சாம்பிராணி ஏற்றுவது எதற்காக? (Sambrani in Tamil)
உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களின் பொதுவான நடைமுறையான சாம்பிராணி தூபம் எரிப்பதன் முக்கியத்துவத்தை சத்குரு விளக்குவதுடன், சில வகை நவீன தூபங்களின் தீமையான விளைவுகள் குறித்தும் நம்மை எச்சரிக்கிறார்.
கேள்வி: தூபம் எரிப்பதன் முக்கியத்துவம் என்ன? நவீன காலத்தில் அது பயன்படுத்தப்பட வேண்டுமா?
வீட்டின் அறைகள் நம் மீது ஏற்படுத்தும் தாக்கம்
சத்குரு: சில குறிப்பிட்ட பொருட்கள் எரியும் போது, நாசிக்கு இனிமையான வாசனை எழுகிறது. ஆனால் தூபம் எரிப்பது வெளிப்ப்புறச்சூழல் பற்றியது, உங்களைப் பற்றியது அல்ல. அதனுடைய ஒரு அம்சம் என்னவென்றால், அது நறுமணம் வீசுகிறது - குறிப்பாக வீட்டுக்குள் - அறையின் வடிவம் மற்றும் அதன் அளவுகள் காரணமாக, வெவ்வேறு இடங்களில் நிகழும் வெவ்வேறு விதமான சக்தி கட்டமைப்புகளும் உள்ளன. இதனால்தான் இந்திய கலாச்சாரத்தில், நீங்கள் வசிக்கும் அறையின் வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அறையானது, இரண்டு சுவர்கள் திறந்திருப்பதைப் போன்று அதிகளவு காற்றோட்டத்துடன் இருந்தால், அப்போது அது கிட்டத்தட்ட வீட்டுக்கு வெளியில் இருப்பதை போல் உணரப்படுகிறது. அது வேறு விதம். பெரும்பாலான வீடுகள் இந்த விதமாக உருவாக்கப்படுவதில்லை.உங்களால் எல்லா ஜன்னல்களையும் திறக்க முடியாது, ஏனென்றால் உங்களது அண்டை வீட்டார் அல்லது குளிரூட்டும் சாதனம் அல்லது பருவ நிலை என்று இதற்குப் பல காரணிகள் உள்ளன. வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் பல்வேறு வகையான சக்தி கட்டமைப்புகளை உருவாக்குகின்றன. வலிமையான இந்த சக்தி கட்டமைப்புகள், உங்களது உளவியல் மற்றும் உணர்ச்சி நிலையை தீர்மானிக்க முடியும், உங்களுக்கு உகந்ததாக இருக்க முடியும் அல்லது நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ, அதற்கு ஒரு தடையாகவும் இருக்க முடியும்.
சாம்பிராணி ஏற்றுவதன் நன்மைகள் (Significance of Sambrani in Tamil)
சாம்பிராணி மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பொருள். மக்கள் ஏதாவது சுப நிகழ்வுகளை நடத்த விரும்பினால், அவர்கள் சாம்பிராணிப் புகை இடுகிறார்கள். மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, சாம்பிராணியை எரிப்பதுதான் அவர்கள் செய்யும் முதல் விஷயம். இது காற்று மற்றும் மேற்பரப்புகளில் உள்ள சில வகையான (பாக்டீரியாக்களையும்) கிருமிகளையும் கொல்லும் என்று இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
Subscribe
இது ஒரு மரத்திலிருந்து வடியும் ஒரு குறிப்பிட்ட வகையான பிசின். காடுகளில் உள்ள பிரம்மாண்டமான மரங்களிலிருந்து சாம்பிராணியைத் தேடும்பொருட்டு, மரங்கள் ஆழமாகச் செதுக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கமுடியும். வெளிப்பரப்பில் மரங்கள் திடமாகத் தோன்றினாலும், இந்த பிசின் வடிகின்ற இடத்தில் ஒரு பிளவு இருக்கிறது. இந்த பிசின்கள் வெளிப்படுவதற்கான இயற்கைக் காரணம் எனக்குத் தெரியாது, ஆனால் மக்கள் இதைச் சேகரிக்கிறார்கள்.
இது ஒரு விலையுயர்ந்த சிறிய பொருள், மேலும் கணிசமான அளவுக்கு பிசின் பெறுவதற்கு மைல் கணக்கில் நடக்க வேண்டும், ஏனெனில் இந்த மரங்கள் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். அதாவது அவைகள் குறைந்தபட்சம் முப்பது முதல் ஐம்பது வயதுக்கும் அதிகமான முதிர்ச்சி அடைந்தவையாக இருக்க வேண்டும், இல்லையெனில் சாம்பிராணி கிடைக்காது.
சாம்பிராணி காற்றுவெளியில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு நறுமணம் என்பதில்லை, ஆனால் காற்றைச் சுத்திகரித்து வெளிச்சூழலை உயிரோட்டமாக உணர வைக்கும் ஒரு பொருள். வீட்டில் சாம்பிராணியை மிதமாக எரித்தால், நீங்கள் வீட்டின் உட்புறமாக இருந்தாலும், அது வெளிப்புறத்தில் கட்டமைக்கப்படாத வெளியைப்போல உணர வைக்கும். குறிப்பாக குடும்பத்தில் ஒரு மரணம் நடந்தால், சாம்பிராணி பன்னிரண்டு நாட்கள் வரை எரிக்கப்படுகிறது, ஏனென்றால் அவர்கள் அந்த காற்றை முழுவதுமாக தெளிவு செய்ய விரும்புகிறார்கள்.
