குடும்பம்-வீடு, தொழில்-அலுவலகம், கடந்த காலம்-எதிர்காலம், நண்பர்-எதிரி, பொழுதுபோக்கு-ஓய்வு என பெரும்பாலும் இவற்றைச் சுற்றியே நம் வாழ்வின் கவனமும், நினைவுகளும் அன்றாடம் சுழல்கின்றன. ஆனால், தனி உயிராகவும், ஒரு சமூகமாகவும் “வாழ்க்கை” என நாம் ஆடும் ஒட்டுமொத்த ஆட்டத்திற்கும், பின்புலத்தில் மேடை அமைத்து வழிநடத்துவது சூரியன் எனும் பிரம்மாண்டம்தானே!

அனுதினமும் பகலவனுக்கு நன்றியோடு ஒரு நிமிடமேனும் கவனம் செலுத்த நமக்கு நேரமில்லை என்பதால்தானோ என்னவோ, வருடம் ஒரு முறையாவது, தைத் திருநாளில் அவனை வணங்கி நினைவிற்கொள்ளும் மரபு நம் பண்பாட்டில் பொதித்து வைக்கப்பட்டது.

ஆனால் 21 ஆம் நூற்றாண்டுப் பொங்கலெல்லாம் “சூர்யா” கேஸ் அடுப்பில் அரக்க, பறக்கப் பொங்கிவிட்டு, சாட்டிலைட் சேனல்களின் “இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” திரைப்படங்களில் நாமும் சேர்ந்து பொங்கி விடுவதுதான் சூரியப்பொங்கலாக மாறிவருகிறது...

சூரியனும், உடல் இயங்கியலும் (Sun & Physiology):

சூரியன் தற்போது பூமியில் இருந்து நிலைக்கும் தூரத்தைவிட 5 சதவீதம் தொலைவில் சென்றாலே, பூமி பனிப்பாறைதான்! 5சதவீதம் அருகில் வந்தாலோ வெப்பக்காடு! சூரியனின் சமநிலை தவறினால், ஆனாலப்பட்ட பூமிக்கே பாதிப்பு எனும்போது, இந்த எண்சான் உடல் எம்மாத்திரம்?

ஆகவே, நவீன அறிவியலும் சரி, நம் யோக, சித்த, ஆயுர்வேத அறிவியல்களும் சரி, சூரிய சக்தியின் தாக்கம் நம் உடலில் குறையாமலும், மிகாமலும் ஒரு சமநிலையில் இருப்பது அவசியம் எனும் அடிப்படையில் செயல்படுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இருப்பினும், பஞ்சபூத அடிப்படையினாலான நம் பண்பாட்டு மருத்துவ முறைகளில், சூரிய சக்தி மற்றும் உடல் இயங்கியல் குறித்த புரிதல் ஆழமாக இருப்பதை காணமுடிகிறது.

யோக அறிவியலின் பார்வை சத்குருவின் விளக்கம்

சூர்ய கிரியா:

“இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்களும் சூரிய சக்தியினால்தான் இயங்குகிறது. உங்களுக்குள் எத்தனை சூரிய சக்தி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் உங்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், ஆன்மீக வாய்ப்புகள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.

சூரியனின் சுழற்சி என்பது ஒவ்வொரு பன்னிரண்டேகால் அல்லது பன்னிரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். நீங்கள் இந்தச் சுழற்சியை நடத்தவும் முடியும் அல்லது அதனால் நசுக்கப்படவும் முடியும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் விழிப்புணர்வுடன் கவனித்தால், உதாரணமாக, நீங்கள் பூப்பெய்திய நாளிலிருந்து நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் உங்கள் மனநிலையும், உணர்ச்சி சூழ்நிலையும் திரும்பத் திரும்ப சுழற்சியாக நடப்பதை கவனிக்க முடியும். ஒருவர் 12 வருட சுழற்சியில் இருக்கலாம், மற்றொருவர் 6 வருடங்களோ, 3 வருடங்களோ, 18 மாதங்கள், 9 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் சுழற்சியில் கூட இருக்கலாம். அந்தச் சுழற்சி 3 மாதங்களுக்கும் குறைவானதாக இருந்தால், அவருக்கு நிச்சயம் மனநிலை மருத்துவம் தேவை என்று அர்த்தம். மனித உடலின் அடிப்படைத் தன்மையே முக்கியமாக அந்த சூரிய சுழற்சிக்கு இணங்கியிருப்பதுதான்.

