தாய்ப்பாலின் தன்னிகரில்லா சிறப்பு!
ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும்.
 
தாய்ப்பாலின் தன்னிகரில்லா சிறப்பு!, Thaippalin thannigarilla sirappu
 

தாய்ப்பால் மகத்துவம் பகுதி - 2

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

இன்று மகப்பேறு மருத்துவர்களிடம் புதுத்தாய்கள் வினவும் பொதுவான கேள்வி “தாய்ப்பால் தேவையான அளவு சுரக்கமாட்டேங்குதோ? பாப்பாக்கு பால் பத்தலயோனு டவுட்டா இருக்கு டாக்டர்...” என்பதே!

இந்தக் கேள்விக்கு எதிர்க் கேள்விகளாய் கீழ்கண்ட இரண்டையும் மருத்துவம் முன் வைக்கிறது.

  • குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாய் 6 முதல் 7 முறை சீராக சிறுநீர் கழிக்கிறானா?
  • பிறந்து 1 மாத முடிவில் குறைந்தபட்சம் 500 கிராம் எடை கூடி இருக்கிறதா?
    இரு கேள்விகளுக்கும் பதில் ‘ஆம்’ எனில் தாய்ப்பால் சரியான அளவில் குழந்தைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.

குழந்தை அடிக்கடி அழுவது, குறைவான இரவுத் தூக்கம், விரல்/முஷ்டியை கவ்வியிருப்பது, அடிக்கடி தாய்ப்பால் அருந்துவது, தாய்ப்பால் அருந்துவதற்கு மிகக்குறைந்த அல்லது மிக அதிக நேரம் எடுத்துக்கொள்வது போன்றவை குழந்தையின் இயல்பான சமிஞ்கைகளே! ஆனால், இவற்றையெல்லாம் வைத்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளதோ? என குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.

பொதுவாக 90% தாய்மார்களுக்கு இந்த மனக்குழப்பத்தை முறையாய் தீர்ப்பது மட்டுமே மருந்து.

அப்படியும், பால் சுரப்பு குறைவாய் உள்ளோர்க்கு, குழந்தை சரியான முறையில் மார்பை பற்றியிருப்பதை உறுதி செய்தும், வீட்டு சூழ்நிலையில் நிலவும் `ஸ்ட்ரெஸ்` குறைத்தாலே, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தமுடியும். மூலிகை மருத்துவ முறையில், அமுக்கரா சேர்ந்த `தாதுகல்ப லேகியம்`, தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த `சதாவரி லேகியம்` தாய்ப்பால் பெருக்கிகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. தரமான, நம்பிக்கைக்குரிய இடத்தில் இவற்றைப் பெற்று உபயோகிக்கலாம்.

சாதாரண உடல் உபாதைகளின்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும்.

“தாய்க்கோ, சேய்க்கோ சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என ஏற்பட்டால் தாய்ப்பால் புகட்டுவதை நிறுத்திவிட வேண்டுமா?” என்றால், “இல்லை” என்பதே பதில். இன்னும் விளக்குவதெனில், சளி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைக்கு சாதாரண நாட்களை விட இந்நாட்களில் அதிக அளவு தாய்ப்பால் தேவைப்படும். இதுவே, அவனுக்கு உயிர்காக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

வேலை செல்லும் மகளிருக்கான உபாயம்

ஆறு மாத பேறு கால விடுமுறை குதிரைக்கொம்புதான் என்றாலும், உங்கள் சின்னஞ்சிட்டுக்கு தாய்ப்பாலூட்டுவதை மனது வைத்தால் எளிமையாய் செய்யமுடியும். காலை ஆபீஸ் செல்லும் முன் ஓரிருமுறை பால் புகட்டியபின், ஒரு சுத்தமான கிண்ணத்தில் முடிந்த அளவு பாலை பீய்ச்சி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது சுத்தமான ஸ்பூன் கொண்டு ஊட்டலாம். சாதாரண வெப்பத்தில் 3 முதல் 4 மணி நேரமும், ஃப்ரிட்ஜில் 24 மணி நேரமும், தாய்ப்பால் கெடாது. அலுவலகத்தில் குளிர் சாதன வசதி இருப்பின், இதே முறையில் ஓரிருமுறை இரு மார்பிலிருந்தும் பாலை வெளியேற்றிவிடுவது, மார்பில் பால்கட்டிகள் வராமல் தடுக்கும். ஃப்ரிட்ஜில் குளிர்ந்த தாய்ப்பாலை நேரடியாக சூடு படுத்தாமல், சுடுநீர் கொண்ட பாத்திரத்தினுள் வைத்து, கிண்ணத்தை இயல்பு வெப்பத்திற்கு கொண்டு வரலாம். இரவு நேரங்களில் அதிகமுறை பால் கொடுப்பதும் அவசியம்.

ஆறு மாத காலத்திற்கு பின்?

