அகத்தியர் (Agathiyar) என்ற மாமுனிவர் மனித குலத்தின் வரப்பிரசாதம்
சப்தரிஷிகளில் ஒருவரான அகத்தியரின் பெருமை என்ன? மனிதகுல வளர்ச்சிக்காக அவர் செய்த செயல்கள் என்னென்ன? சதுரகிரி மலைக்கும், திருக்கைலாய மலைக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பு என்ன? சத்குருவின் வார்த்தைகளில் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
சப்தரிஷிகளுள் முதன்மையானவர் அகத்தியர்
சத்குரு: யோகாவின் முதல் பரிமாற்றம், கேதார்நாத்தை கடந்து ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரிக்கரையில் நிகழ்ந்தது, இது காந்த்திசரோவர் என்று அழைக்கப்படுகிறது. காந்த்திசரோவர் என்றால் அருள் பொருந்திய ஏரி என்பது பொருள். முதல் யோகா வகுப்பு இந்த ஏரியின் கரையில் நிகழ்ந்த காரணத்தால், இதற்கு அருள் நிறைந்த ஏரி என்று பெயரிடப்பட்டது. சுமார் பன்னிரண்டு முதல் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆதியோகி இமயமலையின் உயரமான நிலப்பரப்புகளில் தோன்றியபோது, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். ஏனென்றால், அவரது வெளித்தோற்றமே மக்களை ஈர்க்கும்படி இருந்ததால், எல்லோரும் அவருக்கு முன் கூடி அமர்ந்தனர், ஆனால் அவர் எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார், மக்கள் காத்திருந்தனர். அவர் அசைவில்லாமல் பல மாதங்கள் அங்கேயே அமர்ந்திருந்தார், யாராவது ஒருவர் இப்படி அமர்ந்திருந்தால் அவர் தனது உடல் தன்மைக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும், இல்லையெனில் அவரால் இப்படி உட்கார முடியாது என்பதை சிலர் உணர்ந்தனர். இதனை அடையாளம் கண்ட ஏழு பேர் மட்டும் அங்கேயே தங்கி இருந்தார்கள். இந்த ஏழு பேரும் சப்தரிஷிகள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். ஆதியோகி அவர்களுக்கு ஒரு சில தயார்நிலைப் பயிற்சிகளை அளித்து, “நீங்கள் தயார் செய்யுங்கள், பார்ப்போம்” என்றார்.ஒருநாள் அவரது கவனம் அவர்கள் மீது விழுந்தபோது, அவர்கள் ஜொலிக்கும் பாத்திரங்களைப் போல மாறிவிட்டதை அவர் கவனித்தார். முற்றும் அறிந்த ஒருவருக்கு, அத்தகைய ஜொலிக்கும் பாத்திரங்களைக் காணும்போது, அவரால் அமைதியாக இருக்க முடியாது. இந்த ஏழு பேரும் உண்மையிலேயே தயாராக இருப்பதை அவர் கண்டார், பின்னர் அவர் காந்த்திசரோவரின் கரையில் அமர்ந்தார். யோக அறிவியலை விளக்கத் தொடங்கினார். இந்த அறிவியலை உள்வாங்குவதற்கும், இந்த ஞானத்தை கிரகித்துக்கொண்டு, அதை மனித வடிவத்துடன் இணைப்பதற்கும் அவர்கள் ஆழமான செயலற்ற நிலைக்குச் சென்றனர். அவர்களில் மிக முக்கியமானவர், நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர், தென் திசையில் பயணிப்பதைத் தேர்வு செய்தவர், அகத்தியர் அல்லது அகஸ்தியமுனி என்று அழைக்கப்படுபவர். பூமிக்கு அடியில் குகை போன்ற ஒரு அமைப்பில் தனது சாதனாவைத் தொடர்ந்தார், அவர் ஆழமான செயலற்ற நிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பூமிக்கு அடியில் தங்கியிருந்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்து வெளியில் வந்தபோது, அவர் காரண அறிவில் திரண்டவராக இல்லாமல், ஞானத்தை அவரது மனித அமைப்பின் அதிர்வு பொருந்திய ஒரு செயல்முறையாக, அவரின் ஒரு பாகமாகவே, முழுமையாக அவரது உடலமைப்பாக இணைத்தார்.
