“ஜூல் விதி, கெப்ளர் விதி, ஆர்க்கமிடீஸ் விதி, நீயூட்டன் விதி...” என அறிவியல் மேதைகள் அளித்த இந்த சூத்திரங்கள் யாவும், வாழ்வைப் பிரித்துத் துண்டு துண்டாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் உருவானவை. ஆனால் ‘பதஞ்சலி மகரிஷி’ நமக்களித்துள்ள யோக சூத்திரங்கள், மேற்கூறியவற்றில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை இங்கே காண்போம்.


சத்குரு:

பதஞ்சலியின் யோக சூத்திரங்கள், வாழ்க்கை குறித்த மகத்தான ஆவணங்கள். இருநூற்றுக்கும் மேற்பட்ட சூத்திரங்களைப் பதஞ்சலி எழுதினார். அவற்றை எழுதியதன் பின்னணியில் சுவாரசியமான சம்பவம் ஒன்று உள்ளது.

சிவனுக்கு சற்றும் குறைந்தவரல்ல பதஞ்சலி. சற்றுத் தாமதமாய் வந்தவர் அவர். அதுதான் வித்தியாசம்!

இரண்டு முனிவர்கள் சேர்ந்துகொண்டு பதஞ்சலியைக் கேலி செய்தார்கள். அதற்குப் பதில் சொல்லும்விதமாக பதஞ்சலி வழங்கியவையே அந்த சூத்திரங்கள். பதஞ்சலியன் சூத்திரங்களுக்கு இருக்கும் தனித்த சிறப்பு என்னவென்றால், சராசரி மனிதர்கள் அதனைப் படித்தால் பெரிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். பண்டிதர்கள் படித்தாலும் பெரிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள், குழம்பிப் போவார்கள். ஆனால் அதன் ஒவ்வொரு சூத்திரமும் வாழ்க்கை குறித்த வளமான ஆவணம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கை பற்றிய அதன் புரிதல் எவ்வளவு ஆழமானதென்றால், அதனை ஒரு தனிமனிதர் எழுதியிருக்கவே இயலாது என்று பலரும் கருதினார்கள். ஆனால், பதஞ்சலி என்றவொரு தனிமனிதரின் ஆக்கங்கள்தான் அவை. கடவுளர்கூடப் பொறாமைப்படும்விதமாக வாழ்ந்தவர் பதஞ்சலி.

நவீன யோகக் கலையின் தந்தை என்று அறியப்பட்ட பதஞ்சலி, யோகக் கலையை உருவாக்கியவர் அல்ல. யோகக் கலையை முறைப்படுத்தியவர். மொழி ஆய்மை, கோள்களின் ஆய்வு, கணித அறிவு ஆகியவற்றில் யாரும் தொட முடியாத உயரத்தின் சிகரம், பதஞ்சலி. அவரது விஞ்ஞான அறிவுக்கெதிரே இன்றைய நவீன விஞ்ஞானிகள்கூட, ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் அரிச்சுவடி கற்கிற குழந்தைகள்தாம்.

பதஞ்சலியின் சூத்திரங்கள், தத்துவங்களல்ல. அவை, வாழ்க்கையின் வார்ப்பு. அவற்றை சூத்திரங்கள் என்று சொல்வதற்குக் காரணமே, அந்தத் துறையில் அனுபவரீதியாய் ஆட்படுபவர்களுக்குத்தான் அவற்றின் பெருமை தெரியும். e=mc2 என்றால் உங்களை பொறுத்த வரையில் அது வெறும் எழுத்துக்களும் எண்ணும் கலந்த கலவைதான். ஆனால் பிரபஞ்சத்தின் இயல்பையே மூன்று எழுத்துக்களையும் ஓர் எண்ணையும் கொண்டு ஒருவர் விளக்க முற்படுகிறார். பதஞ்சலி சூத்திரங்களும் அப்படியே. சராசரி மனிதனுக்குச் சாத்தியப்படாத அறிவின் உயரம், பதஞ்சலி.

