பொருளடக்கம்
திருமணம் என்பது என்ன?
திருமணமா அல்லது திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழும் (லிவ்-இன்) உறவா?
திருமணத்தின் முக்கியத்துவம்
திருமணம் என்னும் அமைப்பு
திருமணம் என்பது விழிப்புடன் தேர்வு செய்வதைக் குறித்தது
திருமண வாழ்வை எப்படி வெற்றிகரமாக நகர்த்திச் செல்வது
புனிதமான திருமணச் சடங்கு - பூதசுத்தி விவாகம்
திருமணத்தின் நோக்கம் என்ன?
திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது முக்கியமானதா?
ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கான செய்முறைகள்
1. இரண்டு இதயங்களில் அன்பை நிறைத்துக் கொள்ளுங்கள்
2. புரிதலின் அளவை சற்று கூடுதலாகவே சேர்க்கவும்
3. போதுமான கவனம் செலுத்தவும்
4. சிறிது ஆனந்தத்தை சேர்த்து வெதுவெதுப்பாக்கவும்
5. ஒருவருக்கொருவர் அதைப் பரிமாறிக்கொள்ளவும்

திருமணம் என்பது என்ன?

சத்குரு: திருமணம் ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதை முதலில் புரிந்துகொள்வோம். ஒரு மனிதர் எனும்போது, அது ஒரு ஆணாக இருந்தாலும் அல்லது ஒரு பெண்ணாக இருந்தாலும், உங்களுக்குக் குறிப்பிட்ட தேவைகள் உள்ளன. உங்களுக்கு எட்டு வயதாக இருந்தபோது, திருமணம் குறித்து நான் உங்களிடம் கேட்டிருந்தால், அந்தக் கேள்வியில் உங்களுக்கு எந்த அர்த்தமும் இருந்திருக்காது. நீங்கள் பதினான்கு வயதாக இருந்தபோது நான் கேட்டிருந்தால், நீங்கள் சிறிது வெட்கப்பட்டிருக்கலாம் ஏனென்றால் அப்போது நீங்கள் அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். உங்களது உடல் ஒரு குறிப்பிட்ட வழியில் வளரத் தொடங்கி, ஹார்மோன்கள் உங்களது புத்திசாலித்தனத்தை பாதிக்கத் தொடங்கியிருந்தது. உங்களது பதினெட்டு வயதில் நான் கேட்டிருந்தால், ஒரு தெளிவான, “வேண்டும்” அல்லது “வேண்டாம், இப்பொழுது இல்லை” அல்லது “எப்பொழுதும் இல்லை” என்று பதில் அளித்திருக்கலாம். இந்தப் பதிலானது, பதினான்கு வயதிலிருந்து பதினெட்டு வயதுக்குள் உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பொறுத்திருக்கிறது.

இன்றைக்கு உலகின் சில பகுதிகளில், “திருமணம்” என்ற வார்த்தை, மிகவும் எதிர்மறையான ஒரு கருத்தைப் பெற்றிருக்கலாம். ஏனெனில் இந்த விஷயத்தில் ‘இளம் பருவத்தினரின் சுதந்திரம்’ என்னும் ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. சில சமூகங்களில் இளைய சமுதாயத்தினர், திருமணத்தை ஒரு மோசமான விஷயமாகப் புரிந்துவைத்துள்ளனர். நீங்கள் இளமையில் இருக்கும்பொழுது, திருமணத்திற்கு எதிராக இருக்கின்றீர்கள், ஏனெனில் உங்களது பௌதீக உடல் ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கிறது. அப்பொழுது திருமணம் என்பது ஒரு பிணைப்பாகவும், சங்கிலியாகவும் தோன்றுகிறது. நீங்கள் ஒரு விதமாக செயல்பட விரும்புகிறீர்கள். ஆனால் மெல்ல மெல்ல, உடல் பலவீனமடையும்பொழுது, முழு விருப்பத்துடன் இணக்கமான முறையில், உங்களுடன் யாராவது இருப்பதை நாடுகிறீர்கள்.

திருமணம் தவறானது என்று நான் கூற முற்படவில்லை. அது உங்களுக்கு வேண்டுமா என்பதுதான் கேள்வி. சமூக நியதியினால் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதரும், ஆணாக இருப்பினும் அல்லது பெண்ணாக இருப்பினும் தனக்குத்தானே இதை சிந்திக்கவேண்டும்.

“நான் திடமாக இருக்கும்போது எனக்கு ஒருவரும் தேவையில்லை, நான் பலவீனமடையும்பொழுது, என்னுடன் யாரோ ஒருவர் இருப்பதை நான் விரும்புகிறேன்.” – இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான உணர்வு. உங்கள் ஆரோக்கியத்தின் உச்சத்தில் நீங்கள் இருக்கும்பொழுது, ஒரு இணையான உறவு உருவாக்கப்படவேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் பலவீனத்தில் இருக்கும்பொழுது, நம்பிக்கை தராத உறவுகளையே உருவாக்குவீர்கள். நீங்கள் நன்றாக இருக்கும்பொழுது, உங்கள் உயிர்த்தன்மையின் உச்சத்தில் இருக்கும்பொழுது, அப்போதுதான் நீங்கள் ஒரு உறவு நிலையை உருவாக்கவேண்டும். அது உறவு நிலையின் எல்லா ஏற்றத்தாழ்வுகளின் இடையிலும் உங்களை அழைத்துச் செல்லும்.

ஒரு மனிதராக, உங்களுக்கு உடல் தேவைகள், உணர்ச்சித் தேவைகள், உளவியல் தேவைகள், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளைப் பற்றி விழிப்புடன் சிந்தித்துப் பார்ப்பதற்கு மக்கள் விரும்பாமல் இருக்கலாம், ஏனெனில் இந்த விதமாகச் சிந்தித்தால், அவர்களது திருமணம் அருவருப்பானதாக ஆகிவிடும் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் இந்தத் தேவைகளும் அதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நிலைமைகளும் இருந்துகொண்டுதான் உள்ளது.

இன்றைய பெண்களைப் பொறுத்தவரையில், உலகம் ஓரளவுக்கு மாறியுள்ளது. முக்கியமாக, சமூகத்துக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை. அவள் தனக்கானதைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. பெண் தனக்குரிய பொருளாதார மற்றும் சமூகச் சூழல்களில் தானே முடிவெடுக்க முடிகிறது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு அப்படி இல்லை. இப்பொழுது ஒரு சிறிதளவுக்கு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்கான காரணங்களில் குறைந்தபட்சமாக இரண்டாவது காலாவதியாகிவிட்டன. மற்ற மூன்று காரணங்களையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

