விளக்கெண்ணெய் பயன்கள் அல்லது ஆமணக்கு எண்ணெய் பயன்கள் (Castor Oil in Tamil or Vilakkennai in Tamil)
விளக்கெண்ணெய் பயன்கள் அல்லது ஆமணக்கு எண்ணெய் பயன்கள் (Castor Oil in Tamil or Vilakkennai in Tamil) இன்றைய காலகட்டத்தில் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. உமையாள் பாட்டி இது குறித்து விரிவாக எடுத்துரைக்கிறார்.

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 16
விளக்கெண்ணெய் பயன்கள் / ஆமணக்கு எண்ணெய் பயன்கள் (Castor Oil in Tamil or Vilakkennai in Tamil)
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி
“பாட்டி... பாட்டி...!” அபயக்குரல் எழுப்பியபடி உமையாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தேன்.
ஒரு கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு, வீட்டிற்குள்ளிருந்து எதிர்ப்பட்ட பாட்டி, “என்னப்பா என்னாச்சு?” என்று சாவகாசமாக கேட்டாள்.
“உக்காரவும் முடியல, நிக்கவும் முடியல, கடுகடுனு வயிற்று வலி தாங்கல...” என்று நான் புலம்பியதை பாட்டி பெரிதாக எடுத்துக்கொண்டதாய் தெரியவில்லை. “இந்தா இதப்பிடி...!” என்று கையிலிருந்த கிண்ணத்தை என்னிடம் தந்துவிட்டு அலமாரியில் எதையோ தேடலானாள் பாட்டி!
“பாட்டி... எனக்கு சீக்கிரம் ஒரு மருந்து இருந்தா குடுங்க பாட்டி!” என்று நான் முணகிக்கொண்டே கேட்டேன்.
“அதான் குடுத்திருக்கேனே..!”
“எங்க பாட்டி...?”
“விளக்கெண்ண...”
“என்ன பாட்டி திட்டுறீங்க!”
“அட உன்ன திட்டலப்பா... கையில ஒரு கிண்ணம் குடுத்திருக்கேனே... அதுல விளக்கெண்ணெய் இருக்கு!”
“ஓ அப்படியா!”
“ஆமா... அத வயிற்றுல தொப்புள்ளயும் உச்சந்தலையிலயும் கொஞ்சம் தடவிக்கோ, சூடு பறந்து போயிடும்”
“ஓகே... பாட்டி!”
Subscribe
அந்த எண்ணெய்யை தடவிய சிறிது நேரத்தில் வயிற்று வலி மறைந்து, உடலில் குளிர்ச்சி ஏற்பட்டதை நன்கு உணர முடிந்தது. அதைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆர்வம் பிறந்தது. பாட்டியிடம் கேட்டபோது, ஆமணக்கு எண்ணெயின் பலன்களை சொல்லத் துவங்கினாள்...
விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் என்றால் என்ன?
“ஆமணக்கு (சிற்றாமணக்கு) விதையில இருந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கப்படுது.”
வலி நிவாரண தைலம்: “ஆமணக்கு எண்ணெய் வலி நிவாரண தைலமாகவும் (விஷமுஷ்டி தைலம்) செயல்படுது.”
மேல்தோல் சிராய்ப்பு: “உடம்புல மேல்தோல் உரசி உண்டாகும் சிராய்ப்புக்கு ஆமணக்கு எண்ணெயை தடவினா, எரிச்சல் நீங்கி பலன் கிடைக்கும்.”
சூடு தணிய: “உடலில் பித்தம் அதிகரிக்கும்போது சூட்டைத் தணிக்க இரவில் உள்ளங்காலில் ஆமணக்கெண்ணெயை கொஞ்சம் தடவிட்டு தூங்கலாம்.”
அப்புறம்... ஆமணக்கு எண்ணெய்ல மட்டுமில்லாம, ஆமணக்குச் செடியோட இலையும் மருத்துவ குணம் உள்ளதுதான்.” இப்படி பாட்டி அடுக்கிக்கொண்டே சென்றாள்.
