32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், தங்கள் உள் வளர்ச்சிக்காக ஈஷா யோக மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலத்தில் 7 மாதங்கள் தங்கி இருக்கிறார்கள்.

நாம் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒரு விஷயத்திற்கு நம் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பது என்பது எப்போதுமே பலனளிக்கக்கூடியது. மேலும், இந்த செயல்முறை ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பாதையாகவே மாறும்போது, ஆன்மீக சாதனையில் உள்ளவர்களுக்கு இதைவிட ஆன்மதிருப்தி வேறு எதுவும் இல்லை. சத்குருவால் கவனமாக வடிவமைக்கப்பட்ட சேவைகள், அத்தகைய வாய்ப்பை நமக்கு வழங்குகின்றன.

மிக சிரத்தையாகத் திட்டமிடுவதன் மூலம், ஒவ்வொரு சாதனா பாதை பங்கேற்பாளரும் அனைத்துவித சேவைகளிலும் பங்கேற்பது உறுதி செய்யப்படுகிறது. ஒரு சேவையிலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறிச்செல்வதற்கு அளப்பரிய நெகிழ்வுத்தன்மை தேவையாய் இருக்கிறது. மேலும், தங்களுக்குள் எழும் எதிர்ப்பின் அடுக்குகளைத் தங்களுக்குள்ளேயே தோலுரித்து, ஒரு புதிய இடத்தில் சேவை செய்வதின் செயல்முறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை சாதனா பாதை பங்கேற்பாளர்கள் தாங்களே கண்டுபிடிப்பார்கள்.

அன்ன சேவை

life-in-sadhanapada-different-flavors-of-seva-vol-serving-food-20190903_SGR_0283-e

“அன்னம்” என்பதற்கு “உணவு” என்று பொருள். ஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு நாளும் சில ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்படுகிறது. சத்குருவால் பிக்ஷா ஹால் என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த உணவு மண்டபத்தில் தினமும் இருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை 10:00 மணிக்கு காலை உணவு, இரவு 7:00 மணிக்கு இரவு உணவு.

உணவை அனுபவித்து உண்பது என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், சாப்பாடு சமைப்பதிலும், அதைப் பரிமாறுவதிலும் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அன்ன சேவையின் போது பங்கேற்பாளர்கள் நேரடியாகக் காண்கிறார்கள். உணவு மிகவும் கவனமாக ஒரு குறிப்பிட்ட வரிசை முறைப்படியே பரிமாறப்படுகிறது… சிலர் சாலட்டுக்கு முன் சாதம் பரிமாறியதற்காக மென்மையாகக் கடிந்துகொள்ளப்படுகிறார்கள்!

பசியில் உள்ள ஆன்மீக சாதனையாளர்களுக்கு சேவை செய்வது என்பது அனைத்தையும் உள்ளேற்கும் திறனையும், ஒருவித அர்ப்பணிப்பு உணர்வையும் நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கான சரியான வழியாகும். மிக எளிமையான ஒரு செயல்முறைகூட அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒருவர் அறிய இது உதவும். பங்கேற்பாளர்கள் இத்தகைய தன்மைகளைத் தங்களுக்குள் மேம்படுத்திக்கொள்ள உதவுவதற்காகவே அன்ன சேவையானது சாதனா பாதையில் இணைக்கப்பட்டுள்ளது.

உடல் அளவில் சேவை செய்யும்போது தியானம் எளிதாக நிகழ்கிறது

“அன்ன சேவையே எனது வாலண்டியரிங் அனுபவத்தில் மிகவும் சிறந்ததாகும். சேவையின் போது உடல் அளவில் சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும் (எனது வழக்கமான சேவை அலுவலகத்தில் இருப்பதால்), மனதளவில் அலுவலகத்தில் சேவை செய்வதை விட உடல் அளவில் ஏதாவது (அன்ன சேவை) செய்யும்போது தியானம் எனக்குள் மிகவும் எளிதாக நிகழ்கிறது என்பதை நான் காண்கிறேன்!”- ஜெனீவ், 30, கனடா

