வாழ்க்கையை சீரியஸாக அணுகும் மனப்பான்மை இன்றைய இளைஞர்களிடம் பெருகிவருவதை பார்க்கமுடிகிறது! ஹோம் ஸ்கூல் மாணவர்களிடத்தில் விளையாட்டு குறித்து சத்குரு பேசிய இந்த உரையோ, வாழ்க்கையையே விளையாட்டாய் அணுகச் சொல்கிறது! தொடர்ந்து படித்து தெளிவடையுங்கள்!

ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் ‘வஜ்ரா’ எனும் புதிய விளையாட்டு மையம் தொடங்கி வைத்து, சத்குரு நிகழ்த்திய உரையில் இருந்து...

இது ஒரு விளையாட்டுக் கூடம். விளையாடுபவர்கள் வலிமையானவர்களாகவும் இருக்க வேண்டும். ஒளி வீசுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதால்தான் இந்தப் பெயர் வைத்துள்ளேன். நான் மாணவனாக இருந்தபோது, வகுப்பறைகளில் இருந்ததைவிட விளையாட்டுக் கூடத்திலும் நூலகத்திலும்தான் அதிக நேரம் இருந்திருக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மிக எளிய விஷயங்கள்கூட மகத்தானவையாக மாறக் காரணம், சிலர் அவற்றுக்காக தங்களை முழுமையாக ஒப்புக் கொடுத்ததுதான். நீங்கள் எதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால், எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதை முழுமையாக ஈடுபட்டுச் செய்தால் அது மகத்தானது.

நான் சொல்வது ஆசிரியர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், விளையாட்டுக் கூடமும் நூலகமும்தான் என்னில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. ஒன்று என் உடலை வலிமையுடையதாய் ஆக்கிற்று. இன்னொன்று என் மனதை வலிமையுடையதாய் ஆக்கிற்று. என் உடல் இன்னும் வலிமையாய் இருக்கிறதா தெரியாது. ஆனால், இங்கே இருக்கும் விளையாட்டு வீரர்களாகிய உங்களைத் தோற்கடிக்கும் அளவு வலிமை இருக்கிறது. (தன்னுடன் விளையாடிய ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்)

நீங்கள் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்த்தால் போதாது. வாழ்க்கையாகவே பார்க்க வேண்டும். விளையாட்டு என்பது பூப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்றவை மட்டுமல்ல. வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தான். அதை முழுமையாக விளையாட வேண்டும்.

வாழ்வில் என்ன செய்தாலும், அது ஒருவகை விளையாட்டுத்தான். கல்வியும் கூட ஒருவகை விளையாட்டுதான். அதில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்களா, மோசமாக இருக்கிறீர்களா என்பது முக்கியமல்ல. உங்கள் ஈடுபாட்டின் தீவிரம்தான் முக்கியம். நீங்கள் முழுமையாக ஈடுபட்டால், அது உங்களை மேம்படுத்துவதாக அமையும்.

மிக எளிய விஷயங்கள்கூட மகத்தானவையாக மாறக் காரணம், சிலர் அவற்றுக்காக தங்களை முழுமையாக ஒப்புக் கொடுத்ததுதான். நீங்கள் எதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஆனால், எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதை முழுமையாக ஈடுபட்டுச் செய்தால் அது மகத்தானது.

ஒரு பந்தை ஓங்கி அடிப்பதிலோ உதைப்பதிலோ என்ன இருக்கிறது? ஆனால், அதைப் பார்க்க ஒட்டுமொத்த உலகமே உட்காருகிறது என்றால், யாரோ ஒருவர் அதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணிக்கிறார்கள் என்பதால்தான்.

நீங்கள் நன்றாக விளையாடினாலும் மோசமாக விளையாடினாலும் பரவாயில்லை. ஆனால் உங்களால் அரைகுறையாக விளையாட முடியாது. கல்வியைக்கூட நீங்கள் அரைகுறையாகக் கற்கலாம். ஆனால், விளையாட்டை அரைகுறையாய் விளையாட முடியாது.

எனவே, முழுமையான தீவிரத்தையும் ஈடுபாட்டையும் கொண்டு வரும் ஒரு கருவியாக நீங்கள் விளையாட்டைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அதில் முழு ஈடுபாடு வேண்டும். பள்ளியில் எது நடந்தாலும் முழுமையாக ஈடுபட வேண்டும். வெறுமனே அமர்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தாலும் முழு ஈடுபாடு வேண்டும். வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இந்த தீவிரத் தன்மையைக் கொண்டு வந்துவிட்டால் என்ன செய்தாலும் வாழ்க்கை மகத்தானதாக இருக்கும்.

எந்த விளையாட்டையும் விதிகள் இல்லாமல் நீங்கள் விளையாட முடியாது. ஒரு விளையாட்டை விளையாட்டாக ஆக்குவதே அதன் விதிகள்தான். “இந்த விதிமுறை எனக்குப் பிடிக்கவில்லை” என்று நீங்கள் கூறினால் அந்த விளையாட்டு பிடிக்கவில்லை என்று நீங்கள் கூறுவதாகப் பொருள். விதிகளே விளையாட்டை வடிவமைக்கின்றன என்பதை உணர்ந்து விளையாடினால், எல்லா விளையாட்டுகளும் மகத்தான விளையாட்டுகளே.

ஓர் உத்திரவாதத்தை உங்களுக்குத் தருகிறேன். அடுத்தடுத்த வகுப்புகளுக்கு (பள்ளி வகுப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்) நீங்கள் கடந்து போகிறீர்களோ இல்லையோ, உரிய காலம் வரும்போது இந்த வாழ்வை அனைவருமே கடந்து போகிறவர்கள்தான். வகுப்பில் சரியாகப் படிக்காவிட்டால், அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டி வரும். ஆனால், வாழ்வில் அப்படியல்ல. வாழ்க்கை எனும் தேர்வில் எல்லோருமே தேர்ச்சியடையப் போகிறோம். அதை நல்ல முறையில் செய்வோம்.