உளவியல் ரீதியாக, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கான ஒரு துணை தேவையா? உணர்ச்சி ரீதியான துணை உங்களுக்குத் தேவையா? மற்றும் உங்களது உடல் ரீதியான தேவைகள் எவ்வளவு வலிமையாக உள்ளது? ஒரு தனிமனிதராக நீங்கள் இதைப் பார்க்கவேண்டும். சமூகரீதியாக அல்ல, ஒவ்வொருவரும் மணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது ஒருவரும் மணம் செய்துகொள்ளக்கூடாது என்று சமூகத்திற்கு பொதுவாக சொல்ல முடியாது. இது ஒரு பொதுவான சமூக நியதி அல்ல. அந்த முறையில் அது நன்மை தரப்போவதில்லை. ஒரு தனிமனிதராக, உங்கள் தேவைகள் எவ்வளவு வலிமையானவை? நீங்கள் எளிதில் கடந்து செல்லக்கூடிய வகையில், ஒரு விதமான குறுகியகால தேவையாக இருக்கிறதா? அது அப்படி இருந்தால், திருமணம் செய்து கொள்ளாதீர்கள், ஏனெனில் குறுகியகாலத் தேவைக்காக நீண்டகாலப் பந்தம் கொள்வது தேவையற்றது. அவ்வாறு நீங்கள் திருமணம் செய்தால், இரண்டு பேர் மட்டுமல்ல. ஒரு குடும்பமே விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். திருமணம் தவறு என்று நான் கூறவில்லை. உங்களுக்கு அது வேண்டுமா என்பதுதான் கேள்வி. சமூக நியதியினால் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதரும், ஆணாக இருப்பினும் அல்லது பெண்ணாக இருப்பினும் தனக்குத்தானே இதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருமணம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை. ஆனால் உங்களுக்கு அதற்கான தேவை இல்லாத நிலையில் நீங்கள் திருமணம் செய்தால், அப்போது அது ஒரு குற்றம். ஏனெனில் நீங்கள் உங்களுக்கும், குறைந்தபட்சம் மற்றொரு நபருக்கும் துன்பம் இழைப்பீர்கள். புத்தராகிய கௌதமரை யாரோ ஒருவர், ”எனக்கு ஒரு துணை இருக்கவேண்டுமா?” என்று கேட்டபொழுது, அவர் கூறினார்,” “ஒரு முட்டாளுடன் நடந்துசெல்வதைவிட, தனியாக நடப்பது மேலானது.” நான் அந்த அளவுக்குக் கடுமையாக சொல்ல மாட்டேன், நான் கூறுவது: ஒரே மாதிரியான ஒரு முட்டாளை நீங்கள் கண்டுபிடித்தால், அப்போது ஏதோ நடத்திக்கொள்ள முடியும். ஆனால் அதுகூட உங்கள் தேவையின் அடிப்படையில்தான் நடக்கவேண்டுமே தவிர, சமூகம் என்ன கூறுகிறது என்பதற்காகவோ அல்லது மற்றவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதற்காகவோ அல்ல.

திருமணமா அல்லது திருமணத்திற்கு முன்னரே இணைந்து வாழ்வதா?

 

குறைந்தபட்சம், 25லிருந்து 30 சதவிகித மக்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது குறுகியகாலத் தேவையாக மட்டுமே இருக்கிறது. மற்றொரு 30லிருந்து 40 சதவிகிதத்தினருக்கு, அது சற்று கூடுதல்காலத் தேவையாக இருக்கலாம் என்பதால் அவர்கள் திருமண ஏற்பாட்டிற்குள் செல்கின்றனர். சுமார் 10லிருந்து 12 வருடங்களுக்கு அவர்கள் நல்லவிதமாக உணர்கின்றனர், அதற்குப்பிறகு, திருமணத்தை ஒரு சுமையாகக் கருதுகின்றனர். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே மிக வலிமையான தேவை இருக்கிறது. சுமார் 25 லிருந்து 30 சதவிகிதத்தினருக்கு, மிக நீண்ட காலத்திற்கு துணை தேவைப்படுகிறது – இவர்கள் நிச்சயமாக இத்தகைய ஏற்பாடுகளுக்குள் செல்லத் தேவைப்படுகிறது.

தற்பொழுது, மக்கள் வேறு விதமான தீர்வுகளைக் கண்டுள்ளனர். “பரவாயில்லை, நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன், நான் இணைந்து வாழ்ந்து கொள்கிறேன்.” நீங்கள் ஒரு நபருடன் இணைந்து வாழும்போது, உங்களிடம் ஒரு சான்றிதழ் இருந்தாலும், இல்லாமற் போனாலும், அது எப்படியும் ஒரு திருமணம்தான். ஆனால் ஒவ்வொரு வார இறுதியிலும் உங்கள் இணைகளை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எண்ணினால், உங்களுக்கு நீங்களே ஆபத்தான பாதிப்பினை எற்படுத்திக் கொள்கிறீர்கள். ஏனெனில், உங்கள் மனதுக்கு ஞாபகப்பதிவுகள் இருப்பதைப்போல், உங்கள் உடல் அதைவிட மிக வலிமையான ஞாபகப் பதிவினைக் கொண்டுள்ளது. உங்கள் மனதில் நீங்கள் சுமந்திருக்கும் ஞாபகப்பதிவை மிஞ்சுமளவுக்கு, உங்களது உடல் கிரகித்து, அனுபவங்களைத் தக்க வைத்திருக்கிறது.

திருமணத்தின் முக்கியத்துவம்

 

இந்தியப் பாரம்பரியத்தில், உடல்ரீதியான நெருக்கம் ருனானுபந்தம் என்று அழைக்கப்படுகிறது. உடலளவிலான நெருக்கத்தின் வாயிலாக உடலானது ஒரு ஆழமான ஞாபகப்பதிவை உருவாக்குகிறது. இந்த ஞாபகத்தின் அடிப்படையில், உடல் பல விதங்களிலும் பதிலாற்றுவதுடன், எதிர்ச்செயலும் புரிகிறது. நீங்கள் பலப்பல ஞாபகங்களைப் பதிவு செய்தால், உடலில் குழப்பமும், ஒரு விதமான வேதனையும் இருக்கும். தங்கள் வாழ்வையும், உடலையும் கட்டவிழ்த்துவிட்ட மக்களிடம் இதை நீங்கள் தெளிவாகப் பார்க்கமுடியும். உண்மையான ஆனந்தத்தின் எந்த உணர்வையும் அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. தயவுசெய்து கவனமுடன் உங்களைச் சுற்றிலும் இதை கவனித்துப் பாருங்கள். அவர்களால் ஒருபோதும் முழுமையாகச் சிரிக்கவும் முடியாது, முழுமையாக அழவும் முடியாது. ஒரு பிறவிக்காலத்தில் உடலின் குழப்பமான ஞாபகங்கள் உருவாக்கும் ஏராளமான பதிவுகளின் காரணமாக அவர்கள் இப்படி ஆகிறார்கள். இணைந்து வாழும் உறவு, உங்கள் தேவைகளைக் கையாள்வதற்கான தீர்வு அல்ல.

மிகச் சிறப்பான விஷயம் என்று ஒன்று இல்லை. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அதனை முழுமையாகச் செய்யும் விதமாக உங்கள் வாழ்வை வாழ்ந்திடுங்கள்.