சூர்ய கிரியா பயிற்சி உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியும் உங்கள் வாழ்க்கை எந்த விதத்திலும் தங்குதடையில்லாமல் நடப்பதற்கான வாய்ப்பை நோக்கி உங்களைக் கொண்டு செல்கிறது. அந்தச் சூரிய சுழற்சியுடன் உங்களை ஒத்திசைவில் வைத்துக் கொள்வதுதான் சூரிய கிரியாவின் நோக்கம். மேலும் இது மிகவும் சக்திவாய்ந்த சூட்சுமமான ஒரு பயிற்சியாக இருப்பதால், இதனைக் கற்றுக் கொடுப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் அதிகப்படியான ஈடுபாடும், கவனமும் தேவைப்படுகிறது.

சூரிய நமஸ்காரம்:

சூரிய நமஸ்காரத்தில் இருக்கும் ஆசனங்களை நீங்கள் ஒருவிதத்தில் செய்தால் அவை உடலை வலுவாக்க தயார்படுத்தும் தன்மை உடையவை. அவற்றையே இன்னொரு விதத்தில் செய்தால் ஈடா, பிங்களா நாடிகளிடையே சமநிலையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இது நெஞ்சுக்குழிப் பகுதியைத் (சோலார் ப்ளக்சஸ்) தூண்டுகிறது. ‘சமத் ப்ராணா’ அல்லது உடலில் இருக்கும் சூரிய வெப்பத்தை உயர்த்துகிறது.

நம்முடைய உடல் அமைப்பில் சூரியனைத் தூண்டினால், உடல் பிரகாசமாக ஒளிரத் துவங்குகிறது. மேலும் உங்கள் சுவாசப் பாதையில் மட்டுமல்லாமல், உடலின் பிற பாகங்களிலும் அதிகப்படியான கபத்தின் வடிவில் வெளிப்படும் உங்களது குறிப்பிட்ட சில பிரச்சனைகள் நீங்கி உடல் சமநிலை அடைய முடியும். உங்களது சுரப்பிகளின் சுரப்புகள் சற்றே சமநிலை தவறியிருந்தாலும், தியானத்தை விடுங்கள், வெறுமனே உட்கார்ந்து, கவனிப்பது கூட மிகவும் கடினமாகிவிடும். சுரப்பிகளில் சமநிலையைக் கொண்டு வருவதற்கு சூரிய நமஸ்காரம் மிக எளிமையான, மிகச் சிறப்பான சாதனாக்களில் ஒன்று,” என்கிறார் சத்குரு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சித்த மருத்துவ அடிப்படையில்...

“ஆதாரமான அனல் உஷ்ணமாச்சு
சூட்சமுள்ள பிராணன் இருப்பிடமுமாச்சு
வாதாதி உடலுயிர்க்கு விளக்குமாச்சு”

என சித்த மருத்துவம் சூரிய சக்தியை ‘ஜீவாக்னி’ (அ) ‘உயிர் அனல்’ என உயிருக்கு ஆதாரமாகவே காண்கிறது. உடல் இயக்கத்தின் ஆதாரமான பஞ்சபூதங்களில் தீ அல்லது அக்னி பூதத்தின் ஆதாரமாக சூரியன் பார்க்கப்படுகிறது. உடல் இயக்கத்தில் அக்னி, சூரியன், சந்திரன் என்ற மூன்று மண்டலங்களின் சமநிலையின் தேவையையும் வலியுறுத்துகிறது. மேலும், மருந்துக்கு பயன்படும் மூலிகைகளின் தன்மையை நிர்ணயிப்பதில் சூரியனின் பங்கு தலையாயதாய் இருக்கிறது.

முழு வீச்சில் உடலில் ஒரு நோய் வெளிப்படுவதற்கு முன்னர் கீழ்காணும் அறிகுறிகளால் உடலில் அக்னி பூதம் குறைவதையும்/கூடுவதையும் நாம் அறிய முடியும்.

