தேன் தரும் திகட்டாத ஆரோக்கியம்!
நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
 
தேன் தரும் திகட்டாத ஆரோக்கியம்!, Thaen tharum thigattatha arogyam
 

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

கடந்த பதிவில், வெள்ளைச் சர்க்கரை விஷத்திற்கு மாற்றாக நாட்டு சர்க்கரையும், பனை வெல்லத்தையும் பயன்படுத்தும் அவசியத்தைப் பகிர்ந்தோம். இந்த பதிவில், இனிப்பு தொகுதியில் இவர்களுக்கெல்லாம் மூத்த வேட்பாளர் தேன் குறித்த பயோடேட்டாவைப் பகிர்ந்து கொள்கிறோம், அலசி ஆராய்ந்து தேர்வு செய்து கொள்ளுங்கள் மக்களே!

நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

வேதகால (தோராயமாக கி.மு 10,000 ஆவது வருடம்) குறிப்புகளிலேயே தேவ அமிர்தத்திற்கு ஈடான சுவை கொண்டதாக தேனை அறிகிறோம். ஆனால், வெறும் சுவையூட்டியாக மட்டுமல்லாது அதனையும் மிஞ்சிய மருத்துவ குணங்களும் தேனுக்கு உண்டு. இதனை நவீன ஆராய்ச்சிகளும் பல்வேறு நிலைகளில் உறுதிப்படுத்த துவங்கிவிட்டன. வெறும், சர்க்கரை சத்து மட்டுமின்றி, 180க்கும் மேற்பட்ட நன்மை பயக்கக் கூடிய பாலிஃபீனால், ஃப்லவனாய்டுகல், புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதாகவும், இதற்கு மேலும் பெயரிடப்படாத பல நூறு மூலக்கூறுகளும் சுத்தத் தேனில் உண்டு என ஆய்வுகள் பட்டியலிடுகின்றன.

தேன்-மருத்துவ குணம்:

நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, சீனா, ரஷியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் வழக்கில் இருக்கும் அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது. (optimum bio availability).

சுவாசக் கோளாறுகள்

 • தமிழரின் சித்த மருத்துவ முறையில், குறிப்பாக கபம் சார்ந்த தொல்லை (ஆஸ்துமா / அலர்ஜி / சைனஸ்) உடையோர்க்கு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 ஸ்பூன் தேனுடன் இரு குறு மிளகு பொடித்து உணவுக்கு முன் அன்றாடம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
 • தொண்டைத் தொணியே போய் குரல் கரகரத்து போகும் சமயம் தேனுடன் துளசி சாறு / வெற்றிலை சேர்த்து நாளொன்றுக்கு மூன்று, நான்கு முறை அருந்துவது சிறந்தது.

புண்கள்:

 • தீக்காயங்களை / தோல் புண்களையும் ஆற்றும் கிறுமி நாசினித் தன்மையுடையது.
 • இரைப்பையில் ஏற்படும் புண்களுக்கு சித்த மருத்துவம் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் துணை மருந்தாகவும், நேரடி சிகிச்சையிலும் தேனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. மருத்துவ ஆலோசனைக்குப் பின், வில்வப்பொடியுடன், 1 ஸ்பூன் தேன் சேர்த்து உணவுக்கு முன் எடுத்துவர நல்ல குணம் உண்டு.

இரத்த ஓட்டம்:

இரத்த சோகை உடையோர், குறிப்பாக பெண்கள், தினமும் மூன்று வேளை உணவுக்கு முன், வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்பது ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தி உடல், மனச் சோர்வை போக்குகிறது.

இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும் (low/high BP), கொலஸ்டிரால் குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது.

உடற்பருமன்:

வெது வெதுப்பான நீரில் தேன் அருந்த உடல் எடை குறையும் எனும் பரவலான நம்பிக்கைக்கு, வலுசேர்க்கும் ஆராய்ச்சிகள் இன்னும் ஆய்வகத்திலேயேதான் உள்ளன! எனினும், உடல் எடை குறைகிறதோ இல்லையோ, தேனின் அற்புத குணங்களால் உடல் ஆரோக்கியம் கட்டாயம் மேம்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

உணவே விஷமாகிப் போகும் தற்காலத்தில், நோயை வெல்வதை விடுங்கள், ஆரோக்கியத்தை தக்க வைப்பதே சவால்தான் என்றாகிவிட்டது. கேன்சரைத் தடுக்கும், ஈரலை பாதுகாக்கும், இதயத்தைக் காக்கும், சர்க்கரை நோய்கூட வராமல் தடுக்கும் இனிப்பான உபாயம் ஒன்று உண்டென்றால், அது `தேன்` என ஒற்றைக் குரலில் கிழக்கின் சித்தாந்தமும், மேற்கின் அறிவியலும் உரைக்கின்றன.

தேன் அருந்தும்போது கவனிக்க வேண்டியது:

 • சமைத்தோ அல்லது சூடான பானத்திலோ சேர்த்து அருந்தக் கூடாது.
 • 1 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.
 • சுத்தத் தேனில் உள்ள தேன் மெழுகோ அல்லது மகரந்ததூளோ சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும், கவனம் தேவை.
 • வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் உடற்சூட்டைப் பொருத்து உட்கொள்ள வேண்டும்.

எது சுத்தமான தேன்?