நீங்கள் திருமண பந்தத்திற்குள் செல்லுங்கள் அல்லது வெறுமனே இந்தத் தேவைகளைக் கடந்து செல்லுங்கள். ஆனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் பார்க்கவேண்டிய ஒரு விஷயம் இது – உங்கள் தேவை எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை சமூகத்தின் தாக்கம் இல்லாமல், தெளிவாகப் பார்க்கவேண்டும் என்றால், முடிவெடுப்பதை சுமார் ஒரு மாத காலம், ஒத்தி வைப்பது எப்பொழுதும் சிறந்தது. நீங்கள் இந்த முடிவெடுக்கும் பொழுது, ஒரு தெளிவான நிலையில் இருக்கவேண்டும். தியானம் செய்வதன் மூலம், ஒரு விதத் தெளிவான நிலைக்கு உங்களைக் கொண்டு வாருங்கள். அந்தத் தெளிவான நிலையில், உண்மையிலேயே உங்கள் தேவைகள் எவ்வளவு வலிமையாக இருக்கின்றன என்று பாருங்கள்.

திருமணம் தேவையில்லை என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவ்வளவுதான், நீங்கள் ஒருமுறை முடிவெடுத்துவிட்டால், அந்த முடிவை மீண்டும் திரும்பிப் பார்க்காதீர்கள். நீங்கள் ஒரு வழியில் செல்வதற்கு முடிவெடுத்தால், மற்றொரு வழியைப் பார்க்காதீர்கள். ஏதாவது ஒரு விஷயத்தையே நீங்கள் செய்யவேண்டும். இரண்டுக்கும் இடையில் நீங்கள் ஊசலாடினால், குழப்பமான நிலையிலேயே எப்போதும் இருப்பீர்கள். “எது சாலச் சிறந்தது?” சிறந்தது என்பது இல்லை. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அதனை முழுமையாகச் செய்யும் விதமாக உங்கள் வாழ்வை வாழ்ந்திடுங்கள். இந்தத் தன்மை உங்களுக்கு இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும், அது சிறப்பானதுதான்.

திருமணம் என்கிற அமைப்பு

 

கேள்வியாளர்: இன்றைக்கு, பல இளவயதினர் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. திருமணம் செய்துகொண்ட பலரோ விவாகரத்து பெறுகின்றனர். இந்தச் சூழல் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா, சத்குரு?

சத்குரு:

ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கக்கூடிய சாதாரணமான அடிப்படைத் தேவைகளுக்கு ஒரு விதமான புனிதத்தன்மை ஏற்படுத்துவது, திருமணத்தின் ஒரு அம்சமாக இருக்கிறது. திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறை, கலைநயம் மற்றும் சமநிலை கொண்டுவருவதற்கானது. ஏனென்றால் ஆணும், பெண்ணும் இணைவது இயல்பாகவே புதிய உயிரை இந்த பூமிக்கு அழைத்து வந்திருக்கிறது.

திருமணம் மட்டும்தான் தீர்வு என்று நான் கூறவில்லை, ஆனால் அதைக்காட்டிலும் சிறந்த மாற்று ஏற்பாடு உங்களிடம் இருக்கிறதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு மனித உயிரின் இயல்பு எப்படிப்பட்டது என்றால், ஒரு மனிதராக வந்திருப்பதின் சாத்தியங்களின் காரணமாக, வேறு எந்த உயிரினத்துடன் ஒப்பிடும்போது, மனித உயிர் அதிகமான உதவியும், ஆதரவும் தேவைப்படும் உயிராக இருக்கிறது. ஒரு நாய்க்குட்டியை நீங்கள் வீதியில் விடமுடியும் – அதற்கு உணவு கிடைக்கும்பட்சத்தில், அது ஒரு நல்ல நாயாக வளர்கிறது. ஆனால் மனித உயிரினம் அப்படியல்ல. அவர்களுக்கு உடல்ரீதியான ஆதரவு மட்டுமல்லாமல், பல்வேறு நிலையிலான ஆதரவுகளுடன், எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சமநிலையான சூழல் தேவைப்படுகிறது. உங்களுக்கு மூன்று, நான்கு வயதாக இருந்தபொழுது, 100% திருமண உறவு உங்களுக்குத் தேவைப்பட்டது – அதாவது உங்களது பெற்றோரின் திருமண உறவு. உங்களுக்கு 45, 50 வயதாகும்பொழுது, மீண்டும் 100% திருமண உறவு உங்களுக்குத் தேவையாக இருக்கிறது. இடைப்பட்ட 18 லிருந்து 45 வயதுக் காலங்களில், ஒட்டுமொத்த திருமண அமைப்பையே நீங்கள் கேள்விக்கு உள்ளாக்குகிறீர்கள்.

பொருள் உடல் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், நீங்கள் அதற்கு அடிபணிந்துவிட்டால், ஒவ்வொரு திருமண அமைப்பையும் நீங்கள் கேள்வி கேட்பீர்கள். இது உங்கள் ஹார்மோன் தூண்டிவிடும் சுதந்திர வேட்கை. இரசாயனத்தால் உங்களது புத்திசாலித்தனம் திசை திருப்பப்பட்டிருப்பதால், நீங்கள் எல்லாவற்றின் அடிப்படைகளையும் எதிர்த்து கேள்வி கேட்கிறீர்கள். திருமணம் மட்டும்தான் ஒரே தீர்வு என்று நான் கூறவில்லை, ஆனால் அதைக்காட்டிலும் சிறந்த மாற்று ஏற்பாடு உங்களிடம் இருக்கிறதா? நமக்கு இன்னமும் ஒரு மேலான மாற்று வழி தெரியவில்லை, ஏனென்றால் ஒரு குழந்தைக்கு, சம நிலையான ஒரு சூழ்நிலை கட்டாயம் தேவைப்படுகிறது.

திருமணம் என்பது விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுப்பதைக் குறித்தது

திருமணம், Marriage in Tamil

 

ஒவ்வொருவரும் திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்றுக்கொள்வது கட்டாயமோ அல்லது அவசியமோ அல்ல. மனித இனமே முற்றாக மறைந்துவிடும் அபாயத்தில் இருக்குமேயானால், ஒவ்வொருவரும் திருமணம் செய்துகொள்ளுமாறு நாமே அறிவுறுத்துவோம். ஆனால் மனித ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் பெருகி வருகிறது. தற்போது நீங்கள் இனப்பெருக்கம் செய்யவில்லை என்றால், மனிதகுலத்துக்கு ஒரு பெரும் சேவை செய்தவராக இருப்பீர்கள்.

ஆனால் நீங்கள் திருமணம் செய்துகொண்டு, குறிப்பாக உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், பிறகு அது குறைந்தபட்சம் 20 வருட திட்டம் தான். அதாவது குழந்தைகள் நன்றாக செயல்பட்டால். அவர்கள் நன்றாக செயல்படவில்லை என்றால், பிறகு திருமணம் என்பது ஒரு வாழ்நாள் திட்டமாக இருந்துவிடும். எனவே திருமண திட்டங்களை நீங்கள் மேற்கொள்ளவேண்டும் என்றால், குறைந்தபடசம் 20 வருடங்களுக்கு ஒரு சம நிலையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான உறுதியுடன் இருக்கவேண்டும். இல்லையென்றால், அத்தகைய திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது, பாதியில் விட்டுவிட்டு, விலகக்கூடாது.

