ஹட யோகா பள்ளியில் பயில்பவர்களிடம் சூரிய கிரியா பற்றி பேசுகையில் அதன் மகத்துவத்தை முழுமையாக விளக்கும் சத்குரு, சூரிய கிரியா போன்றதொரு பயிற்சி நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல் பூர்வமாக விவரிக்கிறார். இந்த வார சத்குரு ஸ்பாட், தடைகளை தகர்க்கும் சூரிய கிரியா. படித்து மகிழுங்கள்!

 

Question: அன்பிற்குரிய சத்குரு, சூரிய கிரியா தீட்சை பெறுவதில் உள்ள சிறப்பென்ன, அதைச் செய்வதால் நம் உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

சத்குரு:

யோகா என்பதே உங்கள் உடலை ஒரு சாத்தியமாய் மாற்றுவதற்குத்தான், தடைக்கல்லாய் ஆக்குவதற்கு அல்ல. இது நிகழ வேண்டுமென்றால், உங்கள் உடலமைப்பில் உள்ள ஒவ்வொன்றும் குறைந்தபட்ச உராய்வுடன் செயல்பட வேண்டும். குறைந்தபட்ச எதிர்ப்புடன் செயல்பட வேண்டும். நமக்கிருக்கும் mechanical அறிவுப்படி பார்த்தால், குறைந்தபட்ச உராய்வுடன் செயல்படும் எந்திரத்தைத்தான் சிறந்த எந்திரமாகப் பார்க்கிறோம். எத்தனை அதிகமாக உராய்வு அதனிடம் இருக்கிறதோ அத்தனை சிறப்பில்லாத எந்திரமாக அதனைப் பார்க்கிறோம். எந்த எந்திரத்தில் உராய்வில்லையோ, அதனை நாம் தலைசிறந்த எந்திரம் என அழைக்கிறோம். உராய்வைக் குறைத்தாலே, உடைதலும் கிழிதலும் சற்றே குறைந்து போகும். இந்த உடலின் உடைதல் மற்றும் கிழதல் குணம் குறைய வேண்டுமென்றால், நம்முடைய வெவ்வேறு பரிமாணங்களுக்கிடையே உராய்வில்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்கு ஒரு பொருள்நிலை பரிமாணம் உள்ளது, இது சேகரிக்கப்பட்டது. உங்களுக்கு ஒரு மனநிலையிலான பரிமாணம் உள்ளது, பெருமளவில் பார்த்தால் இதுவும் சேகரிக்கப்பட்டதே. பொருள்நிலையிலான பரிமாணம் பரிபூரணமாக இந்தப் பிறப்பில் சேகரிக்கப்பட்டதே. மனநிலையிலான பரிமாணம் பல ஜென்மங்களிலிருந்து திரட்டப்பட்டது. கர்மத்து நிலையிலான பரிமாணம், மென்மேலும் பல பகுதிகளை உள்ளடக்கியது, சற்றே சிக்கலானது. அப்புறம் சக்திநிலை உள்ளது. இது உள்ளிருந்து வளர்ந்தாலும், உயிர்ச் செயல்முறை நமக்கு கொடுத்தது. அண்டத்து நிலையிலான இயல்பைக் கொண்ட வேறு சில பரிமாணங்களும் உள்ளன, இவை பொருள்நிலை சார்ந்தவை அல்ல.

இவை அத்தனையும் ஒருங்கே கொண்ட 'இந்த உயிரை' அல்லது இந்த இயக்கமுறையில், உராய்வில்லாமல் இருக்க வேண்டுமென்றால் பல நிலைகளில் உள்ள இந்த அமைப்பை நாம் மசகிட (lubricate) வேண்டும். ஒன்று, அடிப்படையில் எல்லா இடத்திலும் மக்கள் உணரும் உராய்வு, அதுதான் மன அழுத்தம். இந்த மன அழுத்தம் அடிப்படையானது. ஒரு எந்திரத்தை மசகிடும் எண்ணெய் (lubrication oil ) இல்லாமல் அதனை இயக்க முயற்சி செய்துவிட்டு 'என் வாகனம் ஓடவில்லை' என்று குறை கூறுவதைப் போன்று உள்ளது நீங்கள் புலம்புவது. வாகனங்களைப் பழுதுபார்பவரிடம் சென்று 'என் வண்டியில் பிரச்சனை' என்று சொல்லுங்கள், நீங்கள் மசகெண்ணெய் இல்லாமல் வண்டி ஓட்டுவதை அவர் பார்த்தால், 'ஏ! முட்டாளே, நீ வண்டி ஓட்ட லாயக்கு இல்லை' என்று உங்களை ஏசுவார்.