விருப்பமில்லாத உணர்வுகளைத் தோலுரித்தேன்

"உணவு உண்டு கைகழுவும் சிங்க்கில் சேர்ந்த மீதமுள்ள உணவை சிலர் சுத்தம் செய்வதைப் பார்த்து, 'நான் இந்த வேலையை செய்யமாட்டேன்' என்று நினைத்துக் கொண்டேன். எனக்குள் இருந்த இந்த எல்லையை நான் உணர்ந்திருந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, அதைச் செய்ய என்னையே நான் ஆட்படுத்தினேன். அப்போதுதான் நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். முழு செயல்முறையையும் என்னால் முழுமையாக அனுபவித்து செய்யமுடிந்தது. அதன்பிறகு சிங்க்கை யார் சுத்தம் செய்தார்கள் என்று யாராவது கேட்டால், 'நான்தான்' என்று பதிலளித்தேன். அன்ன சேவை என் வாழ்வில் பலவிதத்தில் பலனளித்த அனுபவங்களில் ஒன்றாகும், இக்காலகட்டம் முழுதும் இங்குள்ள மக்களுடனும், எனக்குள்ளேயும் நான் இருந்த விதம் மிகவும் வியக்கத்தக்கது”- பியானா, 27, ஆஸ்திரேலியா

life-in-sadhanapada-different-flavors-seva-kitchen-volunteering-collage-pic

பிக்ஷா ஹால், தியானலிங்கத்தைப் போலவே புனிதமானது

“பிக்ஷா ஹாலில் உணவு பரிமாறுவதிலும், உணவு உண்ணும் ஒவ்வொருவரையும் சத்குருவாகவே பாவித்து சேவை செய்வதிலும் உள்ள சந்தோஷம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. எனது குடும்பத்தினர் அடுத்தமுறை வந்து ஈஷாவில் முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்படி என்னிடம் கேட்டால், அவர்களை தியானலிங்கம், லிங்கபைரவி, ஆதியோகி மற்றும் கண்டிப்பாக பிக்ஷா ஹாலுக்கு அழைத்து வருவேன் என்று முடிவு செய்துவிட்டேன். ஏனென்றால், தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி கோவிலில் உள்ள புனிதத்தன்மை இங்கேயும் பராமரிக்கப்பட்டு வருகிறது.” - ஸ்ரீகாந்த், 26, ஆந்திரா, இந்தியா

லிங்க சேவை

life-in-sadhanapada-different-flavors-of-seva-vol-at-temple-in-namaskar-posture

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அளப்பரிய ஆற்றல்கொண்ட சக்திவடிவமான தியானலிங்கம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈஷா யோக மையத்தை நோக்கி ஈர்க்கிறது. இது ஞானம் மற்றும் ஆன்ம விடுதலையின் நுழைவாயில் போன்றது. தியானலிங்கத்தின் சக்தி வளையத்தில் இருப்பதே ஆழ்ந்த தியான நிலையை நம்முள் உணரப் போதுமானதாகும். லிங்கசேவை என்பது, இப்புனிதமான தலத்தில் ஒருவர் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதற்காகவும், இந்த சாத்தியத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்காகவும் சத்குருவால் வழங்கப்பட்ட உன்னத வாய்ப்பாகும்.

லிங்க சேவை என்பது ஒவ்வொரு சாதனா பாதை பங்கேற்பாளரும் விரும்பி எதிர்நோக்கும் ஒன்று. ஒருவரின் வழக்கமான சேவையானது தகவல் தொழில்நுட்பம், கணக்குப்பதிவியல், தோட்டவேலை, சட்ட நடவடிக்கைகள், கிராஃபிக் டிசைன் அல்லது மொழிபெயர்ப்பு என எதுவாக இருந்தாலும் – ஒருவர் எந்த நேரத்திலும் 10 நாட்கள் லிங்க சேவை செய்ய அனுமதிக்கப்படலாம்! சேவாவின் இந்த பிரத்யேக வடிவமைப்பு ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கான தனித்துவமான வாய்ப்பாகும்.

