ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் ஒரு அங்கமாக ‘ஈஷா விவசாய இயக்கம்’ தற்போது பாலேக்கர் அவர்களின் விவசாய முறையை தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறது. செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் முறையை தமிழகத்தின் ஒவ்வொரு விவசாயிகளிடத்திலும் கொண்டு சேர்க்கும் இலக்குடன் ஈஷா விவசாய இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர்.

ஈஷா பசுமைக்கரங்களின் அழைப்பின்பேரில் கடந்த 2015ல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் வருகைதந்தார். இயற்கை முறையில் இடுபொருட்கள் தயாரிப்பது முதல் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழிற்நுட்பங்கள் அனைத்தும் இம்முகாமில் கற்றுத்தரப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல விவசாயிகள் இன்று தங்கள் விவசாய நிலங்களில் இம்முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும், சில முன்னோடி விவசாயிகளும் இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்த விழிப்புணர்வை மற்ற விவசாயிகளுக்கும் கொண்டுசெல்ல துணைநிற்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது, திருச்சி SRM மருத்துவ கல்லூரியில் ஈஷா விவசாய இயக்கத்தின் சார்பில் மீண்டும் இந்த பயிற்சி முகாம் 9 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்து பங்கேற்கவுள்ளனர். மேலும், முதல்நாள் நிகழ்ச்சியை சத்குரு அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் பெருமக்கள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.

இயற்கை விவசாயத்திற்கு ஏன் மாறவேண்டும்?

மண்புழு உழவனின் நண்பன் என தெரிந்திருந்தும், இரசாயன நஞ்சுகளை நிலங்களில் விதைத்து நண்பர்களையே கொல்லும் அறிவீனத்தை செய்தோம்.

முன்காலத்தில் நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் இருந்ததாகவும் சோளத்தில் 5000 ரகம் உண்டு என்றும், மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு என்றும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளார். ஏன்... விலங்கினங்களில் கூட பல எண்ணற்ற வகையினங்கள் இருந்துள்ளன. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, என விலங்கினங்களிலும் சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே பரிணமித்துள்ளன.

இத்தனை உயிர்களை படைத்து பரிணமிக்கச் செய்துள்ள இயற்கை, மனிதனுக்கும் இப்பூமியில் வாழும் உரிமையைக் கொடுத்துள்ளது. ஆனால், மனிதனோ தான் மட்டுமே இப்பூமியில் வாழ பிறந்திருப்பதாக எண்ணிக்கொண்டதன் விளைவு, இன்று நம் பூமி பெரும் அபாயத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

இன்று இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விளைநிலங்களில் இறைத்து, மண்ணின் தன்மையையே மாசுபடுத்தி விட்டோம். இதனால் நிலங்களில் விளையும் பயிர்களும் வேலியோரங்களில் வளரும் மூலிகைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளன.

இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் இடப்படும் நிலங்களில் மண்புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை! மண்புழு உழவனின் நண்பன் என தெரிந்திருந்தும், இரசாயன நஞ்சுகளை நிலங்களில் விதைத்து நண்பர்களையே கொல்லும் அறிவீனத்தை செய்தோம். அதற்கெல்லாம் விளைவாகத்தான் இன்று பெயர் தெரியா பல விநோத நோய்களுக்கு மனித இனம் ஆளாகி வருகிறது!

நாம் விளைவித்த சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கால்நடைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டு மாடுகள் அழியாமல் காக்கப்படும்…!

“எனது 6 வருட கால ஆராய்ச்சியின் அடிப்படையில், 1 ஏக்கர் நிலத்திற்கு 10கிலோ நாட்டுப்பசுவின் சாணமே போதுமானது” என்கிறார் திரு.பாலேக்கர்.

பாலேக்கர் அவர்கள் இயற்கை விவசாயம் குறித்து பேசும்போது, நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார். அதிலும், 30 ஏக்கர் விவசாய நிலத்திற்கு ஒரே ஒரு நாட்டு பசு இருந்தாலே போதுமானது என அவர் சொல்வது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், அவர் இதனை விஞ்ஞானப் பூர்வமாகவே விளக்குகிறார். “எனது 6 வருட கால ஆராய்ச்சியின் அடிப்படையில், 1 ஏக்கர் நிலத்திற்கு 10கிலோ நாட்டுப்பசுவின் சாணமே போதுமானது” என்கிறார் திரு.பாலேக்கர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஒரு நாட்டுப்பசு ஒரு நாளைக்கு 11 கிலோ சாணமும், ஒரு நாட்டுக் காளைமாடு ஒரு நாளைக்கு 13 கிலோ சாணமும், ஒரு நாட்டு எருமை மாடு ஒரு நாளைக்கு 15 கிலோ சாணமும் சராசரியாக நமக்கு அளிக்கிறது. இதன் அடிப்படையில்தான் திரு.பாலேக்கேர் அவர்கள், விவசாயிகளிடத்தில் ஒரு நாட்டு மாடு இருந்தாலே வெளியிலிருந்து இரசாயன உரங்களை மட்டுமல்லாது, பண்ணை தொழு உரங்களையோ, மண்புழு உரங்களையோ அல்லது இயற்கை உரங்கள் என விற்கும் உரங்களையோ விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிபடச் சொல்கிறார்!

