பகுதி 1

ஆசிரியராக வேண்டும் என்பதுதான் சாமுண்டீஸ்வரி அவர்களின் கனவு, கனவை நிறைவேற்ற தடை சொல்லாத அவரது அப்பா எம்.ஏ. எம்.எட்., வரை படிக்க வைத்திருக்கிறார். விவசாயத்தின் அரிச்சுவடிகூட பழகாத சாமுண்டீஸ்வரி தற்போது ஒரு இயற்கை விவசாயியாக வலம் வருகிறார். விவசாயமே எல்லோர் வாழ்வையும் வளமாக்கும் என்ற முடிவில் விவசாயத்தையே முழுநேரத் தொழிலாக செய்துவருகிறார். அவரது மாமாவின் அனுபவமும், கணவரின் ஆலோசனையும் துணைநிற்கிறது. கோபி கீழ்வாணியில் இடுபொருள் தயாரிப்பு பயிற்சியில் கலந்து கொண்டதிலிருந்து ஈஷா விவசாய இயக்கத்துடன் தொடர்பில் இருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு.

சாமுண்டீஸ்வரியின் கணவர் செந்தில் அவர்கள் முதலில் பேசத்தொடங்கினார். "எங்கப்பா இரசாயன விவசாயத்த 2002லேயே நிறுத்திட்டாரு. திடீர்னு எடுத்த முடிவுதான், நம்மாழ்வார் பற்றி அடிக்கடி பேசுவார், பூமி கெடக்கூடாது, அடுத்த தலைமுறை நல்லா இருக்கனும்... இப்படி நிறைய விஷயம்... அப்பாவுக்கு பிறகு விவசாயத்தை நான் பார்த்துக்கிட்டேன், இப்போ என் மனைவி பார்த்துக்கிறாங்க! ஆரம்பத்தில் சில வருஷம் ஆசிரியரா இருந்தாங்க, இப்போ முழு நேரமா விவசாயத்தையே பார்த்துக்கிறாங்க.

நம்மாழ்வார் வருகை

நம்மாழ்வார் ஐயா அவர்கள் 2002ல் சத்தியிலிருந்து கொடுமுடிக்கு நடை பயணம் செய்தபோது இவர்களது பண்ணைக்கும் வந்திருக்கிறார். நம்மாழ்வார் கூறிய பல விஷயங்கள் வாழ்வில் மறக்க முடியாதது என்றும், பார்த்த ஒவ்வொரு செடியைப் பற்றியும் அவர் விளக்கிக் கூறிய விதம் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்ததெனவும் விவரித்தவர், நம்மாழ்வார் ஐயாவின் தொண்டுகள் குறித்தும் நினைவு கூர்ந்தார்.

நல்ல மனுசங்க பார்வை பட்டாலே நமக்கு நல்லது நடக்கும்னு பெரியவங்க சொல்லுவாங்கோ இல்லீங்கோ! அதுவும் நம்மாழ்வார் ஐயா மாதிரி பெரியவங்க சகவாசம் இருந்ததுன்னு பொறவு வேற என்னங்க வேணும். இந்த கள்ளிப்பட்டி கலைவாணியும் நம்மாழ்வார் ஐயாவோட வழியிலதானுங்க விவசாயம் செய்யுறேணுங்க. செரி வாங்கோ… மேல என்ன சொல்றாங்கன்னு கேட்டுப்போட்டு வருவோம்.

"இயற்கை விவசாயத்தைப் பத்தி அப்போ எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தாய் மண்ணுல உரத்த போடக்கூடாதுன்னு ஒரே முடிவெடுத்து இரசாயன உரம் போடுவதை சுத்தமா நிறுத்திட்டோம், ஒரு வருஷம் மட்டும் சற்று கஷ்டப்பட்டோம், பூச்சித் தாக்குதல், அறுவடை குறைவு போன்ற பல பிரச்சினைகள். முதலில் 5 ஏக்கர் போட்ட கரும்புல வெள்ளாமை குறைச்சல்தான். படிப்படியா சில நுணுக்கங்கள் புரிந்தது, நிலத்தில் கரிமச் சத்து கூடக்கூட மண்வளமும் அதிகமானது, மகசூலும் கூடியது. ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இயற்கை விவசாயம் வேண்டாம், நிறுத்தி விடுங்கள் என்றே சொன்னார்கள். நாங்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை! இயற்கை விவசாயத்தை உறுதியா பிடிச்சுக்கிட்டோம். நல்ல விஷயத்தை விட முடியுங்களா?

தொடர்ந்து சாமுண்டீஸ்வரி பேசத் தொடங்கினார். "எனக்கு விவசாயத்தை சொல்லிக் கொடுத்தது என் கணவர்தான், மோட்டார் ஸ்டார்ட்டர் தொழில் செய்வதால் அவருக்கு விவசாயத்தை கவனிக்க நேரமில்லை, எனக்கும் விவசாயம் பிடிச்சிருக்கிறதால நானே விவசாயத்தை பார்த்திட்டுருக்கேன், தேவையானபோது ஆலோசனை மட்டும் தருவார்." என்ற அவரது வார்த்தைகளில் இயற்கை விவசாயத்தின் மேல் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாங்கன்னு சொல்லுவாங்கோ இல்லீங்க. அட நான் இந்த சினிமா டயலாக்கெல்லாம் சொல்லலிங்கோ. நிஜமாவே கணவனும் மனைவியும் ஒருத்தருக்கு ஒருத்தர் தடையா இல்லாம, துணையா இருந்து வாழ்ந்தோம்னாதானுங்க இவிகள மாறி வாழ்க்கையில செயிக்க முடியுமுங்க.