“ஓ... ஆமணக்கு இலையிலயுமா...?!” ஆச்சரியத்துடன் கேட்டேன்.
முழங்கால் வலி, வீக்கம்: “ஆமணக்கு இலைகள எடுத்து சின்னதா நறுக்கி, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, சூட்டுடன் வலியுள்ள முழங்கால்லயும் (arthritis), வீக்கமுள்ள இடத்திலயும் ஒத்தடமிடலாம்.”
மலச்சிக்கல், மாதவிடாய் காலத்தில் வரும் அடிவயிறு வலி: “மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் காலத்துல வர்ற அடிவயிறு வலி... இதுமாதிரி பிரச்சனைக்கெல்லாம் அடிவயிற்றுல விளக்கெண்ணய தடவி, அதன்மேல் வதக்கிய ஆமணக்கு இலைகளை வைத்து கட்டி வந்தா நல்ல பலன் கிடைக்கும்.”
பால் சுரப்பு அதிகரிக்க: “ஆமணக்கு இலையப் போட்டு காய்ச்சிய வெந்நீர வச்சு மார்பகங்கள்ல ஒத்தடம் தந்து, ஆமணக்கு இலைய வதக்கி மார்பில் கட்டிவர, பெண்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.”
ஆமணக்கு எண்ணெய் பற்றியும் அதன் இலைகளால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் பற்றியும் பாட்டி சொல்லிக் கேட்டவுடன், அந்த செடியினை ஒருமுறை பார்க்க வேண்டும்போல் இருந்தது.
பாட்டி என் மன உணர்வுகளை சொல்லாமலே புரிந்துகொண்டு, “இதோ பாத்தியா இதான் அந்த ஆமணக்கு செடி!” என தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் நின்றிருந்த அந்த செடியைக் காண்பித்தாள்!
“சரி பாட்டி! இந்த விளக்கெண்ணெய்னு திட்டுறாங்களே அது எதுக்கு பாட்டி?”
பாட்டியிடம் கொஞ்சம் வம்பிழுக்கத் தோன்றியதால் கேட்டேன்.
“உன்ன மாதிரி வளவள’னு பேசறவங்கள அப்படி கூப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்!” என பல்பு கொடுத்தாள் பாட்டி!
குறிப்பு:
மலச்சிக்கல்:
-
1. மலச்சிக்கலுக்கு ஆமணக்கெண்ணெயை மலவாயின் உட்புறத்தில் தடவி வர மலம் இளகி வெளிப்படும்.
-
2. (உட்பிரயோகம்) மலம் இளகி வெளிப்பட விளக்கெண்ணெய் உட்கொள்ளலாம்.
அளவு:
6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு - 8 ml
பெரியவர்களுக்கு - 52.5 mg
- 3. கட்டிகள் பழுத்து உடைய: ஆமணக்கு விதையின் ஓட்டை நீக்கி, பருப்பை பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாக நசுக்கி அனலில் வதக்கியாவது கட்டிகளின் மீது வைத்து கட்டிவர கட்டிகள் எளிதில் பழுத்து உடையும்.
- 4. வாதம் பித்தம் கபம்: விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் பசு நெய் ஆகிய மூன்றும் கலந்த முக்கூட்டு எண்ணெயினை தலையில் ஊற வைத்து தலைமுழுகும்போது, வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்று பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
முக்கூட்டு எண்ணெய் விகிதாச்சாரம் (Ratio's):
விளக்கெண்ணெய் : நல்லெண்ணெய் : பசு நெய்
வாத நோயாளிகளுக்கு - 3 : 2 : 1
பித்த நோயாளிகளுக்கு - 2 : 1 : 3
கப நோயாளிகளுக்கு - 1 : 3 : 2
மலச்சிக்கல் தீர / அதிகாலையில் எழுந்திரிக்க சில வழிமுறைகள்