மேலும், திருமணத்தை பற்றி பேசும்போதே விவாகரத்து குறித்தும் ஒரே மூச்சில் இணைத்து பேசவேண்டிய அவசியமில்லை. சமீப காலம் வரையில் இந்தியாவில் விவாகரத்து குறித்து ஒருவரும் நினைக்கவில்லை. அப்படி விவாகரத்து நிகழ்கிறது என்றால், இருவரிடையே ஏதோ ஒன்று முற்றிலும் தவறாகி, அதைச் சரி செய்ய வழியில்லாமல், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பிரியவேண்டியது நிகழ்கிறது. ஆனால் திருமணத்தின்போதே அதை நீங்கள் திட்டமிடவேண்டியதில்லை!

திருமண வாழ்வை எப்படி நல்லவிதமாக நடத்துவது

 

கேள்வியாளர்: திருமணத்திற்கான சரியான நபரை நான் எப்படி தேர்வு செய்வது?

சத்குரு:

ஒரு கனகச்சிதமான துணையைத் தேட முயற்சிப்பது, சாத்தியமில்லாத ஒன்றை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது. திருமண உறவு ஏன் சச்சரவான ஒன்றாக இருக்கக்கூடும் என்பதற்கான காரணம், இந்த உறவில் நீங்கள் பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பிரச்சனை திருமணமோ அல்லது கணவன், மனைவியாக இருக்கும் ஒரு ஆண் அல்லது பெண்ணைப் பற்றியதோ அல்ல. வேறொரு நபருடன் பலவற்றை பகிர்ந்துகொள்ள, நீங்கள் கட்டாயப்படுத்தப்படும் எந்த சூழலிலும், இதைப்போன்ற பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள்.

ஒரு திருமண உறவில் அல்லது இணைந்து வசித்தலில், வழக்கமாக நீங்கள் ஒரே இடம், பொருள் மற்றும் ஒவ்வொன்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதன் விளைவாக, நீங்கள் ஒருவர் மற்றவரது பாதங்களின் மீது ஏதோ ஒரு விதத்தில் இடறுகிறீர்கள். மற்ற உறவுகளில், யாராவது எல்லைகளை மிதித்தால், உங்களால் ஒரு இடைவெளியை உருவாக்கமுடியும். ஆனால் இங்கே, உங்களுக்கு ஒரு தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லாமல் இல்லாமல்போகிறது. எல்லைகளின் மீறல் அதிகரிக்கும்பொழுது, உரசல்களின் சாத்தியமும் அதிகமாகிறது.

பொருத்தமான ஆண் அல்லது பொருத்தமான பெண்ணைத் தேடாதீர்கள் அப்படி ஒருவரும் இல்லை.

அழகாக இணைந்து வாழ்ந்துகொண்டும், ஆழமான காதலுடனும், ஒருவருக்கொருவர் அற்புதமான நட்புணர்வுடனும் இருக்கும் பல தம்பதிகள் இருக்கின்றனர். அதே தருணத்தில், இந்த உறவானது மிக விகாரமான வடிவங்களையும் எடுக்கக்கூடும். ஏனெனில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிகழும் விகாரமான விஷயங்களை பொதுவாக ஒருவரும் அறிய முடியாமல் இருப்பது, இதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. வீதியில் நடந்து செல்கையில், உங்கள் பாதங்களை யாராவது இடறினால், நீங்கள் வேறொரு விதமாக எதிர்ச் செயல் செய்வீர்கள், ஏனெனில் அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திருமண உறவில், ஒருவரும் கவனிப்பதில்லை, ஆகவே எதுவும் நிகழக்கூடும்.

ஒரு வெற்றிகரமான திருமண உறவுக்குத் தேவைப்படுவது, முற்றிலும் சரியான ஒரு நபர் அல்ல. பூரணத்துவமான நபர் என்று பூமியில் எவரும் இல்லை. முழுமையான நேர்மைதான் உங்களுக்குத் தேவைப்படுகிறது. யார் கவனித்தாலும், கவனிக்கவில்லை என்றாலும், நீங்கள் ஒரே விதமாகச் செயல்படவேண்டும். உங்கள் தன்மை, நீங்கள் எங்கே, யாருடன் இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து மாறக்கூடாது. நீங்கள் வாழும் விதத்தை நிர்ணயித்து கொண்டால், பிறகு மற்றொரு நபருடன் உறவாடுவது ஆனந்தமான ஒரு அனுபவமாக இருக்கக்கூடும். இதில் இருக்கும் மற்றொரு அம்சம் என்னவென்றால், உங்கள் இருவருக்குள் ஒருவர் மற்றவரிடமிருந்து நீங்கள் எதையாவது வலுக்கட்டாயமாகப் பெறுவதற்கு முயற்சி செய்யும் நிலையில், உங்களுக்கோ அல்லது மற்ற நபருக்கோ விரும்பியது கிடைக்கவில்லை என்றால், அப்போது இடையறாத முரண்பாடு எழுந்துகொண்டே இருக்கும்.

நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் இன்னொரு நபருக்கு உபகாரம் செய்யும் நோக்கத்தில் அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. உங்களுக்குத் தேவைகள் இருப்பதால் நீங்கள் மணந்துகொண்டீர்கள். மற்றொரு நபர் அவரை உங்களுக்கு விருப்பத்துடன் வழங்கி, அதைப் பெற்றுக்கொண்ட நன்றி உணர்வில் நீங்கள் வாழ்ந்தால், அப்போது அங்கே அதிகமான உரசல் இருக்காது. பொருத்தமான ஆண் அல்லது பொருத்தமான பெண்ணைத் தேடாதீர்கள். அப்படி ஒருவரும் இல்லை. ஒரு துணையைத் தேடுவதற்கு உங்கள் தேவைகள்தான் காரணம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களுடன் நியாயமாக இணக்கமுடன் இருக்கக்கூடிய யாரோ ஒருவரைக் கண்டுபிடியுங்கள். ஒருவரையொருவர் நீங்கள் ஏற்றுக்கொண்டு, மதித்து, அன்பு பாராட்டி, இணைத்துக்கொண்டு, ஒருவர் மற்றவரைக் கவனித்து, பொறுப்பேற்றுக்கொண்டால், அது ஒரு அழகான உறவாக இருக்க முடியும்.

ஒரு புனிதமான திருமணச் சடங்கு – பூதசுத்தி விவாகம்

திருமணம், Marriage in Tamil

 

கேள்வியாளர்: சமீபத்தில், தாங்கள் விவாக செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இந்த செயல்முறை திருமணத் தம்பதியரையும் மற்றும் அந்த நிகழ்வில் பங்கேற்பவர்களையும் எவ்விதம் மேம்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவர்களின் அனுபவம் என்ன? அதிலிருந்து அவர்கள் எப்படி பலனடைய முடியும்?

