சத்குரு: ஒரு விதத்தில், சுவாதிஷ்டானம் மற்றும் மூலாதாரம் இவற்றின் தொடர்விளைவுதான் மணிபூரகம். இது ஒரு பராமரிப்பு மையம். சுவாதிஷ்டானம் மற்றும் மூலாதாரம் இணைந்து செயல்பட்டு, உடலுக்கு அடிப்படையான மற்றும் புத்துயிரூட்டும் உயிர்த்தன்மையை உற்பத்தி செய்கிறது. மணிபூரகம் பராமரிப்பு செயலை மட்டும் செய்கிறது. இது மிகவும் முக்கியம். ஏனெனில் பராமரிப்பு இல்லையென்றால், எதை உருவாக்கியிருந்தாலும் சிறிது காலத்தில் அது மறைந்துவிடும். எவ்வளவுதான் ஒரு தோட்டம் அழகாக இருந்தாலும், ஒரு மாதம் அதைப் பராமரிக்கவில்லை என்றால் பிறகு அதைத் தோட்டமென்று கூறமுடியாது. பராமரிப்பு அத்தியாவசியமானது. அந்த வகையில் மணிபூரகம் அவசியமான ஒன்று.

நகரும் மணிபூரகம்

எழுபத்திரண்டாயிரம் நாடிகளும் சந்தித்து, மீண்டும் கிளைகளாகப் பிரிந்து உடலெங்கும் பரவிச்செல்கின்ற ஒரே இடம் இதுதான். அந்தக் காரணத்தினால், ஒருவர் தனது மணிபூரகத்தை பல்வேறு வழிகளிலும் நகர்த்திச் செல்லமுடியும். ஒவ்வொரு சக்கரமும் நகர்த்தக்கூடியதே, ஆனால் மணிபூரகம் அதிகமான நகரும்தன்மை கொண்டது.

தூர கிழக்கத்திய போர்க்கலைகளில் மணிபூரகத்தை பல வித்தியாசமான முறைகளில் தொடர்ந்து தாக்குவார்கள். மணிபூரகம் மிகுந்த வலிமை அடையும்படியாக, தினமும் பயிற்சியாளர்கள் வயிற்றில் நூற்றுக்கணக்கான குத்துக்களை ஏற்கின்றனர். மணிபூரகம் போதுமான அளவுக்கு ஸ்திரமாகும்போது, எங்கு வேண்டுமென்றாலும் நீங்கள் அதை நகர்த்திச்செல்ல முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

போர்க்கலைகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு, மணிபூரகத்தை செயல்படுத்தக்கூடிய திறன் இருப்பது முக்கியம். மணிபூரகத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், போர்க்கலையானது அசையும் தன்மையிலிருந்து, அசையா தன்மைக்குச் செல்லவேண்டும். எவ்வித அசைவுகளும் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு கட்டத்தை நீங்கள் அடைய உதவுவதற்காகவே, போர்க்கலைகளில் அத்தனை வன்மையான மற்றும் கடினமான அசைவுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. உடல் சலனமற்று இருக்கும்போது, மணிபூரகத்தை செயல்படுத்தக்கூடிய உங்களது திறன் பெருமளவுக்கு மேம்படும். சில தூரகிழக்குத் திரைப்படங்களில், ஒரு முதியவர் உட்கார்ந்த நிலையில் ‘ஹூ’ என்றவுடன் அனைவரும் தரையில் வீழ்ந்துவிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். மணிபூரகத்தைச் செயல்படுத்தக்கூடிய திறன் உங்களுக்கு ஒரு வித்தியாசமான ஆற்றலை அளிக்கிறது.

