ஞானிகள் எப்பொழுதுமே ஒலியை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்கும் அப்பால் உள்ள பரிமாணத்தை உணரும் விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தியானலிங்கத்திற்குள் மீட்டப்படும் சித்தாரின் ஒரு மீட்டல், நம்மை எல்லைகளை தாண்டிய ஒரு இனிமையை ருசிக்கச் செய்வதாய் இருக்கும். சத்குருவால் உருவாக்கப்பட்டுள்ள சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழுவினர் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

சத்குருவின் அருளுக்கு இசையால் அர்ப்பணிப்பு செய்வதற்கான தீராத பெரும் ஆர்வம் உந்த, முறையாக பயிற்சி பெறாத இசை ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் உருவானதே சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக்குழு! சத்குரு இந்த குழுவினரை ஒன்றாய் அழைத்து இசை உருவாக்கம் குறித்து உரையாட, அடுத்த ஒரு வாரம் கழித்து உற்சாகத்துடன் சத்குருவின் சத்சங்கம் ஒன்றில் துவங்கியது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் பயணம். தற்போது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை மாறியுள்ளது. மேலும் இந்த இசை, மக்கள் சத்குருவின் அருளை உள்வாங்குவதற்கும் திறந்தநிலையில் இருப்பதற்கும் துணை நிற்கிறது.

பல்வேறு கலாச்சார இசைகளின் கலவையாக சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை உருவாக்கங்கள் அமையும். இந்த இசைக்குழுவில் இருப்பவர்கள் அனைவரும் ஈஷா அறக்கட்டளையின் முழுநேர தன்னார்வத் தொண்டர்கள். வெவ்வேறு திறமைகள் கொண்ட, இசைக்குப் புதியவர்களான இவர்கள் ஆழமான தேடுதல் மற்றும் நன்றியுணர்வால் இந்த இசைக்குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்தும் வெவ்வேறு நாடுகளிலிருந்தும் கூட வந்துள்ளனர். தங்கள் இசைக் கருவிகளை ஒன்றிணைத்து வழங்கும் சூட்சமமான இந்தக் குழுவினரின் இசையானது, பலகோடி வார்த்தைகளால் உணர்த்த இயலாதவற்றை இசையதிர்வுகளால் உணர்த்த வல்லவை.

புதுமையும் தனித்துவமும் மிக்க படைப்பாக 2004 மஹாசிவராத்திரி விழாவில் Exuberance of the Unmanifest என்ற இசை ஆல்பம் முதல்முறையாக வெளிவந்தது. வெள்ளியங்கிரி மலைகளின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இரண்டாவதாக White Mountain என்ற ஆல்பம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து எண்ணற்ற சிறந்த இசைத் தொகுப்புகள் அழகிய இசை வரிசைகளுடன் அமைந்தது.

பல்வேறு பெருமைமிகு மேடைகளிலும் விழாக்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, 2006ல் ஜஹானே குஸ்ராவ் திருவிழாவிலும் மற்றும் WPO, YPO மற்றும் UN சந்திப்பு கூட்டங்களிலும் இசை நிகழ்ச்சியை வழங்கியுள்ளது. மேலும், ட்ரம்ஸ் இசை மேதை சிவமணி, சுஃபி பாடகர் சிலா கான் மற்றும் புகழ்பெற்ற பாடகர் ரெமோ ஃபெர்ணான்டஸ் போன்றோர்களோடு இணைந்து இந்த இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர்.

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை, துடிப்பாக இருக்கும் அதே சமயம், கேட்பவர்களை மெய்மறக்கச் செய்து சூட்சுமமான நிலைகளை எட்ட உதவி, உள்நிலை ஆராய்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கவல்லது.