ஒரு பெண்மணியால் உருவாகும் இயற்கை விவசாய நெல்மணிகள்! - II
பவானி சீதாபாளையத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை திருமதி.சாமுண்டீஸ்வரியின் நேர்காணலின் முதல் பகுதியில், நம்மாழ்வாரின் அறிமுகம் கிடைத்தது பற்றியும், இயற்கை விவசாயத்திற்கு கணவரின் சிறப்பான ஒத்துழைப்பு பற்றியும் கூறி, அவருடைய இயற்கை விவசாய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். இந்த இரண்டாம் பகுதியில் இயற்கை விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள நுட்பங்கள் பற்றி விரிவாக நமக்கு எடுத்துரைக்கிறார்.
முதல் பகுதி
பகுதி 2
இயற்கை விளைபொருட்கள் விலை நிர்ணயம்!
தொடர்ந்து பேசிய சாமுண்டீஸ்வரி "எங்களிடம் பொருள் வாங்க முதன்முறையாக வருபவர்கள் விலை சற்று அதிகம் என்றும், சந்தை விலைக்கே விற்கலாமே? என்றும் கேட்பார்கள். அதற்கு நாங்கள் பொருளின் தரத்தை கவனியுங்கள், இயற்கைப் பொருளோடு இரசாயன பொருளை ஒப்பிடுகிறீர்களே? என்று கேட்கும் போதுதான் பொருளின் தரத்தைப் பற்றி அவர்களுக்கு புரிகிறது! நுகர்வோர்களுக்கு முதலில் பொருட்களின் தரத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு இயற்கை விளைபொருட்களின் நன்மையைப் பற்றி கூறினால் விலையைக் குறித்து பேசாமல் மகிழ்ச்சியாகவே வாங்கிச் செல்கிறார்கள்."
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைனு என்ற ஊர்ல பெரிய வூட்டு ஆத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ. அதைய மாறி நாம தரமான பொருள வாங்கோணும் ஆனா விலை குறைவா கிடைக்கோணும்னு நெனச்சா எப்படிங்கொ சரியாகும். தரமற்ற பொருள வாங்கி சாப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு செலவு செய்யுறதவிட, தரமான இயற்கை விவசாய பொருள வாங்குறதுக்கு கொஞ்சம் செலவு செய்யுறது தானுங்களே புத்திசாலித்தனம்.
இரசாயன விவசாயிகள் 2000 கிலோ வரைக்கும் நெல் அறுவடை செய்றாங்க, இதுக்காக இரசாயன உரம், பூச்சிக்கொல்லின்னு நிறைய போடறாங்க. இயற்கை முறையில் எங்களுக்கு ஏக்கருக்கு 1500 கிலோ நெல் அறுவடை கிடைக்குது. இயற்கை விவசாயம் செய்யும்போது விவசாயத்த ஆத்மார்த்தமா செய்யனும். மாட்டை பார்த்துக்கொள்வது, சாணி கோமியம் சேகரிப்பது, சரியான நேரத்தில் இடுபொருள் தயாரிப்பது என்று நேரங்காலம் பார்க்காம வேலை இருக்கும்.
களையெடுக்கிற கூலி இயற்கை விவசாயத்தில் அதிகம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதுக்கெல்லாம் சேர்த்து கொஞ்சம் கூடுதலா விலை வைத்தால்தான் எங்களுக்கு கட்டுபடியாகுது. தற்போது அரிசியை பொறுத்தவரை விலையைப் பற்றி யாரும் கேட்பதேயில்லை, எப்போது அரிசி கிடைக்கும் என்றுதான் கேட்கிறார்கள். எங்களது நாட்டுச் சர்க்கரையை சுவைத்துப் பார்த்தவர்கள் தற்போது நிரந்தர வாடிக்கையாளர்களாகி விட்டனர்.
Subscribe
சந்தை விலைக்கே விற்க முடியுமா?