சத்குரு:

மனித செயல்பாட்டின் திறனில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இந்தக் காரணத்தால், யாராவது தங்களை, வேறொருவருடன் பிணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும்பொழுது, அந்த பிணைத்தலை அதிக திறனுடன் நான் செய்யவேண்டும் என்று எண்ணினேன். மக்கள் தங்களையே பிணைத்துக்கொள்கின்றனர், ஆனால் அது ஒட்டுவதில்லை. உங்களுக்குப் பிணைந்துகொள்ளும் விருப்பம் இல்லையென்றால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் பிணைத்துக்கொள்ளும் விருப்பத்தை நீங்கள் தெரிவிக்கும்பொழுது, உங்களையே நல்லவிதமாகப் பிணைத்துக்கொள்ள நீங்கள் கற்பது மேலானதாக இருக்கும். திருமணம் என்பது அதுதான், பிணைப்பதற்கு அது சிறந்த வழி

மரச் சாமான்களில், வெவ்வேறு மரத்துண்டுகள் ஒன்றாக இணைந்துள்ளன. ஒரு ஸ்குரூ அல்லது மறையாணியின் உதவியுடன் இரண்டு மரத்துண்டுகளை, உங்களால் திறம்பட இணைக்கமுடியும். மறையாணியின் சாதகம் என்னவென்றால், அதை நீங்கள் கழற்றமுடியும். ஒரு சாதாரண ஆணியாக இருந்தால், உங்களால் அதைக் கழற்றமுடிவதில்லை – ஒரு முறை சாதாரண ஆணியை அடித்துவிட்டால், பிறகு அதைக் கழற்றுவதற்கு, நீங்கள் உடைத்தெடுக்கத்தான் வேண்டும்.

ஆகவே, “நான் கடந்து சென்றுவிட்டேன்.” என்று நீங்கள் கூறலாம், ஆனால் எஞ்சியிருக்கும் சில அகலமான துளைகள் உங்களை அவ்வப்போது பாதிக்கும்.

இங்கே, மரத்தாலான சில வீடுகள் கட்டப்படும் விதத்தைக் கவனித்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஒட்டுமொத்த வீடும் ஆணியடித்து கட்டப்படுகின்றன. ஆயிரம் ஆணிகளுக்குப் பதிலாக, ஐம்பது மறையாணிகளைப் பயன்படுத்தி அதே வேலையை நீங்கள் முடிக்கலாம்.; சிறிது கூடுதலான பொறியியல் நுட்பம் மட்டும்தான் அதற்குத் தேவைப்படுகிறது.

இந்தியாவில், அந்த விதமான சாதாரண ஆணிகளைப் பயன்படுத்தும் தச்சர் வேலையிலிருந்து நீக்கப்படுவார். பாரம்பரியமாக இந்திய தச்சுப்பணிகளில், அவர்கள் எப்பொழுதும் மரத்தக்கைகளை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தினர். அவைகள் நிரந்தரமாகப் பொருத்தப்படுவதில்லை; அவைகள் மிக நன்றாகப் பொருத்தப்பட்டாலும், நிரந்தரமாக அல்ல – நீங்கள் விரும்பினால், அதைத் தட்டி வெளியில் எடுக்கமுடியும். ஆனால் அதை வெளியில் எடுப்பதற்கு, குறிப்பிட்ட அளவுக்கான திறனும், முயற்சியும் தேவை. கிழக்கில் அவர்கள் இதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். எல்லா இணைப்புகளும் அப்படித்தான் இருக்கவேண்டும்.

அது மனிதர்களுக்கும் பொருந்துகிறது. நாம் இரண்டு நபர்களை இணைக்கும்பொழுது, அது நிரந்தரமானதாக இருக்கும்படி, அவர்களை ஒன்றிணைக்கவேண்டும். ஆனால் ஏதோ அரியதொரு காரணத்தினால் – இருவரில் ஒரு நபர் இறந்துவிட்டால், மற்றொருவர் உடனடியாகப் பின்தொடரக்கூடாது. ஏனென்றால் இருவரையும் முழுமையான 100 சதவிகித இறுக்கத்துடன் பிணைத்தால், அதுதான் நிகழும்.

“என் கணவர் அல்லது என் மனைவி இறந்தால், நானும் இறக்க விரும்புகிறேன்.” - கடந்த காலத்தில், பலரும் அந்த விதமான ஆசையை வெளிப்படுத்தினர். அந்த நாட்கள் மறைந்துபோய்விட்டன. இப்பொழுது தம்பதியரில் ஒருவர், மற்றவர் விரும்பாத ஏதோ ஒன்றைச் செய்வது கூட, அவர்கள் பிரிந்துவிடக் காரணமாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு உலகில், அவர்களை அவ்வளவு இறுக்கமாகப் பிணைக்கக்கூடாது. நாளை காலையில், பற்பசை காரணமாக சச்சரவு எழும்போது, அந்த சச்சரவின் காரணமாக, இருவரிடையே உள்ள இணைப்பு பாதிக்கப்படாமல் மேலும் தொடர்ந்து நிலைத்திருக்கப் போதுமான இறுக்கத்துடன் மட்டும் அந்தப் பிணைப்பு இருக்கவேண்டும். ஆனால் ஏதேனும் புறம்பானவை நிகழ்ந்தால், அப்போது சிறிதளவு முயற்சியிலேயே, இருவரிடையே இருக்கும் பிணைப்பை விலக்கும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ஏதோ ஒன்றைப் பிணைத்தபிறகு - அது சரிவர பிணைக்கப்படாமல் இருந்தாலொழிய - அதை விலக்கிவிட விரும்பினால், இணைப்பை விலக்குவதற்கு நாம் ஒரு விலை தரவேண்டியது தவிர்க்க முடியாதது. அது என்னவாக இருப்பினும், அது உடல்நிலையாக, பொருளாக அல்லது மனிதர்களாக இருக்கலாம், நீங்கள் விலக்க விரும்பும்பொழுது, அது ஒரு விலை கேட்கும்.

ஏதோ மரச்சாமானை பிரிக்க நினைத்து பிரித்தீர்கள் என்றால், அதன் உட்புறத்தில் எளிதில் சரி செய்யமுடியாத சில துளைகள் எஞ்சியிருக்கும். இந்த துளைகளை அடைப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கும். மனிதர்களுக்கும் அதைப் போன்ற விஷயங்கள் நிகழும். இன்றைக்கு ஒரு பதம் வழக்கில் இருந்து வருவது எனக்குத் தெரியும், ”நான் அதிலிருந்து நகர்ந்து வந்து விட்டேன் (I have moved on)”. நகர்ந்து செல்வது என்று கூறுவதாலேயே,” நான் அங்கிருந்து முழுவதும் விடுபட்டு, மேற்கொண்டு சென்றுவிட்டேன்”, என்று அர்த்தமல்ல. நகர்ந்துவிட்டேன் என்றால், “நான் அடுத்த பள்ளத்துக்குள் இருக்கிறேன்”, என்றுதான் அர்த்தம். ஆகவே, “நான் நகர்ந்துவிட்டேன்”, என்று நீங்கள் வேண்டுமானால் கூறலாம். ஆனால் சில துளைகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன, அவை எப்போதாவது உங்களை பாதிக்கும்.

