திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு முன் கவனிக்க வேண்டியது...
திருமண வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகளை கனவுகளையும் ஏராளம் சுமந்துகொண்டு எதிர்ப்பார்ப்பில் இருப்பவர்களைக் நம்மிடையே காண்கிறோம். ஆனால், நிதர்சன வாழ்க்கை என்பதோ முற்றிலும் மாறுபட்டு அவர்களில் பலருக்கு வாழ்க்கையே நரகமாகிவிடுகிறது. திருமண வாழ்க்கையில் நுழைவதற்கு முன், ஒருவர் தன்னிடத்தில் கனிக்க வேண்டியது என்ன என்பதை சத்குரு சொல்கிறார்!

சத்குரு:
நீங்கள் எப்படிப்பட்ட திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. திருமணம் செய்தபின் அந்த மனிதருடன் எவ்வாறு வாழ்கிறீர்கள், திருமணத்தை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். உங்கள் திருமணம் எங்கு நடந்தது, எவ்வளவு செலவில் நடந்தது என்பவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
திருமணத்தைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து, ஒருவர் தன்னை மேம்படுத்திக் கொண்டு, அழகான ஒரு மனிதனாக இருப்பது எப்படி எனப் பார்க்க வேண்டும். அழகான உயிராக இருக்கையில், அவர் எங்கிருந்தாலும் அவ்விடம் அழகாக இருக்கும்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என பிறர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். பல பேர் தங்கள் திருமணங்களை நரகமாக்கிக் கொண்டதால் இப்படியொரு சொல்லாடல் ஏற்பட்டிருக்கலாம். ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சொர்க்கத்தில் இருந்தால், நீங்கள் செய்பவை அனைத்தும், திருமணம் உட்பட, சொர்க்கத்தில் இருக்கும். நீங்கள் நரகத்தில் இருந்தால், உங்கள் செயல், உங்கள் திருமணம் உட்பட அனைத்தும் நரகத்தில் இருக்கும். அதனால், திருமணத்தைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து, ஒருவர் தன்னை மேம்படுத்திக் கொண்டு, அழகான ஒரு மனிதனாக இருப்பது எப்படி எனப் பார்க்க வேண்டும். அழகான உயிராக இருக்கையில், அவர் எங்கிருந்தாலும் அவ்விடம் அழகாக இருக்கும்.
வேர்களை கவனிக்காமல், கிளைகளின் மீது அதிக கவனம் செலுத்துபவர்களாக நாம் இருக்கிறோம். பழத்திற்குள் மருந்தினை செலுத்தி, அது வேகமாக வளர்வதற்கான குறுக்கு வழிகளை மட்டுமே பார்க்கிறோம். இந்த தீர்வு நிரந்தரமானதல்ல. இந்த முறையினால் இன்று கனி கனியலாம். ஆனால், நாளைக்கு பழம் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதுவே வேருக்கு போஷாக்கு அளித்து, அதனை கவனித்து வளர்த்தால், ஆயுள் முழுமைக்கும் அம்மரம் காய்க்கும்.
Subscribe