என் தாயகத்திற்குத் திரும்பியதைப் போல உணர்ந்தேன்

"நான் தியானலிங்க சேவைக்கு செல்லக்கூடாது என்பதற்கு சில சாக்குகளை கண்டுபிடித்து வைத்திருந்தேன். அங்கு என்ன நிகழ்கிறது என்பது எனக்கு ஒருபோதும் புரியாத காரணத்தால், நான் அங்கு செல்லும்போது எப்போதுமே எனக்குள் ஒரு சிறிய அசௌகரியத்தை உணர்ந்தேன். ஆனால் லிங்க சேவையின்போது, உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அந்த இடத்தையும் அதன் சூழ்நிலையையும் பராமரிக்கத் தேவையான அனைத்தையும் முழுமையாகச் செய்கிறீர்கள். இந்த அர்ப்பணிப்பு உணர்வு எனக்கு தியானலிங்கத்துடனான ஒரு நெருக்கத்தையும், முற்றிலும் புதிய தொடர்பையும் ஏற்படுத்தியது. இந்த இடம்தான் “நான் செல்வதற்கு வேறு இடம் எதுவும் இல்லை, அனைத்தும் இங்கேயே இருக்கின்றது” என்கிற உணர்வை ஆழமாக என்னுள் உணர வைத்தது. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம். நான் தாயகத்திற்குத் திரும்பியதைப் போல உணர்கிறேன்.” - அன்னாபெல், 22, ஜெர்மனி

life-in-sadhanapada-different-flavors-of-seva-linga-seva-pic1

பக்தி என்றால் என்ன என்பதை முதன்முறையாக நான் புரிந்துகொண்டேன்

“ஆரம்பத்தில், நான் ஈஷாவின் IT துறையில் சேவை செய்யப்போகிறேன் என்று தெரிந்ததும், ஒருவித கொந்தளிப்பில் இருந்தேன். ஏனென்றால், நான் எதை விட்டு ஓடிவிட நினைத்தேனோ அதே கணினிகளுடன் 7 மாதங்கள் ஈடுபட வேண்டியிருக்குமே! ஆனால் லிங்க சேவை வாய்ப்பு சரியான சமயத்தில் வந்தது. எல்லா வயதிலும், எல்லா நிலையிலும் உள்ள பலவிதமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தியான அன்பர்களை வரவேற்கும் சேவையில், அவர்களுடன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். அதிகாலையில் நேரமே எழுந்து, இரவில் மிகவும் தாமதமாக படுக்கைக்குச் சென்று, எல்லா நேரத்திலும் மிகுந்த விழிப்புடன் இருந்த அந்த 10 தீவிரமான நாட்களில், என்னுள் இருந்த அனைத்துக் கொந்தளிப்புகளில் இருந்தும் விடுபட்டேன். பக்தி என்றால் என்ன என்று எனக்கு உண்மையில் புரிந்திருக்கவில்லை. அது அன்பும் அர்ப்பணிப்பும் கலந்தது என்று நினைத்திருந்தேன். ஆனால் பக்தி என்பது அதையும் தாண்டிய ஒரு நிலை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அன்பு சிலசமயங்களில் அனைத்தையும் உள்ளேற்றதாக இருக்க முடியாது. ஆனால், பக்தியென்பது என்னைத் தொட்டபோது, அது நான் செய்யும் எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரவக்கூடிய ஒரு தன்மையாக மாறியது.” - நத்தலி, 34, கனடா

ஒன்பது மாதங்களில் காண்பதை விட ஒன்பது நாட்களில் அதிக முன்னேற்றம் கண்டேன்

“ஒவ்வொரு நாளும் அதிகாலை 3:00 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து, இரவு 10:00 மணிக்குப் பிறகு படுக்கையில் வந்து விழும் என் ரூம்மேட்டின் தினசரி போராட்டத்தைப் பார்த்து, லிங்க சேவை என்பது உடல் ரீதியாக மிகவும் கடினமான செயல் என்று நான் நினைத்திருந்தேன். என்னை நானே தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உறுதியில் முந்தைய தினம் “ஞானத்தின் பிரம்மாண்டம்” புத்தகத்தில் உள்ள தியானலிங்கம் அத்தியாயத்தைக் கூட படித்தேன். லிங்க சேவை செய்வதற்கு எனது உடலுக்கோ அல்லது உளவியல் சார்ந்த எனது எண்ணங்களுக்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு தனிப்பட்ட மனிதனாக, ஒன்பது மாதங்களில் நான் அடையக்கூடியதை விட அல்லது இன்னும் அதிகமான முன்னேற்றத்தை அந்த ஒன்பது நாட்களில் நான் அடைந்துள்ளேன்.” - குகன், 22, தமிழ்நாடு, இந்தியா