தூர கிழக்கத்திய போர்க்கலைகளில் மணிபூரகத்தை பல வித்தியாசமான முறைகளில் தொடர்ந்து தாக்குவார்கள். மணிபூரகம் மிகுந்த வலிமை அடையும்படியாக, தினமும் பயிற்சியாளர்கள் வயிற்றில் நூற்றுக்கணக்கான குத்துக்களை ஏற்கின்றனர். மணிபூரகம் போதுமான அளவுக்கு ஸ்திரமாகும்போது, எங்கு வேண்டுமென்றாலும் நீங்கள் அதை நகர்த்திச்செல்ல முடியும். மணிபூரகத்தை அதாவது பராமரிப்பு மையத்தை, நாபியிலிருந்து விலக்கி இயக்கும்போது அது, வலிமையான அடிகளையும், காயங்களையும் ஏற்றுத் தாங்கவும், அவற்றினூடே, எதிர்த்து நீடித்து நிற்கக்கூடிய உடலின் திறனை பெருமளவு மேம்படுத்தவும் செய்கிறது. உங்களுடைய சக்தியை இயக்குவதற்கான பிரமிக்கத்தக்க திறனையும் அது வழங்குகிறது. போர்க்கலை நிபுணர்களால், மிகவும் சக்திவாய்ந்த முறைகளில் மணிபூரகம் கையாளப்படுவதைப் பற்றி பல அதிசயமான கதைகள் உண்டு.

மணிபூரகத்தை அதன் இயல்பான இருப்பிடத்திலிருந்து நீங்கள் நகர்த்தும்போது, உங்களது உடலை அசைவில்லாமல் வைத்திருப்பது மிகவும் முக்கியம் – இல்லையென்றால், நீங்கள் நீண்ட காலம் உயிர் வாழமுடியாது. முப்பத்திஐந்து, முப்பத்திஆறு வயதைத் தாண்டமாட்டீர்கள். அந்த நேரத்தில் ஏதாவது அசைவு நிகழ்ந்தால், பிறகு ஒட்டுமொத்த பராமரிப்பு மையமும் ஒழுங்குமுறை தவறிப்போகும். பராமரிப்பு மையம் ஒழுங்குமுறை தவறினால், வெளிப்படையான எந்தக் காரணமும் இன்றி, அசாதாரணமான விதத்தில் இறந்துவிடுவீர்கள். உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை ஒருவராலும் கண்டுபிடிக்கமுடியாது.

பரவும் ஒலி

“ஷிவா” அல்லது “ஷம்போ” என்ற ஒலி, உங்களது உடலின் ஒரு பகுதியாக மாறவேண்டுமென்றால் – அந்த ஒலியுடன் நீங்கள் மணிபூரக சாதனா செய்யும்போது, அது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பரவுவதுடன், உங்களது உடலே இந்த ஒலியை எதிரொலிக்கிறது.

போர்க்கலைகளில் வல்லவர்கள் பெரும்பாலும் உடல் திறனை அடைவதில் முனைப்புடன் உள்ளனர். ஆனால் மணிபூரக சாதனாவில் இருக்கின்ற ஆன்மீக சாதகர்கள், ஒலியை மணிபூரகத்திற்குக் கொண்டுவருகின்றனர். மணிபூரகத்திற்கு எந்த ஒலியை எடுத்துவந்தாலும், அது உடலெங்கும் பரவுகிறது. “ஷிவா” அல்லது “ஷம்போ” என்ற ஒலி, உங்களது உடலின் ஒரு பகுதியாக மாறவேண்டுமென்றால் – அந்த ஒலியுடன் நீங்கள் மணிபூரக சாதனா செய்யும்போது, அது உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பரவுவதுடன், உங்களது உடலே இந்த ஒலியை எதிரொலிக்கிறது.

இது பழனி சுவாமிகளுக்கு நிகழ்ந்த ஒன்று. அவர் தனது பெயரை எவரிடமும் ஒருபோதும் கூறியதில்லை. மக்கள் அவரை, பழனி சுவாமிகள் என்று குறிப்பிட்டனர். ஏனென்றால் பல அற்புதமான நிலைகளில் அவர் இருப்பதை பழனி மலைகளின் சுற்றுவட்டங்களில் மக்கள் கண்டிருந்தனர். எதுவும் செய்யாமல், ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டே மக்கள் கூட்டத்தை அவர் ஈர்த்ததில் கோவில் பூசாரிகள் ஆத்திரமடைந்தனர். காலை முதல் மாலை வரை கோவிலில் சடங்குகள் மற்றும் கடமைகளைச் செய்தபோதிலும் தங்களிடம் வராத மக்கள், எதுவும் செய்யாமலும் தனது உணவிற்குக்கூட பிச்சை ஏந்தும் இந்த மனிதனிடம் செல்வதைக் கண்டு வெறுப்புற்றனர். அவருக்கு எதிராக ஏதாவது குற்றம் காண சந்தர்ப்பம் பார்த்திருந்தனர்.