நீங்கள் எப்படியாவது சமாளிக்கலாம். மாலை வேளைகளை மதுவினால் கையாளலாம், காலை நேரங்களில் அலுவலகம் கிளம்ப ஐந்தே நிமிடங்களுக்கு முன் தூக்கத்திலிருந்து எழலாம், அலுவலகத்திலும் முணுமுணுத்துக்கொண்டு, அங்குமிங்கும் உருண்டுகொண்டு மும்முரமாக இருந்து சமாளிக்கலாம்; மக்கள் இப்படித்தான் தங்கள் வாழ்வை சமாளித்துக் கழிக்கின்றனர். மூன்று நாட்களுக்கு எதுவும் செய்யத் தேவையில்லாமல் அவர்களை ஒரு இடத்தில் உட்கார வைத்தால், அவர்களுக்கு உள்ளே இருக்கும் இந்த எல்லாத் துளைகளும் அவர்களைப் பித்துப்பிடிக்கச் செய்வதை, நீங்கள் பார்ப்பீர்கள்.

ஒரு துளையை மேலாக பூசி மெழுகுவது அல்லது மூடி அடைப்பது இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். துளையை அடைப்பது அவ்வளவு எளிதல்ல. அதை இப்படிப் புரிந்துகொள்ளலாம் – அது கரையானைப் போன்றது – நீங்கள் மரச் சாமான்களுக்கு பெயிண்ட் பூசியிருந்தால், அதை நீங்கள் சரிபார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு நாள் திடீரென்று நீங்கள் தொடும்பொழுது, பெயிண்ட் மட்டும்தான் அங்கே இருக்கும், உள்ளுக்குள் கரையான் அரித்திருக்கும், அவருக்கு பெயிண்ட் விருப்பமில்லை ஆதலால், அவர் இயற்கையானதை மட்டும் உணவாகக் கொள்கிறார். கரையான் உங்களைப் போல் அல்ல, அவர் இரசாயனம் நிறைந்திருக்கும் உணவை உண்பதில்லை. அவர் எல்லா மரப் பாகங்களையும் சுத்தமாக சாப்பிட்டுவிடுகிறார். நீங்கள் உங்கள் விரலால் பரிசோதித்துப் பார்க்கும்பொழுது, உங்கள் விரலில் துளை தட்டுப்படுகிறது, ஏனென்றால் மேல்பூச்சாக இருக்கும் பெயிண்ட் மட்டுமே அங்கே மிஞ்சியிருக்கிறது.

திருமணத்தின் நோக்கம் என்ன?

 

இணைக்கப்படுவது எதுவுமே நல்லவிதமாக இணைக்கப்படவேண்டும், இல்லையென்றால் அதில் என்ன பயன் இருக்கிறது? ஒருவர் இறந்துவிட்டால், மற்றவரும் இறந்துவிடும் விதத்தில் நாம் இணைக்கமுடியும்; ஒருவர் ஞானமடைந்தால், மற்றவரும் ஞானமடைவார். நேர்மறை பலன்களும் இருக்கின்றன. ஆனால் சராசரியாக, ஞானமடைபவர்களைக் காட்டிலும், நோய்வாய்ப்படுபவர்கள், இறப்பவர்கள், அசாதாரணமாக பித்துப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆகவே நாம் அந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பதில்லை.

விவாகம் என்பது, குறைந்தபட்சம் அவர்களின் ஒரு பகுதி தனியாகப் பிரித்து உணரமுடியாத அளவுக்கு, இரண்டு உயிர்களை இணைக்கும் ஒரு இயற்கையான செயல்முறை – மேலும், அவர்கள் அதில் சிறிது ஒருமித்த தன்மையை உணர்வதால் அது நல்லது.

ஒரு குறிப்பிட்ட அளவு முயற்சியுடனும், வாழ்க்கை நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட விலையுடனும், இணைந்ததைப் பிரிக்கும் சாத்தியம் அங்கு இருக்கவேண்டும், ஆனால் அதற்கு ஒரு விலை இருக்கும். விவாகம் என்பது, குறைந்தபட்சம் அவர்களின் ஒரு பகுதி தனியாகப் பிரித்து உணரமுடியாத அளவுக்கு, இரண்டு உயிர்களை இணைக்கும் ஒரு இயற்கையான செயல்முறை – அவர்கள் அதில் ஒரு விதமான ஒருமித்த தன்மையை உணர்வதால் அது நல்லது. இதைக்காட்டிலுமான மாபெரும் ஒருமைக்கு இதை அவர்கள் ஒரு படிக்கல்லாக பயன்படுத்துவார்கள் என்று நாம் நம்புகிறோம். அவர்கள் அதனை நிகழ்த்துவார்களா இல்லையா என்பது வேறு விஷயம்.

விவாகத்தை நடத்தி வைப்பவர்களுக்கு, அது மிக அழகான அனுபவமாக இருக்கும். இரண்டு உயிர்களை இணைத்து, ஒருவராக உணரச் செய்வதால், அவர்களுடைய வாழ்வில், ஒரு மகத்தான சாதனாவாக அவர்களுக்கு அது பரிணமிக்க முடியும். அதற்கே உரித்தான ஒரு அழகும், ஒரு குறிப்பிட்ட பங்களிப்பும் நடத்தி வைப்பவர்களுக்கு கிடைக்கும்.

விவாகத்தைக் காண்பவர்களுக்கும் கூட, தற்போது நாம் பின்பற்றும் முறையைக் காட்டிலும் அதிக வலிமையான முறையில் அதைச் செய்யமுடியும். அவ்வளவு வீரியத்துடன் நாம் செய்யாமல் இருப்பது ஏனென்றால், விவாகரத்துக்கள், மரணங்கள் மற்றும் நோய்கள் நிகழும் சதவிகிதம் அதிகமாக உள்ளன. உண்மையில் நம்மால் அதிக வலிமையுடன் அதைப் பிணைக்க முடியும். நாம் எப்பொழுதும் சமூக நிதர்சனங்களைக் கருதவேண்டியுள்ளது. ஆனால் அப்படி இருப்பினும், எத்தனை விவாகரத்துக்கள் நிகழ்ந்தாலும், எத்தனையோ பேர், ”திருமணத்துக்கும் காலாவதி தேதி என ஒன்று உண்டு”, என்ற முறையில் பேசிக் கொண்டிருந்தாலும், உடல் கடந்து மற்றும் உளவியல்ரீதியான நட்பு கடந்து, இருவரிடையே ஒருமித்தல் நிகழும்போது, அங்கே ஒரு விதமான அழகிய சக்தி சூழ்கிறது.

விவாகத்தைப் பார்ப்பவர்கள், அங்கே ததும்பிச் சிதறும் சிறிதளவு தேனை சுவைப்பதற்காகவே வருகின்றனர். உதாரணத்திற்கு பாவஸ்பந்தனா நிகழ்வில், சிலர் எதையும் உணரவில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட நிலையிலிருக்கும் யாரோ ஒருவரைக் காண்பதிலேயே நிறைய பலன் இருக்கிறது – யாரோ ஒருவர் ஒருமை நிலையில் இருப்பதைக் காண்பதுதான் இதற்குக் காரணம். அவர்கள் எதனுடன் ஒருமித்திருக்கின்றனர் என்பது தெரியாது, ஆனால் அவர்கள் எப்படியோ தங்களுடைய எல்லைகளை குறைந்தபட்சம் சிறிது பெரியதாக இருக்குமாறு திருத்தி அமைத்துள்ளனர். அந்த செயல்முறை நிகழும்பொழுது, வெறுமனே பார்வையாளர்களாக இருப்பவர்களும் அளவில்லா நன்மை அடைகின்றனர்.