தாய்ப்பாலுடன் சேர்த்து துணை உணவுகள் துவக்கும் தருணத்தில், நம் பாரம்பரிய `மம்மு` சாப்பாட்டுக்கு நிகர் ஏதுமில்லை. ஆம், நம் அரிசி சாதம்,பாசிப்பயரு, சுத்தமான உருக்கிய பசு நெய் கலவைக்கு `சூப்பர் ஃபுட்` என அறிவியல் சமூகம் தன் ரப்பர் ஸ்டாம்பை அழுந்த பதிந்துவிட்டது. நீர் ஆகாரமாய் கொடுப்பதைத் தவிர்த்து, பருப்பு சாதம் போல் குழைந்த நிலையில் கொடுக்க வேண்டும். மெல்ல, கோதுமை, கேழ்வரகு, தினை போன்ற தானியங்கள், கீரை வகைகள், எண்ணெய்யில் பொரித்த வகைகளை சிறிது, சிறிதாய் ஊட்டலாம். அசைவ வீடுகளில் மீன், முட்டை போன்றவற்றையும் மெல்ல அறிமுகப்படுத்தலாம்.

பசும்பால், குறிப்பாக பாக்கெட் பாலை குழந்தைக்குக் கொடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். “அது எப்படி சார், மாட்டுப் பால குடுக்கக்கூடாதுனு சொல்லிப் போட்டிங்கோ?” என சண்டைக்கு வரும் பாக்கெட் பால் குடும்பங்களே, பச்சிளங் குழந்தைகளுக்கு ஒவ்வாமை (ஃபுட் அலர்ஜி) மற்றும் அடிக்கடி ஏற்படும் சளி தொற்றுக்கு, பாக்கெட்பாலின் மேல் ஆராய்ச்சியாளர்களின் சந்தேகம் வலுத்துவருகிறது என்பதை அறிக!

கருவில் பிள்ளை சுமை... மனதில் தொல்லை சுமை... இன்றைய தாய்மை

“உடல்நிலை அளவில், இந்தத் தலைமுறைதான் மிக பலவீனமான தலைமுறையாய் விளங்குகிறது” என சத்குருநாதர் கூறுவதை நினைவிற்கொண்டுதான் தாய்மையையும் அணுகவேண்டியுள்ளது.

நவீன மருத்துவத்தின் நுண்ணுயிர் எதிரி (ஆன்டிபையாடிக்) புரட்சியால் காலரா,ப்ளேக், மலேரியா என மக்கள் கொத்துக்கொத்தாய் கொத்துக் கொத்தாய் மடிந்த நிலை மாறி, மனிதனின் சராசரி ஆயுட்காலம் நீண்டிருக்கிறது. அப்படி இருந்தாலும் முந்தின தலைமுறையிடமிருந்த மன, உடல் திடத்தை கெஞ்சினாலும் இன்றைய தலைமுறை பெற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை.

இது பிள்ளை பெற்ற தாய்மார்க்கும் பொருந்தும்தானே! நிறை மாத நாளிலும், உலக்கை வைத்து நெல் குத்திக்கொண்டு, வயலில் களை பறித்துக் கொண்டு, வலி வந்ததும் போய் சுகமாய் பத்து பிள்ளை பெற்ற பாட்டிக் கதைகளுக்கு இன்றும் நம் தாய்/தந்தை தலைமுறை சாட்சி. ஆனால், இன்று ஒரு குழந்தை பெறுவதற்குள்ளேயே நவீனத்தாய்மார் படும்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

காலமாற்றத்தில், நவீன அறிவியல் உதவியுடன் பேறு கால மரணங்களை வெகுவாகக் குறைத்துவிட்டோம். ஆனால், குழந்தை பெறுவது, பராமரிப்பது எனும் இயற்கையாய் நிகழும் ஒரு நிகழ்வின் மீது பெரிய அளவு மனக்குழப்பம், அச்சம், மன அழுத்தம் தற்கால மகளிருக்கு பரவலாக ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டமே.

தாய்மை அடைந்த பெண்ணின் மனதைப் பக்குவப்படுத்த பாட்டி இல்லை, அச்சம் நீக்க அண்ணியோ, அத்தையோ, சித்தியோ கூட இல்லை. குழப்பம் களைய சிலருக்கு மாமியாரோ, தாயோ கூட அருகில் வாய்க்கும் பாக்கியம் இன்றி ஏழு மாதம் வரை (அதுக்கு பிறகுதானேங்க மெட்டர்னிட்டி லீவு!) தனிக்குடித்தனமும், ஐடி வேலையும் என தவிக்கும் பெண்கள்தானே இன்று அதிகம். இதை மீறியும் மன அழுத்தம் களைய அரை குறையாய் தெரிந்து கொண்ட தோழிகளின் செல்போன் கவுன்சிலிங், இன்டெர்னெட்டில் கொட்டிக் கிடக்கும் கோடித் தகவல்கள் என அவை பின் செல்லும்போது, "கொடும, கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க இன்னொரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்" கதையாகிவிடுகிறது.

ஈஷா தாய்மை வகுப்புகள் வழிகாட்டியும், கைத்துணையும்

இந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீர்வாய் சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷாவின் மகப்பேறு மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்டதுதான், ஈஷா தாய்மை வகுப்புகள்!