எனவே விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறும்போது, நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புணர்வும், நாட்டு மாடுகளின் பயன்பாடும் வெகுவாக அதிகரிக்கும்.

வேளாண்காடுகளை முன்னிறுத்தும் விவசாய முறை…

மரங்களின் வேர்கள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களைக் கவர்ந்திழுப்பதற்குரிய சில வகை இனிப்பு சுவையுள்ள மாவுச்சத்து போன்ற பொருட்களை வெளியிடுகின்றன.

இன்று, விவசாய நிலங்களில் மரங்கள் இருந்தால் அது நீரினை உறிஞ்சிவிடும் என்ற ஒரு தவறான புரிதல் தமிழக விவசாயிகளிடத்தில் காணப்படுகிறது. அதனால் விவசாயிகள் பெரும்பாலான விவசாய நிலங்களில் மரங்களே நடுவதில்லை; ஏற்கனவே இருக்கும் மரங்களையும் பலர் வெட்டி விடுகின்றனர். ஆனால், இந்த மனப்போக்கு முற்றிலும் அபத்தமானது என்பதை கூறும்விதமாக பாலேக்கர் அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அமைகிறது. காடுகளில் மரங்களின் நிழல்களில், மரங்களின் அடியைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு நுண்ணுயிர்கள் உற்பத்தியாகி இலைகளை மட்கச் செய்து அதனை மண்ணிற்கு உரமாக்குவதை பாலேக்கர் அவர்கள் கவனித்துள்ளார்.

காடுகளில் பாலேக்கர் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், மரங்களின் நிழல்களில் எறும்புகள் போன்ற பூச்சி இனங்கள் சுறுசுறுப்பாக சில வேலைகள் செய்வதை கண்டுணர்ந்தார். மரங்களின் நிழலுக்கு வெளியே அத்தகைய வேலைகள் நடைபெறுவதைக் காணமுடியவில்லை. இதன்மூலம் அவர் கண்டறிந்தது, மரங்களின் வேர்கள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்களைக் கவர்ந்திழுப்பதற்குரிய சில வகை இனிப்பு சுவையுள்ள மாவுச்சத்து போன்ற பொருட்களை வெளியிடுகின்றன. இவை நுண்ணுயிர்களுக்கு உணவாக அமைகின்றன.

சுமார் 6 வருட காலமாக காடுகளில் பயணித்து, அங்கே தான் கவனித்து உணர்ந்தவற்றின் அடிப்படையில் பாலேக்கர் அவர்கள் ‘ஜீவாமிர்தம்’ எனும் அற்புத இயற்கை இடுபொருளை கண்டறிந்து இயற்கை விவசாய உலகிற்கு வழங்கியுள்ளார்.

ஜீவாமிர்த இரகசியம் சொல்லும் பாலேக்கர்…

ஜீவாமிர்தம் மர நிழலில் நுண்ணுயிர்கள் ஈர்க்கப்படும் அதே சூழலை விவசாய நிலமெங்கும் உருவாக்குகிறது. இதனால் மண் வளம் பெருகி, விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கிறது!

இதன் அடிப்படையிலேயே பாலேக்கர் அவர்கள் மாட்டு கோமியத்துடன் மனித சிறுநீர் மற்றும் இனிப்புச்சுவையுடைய நாட்டு வெல்லம் அல்லது தேன் அல்லது பனை வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தி ஜீவாமிர்தம் எனும் அற்புத இடுபொருளைக் கண்டறிந்துள்ளார். ஜீவாமிர்தம் மர நிழலில் நுண்ணுயிர்கள் ஈர்க்கப்படும் அதே சூழலை விவசாய நிலமெங்கும் உருவாக்குகிறது. இதனால் மண் வளம் பெருகி, விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கிறது!

இங்கே நாம் கவனிக்க வேண்டியது மரங்களில் நிழலின் அற்புத தன்மையைத்தான்! விவசாயிகள் ஜீவாமிர்தத்தை பயன்படுத்தி மண் வளத்தை அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும், விவசாய நிலமெங்கும் மரங்களை நட்டு இயற்கையாகவே மண் வளத்தை அதிகரிப்பது மிகவும் முக்கியமாகும்.

ஈஷா பசுமைக் கரங்கள் விவசாய நிலங்களில் மரங்களில் நட்டு, வேளாண் காடுகள் உருவாக்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வழங்கி விவசாயிகளுக்கு உறுதுணையாய் உள்ளது. மேலும், இயற்கை விவசாய தொழிற்நுட்பம் குறித்தும் ஆலோசனைகளையும் தன்னார்வத் தொண்டர்கள் வழங்கி வருகின்றன.

இது குறித்து மேலும் தகவல்களைப் பெறவும், ஈஷா பசுமைக்கரங்களின் நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளை குறைந்த விலையில் பெறுவதற்கும் 94425 90062 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்!

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!