அவர் பதஞ்சலி சூத்திரத்தை ஆரம்பிக்கும் முறையே அலாதியானது. ‘இப்போது யோகா’ என்கிற அரை வாக்கியம்தான் அதன் ஆரம்பம். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா? இதுவரை வாழ்க்கையில் எதை எதையோ தேடிப் போனீர்கள். பொன்னைத் தேடினீர்கள்; பொருளைத் தேடினீர்கள்; இன்னும் என்னென்னவோ தேடினீர்கள். எதுவுமே உங்களுக்கு நிறைவளிக்கவில்லை. இப்போது யோகாவுக்கு வந்திருக்கிறீர்கள் என்ற பொருள்பட ‘இப்போது யோகா’ என்று துவங்குகிறார்.

பலருக்கும் யோகாவுக்கான நேரம் வரவில்லை. திருமணமானால் நிறைவு வரும் என்று சிலர் நினைக்கிறார்கள். குழந்தை பிறந்தால் நிறைவு வரும் என்று சிலர் நினைக்கிறார்கள். பணம் சம்பாதித்தால் நிறைவு வரும் என்று சிலர் நினைக்கிறார்கள். எதுவும் நடக்கவில்லை. பிறகு யோகாவுக்கு வரும்போது, ‘இப்போது யோகா’ என்ற பதஞ்சலியின் குரல் எதிர்கொள்கிறது.

ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ‘இதுவரையில் அதனைத் தெரிந்துகொள்ளவில்லை’ என்கிற புரிதல் ஏற்பட வேண்டும். ‘நாம் தெரிந்துகொள்ளவில்லையே’ என்கிற வலி யாருக்கு ஏற்படுகிறதோ, அவர்கள்தான் தெரிந்துகொள்கிறார்கள். யோகாவைத் தெரிந்துகொள்ளாத வலி, ‘இப்போது யோகா’ என்று பதஞ்சலி சொல்லும்போதே, தெரிந்துகொள்வதற்கான வழியாக மாறுகிறது.

ஈஷா யோகா மையத்தின் தியானலிங்க வளாகத்தில், பதஞ்சலியின் திருவுருவச் சிலை, உடலில் இடை வரையில் பாம்பு வடிவமும் அதன் பிறகு மனித வடிவமுமாக இருப்பதைக் காண்பீர்கள். யோக மரபில் பாம்பு, குண்டலினி ஆற்றலின் குறியீடு. மேலெழும்பும் குண்டலினி ஆற்றலின் அடையாளமாக பாம்பு வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் தலைமீது பாம்பு இருப்பதே குண்டலினி ஆற்றல் உச்சத்தைத் தொட்டிருப்பதன் அடையாளம்தான்.

பாதி உடல் பாம்பு வடிவாய் இருப்பதைப் பார்த்து, பதஞ்சலி ஆணா, பெண்ணா என்கிற கேள்வி சிலருக்கு எழுகிறது. ஆண்தன்மை, பெண்தன்மை ஆகிய பேதங்கள் கடந்தவர்கள்தான் யோகிகள். அவர்கள் ஆண் உடலிலோ, பெண் உடலிலோ இருக்கலாம். ஆனால் அந்தப் பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள்.

பதஞ்சலியின் ஜடாமுடி, கீழ்நோக்கி வரும் பாம்புகளாகக் காட்சியளிக்கிறது, மனிதர்களின் பால் கருணை கொண்டு கீழிறங்கி வரும் கருணையின் அடையாளம் அது. தியானலிங்க வளாகமும் கீழிறங்கி வந்துள்ள தெய்வீகத்தின் இருப்பிடம் என்பதால் இங்கே வந்து அமர்பவர்கள் தெய்வீகத்தின் மழையில் நனைய முடியும்!

சிவனுக்கு சற்றும் குறைந்தவரல்ல பதஞ்சலி. சற்றுத் தாமதமாய் வந்தவர் அவர். அதுதான் வித்தியாசம்!