'நான் மன அழுத்தத்துடன் உள்ளேன்' என்று நீங்கள் சொல்வதும் இதுபோலத்தான். அப்படியென்றால், உங்கள் மனமும் உங்கள் மன அமைப்பும் ஒருவிதமான உராய்வு நிலையிலேயே உள்ளது என்று அர்த்தம். இது மிக அடிப்படையான உராய்வு நிலை, பல சிக்கலான நிலைகளில், ஆழமான நிலைகளில் இந்த உராய்வு நிலை நமக்குள் ஏற்படுகிறது. உங்கள் கர்ம உடலும் உங்கள் ஸ்தூல உடலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை என்றால், அதில் ஒருவித உராய்வு ஏற்படும். சரி, எதனால் இவ்வாறு நேர்கிறது? உங்களுக்கு ஒருவிதமான கர்ம உடல் இருக்கலாம், ஆனால் நீங்கள் பொருத்தமான கருவை அடைய முடியாமல் போனால், உங்கள் கர்ம உடல், உங்கள் ஸ்தூல உடலுடன் ஒருவித உராய்விலேயே இருக்கும். இது கையாள்வதற்கு சுலபமான விஷயமல்ல. இதைக் கையாள்வதற்கு பல சூட்சுமங்கள் தேவை. இது சிக்கலான விஷயம்.

இரண்டாவது வாய்ப்பு, உங்கள் சக்தி உடல் உங்கள் ஸ்தூல உடலுடன் பொருந்திப் போகாவிட்டாலும் இந்த நிலை ஏற்படும். ஒரு சில மனிதர்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதற்கும் கலாச்சாரத்திற்கும் தொடர்புண்டு. இதற்கும் சுற்றுச்சூழலிற்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும், நிலத்திற்கும் கூட சம்பந்தமுண்டு. அந்த நிலம் எவ்வாறான தகவல்களை தன் நினைவில் பதித்து வைத்துள்ளது என்பதும் ஒரு காரணி. பல நிலைகளிலான தொடர்பு இதற்கு உண்டு.

பல்வேறு வகையான உராய்வுகளும் உண்டு. உங்கள் மன அமைப்பும், உங்கள் உடல் அமைப்பும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாமல் இருக்கும். இதுபோல், உங்கள் ஒவ்வொரு பரிமாணமும், உங்கள் ஒவ்வொரு பகுதியும் உராய்வில்லாமல் சுமுகமாகப் போகலாம் அல்லது உராய்வுடன் செயல்படலாம். ஹட யோகா செய்வதே உங்கள் அமைப்பை பதப்படுத்தத்தான். ஹட யோகாவினால், உங்கள் மொத்த அமைப்புமுமே உராய்வில்லாமல் மழமழவென செயல்படும். கொஞ்ச காலத்தில் நீங்கள் இங்கு அமர்ந்தால், உங்களுக்குள் உராய்வில்லாமல் இருக்கும். நீங்கள் போராட வெளிசூழ்நிலை மட்டுமே இருக்கும், வேறெதுவும் இருக்காது. உங்கள் நிலை இப்படி இருந்தால் மட்டுமே, வெளிசூழ்நிலையை உங்களால் இலகுவாக, செயல் வல்லமையுடன் கையாள முடியும்.

பயிற்சிகளின் மூலம் உங்களுக்குள் நீங்கள் திறந்து வைத்திருக்கும் சில சாத்தியங்கள் மௌனமாய் உறங்கிப் போய்விடாமல் இருப்பதற்காக நாம் தீட்சை அளிக்கிறோம்.

இதை நோக்கிய படியில் சூரிய கிரியா ஓர் அபாரமான செயல்முறை. உங்கள் உடல் அமைப்பை வழவழப்பாக, நன்றாக எண்ணெயிடப்பட்ட உணர்வுடன் செயல் செய்யும் ஆற்றலைக் கொடுக்கக் கூடியது சூரிய கிரியா. அகண்ட அந்த சூரிய மண்டலத்துடன் நீங்கள் தொடர்பில் இல்லாதபோது இப்படியொரு நிலை ஏற்படாது. உங்களுடைய உடலே அந்த சூரிய மண்டலம்தான்.

