கற்றாழை தரும் வற்றாத ஆரோக்கியம்! (Aloe Vera Uses in Tamil)
கற்றாழை என்பது தரிசு நிலத்தில் முளைத்துக்கிடக்கும் தேவையற்ற ஒரு தாவரம் என்ற பார்வை இன்று நிச்சயம் இல்லை! உடலழகுக்கு மட்டுமல்லாமல், வற்றாத ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் கற்றாழையைப் பற்றி உமையாள் பாட்டி சொல்லக் கேளுங்கள்!
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 4
“கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி...” அந்த தெம்மாங்குப் பாட்டு கிராமிய மணத்துடன் உமையாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்த என்னை தலையால் தாளம்போட வைத்தது. யார் அந்த வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரர் என மனதிற்கேட்டவாறே உமையாள் பாட்டியின் அருகில் சென்றபோது, நான் ஊகித்தது சரியாகவே இருந்தது! ஆம், உமையாள் பாட்டிதான் ஏதோ கைவேலை பார்த்துக்கொண்டே ஆயாசமாகப் பாடிக்கொண்டிருந்தாள்.
“என்ன பாட்டி பாட்டெல்லாம் பலமா இருக்கு?”
“வாப்பா... வந்து உட்காரு! நீயும் பாட்டிக்கு கொஞ்சம் இந்த கத்தாழைச் சோத்த கழுவி ஒத்தாச பண்ணு!” பாட்டி அன்புக் கட்டளையிட்டாள்.
“ஓ... அதான் கத்தாழை பத்தி பாட்டு படிச்சிகிட்டு இருந்தீங்களா பாட்டி! நல்ல டைமிங் சாங் பாட்டி!”
Subscribe
“கத்தாழை பத்தி பாட்டு மட்டும் படிச்சா பத்தாதுப்பா... அதுல உள்ள மருத்துவ குணங்கள தெரிஞ்சு அத பயன்படுத்தி வந்தோம்னா, நம்ம உடம்பும் ஆரோக்கியத்துல பாட்டுப் படிக்கும்!” பாட்டி இப்படிச் சொல்லியதும், கற்றாழையின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாகச் சொல்லும்படி நான் கேட்டுக்கொண்டதால், பாட்டியும் கற்றாழையைப் பக்குவம் செய்தபடியே கூறத்துவங்கினாள்.
கற்றாழை பயன்கள் (Aloe Vera Uses in Tamil)
உடல் சூடு தணிய:
“கற்றாழைய ஒரு காயகற்ப மூலிகைனு சொல்லலாம். கற்றாழை பொடியை முறையா சாப்பிட்டு வந்தா, எப்பவும் இளமையா உடல் வன்மையோட வாழலாம். பொதுவா கற்றாழை உடல் சூட்ட தணிச்சு, உடலுக்கு வலிமை தருது.”
பெண்களுக்கான நோய்களுக்குத் தீர்வு:
“இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இருக்குறதால, இந்த கற்றாழைய “கன்னி, குமரி...” அப்படின்னும் சொல்லுவாங்க. கற்றாழைச் சாறு இல்லாட்டி கற்றாழை பொடிய முறையா சாப்பிட்டு வந்தா சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் பெண்களுக்கு குணமாகும் வாய்ப்புண்டு.”
வீக்கம் குறைய:
“கற்றாழைச் சாறை வெதுவெதுப்பா சூடாக்கி வீக்கத்தில, அடிப்பட்ட இடங்கள்ல இருக்குற சிவப்பான இடத்துல பூசி வந்தா நல்ல பலன் கிடைக்கும்.”
முடி வளர கற்றாழை:
“அதெல்லாம் சரி பாட்டி, கற்றாழையில நிறைய அழகு சாதனக் குறிப்புகள் இருக்குனு சொன்னீங்களே... அதுல ஒரு குறிப்பு சொல்லுங்களேன்!” பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து கேட்டேன்.
“சரி... சரி... சொல்றேன் பொறு...!” என்று சொல்லி சிரித்தவள், தொடர்ந்து கூறினாள்,
“கற்றாழை சாறை நல்லெண்ணெயோட (சம அளவு) கலந்து காய்ச்சி தலையில தினமும் தேச்சி வந்தா...”
“ம்... தேச்சி வந்தா, மூளை வளருமா பாட்டி...?”
“அது இருக்குறவங்களுக்குதாம்ப்பா வளரும். நீ அத தினமும் தலையில தேச்சி வந்தா, முடி நல்லா ஆரோக்கியமா வளரும்! நல்லா தூக்கமும் வரும்!”
சந்தடி சாக்கில் எனக்கு பல்பு கொடுத்த பாட்டியிடம் கொஞ்சம் கற்றாழை சாறை கேட்டு வாங்கி பார்சல் செய்துகொண்டு விடைபெற்றேன்.
குறிப்பு:
- நீர்ச்சுருக்கு, உடல் வெப்பம், உடல் அரிப்பு: கற்றாழையை சாறெடுத்து வெண்ணெய் (அ) கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் (30 மிலி) நீர்ச்சுருக்கு (சிறுநீர் குறைந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படல்) உடல் வெப்பம், உடலரிப்பு நீங்கும்.
- கண் நோய்கள்: கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவி, இதில் சிறிது படிகாரம் சேர்த்து, சிறு துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து நீர் வடியும். அந்நீரை கண்களில் விட கண் சிவப்பு, கண் நோய்கள் நீங்கும்.
ஈஷா ஆரோக்யா மருந்தகங்களில் கற்றாழை பொடிகிடைக்கும்.