அக்னி பூதம் குறைந்தால்:

அக்னி பூதத்தை வலுப்படுத்தும் உணவுகளை உட்கொள்ளலாம். அவை மிளகு, நிலக்கடலை, எள்ளு, முருங்கைக்கீரை, சுக்கு பானம். பழங்களில் பப்பாளி, அன்னாசி, மாம்பழம். இது தவிர ஏலம், அமுக்கரா, கடுக்காய் போன்ற மூலிகைப் பொடிகளை காயகல்ப மருந்தாக எடுக்கலாம்.

  • உடலில் சோம்பல், மந்தநிலை
  • மனதில் சோர்வு; அன்றாட செயல்களில் காட்டும் ஈடுபாடு குறைவது
  • உணவு செரிமானத்தில் மந்த நிலை
  • கண்பார்வை முதலான ஐம்புலன்களின் திறன் குறைதல்
  • அடிக்கடி ஏற்படும் சளி சார்ந்த கபத் தொந்தரவுகள்

அக்னி பூதம் தேவை மீறி அதிகரித்தால்:

அதிகமாக நீர் பருகுதல். வெண்பூசணி, வெள்ளரி, புடலை, பீர்க்கன் போன்ற நீர்க்காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுதல். உருக்கிய நெய்; மாதுளை, வாழைப்பழம் முதலியவற்றை உணவில் அதிகரித்தல். அசைவ உணவு மற்றும் அக்னி பூதத்தை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்ட உணவுகளை தவிர்த்தல். தொப்புளைச் சுற்றியும், உச்சியிலும் நல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெய் சில துளிகள் விடுதல்.

தினமும் இரு வேளைக் குளியல் மற்றும் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல். வில்வம், கற்றாழை, நெல்லி முதலிய மூலிகைகளை ‘மருந்தே உணவு’ எனும் அடிப்படையில் அன்றாடம் சேர்க்கலாம்.

  • உடலில் தூக்கமின்மை, தலைவலி
  • மனதில் பதட்டம், பயம்
  • ஜீரண மண்டலத்தில் அதிகரிக்கும் அமிலத்தன்மை (acidity)
  • உடலில் அதிக உஷ்ணம்
  • மலக்கட்டு முதலிய மூலாதார தொந்தரவுகள்

நவீன அறிவியலின் பரிந்துரை:

மேற்கத்திய மருத்துவத்தின் சூரியன் உடல் குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் தோல் புற்றுநோய் அபாயம் மற்றும் எலும்பு சார்ந்த நோய்கள் குறித்தே மையல் கொண்டிருக்கின்றன.

காரணம் 1:

மேற்கத்தியர்களின் வெளிர் நிறத்தோலுக்கு சூரியனின் புற ஊதாக் கதிர்களால் (UV radiation) ஏற்படும் புற்றுநோய் அபாயம். நம் தோலின் கருப்பு/பழுப்பு நிறத்திற்கு காரணமான ‘மெலனின்’ நிறமி நம் உடலில் இயற்கையிலேயே அதிகம் இருப்பதால், இந்தியர்களின் மொத்த புற்றுநோய்ப் புள்ளியியலில் தோல் புற்றுநோய் 2 சதவீதத்திற்கும் குறைவே. ஆகையால் இதைக் குறித்து மிகுந்த அச்சம் கொள்ளத் தேவையில்லை.

காரணம் 2:

மேற்கு நாடுகளின் பூமத்திய அமைப்பு உயர் அக்ஷரேகைகளை (high latitudes) ஒட்டி அமைந்திருப்பதால், குறைவான சூரிய ஒளியையே பெறுகின்றன. இதனால் ஏற்படும் எலும்பு மெலிவு மற்றும் தேய்மான தொந்தரவுகள் பெரும்பான்மை வெள்ளையரை பாதிக்கின்றன.

"இங்க அடிக்கிற வெயிலுக்கு, நம்மாளுங்க எலும்பெல்லாம் அப்ப உருட்டுக்கட்ட கணக்கா இல்ல இருக்கணும் டாக்டர்? ஆனா இப்பல்லாம் 25, 30 வயசுலயே மூட்டு வலி தலை காட்டுதே?" என்கிற உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

ஆனால் இதற்கு அறிவியல் அளிக்கும் பதில், "75 முதல் 90 சதவீத இந்தியர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்பதே!"

வைட்டமின் ‘டி’ - அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 5 செய்திகள்:

சூரிய ஒளி தோல் மேல் படுவதன் மூலம் மட்டுமே கிடைக்கிறது. வெகுசில வகை மீன்களைத் (வஞ்சிரம்/கௌத்தி) தவிர சாதாரணமாய் உட்கொள்ளும் உணவுகளில் இல்லை.