ஈஷா நிகழ்ச்சிகளில் தன்னார்வத் தொண்டு….

செய்வதற்கு எந்த வேலையும் இல்லாதபோதுதான் அவற்றை பொதுவாக விடுமுறை நாட்கள் எனக் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் சாதனா பாதையில், பங்கேற்பாளர்கள் தங்கள் வழக்கமான சேவையில் இருந்து விடுப்பு பெற்று இன்னும் அதிகமாக வேலை செய்யவேண்டி ஈஷா நிகழ்ச்சிகளில் சேவை செய்வதை எதிர்நோக்குகிறார்கள்! வார இறுதியில் ஒருவர் ஈஷா வகுப்பிற்கும் ஏன் அவர்கள் தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டும்? அதைத் தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்...

life-in-sadhanapada-different-flavors-of-seva-program-volunteering

பாவஸ்பந்தனா வகுப்பின் தன்னார்வத் தொண்டு எனக்கு மனநிறைவைக் கொடுத்தது

350 சாதனா பாதை பங்கேற்பாளர்களுக்காக ஒரு பிரத்யேகமான பாவஸ்பந்தனா வகுப்பு (BSP) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதில் நாங்கள் 108 பேர் தன்னார்வலர்களாக இருந்தோம். ஒவ்வொரு நாள் இரவிலும் நாங்கள் வெறும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கினோம். ஆனால் இந்த அளவிற்கு அபரிமிதமான சக்தியை நான் இதற்கு முன்பு உணர்ந்ததே இல்லை. நான் பங்கேற்ற பாவஸ்பந்தனா வகுப்பின் போது கூட இவ்வாறு இல்லை. நான் தன்னார்வத் தொண்டு முடித்து வெளியே வந்தபோது, முழுமையாக மாறிவிட்டதாகவே உணர்ந்தேன். ஒருமுறை நீங்கள் அருளால் தொடப்பட்டால், அந்த பரிமாணத்திலேயே நீங்கள் வாழ விரும்பினால், உங்களை முழுமையாக அர்ப்பணிப்பதன் மூலம் வரும் மகிழ்ச்சிதான் மிக முக்கியமான விஷயம் என்பதை நான் உணர்ந்தேன். அதற்குப்பிறகு மற்ற விஷயங்கள் அனைத்தும் எனக்கு முக்கியமற்றதாகத் தோன்றியது. உண்மையில் என் சாதனா பாதை தொடங்கியதும் அப்போதுதான்.” - பிரன்ஷு, 27, மகாராஷ்டிரா, இந்தியா

யோக மையத்தில் எப்போதும், ஒரே நேரத்தில் பல வகுப்புகள் பெரும்பாலும் ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிகழ்ந்துகொண்டே இருப்பதால், தன்னார்வத் தொண்டராகி அந்த வகுப்பின் ஒரு அங்கமாகப் பங்கேற்பதற்கான வாய்ப்பு ஆசிரமத்தில் வசிக்கும் அனைவருக்கும் கிடைக்கிறது. உள்நிலை வளர்ச்சிக்கான கருவிகளை அனைவருக்கும் வழங்கும் சத்குருவின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாது, சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பையும் இது நமக்குத் தருகிறது.