விவாகத்திலும் அதே விஷயங்கள், ஆனால் சிறிய அளவில் நிகழ்கின்றன. நாம் அந்த அளவை அதிகரிக்க முடியும். ஆனால் பிறகு, நாம் பல்வேறு பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் மக்கள் இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது வருடங்கள் வாழவேண்டும். இன்றைய உலகில், மக்கள் மைக்ரோசெகண்ட்களில் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், ஐம்பது வருடங்கள் என்பது பெரிய சிறைவாசம் போல் தோன்றுகிறது, அவர்களால் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. “ஓ, என் வாழ்க்கை முழுவதுமா!”, என்று ஒரு கணிசமான மக்கள் தொகையினர் திருமணத்திலிருந்து விலகிவிட முடிவெடுத்துவிடுவார்கள். முந்தைய தலைமுறையினர் மிகவும் எளிதாக, “மரணம் வரை பிரியாதிருப்போம்”, என்று கூறினர். எந்த மதபோதகருக்கும் 'மரணம் வரை பிரியாதிருத்தல்' என்பதை பற்றி மணமக்களிடம் பேசும் துணிச்சல் இன்னமும் இருக்கும் என நான் எண்ணவில்லை.

சமூக நிதர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு விவாகத்தை வரன்முறைப் படுத்தியிருக்கிறோம் – சமூகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதற்கு ஒரு படி அதிகமாக மட்டும். அதை விடவும் அதிகமாகச் செய்தால், அது நன்றாக இருக்காது.

திருமணத்தில் ஜாதகப்பொருத்தம் பார்ப்பது முக்கியமானதா?

 

கேள்வியாளர்: சத்குரு, ஜோதிட சாஸ்திரத்தின் உண்மை தன்மை குறித்து நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அது ஒரு விஞ்ஞானம் என்று கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்காக ஒருவரது ஜாதகம் பொருந்துவதற்கு அல்லது மாங்கல்ய தோஷம் உள்ள ஒரு பெண் மணமகனை திருமணம் செய்வதற்கு முன் ஒரு மரத்தை திருமணம் செய்ய வேண்டியிருகிறது. இது எனக்கு சற்று புதிராக உள்ளது.

சத்குரு:

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்பொழுது, நட்சத்திரங்கள் பொருந்தலாம், ஆனால் இந்த இரண்டு முட்டாள்களை எப்படி பொருந்தச் செய்வது? அது சாத்தியமில்லை. இரண்டு முட்டாள்களை ஒருவராலும் பொருந்தச் செய்யமுடியாது. அவர்கள் ஒருவருக்கொருவர் பொறுப்பேற்றுக்கொண்டால், ஏதோ ஒரு விதமான ஈடுபாடு காண்பித்து, ஒருவர் மற்றவரது வாழ்வில் உறுதி எடுத்தால் மட்டுமே, அற்புதமான ஏதோ ஒரு விஷயம் நிகழக்கூடும். இல்லையென்றால், அவர்களுக்கு எப்படி நீங்கள் பொருத்தம் பார்க்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல, எதுவும் பலன் தரப்போவதில்லை. இதனால்தான் பெரும்பாலான மக்களுக்கு, எல்லா காதல் உறவுகளும், திருமணங்களும் சிறிது காலத்துக்கு மட்டும் அழகானதாக இருக்கிறது. அதற்குப் பிறகு, அது ஒரு பெரும் பதட்டமானதாக அல்லது முடிவில்லாத உரசலாக இருக்கிறது, ஏனெனில் மக்கள் ஒருவரையொருவர் பொருந்தச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். உங்களால் மனிதர்களை பொருந்தச் செய்யமுடியாது. எந்த இரண்டு மனிதரும் ஒரே மாதிரி இல்லை. எனவே அப்படி அது வேலை செய்யாது. இரு சாராருமே தங்களது சொந்த நலனைவிட, மற்றொரு நபரது நலனை உயர்த்திப்பிடிக்கும் சூழ்நிலையில் மட்டுமே எல்லாமே சுமுகமாகச் செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையானது, மகிழ்ச்சியை மற்றொருவரிடமிருந்து கொள்முதல் செய்வதை மையப்படுத்தி இருந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த உறவு கசப்பானதாகிவிடுவதை நீங்கள் காண்பீர்கள். உங்களிடமிருக்கும் ஆனந்தத்தை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்வதில் உங்கள் வாழ்க்கை கருத்தாகக் கொண்டிருந்தால், அப்போது எல்லாமே நன்றாக செயல்படும். நட்சத்திரங்கள் என்ன கூறுகின்றன என்பது ஒரு பொருட்டல்ல. நட்சத்திரங்கள் அவை விரும்பியதை கூறிக்கொள்ளட்டும், ஆனால் ஒரு மனிதராக நீங்கள் இங்கே வந்தபிறகு, இந்த வாழ்வை நீங்கள்தான் உருவாக்கவேண்டும். இந்த பூமியின் மீது தனக்குரிய வாழ்வை, கட்டமைத்துக் கொள்ளக்கூடிய ஒரே உயிரினம் நாம் மட்டும்தான். அந்த சாத்தியத்தை மறுத்துவிட்டு, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைப் போன்ற ஜடப்பொருட்கள் எதிர்காலத்தில் நீங்கள் யாராக இருக்கப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்வதற்கு நீங்கள் அனுமதித்தால், அது துயரமாய் வாழ்வதற்கான வழி. தயவுசெய்து உங்கள் வாழ்வை உங்கள் கரங்களில் எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்களா, இல்லையா என்பதை உங்களுக்கு யாரென்றே தெரியாத ஒரு மூன்றாம் நபர் உங்களுக்குக் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது? அது எவ்வளவு அநாகரீகமானது? நான் எப்படிப்பட்ட முட்டாளை திருமணம் செய்தாலும் பரவாயில்லை, நான் நன்றாக வாழ்வேன் என்பதற்கு நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக வாழ்வதற்கு அது ஒன்றுதான் வழி.

திருமணம், Marriage in Tamil

ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கான வழிமுறைகள்

#1 இரண்டு இதயங்களில் அன்பை நிறைத்துக் கொள்ளுங்கள்

“காதலில் வீழ்வது”, என்ற ஆங்கில சொற்றொடரானது, இங்கே முக்கியத்துவம் பெறுகிறது, ஏனென்றால் நீங்கள் காதலில் எழுவதில்லை, நீங்கள் காதலில் பறப்பதில்லை, நீங்கள் காதலில் நடைபழகுவதில்லை, நீங்கள் காதலில் நிற்பதில்லை. நீங்கள் காதலில் விழுகிறீர்கள், ஏனென்றால் உங்களின் ஏதோ ஒன்று காணாமல் போகவேண்டும். அடிப்படையில் இதன் பொருள் என்னவென்றால், உங்களைக் காட்டிலும், வேறொருவர் மிக அதிக முக்கியமானவராக இருக்கிறார். உங்களைப்பற்றி நீங்கள் மிகவும் அதிகமாக நினைக்காமல் இருந்தால்தான், நீங்கள் காதலில் இருக்கமுடியும். “நான்” என்று நீங்கள் கருதுவது விழும்பொழுது, உங்களுக்குள் ஆழமான ஒரு காதல் நிகழமுடியும்.