நம் நாடு, சூரிய ஒளி மிகுந்த பகுதியானாலும் மாறி வரும் வாழ்க்கை முறையில் வெயிலில் செல்லும் வாய்ப்பு பெரியவர்களுக்கு பல சமயம் மறுக்கப்படுகிறது, சில சமயம் தவிர்க்கப்படுகிறது. வீட்டுக் குழந்தைகள் வெயிலில் ஆடும் விளையாட்டுக்களை வீட்டுக்குள் வெப்சைட்டிலேயே முடித்துக் கொள்கின்றனர். மேலும், அதிகப்படியான சன் ஸ்க்ரீன் லோஷன் (spf>15) உபயோகமும், உடற்பருமனும் வைட்டமின் டி குறைபாட்டுக்கு முக்கிய காரணமாய் அறியப்படுகின்றன.

‘டி’ குறைப்பாட்டால், எலும்பில் சத்து குறைந்து மெலிவது, மூட்டுகளில் வலி, தேய்மானம், உடலில் பொதுவான அசதி, மந்தம் ஏற்படுகிறது. பெருகிவரும் சர்க்கரை/பி.பி நோய்களுக்கும், ‘டி’ குறைபாட்டுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.

எலும்புத் தொடர்பான நோய் சிகிச்சைகளில் பெரும்பாலானோருக்கு, அவர்களின் ‘டி’ அளவைக் கண்டறிந்து, சரி செய்தாலே பெருமளவு தொந்தரவுகளிலிருந்து விடுபடலாம் என்பது எலும்பியல் நிபுணர்களின் கருத்து. நோய் எதிர்ப்பு, நரம்பு மண்டல வலு, புற்றுநோய் தடுப்பில் கூட ‘டி’யின் பங்கு ஆராயப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களும் தங்கள் மருத்துவரிடம் தங்கள் ‘டி’ அளவை தெரிந்து சரிசெய்து கொள்வது அவசியம்.

‘டி’ மருந்தை தகுந்த மருத்துவ ஆலோசனையின்படி எடுத்துக்கொள்வது மிக அவசியம். ஏனெனில், ‘டி’ யை மருந்தாக அதிக அளவு உட்கொண்டால் ஆபத்து. ஆனால், வெயில் மூலம் கிடைக்கும் ‘டி’க்கு ஓவர் டோஸ் ஆபத்து இல்லை. அதுவும் காலை 10 முதல் 3 மணி வரையிலான வெயிலில் 10 முதல் 15 நிமிட நேரம் கை, கால்கள், முகம் படுதல் தினசரித் தேவையை பூர்த்தி செய்கிறது. சூரியக் கதிர்களை நேரடியாக முதுகுப் பகுதியில் படச் செய்வது உச்சபட்ச பலன் கொடுக்கும்.

இப்ப சொல்லுங்க யார் சூப்பர் ஸ்டார்?

சூரிய ஒளி, நம் தோலில் படும்படி இருப்பது மிக அவசியம். நம் கலாச்சாரத்தில் சூரியன் சார்ந்த, இயற்கை சார்ந்த பல பழக்க வழக்கங்களை உருவாக்கி வைத்தனர். சீதோஷணத்திற்கு ஏற்றவாறு முறைகளை வகுத்து வைத்தனர். இதனை நாம் செய்ய மறந்ததன் காரணம், இன்று பல்வேறு பின் விளைவுகளை சந்தித்து வருகிறோம். மேல்நாட்டு மோகம் மட்டுமல்ல, மேல்நாட்டு நோய்களையும் மருந்துகளையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.

சூரியன் தன் ஒளியை தாவரங்களுக்கு உணவாக்குகிறது. அதனால், அவை ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அந்த ஆக்சிஜனை நீங்கள் உள்ளிழுப்பதால்தான், இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டும் இருக்கிறீர்கள்.

வெவ்வேறு மருத்துவ, யோக முறைகள் அவரவர் பாணியில் விவரித்தாலும், நம் உடலுக்கும், உயிருக்கும் தவிர்க்க இயலாத நட்சத்திரமாய் விளங்கும் சூரியன்தானே நமக்கெல்லாம் சூப்பர் ஸ்டார்?