டமரு சேவை மற்றும் இசை - ஓர் அர்ப்பணிப்பு

life-in-sadhanapada-different-flavors-of-seva-vol-doing-damaru-seva

ஈஷா அலுவலக இடங்களில் உள்ள சூழ்நிலை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போன்றது என்று நீங்கள் எப்போதாவது கருதி இருந்தால், அங்கவஸ்த்திரம் அணிந்த -மத்தளம் சுமந்த - திறமை வாய்ந்த தன்னார்வலர்களின் குழு மென்மையான புன்னகையுடனும், இடிமுழக்கம் போன்ற மத்தள ஒலியுடனும் உங்கள் பார்வைக்குள் வரும்போது, உங்களுடைய தவறான கருத்து தகர்த்து எறியப்பபடும். ஆசிரமத்தின் ஒவ்வொரு பகுதிக்கும், பிற்பகலில் வலம் வந்து, எல்லோரும் துடிப்புடனும், ஆழ்ந்த விழிப்புடனும் இருப்பதை இக்குழு உறுதிசெய்கிறது! இக்குழுவில் சேர ஒருவர் இசைக்கலைஞராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, விருப்பம் இருந்தால் மட்டுமே போதுமானது.

டமரு சேவையின் முதல் அனுபவம்

"பொது சேவையின்போது, வெள்ளை அங்கவஸ்த்திரம் அணிந்த ஒரு சில தன்னார்வலர்கள் மத்தளங்கள் மற்றும் தம்பூராவை இசைத்து செல்வதை முதலில் பார்த்தபோது, இந்த வேலையை எப்போதாவது நான் செய்ய முடியுமா என்று யோசித்ததுண்டு. சில வாரங்கள் கழித்து, டமரு சேவைக்குச் செல்ல நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா என்று எனது குழுவிடம் கேட்கப்பட்டது. அப்போது கொஞ்சம் வெயில் அதிகமாக இருந்த காரணத்தால், இதை என்னால் செய்ய முடியுமா என்று சந்தேகித்து, அதற்கு நான் கொஞ்சம் விருப்பமில்லாமல் எதிர்ப்புடன் இருந்தேன். நாங்கள் சேவையை ஆரம்பித்து, தொடர்ந்து செய்தோம். திடீரென்று வெய்யிலோ உஷ்ணமோ ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது. அதுவே பின் ஒரு அழகான அனுபவமாகவும் மாறியது. நாங்கள் அடுத்த மாதம் மீண்டும் டமரு சேவை செய்ய வருவதற்கு ஒப்புக்கொண்ட பிறகே எங்கள் துறைக்கு வந்தோம்.” - ஆஷின் பால், 27, கர்நாடகா, இந்தியா

தியானலிங்கத்தில் இசைக்கும்போது படைப்பாற்றல் தானே வெளிப்படுகிறது

“தியானலிங்கத்திற்கு அர்ப்பணமாக இசை வாசிப்பது எனக்குள் பல விஷயங்களை மாற்றியுள்ளது. தியானலிங்கத்தின் மேற்கூரையில் ஒலி எதிரொலிக்கும் விதம் மிகவும் தனித்துவமானது. அது இசைக்கு மென்மேலும் ஊக்கமளிக்கக் கூடியது – இங்கு ஒவ்வொரு ஸ்வரமும் ஒரு தீவிரத்தையும் நளினத்தையும் பெறுகிறது. இது இசையை தடையின்றிப் பாய்ந்தோட உதவுகிறது. என்னைப் பொறுத்தவரை, தியானலிங்கத்தில் இசை வாசிப்பது என்பது ஒரு அளவிட முடியாத ஆசீர்வாதம், பாக்கியம். நான் வாசிக்கும் விதமும், இசைக்கருவியை நான் அணுகும் முறையும் முற்றிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. தியானலிங்கத்தில் இசைக்கும்போது, ஒவ்வொரு கணமும் எனக்குள் படைப்பாற்றல் தானே வெளிப்படுவதை உணர்கிறேன். இத்தலத்தின் அளப்பரிய சக்தியானது, சமநிலை பிறழாத விதத்திலும், அர்ப்பணிப்பு உணர்வு தளராத வகையிலும் இருந்து, என் இசைக்கும் திறனுக்கும் மீறிய சில படிகளை எடுக்க உறுதுணையாக உள்ளது. நான் வெறுமனே என் கண்களை மூடி இசையுடன் முழுமையாக இணைகிறேன்; இது ஒரு அழகான புதைகுழிக்குள் மூழ்கிச் செல்வதைப் போல் உள்ளது… உண்மையில் அங்கே இசைப்பது நான் அல்ல.” - கேப்ரியல், 39, பிரேசில்

பசு மடத்தில்...