சூரிய கிரியா, உங்களின் சுழற்சியை விரிவு படுத்துகிறது. இப்படி விரிவாக்குவதன் மூலம் உங்கள் சக்தி உடல் அந்த சூரிய மண்டலத்துடன் இயைந்து செயல்படும். இந்தச் சுழற்சி நிகழ்ந்து முடிய, 12 வருடங்களும், 3 மாதங்களும் சில நாட்களும் தேவைப்படும். உங்கள் சக்தி உடலிற்கும் இதே கால அளவு தேவை. நீங்களும், உங்கள் சுழற்சியும் சூரியனும் இணங்கியிருந்தால், உங்கள் உடல் அமைப்பும் எவ்வித உராய்வுகளும் இன்றி செயல்படுவதை நீங்கள் பார்க்க முடியும். பிறப்பிலேயே ஏற்படும் கோளாறுகள், அல்லது வாழ்வின் போக்கில் நாம் தொற்றிக் கொண்ட கோளாறுகளை நாம் சீர் செய்துவிட முடியும். இந்நிலையை அடைய பல்வேறு முறைகள் உள்ளன. இத்திசையில், சூரிய கிரியா ஒரு சக்திவாய்ந்த செயல்முறை.

உங்கள் சுழற்சியின் ஒரு பகுதிக்குள் நுழைவதற்கே இந்த சூரிய கிரியா. நீங்கள் தீட்சை பெறும் முன்பு, உங்களுக்குள் ஒரு பாகமாக இது உருவாகிவிட வேண்டும். சூரிய கிரியாவிற்கு நாம் அளிக்கும் தீட்சை எளிமையானது. உங்களுக்குள் ஒருவித வடிவவியலை நீங்கள் சாதித்திருந்தால், இந்தத் தீட்சைக்கு தேவைப்படுவதெல்லாம் நீங்கள் உருவாக்கிய அந்த வடிவவியல் மட்டுமே. உடலில் இருக்கும் 114 சக்கரங்களில் 21 சக்கரங்கள் செயல்திறனுடன் இருந்தால் நீங்கள் முழுமையான வாழ்க்கை வாழ முடியும். புதிதாக திறந்துள்ள அந்த சாத்தியத்திற்குள் சக்தியை நிரப்புவதே இந்த தீட்சையின் நோக்கம். உங்கள் நாடிகளில், 21 நாடிகள் முழுவதுமாக திறந்திருந்தால் நீங்கள் முழுமையான வாழ்க்கை வாழ முடியும். பெரும்பாலானவர்களுக்கு இத்தனை நாடிகள் திறந்திருப்பதில்லை. ஒருவருக்குள் 21 நாடிகள் முழுத் திறனுடன், பரிபூரண செயல்பாட்டில், முழு துடிப்புடன், தனக்குள் முழு ஆற்றலுடன் செயல்பட்டால் அவர் நிறைவான வாழ்க்கை வாழ்வார்.

ஆனால் நிறைய பேர் முறையான ஹட யோகப் பயிற்சிகளினாலோ அல்லது சூரிய கிரியா செய்வதாலோ திறந்த நிலைக்கு வந்திருந்தாலும், அவர்கள் தங்களை சக்தியூட்டி இருக்க மாட்டார்கள். அந்தப் பயிற்சிகளின் மூலம் தன்னை ஒரு சீராக திறந்து கொள்ளாமல் இருக்கலாம். வெவ்வேறு இடங்களில் திறந்த நிலையை உருவாக்கி, அமைப்பின் இதர பகுதிகள் அந்தச் சக்தியின் தொகுதியை ஒரு சீராக செலுத்த முடியாமல் போகலாம்.

நீங்கள் பயிற்சி செய்து ஏற்படுத்திய அந்த புதிய சாத்தியங்கள் உறங்கிவிடாதபடி தீட்சை பார்த்துக் கொள்ளும். அந்தச் சாத்தியம் நீண்ட நேரம் உறங்கிவிட்டால், அந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யும் உந்துதல் உங்களுக்கு இல்லாமல் போய்விடும். பயிற்சிகள் செய்வதினால் பலன்கள் ஏற்பட்டாலும், பிரதிபலன் பாராமல் உங்கள் பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்தால், நீங்கள் ஓரு திறந்த நிலைக்கு வருகிறீர்கள், பிற்பாடு நாம் பயிற்சிகளால் திறக்கப்பட்ட மையங்களை சக்தியூட்டலாம். இதுவே தீட்சையின் நோக்கம். உடலின் புரிதலின்படி இது எளிமையான ஒரு செயல்முறை, ஆனால் தீட்சை அளிக்கும் அந்நாளில் நாம் சப்தம் எழுப்பி, சற்றே ஆர்ப்பாட்டம் செய்து, நிறைய உணவு உண்டு, அதனை கோலாகலமாக்கி விடலாம்.

Love & Grace