இன்னொரு உயிர் தன் கருவில் இருப்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு தாய்க்கும் உணர்த்தி, தாய் சேய் பந்தத்தை வலுப்படுத்துவதும், கர்ப்ப காலத்தை அத்தாய்க்கு ஓர் அற்புத அனுபவமாய் மாற்றுவதுமே ஈஷா தாய்மையின் நோக்கம்.

தாய்மை வகுப்புகள் கர்ப்பகால பாதுகாப்பு முதல் குழந்தை வளர்ப்பு வரையிலான அடிப்படை விஷயங்களை ஒலி, ஒளி பயிலரங்கங்கள் மூலம் எளிமையாக தெளிவுபடுத்துவதில் தொடங்குகிறது.

தொடர்ந்து இடுப்பு எலும்பு மற்றும் தசைகளை பலப்படுத்தும் எளிய முறை யோகா மற்றும் சக்திமிக்க பிராணாயம, தியானப் பயிற்சிகள் மனதைத் தளர்வாகவும், தனித்த ஆற்றலுடனும் விளங்கச் செய்கின்றன. இயற்கை முறையிலான உணவு குறித்த விழிப்புணர்வு மற்றும் சமையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர, ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் கலை மற்றும் கைவினை பயிற்சிகள், புத்துணர்வு தரும் குழு விளையாட்டுகளும் உண்டு. பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர் துணையுடன் கர்ப்பிணிப் பெண்கள் ஒரு குழுவாக தங்களுக்குள் பழகி, தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு உருவாவதால் அச்சம், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்க வழிகோலுகிறது.

கர்ப்பகாலத்தில் பின்பற்றப்படும் இத்தகைய ஆக்கப்பூர்வமான பயிற்சி மற்றும் சிந்தனையினால், பிறக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் சிறப்பாக இருக்க உதவுகிறது.

ஈஷா தாய்மை வகுப்புகள் கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்தில் 25 நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதனால், தாய்மார்கள் ஆயிரக்கணக்கில் பலனடைந்து வருகின்றனர்.

தாய்மை வகுப்புகள் உங்கள் ஊரிலும் நடக்க வேண்டும் என விருப்பம் உள்ளோர், மேலும் தாய்மை வகுப்பை ஏற்று நடத்தி இவ்வாய்ப்பை மேலும் பல தாய்களுக்கு பரிமாறும் விருப்பம் கொண்ட தன்னார்வத்தொண்டர்களுக்கு ஈஷா மையத்தில் குறுகிய கால ஆசிரியர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தொடர்புக்கு: திருமதி.கோகிலாம்பாள் : 94878 95440
ஈஷா ஆரோக்யா: சென்னை : 94425 90099 கோவை : 83000 55555 சேலம் : 94425 48852

தாய்சேய் நலத்திற்காக சித்த மூலிகை மருத்துவம்!

பிரசவ லேகியம்: பாரம்பரியமாக "சௌபாக்ய சுந்தி லேகியம்" எனும் சுக்கு, கொத்துமல்லி, பனைசர்க்கரை, சதகுப்பை, நெய் சேர்ந்த "பிரசவ லேகியம்" 7 மாத கர்ப்பம் முதல் குழந்தையின் ஒரு வயது வரை தாய்க்குத் தருவது வழக்கம். இதன் மூலம் கர்ப்பச்சூடு குறையும். இயற்கையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது.

பிரசவத்திற்கு பின்னர் கர்ப்பப்பை மீண்டும் ஆரோக்கியமான முறையில் சுருங்க உதவுகிறது. மலக்கட்டை நீக்குகிறது. செரிமான பாதை தொந்தரவுகள் வராமல் காக்கிறது. இதன் நற்குணம் தாய்ப்பாலிலும் வியாபிப்பதால், குழந்தைக்கும் மாந்தம் முதலான செரிமான கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது. இதனை நம் தமிழக அரசே, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு “தாய்சேய் நல பெட்டகத்தில்” “சுந்தி லேகியம்“ எனும் பெயரில் வழங்குவது வரவேற்கத்தக்கது.

உரை மருந்து: சுட்ட வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கோஷ்டம், நுனா என பல மூலிகைகளை உரைத்து, தாய்ப்பாலுடன் குழைத்துக் கொடுப்பது குழந்தையின் இயற்கை தடுப்பு மருந்தாக பயன்படுகிறது. ஏழு நாளில் தொடங்கி 1 வயது வரை தொடர்ந்து கொடுக்க ஏற்றது.

இவை இரண்டும் ஈஷா மருத்துவமனைகளில் கிடைக்கின்றன.

நன்றி: சித்த மருத்துவ குறிப்புகள் - மரு. புவனேஸ்வரி, ஈரோடு; மரு.சக்தி, ஈஷா ஆரோக்யா, சேலம்.

தாய்ப்பால் குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்? (தாய்ப்பால் மகத்துவம் பகுதி - 1)

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1