எல்லோரும் இயற்கை உணவை சாப்பிடணும்னுதான் இயற்கை விவசாயிகளின் விருப்பம். இருந்தாலும் சந்தை விலைக்கு கொடுப்பது எங்களுக்கு கட்டுப்படியாகலையே!. உற்பத்தியை வைத்துதானே சந்தை விலை நிர்ணயிக்கிறார்கள். உற்பத்தி குறைந்தால் விலை கூடுது. அதிகமானால் விலை குறையுது. அந்த பொருளோடு எங்க பொருளை ஒப்பிட முடியாதே.
இப்போதைக்கு உற்பத்தி செலவைக் கணக்கிட்டு 15 சதவீதம் அதிகம் வைத்து விற்கிறோம். இயற்கைப் பொருட்களை கொஞ்சம் விலை அதிகமா கொடுத்து வாங்கினாலும் மக்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்குமே! மருத்துவச் செலவுகளும் குறையுமே! அது அவங்களுக்கு லாபந்தானே!
"கடந்த வருஷம் PPT சன்னரக நெல் போட்டதில் ஏக்கருக்கு 1300 கிலோ நெல் வந்தது. அரிசியை 80 ரூபாய்க்குக் கொடுத்தேன். இந்த வருஷம் உற்பத்தி செலவையெல்லாம் கணக்குப் பார்த்தால் 100 ரூபாய் வைத்தால்தான் கட்டுப்படியாகும் போல இருக்கு. இயற்கையில் விளைந்த எல்லாப் பொருட்களையும் இப்படி கொஞ்சம் கூடுதல் விலைவச்சு விற்க முடியாது என்பதையும் கவனிக்கணும். குச்சிக்கிழங்கு இரசாயனத்தில் 20 டன்னுக்கு மேல் எடுக்கிறார்கள். எங்களுக்கு 10 டன்தான் கிடைச்சது. அளவு குறைஞ்சாலும் கூடுதல் விலைக்கு விற்க முடிவதில்லை." என்று கூறியவர் இயற்கை விலைபொருட்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்பதிலும் ஆர்வமாயிருந்தார்.
செலவைக் குறைந்தால் விலையை குறைக்க முடியும்!
"ஒரு விவசாய முறையில் இருந்து மற்றொரு விவசாய முறைக்கு மாறும் ஆரம்ப காலத்தில் விவசாயிகள் சிறிது அதிக முயற்சி செய்ய வேண்டியுள்ளது. முன்னோடி விவசாயிகள் இதற்கான வழியை எளிமைப்படுத்தி சொல்லணும். களையெடுக்கும் கூலி, மற்றவேலைகளுக்கான செலவுகள் போன்றவற்றையும் எப்படிக் குறைப்பது என்பதையும் எங்களுக்கு சொல்லணும். ஒரு சில பயிர்களில் மகசூல் கொஞ்சம் குறைவாதான் கிடைக்குது, அந்த பயிர்களின் மகசூலை அதிகரிக்க வழிமுறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் வெற்றிபெற்று இயற்கையும் விவசாயிகளுக்கு சாதகமாக இருந்தால் விளையும் எல்லாப் பொருட்களையும் நியாயமான விலைக்கு எங்களால் கொடுக்க முடியும்" என்று கூறிய சாமுண்டீஸ்வரி அவர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கினோம்.
இயற்கை விவசாயத்தில் செலவைக் குறைப்பதற்கான வழிமுறையை நம்மாழ்வார் ஐயா அவர்களும், பாலேக்கர் ஐயா அவர்களும் நமக்கு ஏற்கனவே தெளிவாக வழங்கியிருக்கிறார்கள், அவற்றையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மாழ்வார் ஐயா சொன்ன மூடாக்கு முறையை சரியாகக் கடைபிடிக்க வேண்டும். மஞ்சளுக்கு நரிப்பயறை மூடாக்காக போடுவதினால் களையெடுக்கும் செலவுகள் குறையும். இந்த வகையில் ஏக்கருக்கு 6,000 முதல் 10,000 ரூபாய் வரை மிச்சமாகும் என்பது பல அனுபவ விவசாயிகள் கண்ட உண்மை.