‘மாட்டு மனை‘ என்று பெயரிடப்பட்டுள்ள ஈஷாவின் சொந்த பசுமடமானது, பலவகையான பாரம்பரிய நாட்டு மாடுகளுக்கு ஒரு சுகமான இல்லம் போன்றது. பசுக்கள் மற்றும் காளைகளைப் பராமரிப்பதற்கு தைரியமும் மென்மையான அணுகுமுறையும் தேவைப்படுகிறது. இது ஒருவரின் வளர்ச்சிக்கு சரியான இடமாக அமைகிறது.

life-in-sadhanapada-different-flavors-of-seva-vol-at-maatu-mane

என் வரம்புகளை உடைத்ததாக உணர்ந்தேன்

“நான் ஒரு கால்நடை மருத்துவராக இருப்பதால், ஆசிரமத்தில் உள்ள மாட்டு மனையில் எனது சேவைக்காக நியமிக்கப்பட்டேன். ஆரம்பத்தில், எனது கால்நடை மருத்துவ சேவையை தொடர்ந்து செய்ய முடியும் என்ற காரணத்தினால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நாட்கள் செல்லசெல்ல, மாடுகளுக்கு சிகிச்சையளிப்பதைத் தவிரவும், அவைகளுக்கு உணவளிப்பது, தண்ணீர் கொடுப்பது, அவற்றின் சாணத்தை சேகரித்து பயிர்களுக்கு எருவாக அதைப் பயன்படுத்துவது போன்ற பல செயல்கள் செய்யவேண்டி இருக்கிறது என்பதைக் கண்டேன். இந்த எல்லாப் பணிகளை செய்யும்போதும், இந்த செயல்களைச் செய்ய என்னுள் பல அடுக்குகளில் எதிர்ப்பு இருப்பதை நான் உணர ஆரம்பித்தேன். இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் நான் இவ்வளவு விழிப்புணர்வுடன் செய்ததில்லை. என்னைச் சுற்றியுள்ள இயற்கையை இவ்வளவு ஆழமாக, அற்புதமாக உணர்ந்ததில்லை. எனக்குள் இருந்த எல்லா வரம்புகளும் உடைபடுவதை உண்மையில் பார்க்க முடிந்தது. நான் இங்கு பணிபுரிய ஆரம்பித்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. நான் திரும்பிப் பார்க்கும்போது, முன்பு இருந்த அந்த நபர் இப்போது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னை முழுவதுமாக, ஒரு வித்தியாசமான நபராக மாற்றியமைத்த எனது சேவையில் உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும், எனது ஒருங்கிணைப்பாளருக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.” - சோனிகா, 24, கர்நாடகா, இந்தியா

பிருத்வி பிரேம சேவை

life-in-sadhanapada-different-flavors-of-seva-vol-prithvi-prema-seva-planting-tree

இயற்கையோடு ஒன்றி இருப்பதற்கும், மண்ணிலும் சூரியஒளியிலும் மூழ்கிப் போவதற்கும் (உண்மையிலேயே) ஒரு அருமையான வாய்ப்பை, பிருத்வி பிரேம சேவை என்ற வடிவத்தில் சத்குரு வடிவமைத்துள்ளார். மக்கள் பஞ்சபூதங்களுடன் ஆழ்ந்த தொடர்பை ஏற்படுத்துவது யோகத்தின் மிக அடிப்படையான அம்சம்.

ஒரு பொறியாளரோ, ஒரு பாடகரோ, ஒரு கணக்காளரோ அல்லது ஒரு மென்பொருள் வல்லுனரோ சாதனா பாதையில் பங்கேற்று, உடல் அளவில் செயல் செய்து பலமணிநேரம் உழைப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! இயற்கையோடு மிக நெருக்கமாக இருப்பதன் மகத்துவமும், பிரம்மிப்பூட்டும் வெள்ளியங்கிரி மலையின் கண்கவர் எழிலும் இந்த சவாலை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.

