வாழ்க்கை களத்தில் விளையாட நீங்கள் தயாரா?

விளையாட்டு எப்படி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும், இதனால் தமிழக கிராமங்களில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் பற்றியும் நமக்கு விளக்குகி்றார் சத்குரு.
vazhkai-kalathil-vilaiyada-neengal-thayara-tamilblog-featureimg
 

நமது கிராமங்களின் வாழ்க்கையையும், வளர்ச்சியையும் கொண்டாடும் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகளுக்கு இப்போது 14 வயது. உற்சாகத்தின் ஊற்றாக, கிராமிய கலைகள், இசை, நடனம், நாட்டியம், பாரம்பரிய உணவுமுறைகள் என தமிழக கிராமங்களின் சுவையை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாட்டங்கள் நிறைந்த பெரும் திருவிழாவாகவே இது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. கிராமங்களுக்கு இடையே இந்த ஆண்டுக்கான தகுதிச் சுற்று விளையாட்டு போட்டிகள் நவம்பர் 9-ல் துவங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டி, ஈரோடு மாவட்டம் டெக்ஸ்வேலி வளாகத்தில் சத்குரு முன்னிலையில் டிசம்பர் 9 அன்று பெரும் கொண்டாட்டமாக நிகழ இருக்கிறது.

வாழ்க்கையை மாற்றியமைக்கும் வலிமை விளையாட்டுக்கு இருப்பதையும், கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்தும் இங்கே நமக்கு விளக்குகிறார் சத்குரு.

சத்குரு:

நீங்கள் இதை கவனித்திருக்கலாம்.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டி நடத்தும்போது, சவாலை சந்திக்க தயாரா என்பதை “Are you game?” என்று ஆங்கிலத்தில் கேட்பார்கள். உடலளவில், மனதளவில் மற்றும் ஆன்மீக தளத்திலும் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்க விளையாடுவது முக்கியமான அம்சமாக இருக்கிறது. வாழ்வின் எல்லா தளங்களிலும் விளையாட்டு முக்கியமான இடம் பிடிக்க காரணம், உங்களால் அரை மனதுடன் விளையாட முடியாது என்பதால்தான். நீங்கள் அரை மனதுடன் வேலைக்குப் போகலாம், அரை மனதுடன் திருமண வாழ்க்கையை சமாளிக்கலாம்.. ஆனால் உங்களால் அரைமனதுடன் விளையாட முடியாது. உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளும் வரை எந்த விளையாட்டும் இல்லை.

விளையாடுவதற்கு முழுமையான ஈடுபாடுதானே முக்கியம். இதனால்தான் உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் கால்பந்துப் போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே எழுந்து நின்று ஆரவாரம் செய்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தும் தீவிரமான ஈடுபாடுதானே இந்த எளிமையான விளையாட்டுக்கு உயிர் கொடுக்கிறது. விளையாடுபவர்களின் ஈடுபாடு, வாழ்க்கைக்கு தேவையான உத்வேகத்தை விளையாட்டை பார்ப்பவர்களிடமும் ஏற்படுத்துகிறது. ஜெயிக்க வேண்டும் என்ற உண்மையான வேகம் இல்லாமல் யாராலும் விளையாட முடியாதுதானே. அதேசமயம் தோல்வி வந்தாலும் அதுவும் சரிதான். ஒருவரின் வாழ்வில் கொண்டு வரவேண்டிய குறிப்பிடத்தக்க அம்சம் இது - வெற்றி, தோல்வி இரண்டையுமே சமநிலையுடன் கையாள்வது.

எனவே இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் விளையாட்டை கொண்டு வருவது முக்கியமாகிறது. அதிலும் குறிப்பாக நமது தேசத்தில், விளையாட்டை ஒரு பெரும் இயக்கமாக கொண்டு வருவதை உறுதிசெய்ய வேண்டும். விளையாட்டை ஆரம்பப் புள்ளியாக வைத்து, சமுதாய மாற்றம், பொருளாதார முன்னேற்றம், ஆன்மீக வளர்ச்சி என ஒரு மனிதருக்கு அனைத்தையும் எளிமையாக அறிமுகம் செய்ய முடியும்.

வாழ்க்கையை கொண்டாடுவோம்

முன்பு, நமது தேசத்தில் ஆண்டு முழுவதும் தினம்தினம் திருவிழாதான். நமது கலாச்சாரமே எப்போதும் கொண்டாட்டமான ஒரு நிலையில் இருந்தது. இன்று நிலத்தில் உழவு நடக்கிறதா, அது ஒரு கொண்டாட்டம். நாளை நடவு நடக்கிறதா, அது ஒரு வகையான கொண்டாட்டம். அடுத்ததாக களை எடுப்பதும் ஒரு கொண்டாட்டம். எல்லாவற்றுக்கும் சிகரமாக அறுவடை ஒரு பெரும் திருவிழாவாகவே நடைபெறும். மக்கள் உண்மையிலேயே வாழ்க்கையே விளையாட்டாக அதன் ஒவ்வொரு அம்சத்தையும் கொண்டாடினார்கள்.

தனது தனிப்பட்ட எல்லைகளைக் கடந்து ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரோட்டமாக வாழ விளையாட்டு எளிமையான வழி.