நம் சத்குருநாதர் தொடங்கி மருத்துவ அறிவியலாளர்கள் வரை அளிக்கும் தேனுக்கான மேற்கண்ட அனைத்து சர்டிபிகேட்டுகளும் ஒரிஜினல் தேனுக்குத்தான்! இயற்கையாய் கட்டிய தேன் கூட்டிலிருந்து கிடைப்பதும், தரமான தேனீ வளர்ப்பு முறையில் (Apiculture) மூலம் கிடைப்பதும் ஒரிஜினல். (apiculture முறையில் கிடைக்கும் சுத்தமான தேன் பல்வேறு காரணங்களால் இயற்கையாய் கிடைக்கும் மலைத்தேனுக்கு அடுத்தபடிதான் என்றாலும், ஆரோக்கியத்திற்கு நண்பன்தான்!)

கலப்பட வகைகள்:

 • தேனுடன் வெல்லப்பாகு சேர்ப்பது (அ) முழு வெல்லப்பாகை மட்டுமே கரைத்து விற்பது
 • தேனுடன் தண்ணீர் சேர்ப்பது
 • வெள்ளை சர்க்கரை கரைசலுடன் (refined sugar syrup) தேனின் தங்க நிறம் கொடுக்கும் செயற்கைநிறமிகள் (artificial dyes) மற்றும் செயற்கை மணமூட்டிகள் (artificial flavours) சேர்த்த போலி தேன்.

முதல் இரண்டு வகையில், தரம் குறைந்தாலும் உடலுக்குக் கெடுதி இல்லை. மூன்றாம் வகையில் நீங்கள் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் டிடெக்டிவ் சோமுவைத் தட்டி எழுப்ப வேண்டும்!

எளிய சோதனைகள்:

 • நீருள்ள கண்ணாடி டம்ளரில் சிறிதளவு தேனை ஊற்றும்பொழுது தேன் உடனே கரையாமல் விழுதுபோல் டம்ளரின் அடியில் இறங்கினால் அது நல்ல தேன். அல்லாமல், தேன் உடனே கரைந்து நீர் கலங்கினால் அது கலப்படத் தேன்.
 • தேனில் உள்ள நீர் அளவு (moisture) கூடுதலாக இருந்தாலும் ஊற்றப்பட்ட தேன் டம்ளரின் அடியில் சென்று சேரும் முன்னரே கரையும்.
 • தீக்குச்சியின் மருந்துப் பகுதியை தேனில் நனைத்து உடனே தீப்பெட்டியில் உரச, உடனடியாய் தீப்பற்றினால் அது சூப்பர் தேன்!
 • கட்டை விரலில் ஒரு சொட்டு தேன் விடும்பொழுது, அது பரவி, சிந்தினால், உஷார்! அது மூன்றாந்தரம். நல்ல தேன் சொட்டு பரவாது.

தேனீக் கதை தனிக் கதை!

தேனைப் பற்றி பேசும் பொழுது, தேனீக்களை தவிர்த்தால், குற்றம்தானே? இந்தக் கதையின் சோகமே அவைதான்! தேனீக்களின் செயல்பாடு மற்றும் நகர்வு (movement), புவியின் மின்காந்த அலைகளை ஒட்டியே இருக்கும். இதனால் பெருகிவிட்ட செல்ஃபோன் டவர்கள், இவற்றின் இயல்பு வாழ்க்கையை மிக மோசமாக பாதித்துவிட்டன. நம் மனித இன வசதிக்காக அழியும் சிட்டுக் குருவி முதலான சிறு உயிர்கள் வரிசையில் தற்போது தேனீக்களும் சேரத் துவங்கிவிட்டன.

இன்றைக்கு உள்ள குழந்தைகளை “நமக்கு பால் தருவது எது கண்ணா?” என கேட்டால், பசு என்பதற்கு பதில், ஆவின் பூத் என்று சொல்கிறவர்கள்தான் அதிகம். அதேப்போல், தேனை உருவாக்கிக் கொடுப்பது தேனீ என்றில்லாமல் டிபார்ட்மென்டல் ஸ்டோர் என்னும் பதிலைத்தான் நாம் எதிர்பார்க்க முடிகிறது. அவ்வளவு தூரம் இயற்கை பாடங்களை விட்டு தூர வந்து கொண்டிருக்கிறோம்.

தேன் உடலுக்கு ஊட்டம் என்றால், `தேன்` எனும் அற்புதத்தை தரும் தேனீக்களின் வாழ்வு சொல்லும் உழைப்பு, கூடி வாழ்தல், தலைமைக்குக் கீழ்படிதல், செயல் நேர்த்தி என அனைத்தும் நம் குழந்தைகளின் உயிருக்கு ஊட்டம். தேனீ இனம் அழியும்முன் அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்!

தேன் பற்றி சத்குரு:

தேனின் வேதியல் கட்டமைப்பு, நம் இரத்தத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது. யோகப் பயிற்சி செய்வோர் தேன் உட்கொள்வது மிக நல்லது. உடலை சில வகையில் தீவிரமாக பயிற்சிக்கு உட்படுத்தும்போது, நம் இரத்த ஓட்டமும், இரத்தத்தின் செல்கள் முதலிய மூலக்கூறுகளும் சமநிலையில் இருப்பது மிக அவசியம். தேன் உட்கொள்ளும் பழக்கம், உங்கள் இரத்தத்தில் இந்த சமநிலையை உண்டாக்கி, உங்கள் தீவிரத்தன்மையை தக்க வைக்கிறது. உங்கள் உடல், மன, சக்தி கட்டமைப்பை திறந்த நிலையில் வைப்பதற்கு, நாம் இதனை வெதுவெதுப்பான நீரில் அருந்த சொல்கிறோம்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1