அவர் தென் திசையில் செல்வதற்கான தனது நோக்கத்தை நிறைவேற்ற முடிவு செய்தார், அவர் துணைக் கண்டத்தின் தென்பகுதியில் முழு வீரியத்துடன் யோக அறிவியலை பரப்பிய காரணத்தால், ஏழு ரிஷிகளிலும் அவர் மிக முக்கியமானவராக ஆனார், நாட்டில் 700 க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை அவர் அமைத்தார்; கணக்கிடப்படாத பல சிறிய இடங்களும் உள்ளன. தொடர்ந்து சாதனா நடைபெற்ற முறையான ஆசிரமங்களில், சாதனா தடைபடாமல் நிகழ்வதற்காக, அந்த இடங்களில் ஏதோ ஒருவிதத்தில் குருவின் தன்மையை அவர் நிறுவினார், இதனால் சாதனா தொடர்ந்து நிகழ முடியும். ஆன்மீகத்தை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாடு முழுவதும் 700 க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை அவர் நிறுவினார். புரிந்துணர்வின் ஆழம் மற்றும் அவர் மேற்கொண்ட பணி எல்லாவற்றிலும் அவர் கையாண்ட சக்தியும், ஞானமும் பல வழிகளிலும் அதிஉன்னதமான மனித ஆற்றல் வெளிப்பட்டுள்ளது.
தென்னிந்திய மறைஞானத்தின் தந்தை
அகத்தியர் மூலமாக யோகா ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் தென்னிந்தியாவுக்கு வந்தது. பல வழிகளில் அகத்தியரை, தென்னிந்திய மறைஞானத்தின் தந்தை என்று நீங்கள் அழைக்கலாம். அவர் 4,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கூறுகிறார்கள். அகத்தியர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது நமக்கு தெரியாது, ஆனால் அவர் கால்நடையாகவே மேற்கொண்ட பயணத்தின் அளவைப் பார்த்தால், அவர் நிச்சயமாக ஒரு அசாதாரண ஆயுட்காலம் வாழ்ந்திருக்கிறார். அவர் 4,000 ஆண்டுகள் வாழ்ந்தாரா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவர் சாதாரண மனிதர்கள் வாழ்ந்ததை விட நிச்சயமாக மிக நீண்ட காலம் வாழ்ந்தார். அவர் தனது வாழ்க்கையில் செய்த செயல்பாட்டின் அளவைப் பார்த்தால், அவர் 100 ஆண்டுகளில் இறந்துவிட்டது போலத் தோன்றவில்லை. குறைந்தபட்சம் 400 ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் செய்த செயல்பாட்டின் அளவு ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிகழச் சாத்தியமில்லை.
Subscribe
இன்று நாம் வானவழி மற்றும் தரை வழி வாகனத்தில் பிரயாணிக்கிறோம், எனவே குறுகிய காலத்தில் எத்தனையோ விஷயங்களை நம்மால் செய்ய முடிகிறது என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் அகத்தியர் கால்நடையாக, மேற்கொண்ட பயணத்தில், ஒரு சாதாரணமான மனித வாழ்நாளின் காலத்தில், ஒரு மனிதர் அவ்வளவு செயல் செய்வது சாத்தியமில்லை. நிச்சயமாக அவர் மிக நீண்ட காலம் வாழ்ந்தார். 400 ஆண்டுகள் இருக்கலாம் மற்றும் 4,000 ஆகவும் இருக்கலாம் அல்லது மக்கள் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்திருக்கலாம், ஆனால் அவர் பிரமிக்கத்தக்க விஷயங்களைச் செய்தார்.
விந்தியாச்சல் மலைகளுக்கு தெற்கே இந்தியாவின் தென்பகுதிக்குச் சென்றால், கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள், “அகத்திய முனிவர் இங்கு தியானம் செய்தார், அகத்திய முனிவர் இந்தக் குகையில் வசித்தார், அகத்திய முனிவர் இந்த மரத்தை நட்டார்” என்று கூறுவார்கள். இதுபோன்ற முடிவற்ற கதைகள் உள்ளன, ஏனென்றால் அவர் இமயமலைக்கு தெற்கே உள்ள ஒவ்வொரு மனித குடியிருப்பையும், ஒரு ஆன்மீக செயல்முறை மூலம் தொட்டுச்சென்றார், இது ஒரு போதனையாக, மதமாக அல்லது ஒருவித தத்துவமாக வழங்கப்படவில்லை, ஆனால் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. எப்படி காலையில் எழுந்ததும் பல் துலக்குவதை உங்கள் தாய் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தாரோ, அதைப்போல, ஆன்மீக செயல்முறைகள் கற்பிக்கப்பட்டது. இன்றைக்கும்கூட, அதன் எச்சங்கள் கலாச்சாரத்தில் குறிப்பாக நாட்டின் தென்பகுதியில் உயிர்ப்புடன் மிஞ்சி உள்ளது.
