அப்துல் கலாம் நினைவாக மரம் நடுவோம்!
அப்துல் கலாம் அவர்களின் கனவுகளில் ஒன்று "பசுமையான இந்தியா" உருவாக்குவது. இதனை நாம் நனவாக்க என்ன செய்யலாம்? ஒரு வழிகாட்டுதல் இக்கட்டுரையில்...

அப்துல் கலாம் அவர்களின் கனவுகளில் ஒன்று "பசுமையான இந்தியா" உருவாக்குவது. இதனை நாம் நனவாக்க என்ன செய்யலாம்? ஒரு வழிகாட்டுதல் இக்கட்டுரையில்...
மறைந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களைக் கவர்ந்த ஜனாதிபதியாக திகழ்ந்ததோடு, இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற கனவையும் கொண்டிருந்தார். அவர் கண்ட பல கனவுகளில் ஒன்று பசுமையான இந்தியாவை உருவாக்குவது! அதை நாம் நனவாக்கவும் முடியும்!
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள் நம்மை விட்டுப்பிரிந்தபோது, தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களது அஞ்சலியை செலுத்தினர். ஐயாவின் வழியில் அவர் மேற்கொண்ட பணிகளை தொடர உறுதி பூண்டனர். அதேபோல் அப்துல் கலாம் அவர்களின் இழப்பிற்காகவும் தமிழக மக்கள் தங்கள் மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இவ்விருவருமே தமிழகத்தை பசுமையாக்க வேண்டுமென்ற கனவினைக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில், நாம் ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டு அதை வளர்த்தோமானால் அதுவே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்!
Subscribe
புவி வெப்பமயமாவதை தடுக்க வலியுறுத்தி கடலூரில் அப்துல் கலாம் அவர்கள் நட்டு வைத்த மரக்கன்று, அவரது சுற்றுச்சூழல் குறித்த அக்கறைக்கு சான்றாக இப்போது மரமாகி நிற்கிறது. உலக வெப்பமயமாதலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் கலாம் அவர்களின் ஆலோசனையின் பேரில் பசுமை கலாம் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததால்தான், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி மற்றும் சணல் பைகளை பயன்படுத்துமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
புவி வெப்பமயமாதல்!
காடுகள் அழிந்து வருவதாலும், வாகனம் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சு வாயுக்கள் அதிகரிப்பதாலும், அதிகரித்து வரும் புவியின் மேற்பரப்பு வெப்பநிலையானது, மனித குலத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இதை உணர்ந்துதான் கலாம் அவர்கள் மரம் நடும் பணியில் மக்களை ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டு, அதற்கான திட்டங்களையும் வகுத்தார்.
சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமும் தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரித்து புவி வெப்பமயமாதலை தடுப்பதேயாகும். அப்துல் கலாமின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா பசுமைக்கரங்களின் நாற்றுப்பண்ணைகளில் ஆளுக்கொரு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அனைவரும் அப்துல் கலாம் கண்ட பசுமை தமிழகம் என்ற கனவை நிஜமாக்குவதற்கு உறுதியெடுக்க வேண்டும்! ஆளுக்கொரு மரம் நடுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்
ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகின்றது.
தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.