மரங்களை நடுதல், களையெடுத்தல், பூக்களைப் பறித்தல் மற்றும் அருகிலுள்ள பண்ணைகளுக்குச் சென்று கொய்யாப்பழம், எலுமிச்சை மற்றும் சீதாப்பழம் பறித்தல் (பறிக்கும்போது சாப்பிட அனுமதியில்லை!) போன்ற பலவற்றை உள்ளடக்கியதே பிருத்வி பிரேம சேவை.

என் தனிப்பட்ட எண்ணங்களையும், உணர்ச்சியையும் விட வாழ்க்கை பெரிதாகி வருகிறது

“நான் பிருத்வி பிரேம சேவையில் அங்கம் வகிக்க உள்ளேன் என்று அவர்கள் என்னிடம் சொன்னபோது, இயற்கையை வெகுவாகக் காதலிக்கும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், முதல் ஒரு மாதம் சிறிது கடினமாக இருந்தது, ஏனென்றால், நாங்கள் வெய்யில் மற்றும் மழையில் நனைந்து நாள்முழுவதும் மண்ணில் அலைந்து சேவை செய்தோம். ஆனால், உடல் இந்த சூழலுக்குப் பழகியவுடன், நான் அதை மிகவும் ரசிக்க ஆரம்பித்தேன். சத்குரு சொல்வதைப் போல, உயிர் என்பது எல்லா இடங்களிலும் முழுமையாகத் துடித்துக் கொண்டிருக்கிறது - ஆனால், நான் எனது தனிப்பட்ட உளவியல் நாடகங்களில் முற்றிலும் சிக்குண்டு போயிருந்த காரணத்தால், உயிர் வாழ்க்கையை உணர்ந்து அறிய சிறிது நேரம் கூட செலவிடவில்லை. இப்போது புழுக்களையும், பூச்சிகளையும், அழகான பட்டாம்பூச்சிகளையும் அல்லது முளைத்து வெளிவரும் புல்லின் நுனியையும் கூட ஆழமாக கவனிக்கிறேன். அவற்றைக் கண்டு ஆனந்தமடைகிறேன். அவைகளுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன். இது நான் எனும் தன்மையை உள்ளிருந்து உருக்குகிறது.” - கௌரி, 28, மகாராஷ்டிரா, இந்தியா

life-in-sadhanapada-different-flavors-of-seva-vol-prithvi-prema-seva-pic1

இது எனது கலாச்சார எல்லைகளை விரிவுபடுத்தியது

"ஒவ்வொரு நாளும் பண்ணைகளுக்குச் சென்று எல்லா வகையான மக்களுடனும் ஒன்றாகப் பழகுவதில், கலாச்சார ரீதியாக நான் வளம்பெறுவதாக உணர்கிறேன். ஏனெனில், 'நாம் அனைவரும் ஒரே இனம்தான், ஒரே மனித இனம்தான்' என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் நம்மில் கலாச்சார பின்னணி சார்ந்த நுட்பமான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வேறுபாடுகளைக் கவனிப்பதும், வேறுபாடுகளை மறந்து, இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்தும் வந்துள்ளவர்களோடு நட்புறவை ஏற்படுத்துவதும் சந்தோஷமாக இருக்கிறது." – மிகுஸ், 32, லாட்வியா

அடுத்து வருவது...

மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள சாதனா பாதை நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப உங்களை தகவமைத்துக்கொள்வது ஒரு பெரும் பணியாகும். அடுத்த முறை, சாதனா பாதையில் நிலைத்து அதற்கேற்ப உங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், அதன்மூலம் வளரவும் சில உதவிக் குறிப்புகளையும் விவரங்களையும் "சாதனா பாதையின் கையேடு வடிவத்தில் பகிர உள்ளோம்.

ஆசிரியர் குறிப்பு: சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் வரவிருக்கும் நிகழ்ச்சிக்கு முன் பதிவு செய்யுங்கள்.