காவிரியில் அகத்தியர் நிகழ்த்திய அற்புதம்
இந்த மண்ணுக்குரிய கலாச்சாரத்தின் மிக முக்கியத்துவமான அம்சம் என்னவென்றால், மனிதனின் பிழைப்பும், செல்வ வளமும் ஒரு பின்விளைவாக மட்டும்தான் இருக்கிறதேயன்றி, வாழ்க்கையின் குறிக்கோளாக அல்ல. மனிதன் மலர்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கிறது. பல மகத்தான மனிதர்கள் மனித வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், தனிமனிதர்களின் மலர்ச்சிக்காகவும் குறிப்பிட்ட வழிகளில் சக்திகளை முதலீடு செய்தனர். அவர்கள் அதற்குத் தேவையான சக்தி அமைப்புகளை (சக்தி நிலைகளை) உருவாக்கி, ஒவ்வொன்றையும் - ஒரு நதியையும் - அதை நோக்கிய ஒரு சாத்தியமாகச் செய்ய முயன்றனர்.
நட்டாற்றீஷ்வரர் கோயில் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மிக அற்புதமான கோயில். இது தலைக்காவிரியில் இருந்து, கடலில் கலக்கும் வரை ஆற்றின் பாதையில் மிகச்சரியான மையப்பகுதியில் காவிரியில் காணப்படும் ஒரு தீவில் அமைந்துள்ளது. எனவே இது காவிரியின் நாபியாகக் கருதப்படுகிறது.
நட்டாற்றீஷ்வரரில் அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம், அன்றைய நாட்களின் சில பாரம்பரிய கலவைகளை மணலுடன் குழைத்து செய்யப்பட்டது. இந்த மணல் லிங்கம் இன்னமும் உறுதியான கட்டமைப்புடன் உள்ளது, மேலும் சக்திநிலையை பொறுத்தவரை இது வெடித்தெழச் செய்கிறது! 6000 ஆண்டுகள் பழமையானது என்றாலும், நேற்று செய்ததைப் போலவே உணரச் செய்கிறது.
ஏதோ ஒரு வகையில் அவர் காவிரியை ஒரு உயிருள்ள உடலாகப் பார்த்து, சக்தியானது மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் சரியான வழியில் நகரும்படி, நட்டாற்றீஷ்வரரை நாபி மையமாக நிறுவினார், இவையெல்லாம் பின்னணியில் இருக்கும் நிலையில், காவிரி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாய்ந்துகொண்டிருந்ததைப் போல, அதை மீண்டும் பாய வைப்பது மிக முக்கியமானதாகிறது. இது பிழைப்புக்காக மற்றும் விவசாயத்திற்காக என்பதைக் கடந்து, அதைக் காட்டிலும் மிக அதிகமான முக்கியத்துவம் கொண்டுள்ளது.
அகத்திய முனிவர் தனது சக்தியையும் சூட்சும உடலையும் இந்த இடத்தில் விட்டுச்சென்றார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அவர் தனது மன உடலை அல்லது மனோமய கோஷாவை மதுரைக்கு அருகிலுள்ள சதுரகிரி மலைப்பகுதியில் விட்டுவிட்டார் என்றும், கார்த்திகேயனின் உதவியுடன் அவர் தனது ஸ்தூல உடலை சிவன் இருந்த கைலாயத்திற்கு எடுத்துச் சென்று அங்கேயே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது அற்புதமான ஒரு செயல்பாடு.
கைலாயம் ஒரு மிகப்பெரிய ஆன்மீக நூலகம் போன்றது. இது சிவன் வசித்த இடம் என்று அனாதி காலத்திலிருந்து கூறப்படும்போது - இப்போதும் இது சிவனின் இருப்பிடமாகத்தான் இருக்கிறது. இதனால் அவர் இன்னமும் பனியில் நடனமாடிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமல்ல. அவர் என்னவாக இருந்தாரோ, அவை அனைத்தும் அந்த இடத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதே இதன் பொருள். அவர் மட்டுமல்ல, அங்கு சென்ற ஒவ்வொருவரும் முதலீடு செய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை, அகத்திய முனி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். அவர் தனது சக்திகளை கைலாயத்தில் முதலீடு செய்தார் என்பது நமக்கு தெரியும்.
அகத்தியர் என்னவாக இருந்தாரோ, அவை அனைத்தையும் கைலாயத்தின் தெற்கு முகத்தில் முதலீடு செய்தார், அது ஆச்சரியகரமானது, ஆச்சரியம் என்றால் அது நம்பமுடியாத ஆச்சரியம். இயற்கை அழகைப் பொறுத்தவரை, அதற்கு வார்த்தைகள் இல்லை, ஆனால் அதன் சக்தி மற்றும் ஆற்றலைப் பொறுத்தவரை, இது முற்றிலும் அற்புதமானது. ஆகவே, அகத்தியர் ஒட்டுமொத்தமான தென்பகுதி மறைஞானத்தின் ஆதாரமாக இருக்கிறார். நான் என்னவாக இருக்கிறேனோ அவை அனைத்துக்கும் ஆதாரம் அவர்தான். தற்போது உங்கள் உயிரை சுண்டும் நான், அவரது விரல் நகமாகத்தான் இருக்கிறேன் என்று நீங்கள் கூறமுடியும்.
