நோய்களை தூரமாக்கும் துளசியின் பயன்கள்! (Thulasi Uses in Tamil)
தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள மருத்துவ குணமிக்க துளசியின் பயன்கள் பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு அறிவோம் வாருங்கள்!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
லாக்டவுன் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருக்கும்போதிலும் அடுத்த தெருவில் இருக்கும் உமையாள் பாட்டியை சந்திப்பதில் எனக்கு ஆர்வம் குறையவில்லை!
வீட்டின் உட்புற திண்ணையில் அமர்ந்து கையில் ஏதோ மாலை கட்டிக்கொண்டிருந்த உமையாள் பாட்டி, முக கவசம் சகிதமாக நான் அங்கு நுழைந்ததும், ஏதோ வைத்தியத்திற்கு வந்துள்ள நபர் என்று நினைத்து ‘வாங்க வாங்க…!’ என்று நமஸ்காரம் செய்தாள்.
முக கவசத்தைக் கழட்டிய பின்னர், ‘அட நீதானா…?!’ என்று அலுத்துக்கொள்வது போலச் சொல்லி, கை கால்களை கழுவிட்டு வந்து அமர உத்தரவிட்டாள் பாட்டி.
“என்ன மாலை பாட்டி இது…? பூ இல்லாமல் இலையா இருக்கு” என்று நான் கேட்டு முடிப்பதற்குள், அங்கு நிரம்பியிருந்த துளசியின் மணம் பாட்டி துளசிமாலை கட்டிக்கொண்டிருப்பதை உணர்த்தியது.
“இந்த லாக்டவுன்ல எல்லா வழிபாட்டுத் தலங்களையும் மூடிட்டாங்களே பாட்டி… அப்புறம் ஏன் துளசிமாலை கட்டுறீங்க?” எனக்கு உடனடியாக எழுந்த சந்தேகத்தை பாட்டியிடம் கேட்டேன்.
“ஏம்ப்பா கோயில்ல இருக்கிற சாமிக்குதான் மாலையெல்லாம் சாத்தணுமா? நம்ம வீட்டுல வச்சு வழிபடுற சாமிக்கு போடக்கூடாதா?!” என்ற பாட்டி, மாலையை மிக நேர்த்தியாக கட்டி முடித்திருந்தாள்.
Subscribe
தன் வீட்டில் சிறியதாக வைத்து வழிபடப்படும் விஷ்ணு சிலைக்கு அந்த துளசி மாலையை சாற்றி விட்டு பூஜையை முடித்தபின், துளசி தீர்த்தத்தை குடிப்பதற்கு வழங்கினாள் பாட்டி.
“நாம பாரம்பரியமா பயன்படுத்துற இந்த துளசி இலைகள் நம்ம ஆரோக்கியத்திற்கு பல வகையில் உறுதுணையாய் இருக்கு. துளசி மாதிரி மூலிகைகள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுறது மூலமா பாதுகாக்கப்படும் என்ற ஒரு நோக்கத்திலும், நம் முன்னோர்கள் இதுபோன்ற அர்ப்பணிப்புகள பண்ணியிருக்கலாம்” என்று திண்ணையில் மீண்டும் வந்தமர்ந்து கூறிய உமையாள் பாட்டியிடம், தொடர்ந்து துளசியில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி அறிவதற்கு ஆவலானேன்.
“துளசி ஏராளமான நோய்களுக்கு மருந்தாகறதுனால துளசிய ‘மூலிகைகளின் அரசி’ன்னு சொல்றாங்க. இது நம்மை, நோய் வருமுன் காத்து, எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.
வெண்துளசி, கருந்துளசி, நாய்த்துளசி, செந்துளசி, நற்றுளசி… அப்டின்னு துளசியில பல வகை இருக்கு.