ஒரு நாட்டு மாட்டைப் பயன்படுத்தி குறைந்த பட்சம் 10 ஏக்கர் முதல் அதிகபட்சம் 30 ஏக்கர் வரை சாகுபடி செய்ய முடியும் என்று பாலேக்கர் ஐயா தெளிவாகக் கூறியிருக்கிறார். சாணத்தை, சாணப்பாலாகவோ தொழு உரமாகவோ பயன்படுத்தாமல் அதை ஜீவாமிர்தமாக தயாரிக்கும்போது பலகோடி நுண்ணுயிர்கள் பெருகுகின்றன. இவ்வகையில் ஓரிரு மாடுகளை வைத்துக்கொண்டே அதிக நிலத்தை சாகுபடி செய்யமுடியும். இதனால் கோழி எருவும் அவசியமில்லை. கோழி எரு வாங்கும் செலவு குறையும்போது லாபமும் அதிகரிக்குமல்லவா? என்று விளக்கிக் கூறினோம் சாமுண்டீஸ்வரி அவர்களும் இனி தொடர்ந்து ஜீவாமிர்தம் பயன்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.
என் குழந்தைக்கு நஞ்சில்லா உணவைக் கொடுப்பது போல் சமூகத்துக்கும் நஞ்சில்லா உணவைக் கொடுக்கிறேன்.
"ஈஷாவின் இடுபொருள் தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொண்டதில் இருந்து இயற்கை விவசாயத்தைக் குறித்து மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். எங்க பகுதியில் விவசாயத்திற்கு நிலையான வேலையாட்கள் வருவதில்லை! ஆட்கள் மாறிமாறி வருகிறார்கள். புதிதாக வருபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் இயற்கை விவசாயம் குறித்து சொல்லித்தர வேண்டியுள்ளது. இடுபொருள் பயிற்சியில் கலந்து கொண்டதினால் அவர்களுக்கு புரியும்படி என்னால் சொல்லித் தரமுடிகிறது." என்று கூறிய சாமுண்டீஸ்வரி கடைசியாக, "இயற்கை விவசாயத்தில் சிறுசிறு சவால்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக இயற்கை விவசாயம் செய்வது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது, மேலும் என் குழந்தைகளுக்கு விஷமான பொருட்களைக் நான் எப்படிக் கொடுக்க முடியும்? எனது குழந்தைக்கு இயற்கையான பொருளை எப்படிக் கொடுக்கிறேனோ அப்படியேதான் சமூகத்துக்கும் இயற்கையான பொருட்களையே கொடுக்கிறேன்." என்று முத்தாய்ப்பாக கூறினார். அவரது இந்த வார்த்தை ஒவ்வொரு இயற்கை விவசாயிகளையும் எங்களுக்கு நினைவுபடுத்தியது.
ஊருக்கே சோறு போடுற விவசாயிங்கல்லாம் நமக்கு இன்னொரு தாய் தானுங்களே?! அந்த வகையில நம்ம ஊர்ல ஒரு அம்மணி இந்த அளவுக்கு வெகரமா இயற்கை விவசாயத்த செய்யுறாப்படினா, அதைய ஒரு பெண்ணா இருந்து மனசார பாராட்டுறேனுங்க.
விவசாயிகளும், இயற்கை விவசாயிகளும் சமூகத்தை போஷிப்பவர்கள் அவர்களை சமூகமும் போஷிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு செந்தில் சமுண்டீஸ்வரி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.
தொடர்புக்கு:
திருமதி சாமுண்டீஸ்வரி : 9842734002
தொகுப்பு: ஈஷா விவசாய இயக்கம் - 8300093777
முகநூல்: Isha Agro Movement
Youtube: Isha Agro Movement