கொண்டாட்டமாக இருந்த இந்தக் கலாச்சாரம் மெதுவாக சோர்ந்தது. இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அதிலும் கிராமத்தில் இருக்கும் மக்கள் சில தலைமுறைகளாக நிலவிய வறுமையால் இந்தக் கொண்டாட்டமான மனநிலையையே முற்றிலும் தொலைத்துவிட்டனர். ஆனால் விளையாட்டை ஒரு கலாச்சாரமாகவே அறிமுகம் செய்யும்போது அது அதிசயத்தை நிகழ்த்தும்.

தனது தனிப்பட்ட எல்லைகளைக் கடந்து ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரோட்டமாக வாழ விளையாட்டு எளிமையான வழி. ஈஷாவில், நமது கிராமப் புத்துணர்வு இயக்கத்தில், கிராமங்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்கு விளையாட்டுகளை ஒரு ஆரம்பமாக சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறோம். ஆரம்பத்தில் நமது கிராம மக்களுக்கான திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் எடுத்துச்சென்றபோது கிராமங்களில் நிலவிய ஜாதி, மத வேறுபாடுகளால் பெரும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது, விளையாட்டுகளை கொண்டு வரலாம் என்று நாம் எடுத்த முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் இப்போது அந்த கிராமத்தில் முக்கியமான மனிதராக மாறிவிட்டார்கள். இப்போது யாருமே அவரது பெற்றோர்கள் யார், என்ன ஜாதி, மதம் என்று எதையுமே பார்ப்பதில்லை.

விளையாட்டின் சிறப்பம்சமே இதுதான். நீங்கள் யார், இப்போது என்ன செய்கிறீர்கள் என்பது மிகமுக்கியமானதாகி விடுகிறது - உங்கள் தந்தை என்னவாக இருந்தார் என்பது பொருட்டே இல்லாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு மனிதரும் உண்மையாகவே அவரவர் தகுதிக்கு ஏற்பதானே மதிக்கப்படுகிறார், முன்பு அவர் என்னவாக இருந்தார் என்பதற்காக அல்ல. நம் நாட்டில் யாராவது "மகேந்திர சிங் தோனி என்ன ஜாதி ?" என்று கேட்டதை பார்த்திருக்கிறீர்களா..? யாருமே அதை பொருட்படுத்துவதில்லை. களத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதுதானே நமக்கு முக்கியமாக இருக்கிறது.

தமிழக கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

விளையாட்டு கொண்டு வரும் இன்னொரு முக்கியமான மாற்றம், விளையாடுவதால் ஒருவருக்கு உடலளவில் ஏற்படும் ஆரோக்கியம். இன்று கிராம மக்களின் மூன்று முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக தசை, எலும்பு அமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. விளையாட்டுகளை களம் இறக்கிய பிறகு "யோகா என்றால் என்ன" என்ற தலைப்பையும் அறிமுகம் செய்தோம். இது மக்கள் வாழும் முறையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புகை மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையானதில் இருந்து வெளிவந்தது மட்டுமின்றி தங்கள் ஊரின் விளையாட்டு அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இப்போது தங்கள் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள மக்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

வயது மற்றும் பாலின வேறுபாடின்றி தமிழக கிராமங்களில் விளையாட்டு கொண்டு வந்திருக்கும் ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. பெண்களில், அதிலும் வயதானவர்களில் பலர், தங்களின் வாழ்க்கையில், 6 அல்லது 7 வயதுக்கு பிறகு விளையாடவே இல்லை. இப்போது 70 வயதில் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள். இவர்கள் குழுவில் இருக்கும் இளையவர்களுக்கு சரிசமமாக விளையாடி தங்கள் அணியை வெற்றியடையச் செய்கிறார்கள். இதுபோன்று கிராமங்களுக்கு இடையே நடக்கும் இந்தப் போட்டிகளை பார்ப்பதில் அத்தனை உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது. விளையாட்டு நிகழ்த்தும் அற்புதம் இது. தமிழகத்தில் துவங்கிய இந்த ஆச்சரியமான உண்மை பாரதம் முழுவதும் நிகழ வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்கிறது. விளையாட்டை வளர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் விளையாட்டுப் போட்டிகளை கொண்டு வரவில்லை. எல்லோர் வாழ்விலும் விளையாட்டில் இருக்கும் அந்த உத்வேகத்தை கொண்டு வர வேண்டும் என்பதே நமது நோக்கம் - உங்கள் வாழ்க்கை எனும் களத்தில் நீங்கள் விளையாட தயாராக இருக்க வேண்டும்தானே.

ஆசிரியர் குறிப்பு: கிராமோத்சவம் 2018 போட்டிகள் தற்போது ஒவ்வொரு தாலுக்காவிலும் நடந்து வருகிறது. நமது கிராமத்து வீரர்களை, வீரர்களின் திறனை நேரடியாக பார்க்க நமக்கு இது ஒரு வாய்ப்பு. கிராமோத்சவம் தொடர்பான அனைத்து விவரங்களையும், போட்டிகள் நடைபெறும் இடங்களையும் இந்த இணைய முகவரியில் isha.sadhguru.org/gramotsavam அறிந்து கொள்ளலாம். உற்சாகமூட்டலாம்.