துளசி பயன்கள் (Thulasi uses in tamil):
காய்ச்சலுக்கு மருந்தாகும் துளசி! (Thulasi for Fever)
இப்பல்லாம் ஏதேதோ பெயர்ல புதுப்புது காய்ச்சல் வந்துட்டே தான் இருக்கு... இந்த பாட்டி வைத்தியத்துல துளசி காய்ச்சலுக்கு ஒரு நல்ல தீர்வு. அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் துளசியோட மருத்துவ குணங்கள கண்டறிஞ்சு சொல்லியிருக்காங்க. 10 துளசி இலையோட 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி வடிகட்டி குடிச்சா காய்ச்சல் படிப்படியா குறையும்.
சளி இருமலுக்கு மருந்தாகும் துளசி! (Thulasi for Cold and Caugh)
சளிக்கு நல்ல மருந்து இந்த துளசி. உடல்ல வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுது, உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதுக்கு உண்டு. துளசி சாறுகூட கொஞ்சம் தேன் கலந்துக் குடுத்தா குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.
துளசி செடி தீர்க்கும் நாட்பட்ட நோய்கள்! (Thulasi for Chronic diseases)
இப்பல்லாம் சர்க்கரை நோயை ஏதோ சொத்து சம்பாதிச்சு வைக்குற மாதிரி பெருமையா சொல்லிக்குறாங்க. முக்கியமா 'நீரிழிவு, உடல் பருமன்' இதெல்லாம் 35 வயசு தாண்டுனாலே பலருக்கும் வந்திடுது. தினமும் சில துளசி இலைகளை மென்னு தின்னாலே சர்க்கரை அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, கொஞ்சம் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தா கொஞ்சம் கொஞ்சமா உடல் எடை குறையும்.
தோல் நோய்களுக்கும் துளசி மருந்தாகும்! (Thulasi for Skin diseases)
துளசி இலைய எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால சொரி, சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலைகூட, அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்”
துளசியின் பலன்களை பாட்டி அடுக்கிக்கொண்டே போக, இடைமறித்த நான் “துளசியில ஏதாவது பியூட்டி டிப்ஸ் இருக்கா பாட்டி?” என்று எனது வழக்கமான கேள்வியைக் கேட்டேன். அதற்கும் பாட்டியிடம் பதில் இல்லாமலில்லை!
“சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை எடுத்து, அதில் ஒரு கைப்பிடி துளசியப் போட்டு 8 மணி நேரம் மூடி வச்சு அப்புறமா அந்த நீரைக் குடிச்சிட்டு வரணும். இத வெறும் வயித்துல 48 நாட்கள் குடிச்சுட்டு வந்தாலே எந்த நோயும் அண்டாது. அதோட தோல்சுருக்கம் நீங்கி, நரம்புகள் பலப்படும். பார்வை குறைபாடு நீங்கும். எப்பவும் இளமையா இருக்கலாம்
தினமும் துளசி இலைய மென்னு சாறை விழுங்கி வந்தா குடல், வயிறு, வாய் தொடர்பான பல பிரச்சனைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது. வாய் துர்நாற்றமும் இருக்காது. உடல்ல வியர்வை நாற்றம் பற்றி கவலைப்படுறவங்க, குளிக்குற தண்ணியில முந்தைய நாளே துளசி இலைகள ஊறவைச்சு அந்த தண்ணியில குளிச்சிட்டு வந்தா வியர்வை துர்நாற்றம் போய் உடல் மணக்கும்.”
துளசியின் பலன்களை சொல்லி முடித்துவிட்டு அடுக்கறைக்கு சென்ற உமையாள் பாட்டி, “இந்த துளசி எங்க போச்சு, காலையில இருந்து ஆளக் காணோமே?!” என்றபடி முணுமுணுக்க, தன் பேத்திக்கு துளசி என்று பாட்டி பெயர் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது.
மருத்துவ குறிப்பு: டாக்டர். S.சுஜாதா MD (S)
ஈஷா ஆரோக்யா க்ளினிக், சேலம்.