#2 புரிதலின் அளவை சற்று கூடுதலாகவே சேர்க்கவும்

ஒருவருடனான உறவு உங்களுக்கு எந்த அளவுக்கு, அதிக நெருக்கமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்களை அதிகமாக புரிந்துகொள்வதற்கு நீங்கள் முயற்சிக்கவேண்டும். அவர்களை அதிகம் புரிந்துகொள்ளும் போதுதான் அவர் உங்களுடன் மேலும் நெருக்கமாகவும், அன்புடனும் இருப்பவராக ஆகிறார். அவர்கள் உங்களைப் புரிந்துகொண்டால், உங்களுடனான உறவின் நெருக்கத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் அவர்களை அதிகம் புரிந்துகொண்டால், அப்போது நெருக்கத்தை நீங்கள் உணர்கிறீர்கள். அந்த நபரின் எல்லைகள், சாத்தியங்கள், தேவைகள் மற்றும் திறன்களை நீங்கள் புரிந்துகொள்ளாத நிலையில், மற்றவர் மட்டுமே உங்களைப் புரிந்துகொண்டு, எல்லா நேரங்களிலும் உங்களுடன் இணங்கியிருப்பதை நீங்கள் எதிர்பார்த்தால், பிறகு உங்களிடையே முரண்பாடுதான் நிகழும்.

ஒவ்வொருவரிடத்திலும், சில நேர்மறையான அம்சங்களும், சில எதிர்மறையான அம்சங்களும் உள்ளன. உங்களது புரிதலில் இவைகள் அனைத்தையும் உள்ளடக்கிக்கொண்டால், நீங்கள் விரும்பும் விதமான உறவை உங்களால் உருவாக்க முடியும். இதனை மற்றவரின் புரிதலுக்கேற்றபடி நீங்கள் விட்டுவிட்டால், பிறகு நீடித்த உறவு என்பது தற்செயலான ஒன்றாகிவிடும். அவர் மிகவும் பெருந்தன்மையுடன் இருந்தால், எல்லாம் உங்களுக்கு நன்றாக நிகழும். இல்லையென்றால், உறவு முறிந்துவிடும். மற்றொரு நபர் முழுமையாக புரிந்துகொள்ளும் திறனற்றவர் என்பது இதற்கு அர்த்தமில்லை. புரிதலுடன் நீங்கள் சூழ்நிலையை உருவாக்கினால், மற்றொரு நபர் உங்களை மேலும் புரிந்துகொள்வார்.

#3 போதுமான கவனம் செலுத்தவும்

ஒரு திருமணம் என்பது ஒரு முறை செய்துவிட்டு, பின் அப்படியே மறக்கக்கூடிய ஒரு இறுதியான விஷயமல்ல. அது எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கவேண்டிய ஒரு கூட்டுறவு. ஒரு பொதுவான நோக்கத்துடன் இணைந்து, வாழ்வைக் கட்டமைத்து ஆனந்தமாக வாழ்வதுடன், தங்களது நல்வாழ்வைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் இரண்டு தனிப்பட்ட மனிதர்கள் ஒன்றாக இணைவதற்குத் தேர்வு செய்துள்ளனர். இரண்டு மனிதர்கள் தங்களது வாழ்வை ஒன்றாக இழைத்து நெய்வது என்பது ஒரு விதமான அழகு பொருந்தியது.

இந்தியக் கலாச்சாரத்தில், இருவரும் ஏன் இணைந்தனர் என்பதை நினைவுபடுத்திக் கொள்வதற்காக, ஆண்டுக்கொரு முறை திருமணம் புதுப்பிக்கப்பட்டது. அந்த நாளில் மீண்டும் அது புதுமணமாக இருக்கிறது. இல்லையென்றால், நிரந்தரமாக திருமண ஏற்பாட்டில் ஏதோ சிக்கிப் போய்விட்டதாக நினைக்கிறீர்கள். இல்லை. நீங்கள் விழிப்புணர்வுடன் இணைந்தீர்கள், அதை நீங்கள் விழிப்புணவுடன் நடத்திக்கொள்ளவும் வேண்டும்.

#4 சிறிது ஆனந்தத்தை சேர்த்து மிதமாக சூடேற்றவும்

உண்மையிலேயே உறவுகள் அழகு நிரம்பியதாக இருக்கவேண்டுமென்றால், ஒரு மனிதர் இன்னொருவரைப் பார்ப்பதற்கு முன்னால், உள்முகமாகத் திரும்பி, மிக ஆழமான முறையில் தன்னையே பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. நீங்களாகவே ஆனந்தத்தின் ஊற்றுக்கண்ணாக மாறுவதுடன், உங்கள் உறவும் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்வதைக் குறித்து இருந்தால், உங்களுக்கு அனைவருடனும் அற்புதமான உறவு நிலவும். உங்கள் ஆனந்தத்தை மற்றவருடன் பகிர்ந்துகொள்ளப் போகிறீர்கள் என்றால், அவருக்கு உங்களுடன் பிரச்சனை இருக்க முடியுமா, உலகில் அப்படி யாரேனும் உண்டா? இல்லை. மற்றொரு மனிதருடன் வாழ்ந்திருப்பதன் ஆழத்தை நீங்கள் உணரவேண்டுமென்றால், உங்கள் திருமணம் ஒருபோதும் உங்களைக் குறித்த ஒரு விஷயமாக இருக்கக்கூடாது – அது எப்பொழுதும் மற்றொரு நபர் குறித்ததாக இருக்கவேண்டும். நீங்கள் இருவரும் இந்த விதமாக சிந்தித்தால், உங்கள் திருமணம் ஒரு ஏற்பாடாக இருக்காது, அது ஒருமித்தலாக இருக்கும்.

#5 ஒருவருக்கொருவர் அதைப் பரிமாறிக்கொள்ளவும்

உங்களுக்காக சொர்க்கத்தை ஒருவர் உருவாக்கவேண்டும், அவரிடமிருந்து மகிழ்ச்சியை வலிந்து பெறவேண்டும் என்னும் எதிர்பார்ப்புகளின் மூட்டையாக மட்டும் உங்கள் திருமணம் இருக்குமேயானால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அதைக் கூறுவது ஏனென்றால், பெரும்பாலான மக்களும் தங்களது திருமணத்திலிருந்து ஒரு நரகத்தைத்தான் உருவாக்கினார்கள்! உங்கள் உறவானது, யாரோ ஒருவரிடமிருந்து, ஏதோ ஒன்றைப் பெறுவதிலேயே இருந்தால், நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும், அங்கே எப்பொழுதும் பிரச்சினை இருந்துகொண்டிருக்கும். ஆனால் உங்கள் உறவு, மற்றொரு நபரிடம் அர்ப்பணிப்பாக இருந்தால், அப்போது எல்லாமே அற்புதமாக இருக்கும்.