியாக இறங்கி வருவதால், இயல்பாக அதனுள் இருக்கும் பரிசுத்தமான ஆற்றல் உண்டாக்கும் அதிர்வுகள்தான் அது என்பதை அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் மனது உள்வாங்கினாலும், அதனையும் கடந்த உள் அதிர்வுகளை அந்த நீரைத் தொட்டதும் என்னால் மனதில் உணர முடிகிறது. புனிதமென்பது வேறொன்றுமில்லை, அதன் பரிசுத்தமான தன்மைதான். ஆனால், அதனுள் இருக்கும் இயல்பான ஆற்றல் மனதுள் உண்டாக்கும் விளைவுகளும், எண்ணங்களில் அவை நமக்குள் உண்டாக்கும் தெளிர்ச்சியும் வார்த்தைகளைக் கடந்தது. நான் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டவனாக அந்த உணர்வு நம்மை புதுப்பிப்பதையும், உடலில் காலம்காலமாக ஒட்டிக் கொண்டிருக்கும் உப்புகள் பல உடைந்து நன்னீராக மாறுவதையும் உணர முடிகிறது. வாழ்வில் வேறெங்கும் அனுபவிக்க முடியாத அத்தகைய அற்புதமான மனநிலை காரணமாகத்தான் பலரும் கங்கையை காலம் காலமாக வியக்கிறார்கள் என்பதையும் அந்த கணத்தில் உணர்ந்தேன்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் இந்த இடத்துக்கு வந்து கங்கையின் அந்தப் புனிதத்தை உள்வாங்கி மனதுள் ஆழமாக ஏற்கும்போது அது அவர்களது எண்ண ஓட்டங்களிலும் செயல்களிலும் மிக முக்கியமான மாற்றத்தை உண்டாக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
என் உடல் முழுக்க உண்டாக்கிய அதன் குளிர்வையும், மனம் முழுக்க அது உண்டாக்கிய பளிங்குத் தன்மையையும் முழுமையாக உணர்ந்தவனாக அப்படியே நான் சிறிதுநேரம் நின்றபோது ஆனந்தபாபு கோவிலில் ஆரத்திக்குத் தயாராகிவிட்டதைக் கூறி மீண்டும் என்னை மனிதனாக்கினார்.
மறுநாள் காலை நான்கு மணிக்கே நாங்கள் பெரும் மலையேற்றத்துக்குத் தயாரானோம். வழக்கம்போல எங்களது பெரிய மூட்டைகளை ஒரு அறையில் சேகரித்துவிட்டு பயணத்துக்குத் தேவையான சிறு பைகளை, முதுகில் சுமந்தபடி குளிருடன் போர் செய்யப்போவது போல பலத்த கவசங்களுடன் தயாரானோம். கோமுக்கிற்குச் செல்ல முடியாது, பனிப்பொழிவும் நிலச்சரிவும் அதிகமிருக்கும், அதனால் தேர்வு செய்யப்பட்ட சிலர் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவார்கள் என துவக்கத்திலிருந்தே பலர் உண்டாக்கிய மனபிரமைகள் அன்று அங்கு தவிடுபொடியாகிவிட்டது.
பயணத்தில் வந்த அனைவரும் கோமுக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தியான யாத்ராவில் இம்முறைதான் அப்படி நடந்திருக்கிறது என ஒருவர் வியந்தார். கேதார்நாத்தில் குதிரை மூலம் மலையேற்றம் செய்த நான், இம்முறை துணிச்சலாக நடந்து செல்ல முடிவெடுத்தேன்.
கீழே இடைவிடாத கங்கையின் ஓசை பிரவாகிக்க, அதைக் கேட்டப்படி நாங்கள் விடுதியை ஒட்டி மலை வழியாக இருந்த குறுகிய பாதையில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ஏறத் துவங்கினோம்.