சத்குருவின் முதல் "ஆன்மீக" கண்காட்சி
இந்த சூட்சுமமான அம்சங்களைப் பற்றி பேசுவதற்கு எனக்கு கொஞ்சம் தயக்கம் உள்ளது, ஏனென்றால் ஏற்கனவே பல விஷயங்கள் சுற்றி வருகின்றன. நான் முதலில் நாஷ்வில்லுக்கு வந்தபோது, ஒருவர் என்னிடம் கூறினார், "சத்குரு, ஒரு ஆன்மீக கண்காட்சி நடக்கிறது."
நான், “என்ன ஆன்மிகக் கண்காட்சியா? இந்தியாவில் கூட பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இது நடக்கிறது.”
"இல்லை, இங்கே ஒவ்வொரு வருடமும் நடக்கிறது."
"நான் பார்க்க வேண்டும்" என்றேன்.
“சரி, போகலாம்” என்றார்கள். பிற்பகலில் என்னை அழைத்துச் செல்ல அவர்கள் வந்தனர். "சத்குரு, ஆன்மீக கண்காட்சியில் நீங்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் சொன்னார்கள்.
"பிரமாதம்" என்ற நான் அங்கு சென்றேன். ஒரு பெரிய கூடாரத்துக்குள் நாங்கள் சென்றபோது, நாட்டுப்புற இசை உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தது. இது கட்டணம் செலுத்தக்கூடிய வேறெந்த மேடையும் கண்டிராத ஒரு குழு என்பது தெளிவாகத் தெரிந்தது.. ஒருவேளை பிரபலமான குழுக்கள் மாலையில் வரலாம். மதியம் மேடை காலியாக இருந்ததால், யார் வேண்டுமானாலும் சவுண்ட் சிஸ்டத்தை பயன்படுத்த முடியும் என்பதால், அவர்கள் உரத்த சப்தமெழுப்பிக்கொண்டிருந்தனர்.. நான் சொன்னேன், "சரி, இந்த ஆன்மீகக் கண்காட்சி பரவாயில்லை, இசை என்பதுகூட ஒரு கலாச்சார விஷயம்தான். ஆன்மீக கண்காட்சியைப் பார்ப்போம் ", என்றேன் நான்.
மேலும் கண்காட்சியைப் பார்வையிடலானேன். யாரோ ஆன்மீக குளியல் சோப்பை விற்றார்கள், வேறு யாரோ எங்கிருந்தோ வந்த ஆன்மீகக் கல் அல்லது கூழாங்கல்லை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைத்து வகையான வசீகரமான தூபங்களையும் விற்றுக்கொண்டிருந்தனர். பிறகு, "ஓ, இது இந்திய சந்தை போல இருக்கிறது" என்று என்ணிக்கொண்டேன். அங்குதான் அனைத்து வகையான கவர்ச்சியான பொருட்களும் விற்கப்படும்.
சந்தைகளில் உங்களை மறைந்து போக வைக்கும் ஒரு முறுக்கப்பட்ட வேர் கிடைக்கும். ஒரு பெண் திமிங்கலத்தின் இடது தாடை எலும்புடன் இந்த வேரை அரைக்க வேண்டும், திமிங்கலம் உயிருடன் இருக்க வேண்டும் - அதாவது நீங்கள் உண்மையில் கடலில் நீந்தி, தாடையின் ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொண்டு வெளியில் வந்திருக்கிறீர்கள். சில மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே நீங்கள் இவற்றை அரைத்து, பின்னர் அந்தக் கலவையை மேல் அண்ணத்தில் வைத்தால், நீங்கள் கண்ணுக்கு தெரியாதவர்களாக ஆகிவிடுவீர்கள் ... உண்மையில், நீங்கள் திமிங்கலத்தின் வாயினுள் சென்றால், பிறர் கண்களிலிருந்து மறைந்துதான் போய்விடுவீர்கள்!
தூபத்துக்கு ஒரு குறிப்பிட்ட தாக்கம் இருக்கிறது, ஆனால் அதை மிகைப்படுத்தாதீர்கள். அது உங்கள் ஆன்மீக இயல்பை தீர்மானிக்கும் என்று நினைக்காதீர்கள். இது வெளிச்சூழலை சிறிது மாற்றலாம், ஆனால் அது மிகைச் சான்றிதழ் அளிக்கப்படக்கூடாது.
இரசாயன தூபத்தின் ஆபத்து
ஒருவர் அறிவார்த்தமான முறையில் தூபத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்று இரசாயனப் பொருட்களைக் கொண்டு தூபம் தயாரிக்கப்படுகிறது. நம்மிடம் போதுமான அளவில் இரசாயனங்கள் வீதியெங்கும், தொழிற்சாலையிலும் மற்றும் நாம் பணி புரியக்கூடிய ஆலைத் தளத்திலும் மிதந்துகொண்டிருக்கின்றன. குறைந்த பட்சம் நம் வீட்டிற்குள் இரசாயன தூபத்தை எரிக்காதீர்கள், ஏனென்றால் இன்று சந்தையில் கிடைப்பதில் எண்பது சதவீதமும் இரசாயனம்தான் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் தூபத்தை எரிக்கும் முன்பு அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும், ஏனென்றால் மூடப்பட்ட அறைகளுக்குள் இரசாயனங்களை எரிப்பதால் ஏற்படும் எதிர்மறையான தாக்கம் மிகப் பெரியது. இது இயற்கையான பிசின் அல்லது வேறு சில அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பொருட்களால் செய்யப்பட வேண்டும். இத்தகைய தூபம் மிதமான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு அந்த விதமான வித்தியாசம் தேவைப்பட்டால், அது நிச்சயமாக உதவுகிறது.
ஆசிரியரின் குறிப்பு: தூய மூலிகை மற்றும் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஊதுபத்திகள் மற்றும் சாம்பிராணி பல்வேறு நறுமணங்களில் ஈஷா லைப்’ல் கிடைக்கின்றன.