ஒரு நாள் அதற்கான காரணம் கண்டுபிடித்தனர். பழனி சுவாமிகள் காலையில் இயற்கை உபாதையைத் தீர்க்கும்போது, “ஷம்போ” என்று உச்சரிப்பது சரியானதல்ல என்று கருதி அவர்கள் குற்றம் சுமத்தினர். மலம் கழிக்கும்போது “ஷிவா” என்று கூறக்கூடாது என்றனர். கடவுளின் பெயரை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டி, அவரை கிராமப் பஞ்சாயத்தின் முன்பு கொண்டு நிறுத்தினர். நடுவர் குழுவின் முன்னால் அவர் தன் கண்களையும், உதடுகளையும் மூடிய நிலையில் அமர்ந்தார். “ஷம்போ” ஒலியின் உரத்த எதிரொலி ஒன்று ஓங்கி வெளிப்பட்டது. குற்றம் சுமத்தும் அவர்களது முயற்சிக்கு அது முடிவு கட்டியது. இந்தச் சம்பவத்தால், அவர் புகழ் அதிகரித்தது. அதனை விரும்பாத பழனி சுவாமிகள் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

நீங்கள் ஒரு ஒலியை உங்களது மணிபூரகத்திற்கு எடுத்துச் சென்றால், அது உடலெங்கும் பரவுவதுடன், ஒட்டுமொத்த உடலும் அந்த ஒலியை எதிரொலிக்கும். நீங்கள் வாய்மொழியாக ஒலியை உச்சரித்தால், அது ஜபம் என்று அழைக்கப்படுகிறது. அதை உங்கள் இதயத்தில் உச்சரித்தால், அது தபம் என்று அழைக்கப்படுகிறது. உங்களது மணிபூரகத்திற்கு அதை எடுத்துச் சென்றால், அது அஜபம் என்றழைக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு ஒலியை உங்களது மணிபூரகத்திற்கு எடுத்துச் சென்றால், அது உடலெங்கும் பரவுவதுடன், ஒட்டுமொத்த உடலும் அந்த ஒலியை எதிரொலிக்கும். நீங்கள் வாய்மொழியாக ஒலியை உச்சரித்தால், அது ஜபம் என்று அழைக்கப்படுகிறது. அதை உங்கள் இதயத்தில் உச்சரித்தால், அது தபம் என்று அழைக்கப்படுகிறது. உங்களது மணிபூரகத்திற்கு அதை எடுத்துச் சென்றால், அது அஜபம் என்றழைக்கப்படுகிறது. அதாவது, ஜபம் செய்யாமல், உங்களது வாய் திறக்காமல், உங்களது குரல் நாண்களையும் மற்றும் காற்றுப் பாதைகளையும் பயன்படுத்தாமல், உங்கள் உடல் ஒலியுடன் அதிர்வுறுகிறது.

மூலாதாரம், சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகம் – இந்த மூன்று சக்கரங்களும் – பல வழிகளிலும் உடலின் பரிமாணங்களை நிர்ணயிக்கிறது. மற்ற நான்கு சக்கரங்களும் வித்தியாசமான இயல்புடையன. ஒருவர் உடல் நிலையில், மன நிலையில், உணர்ச்சி நிலையில் அல்லது சக்தி நிரம்பியவராக நல்லபடியாக வாழ விரும்பினாலோ அல்லது ஒருவரது திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஒருவர் விரும்பினாலோ, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மற்றும் மணிபூரகம் ஆகியன மிகவும் அவசியமானவை. அனைத்து யோகப் பயிற்சிப் பள்ளிகளும், இந்த மூன்றின் வெவ்வேறான கலவைகளையே விரிவாக்கம் செய்தன.