அடர்ந்து காணப்பட்ட இருள் மண்டிய மரங்களை பின்னுக்குத் தள்ளியபடி அந்த ஒற்றைப் பாதையில் ஏறத் துவங்கினோம். இன்னும் பதினான்கு கிலோ மீட்டரில் போஜ்வாசா எனும் இடத்தில் இன்று இரவு தங்கி, மறுநாள் காலை அடுத்த நான்கு கிலோமீட்டரில் கோமுக்கிற்கு பயணிப்பது திட்டம். பதினான்கு கி.மீ. இடைவிடாத மலையேற்றம் என்பது எனக்கு கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கிறது. தேவைப்படுபவர்கள் அடுத்த ஒரு கிலோ மீட்டரிலிருந்து குதிரைகளை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனர். ஒரு கி.மீ. வந்தபோது பலரும் குதிரைகளை எடுத்துக் கொண்டனர். சிலர் சுமைகளை மட்டும் குதிரையில் கொடுத்துவிட்டு நடக்கத் துவங்கினர். ஆனால் நான் உறுதியுடன், நடக்க தீர்மானித்தேன். மரக்கூட்டத்தைப் பிளந்துகொண்டு மலையேறிக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்திற்கு பின் இருபக்கமும் மரங்கள் குறைந்து பெரும் மலைவெளிகள் தோன்றின. உடன் எங்களை வரவேற்கும் விதமாக சூரியன் தோன்றினான். வளைந்து வளைந்து மலையை ஒட்டிய பாதையில் நடந்தோம். சிலர் ஜெட்வேகத்தில் பறந்தனர். சிலர் மித வேகத்திலும் என்னை கடக்கத் துவங்கினர். மலையேற்றத்தைக் காட்டிலும் குறுகலான மலைப்பாதைகள்தான் பயத்தை உண்டாக்கின. காரணம், கரணம் தப்பினால் இந்த பக்கம் அதள பாதாளம். கீழே பார்க்கவே பயமாக இருந்தது. கேதாரிலோ செங்குத்தான மலையேற்றமாக இருந்தாலும் அகலமான பாதை.
அங்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் கூட மனதில் நம்பிக்கை பிறக்கும். ஆனால் இங்கு சில வெளிநாட்டவர் தவிர, எங்களுடன் இந்த மலையேற்றத்தில் யாரும் இல்லை. இங்கு வருவதே கிட்டத்தட்ட அதிசயம் போலத்தான். மழை இல்லாத காரணத்தால் நாங்கள் அனுமதிக்கப்பட்டோம்.
எனக்கு முன் நடந்து கொண்டிருந்தவரிடம் இதுவரை எத்தனை கி.மீ. வந்திருப்போம் என ஆவலுடன் கேட்டேன். என்ன எத்தனை கிலோமீட்டரா, ஐயா நாம் இதுவரை இரண்டு கி.மீ. தாண்டவில்லை எனக்கூற சட்டென அதுவே எனக்கு மயக்கத்தை தந்தது.
துவக்கத்தில் எனக்குமுன் வேகமாக நடந்த சிலர் வழியில் மூச்சு வாங்கிக்கொண்டு அமர்ந்ததை பார்க்க பயமாக இருந்தது.
ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் நான் வேகமாக நடக்கத் துவங்கினேன். பின்னால் வந்த குழு, அனைவரையும் உற்சாகத்துடன் எழுப்பி நடக்க வைத்துக்கொண்டு வந்தது. ஓரிடம் வந்தபின் வேகமாக நடந்தது தவறோ என நினைக்கத் தோன்றியது. சட்டென களைப்பும், மயக்கமும் என்னை நடக்கவிடாமல் செய்ய என் மனஉறுதி தளர்ந்து ஒரு மரத்தினடியில் உட்காரப் போனவன் அப்படியே என்னையறியாமல் சரிந்து விழுந்தேன்.
நிறைவுப் பதிவான அடுத்த பதிவில், மயங்கி விழுந்த தான் கோமுக்கை சென்றடைந்தது எப்படி என்பதை எழுத்தாளர் விவரிப்பது சுவரஸ்யத்தோடு ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும், இமயமலை பயணம் மேற்கொள்பவர்களுக்கான சில முக்கியமான பயணக்குறிப்புகளையும் வழங்குகிறார் எழுத்தாளர்!