சாதாரணத்திலிருந்து அசாதாரணத்திற்கு
எல்லாப் புராணமும் நமக்கு சொல்வது என்னவென்றால், அகத்தியர் உட்பட, சப்தரிஷிகள் எவரும் வானத்திலிருந்து இறங்கவில்லை. அவர்கள் விசேஷமான பிறப்புக்கு உரியவர்கள் இல்லை - அவர்கள் பிறந்தபோது நட்சத்திரங்கள் தோன்றி, இடி மின்னல் இடித்ததாக யாரும் பேசவில்லை. எதுவும் நிகழவில்லை. சாதாரணமாக பிறந்தார்கள். இந்திய துணைக் கண்டத்தில் அவர்கள் எங்கு பிறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஏதோ சில பெண்கள், ஏதோ சில முக்கியத்துவமற்ற இடங்களில் எங்கோ ஒரு இடத்தில் அவர்களை பிரசவித்திருப்பார்கள். அவர்கள் வானத்திலிருந்து இறங்கவில்லை; அவர்கள் தங்களைத் தாங்களே வளர்த்துக் கொண்டனர். அதுதான் அவர்களின் வாழ்க்கை சரிதம். யோகா மற்றும் சாதனா குறித்த முக்கியத்துவமான விஷயம்: நீங்கள் யார், நீங்கள் எப்படி பிறந்தீர்கள், உங்கள் பெற்றோர் யார், என்ன விதமான கர்மா உங்களுக்கு உள்ளது என்பது ஒரு பொருட்டல்ல - நீங்கள் விருப்பத்துடன் இருந்தால், உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில் அகத்தியரின் முயற்சி நிகரற்றது. நாம் இப்படி வைத்துக்கொள்ளலாம், அகத்திய முனிவர் இங்குள்ள ஒரு உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர், அவர் எங்கோ காணாமல் போய்விட்டார். அவர் ஆதியோகியுடன் தங்கியிருப்பதற்காக இமயமலைக்குச் சென்றார். அகத்தியரைப் பற்றி கிராம மக்கள் என்ன பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? "ஓ, உங்கள் மகன் ஒரு பெரிய முனிவராக போகிறான்" என்று அவர்கள் பெற்றோரைப் புகழ்ந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. மக்கள் அவரது பெற்றோரை கேலி செய்து, “உங்கள் முட்டாள் பையன் எங்கே?” என்றுதான் இகழ்ந்திருப்பார்கள். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர் திரும்பி வந்தாலும், அவரைப் பார்த்து சிலிர்த்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர் இமயமலைக்குச் சென்று, ஆதியோகியைச் சந்தித்து திரும்பியதில் உற்சாகம் அடைந்திருப்பார்களா? இல்லை, அவர் ஒரு காட்டுவாசி போன்ற தோற்றத்தில் இடுப்பில் துணியுடன் திரும்பி வந்ததைக் கண்டு அவர்கள் சிரித்திருப்பார்கள்.
அவர் எந்த விதமாக மாறினார் என்பதன் அடிப்படையில் இப்போது நாம் வாய் பிளந்து அதிசயத்துடன் பார்க்கலாம், ஆனால் அவரது சமகாலத்தில், எந்த அங்கீகாரமும், பாராட்டும் இல்லை. அவருக்காக யாரும் கைதட்டவில்லை. அவர் ஒரு கிறுக்கனைப் போல், பெற்றோரை விட்டு ஓடிச்சென்ற பொறுப்பற்ற பையன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அனைத்தையும் கடந்து, ஒருபோதும் தளராமல் - தொடர்ந்து தீவிரமாக மட்டும் இருப்பது - அதுதான் அகத்திய முனிவர். ஒரு விஷயம் என்னவென்றால், அவர் செல்ல வேண்டிய திசை தீர்மானிக்கப்பட்டிருந்தது, மற்றொரு விஷயம் என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை என்று அவர் அருளில் இருக்கத் தீர்மானித்தார், அவர் செய்துகொண்டிருந்ததில் ஒருபோதும் அசைவில்லாமல், பூரணமான அருளின் நிழலில் இருப்பதைத் தேர்வு செய்திருந்தார்.