"எங்களோட 15 ஏக்கர் நிலத்தில் வாழை, கரும்பு, நெல், மரவள்ளி சாகுபடி செய்கிறோம். 4 நாட்டு மாடும், 6 கலப்பு மாடும் இருக்கு, வீட்டுக்கு கோபர் கேஸ்தான். சாண எரிவாயுக் கழிவை பாசன நீரில் விடுகிறோம். எல்லா பயிருக்கும் அடியுரம் கோழி எருதான். கோழி எரு இந்தப் பகுதியில மலிவா கிடைக்குது. 1200 ரூபாய்க்கு ஒரு டன் கோழி எரு வாங்கலாம். மஞ்சளுக்கு கோழி எருவை ஏக்கருக்கு 6 டன் வரை போடலாம், வாழைக்கும் கரும்புக்கும் அதிகபட்சமா ஏக்கருக்கு 10 டன் போதும். எல்லாப் பயிர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தத் தெளிப்பும் செய்கிறோம்."

"நான்கு ஏக்கரில் நெல் சாகுபடி, தேவைக்கேற்ப பாரம்பரிய ரகம், பிபிடின்னு மாத்தி மாத்தி போடுவோம். மூன்று ஏக்கரில் கரும்பு இருக்கு, மற்ற பயிரைவிட கரும்பு இயற்கை விவசாயத்தில் லாபகரமா இருக்கு, போன வருஷம் ஏக்கருக்கு 70 டன் வரைக்கும் கிடைச்சது, இந்த வருஷம் மறுதாம்பு மகசூல் குறைச்சல்தான். போன அறுவடையில் வண்டிபோன தடத்துல எல்லாம் சொட்டை விழுந்துடுச்சு, அந்த இடத்துல கரும்பு நடாம விட்டுட்டோம், அதனால மறுதாம்பு பயிர் சற்று குறைச்சலாதான் வந்திருக்கு."

"எங்களுக்கு ஏக்கருக்கு 20 குவின்டால் வரை மஞ்சள் அறுவடை கிடைக்கிறது. பக்கத்தில் உள்ளவங்க இரசாயனம் போட்டு மஞ்சள் விளைவிக்கிறாங்க, எங்கள் அனுபவத்தில் மஞ்சள் இயற்கை முறையில்தான் நல்லா வளருது, மஞ்சள் ஒரு 'சென்சிடிவ்வான' பயிர் என்பதால் எல்லா விவசாயிகளும் மஞ்சள் சாகுபடியை இயற்கை முறையிலேயே செய்வதுதான் சிறந்தது. போன வருஷம் மஞ்சளில் ஊடுபயிராக தட்டைப் பயிரை சாகுபடி செய்தோம். இப்படி ஊடுபயிர் செய்வது களை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது." என்று கூறியவர், இப்படி ஊடுபயிர் போடும்போது இரண்டு களை எடுத்தபின்பே தட்டை விதைப்பது சிறந்தது என்றும் மஞ்சள் விதைக்கிழங்கை நட்டவுடனே விதைத்தால் தட்டை வேகமாக வளர்ந்து மஞ்சளை மூடிவிடுதாகவும் கூறினார்.

காட்டுல யானை இருக்கில்லீங்கோ, அதுகல்லாம் அப்பப்போ அதோட தலையில மண்ண வாரி போட்டுக்குமாங்க. ஆனா அதுக்கு கூட எதோ அறிவியல் காரணம் இருக்குன்னு யூ ட்யூப்ல பாத்தேணுங்க. ஆனா இந்த மனுசங்க நிலத்துல இரசாயனத்த போடுறதுக்கு பின்னாடி முட்டாள்தனம்தாங்க இருக்கு. விளைச்சல் அதிகமாகணும்னு சொல்லிப்போட்டு நஞ்சை விதைச்சு கண்டகண்ட நோய் உண்டாக்கிக்கறோமுங்க. இந்த சாமுண்டீஸ்வரி அக்கா மாறி மத்தவங்களும் இதைய புரிஞ்சுகிட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறோணும்கறதுதான் இந்த கள்ளிப்பட்டி கலைவாணியோட ஆசைங்கண்ணா!

நேரடி விற்பனை

உற்பத்திப் பொருட்களை நேரடி விற்பனை செய்வதுதான் இயற்கை விவசாயிகளைக் காப்பாற்றும் என்பதை இவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். "ஆரம்பத்தில் நாங்க உற்பத்தியில்தான் கவனம் செலுத்தினோம், மதிப்புக்கூட்டுவது பற்றியோ நேரடி விற்பனை செய்வது பற்றியோ யோசிக்கவில்லை. என் மனைவிதான் கடந்த இரண்டு வருஷமா நேரடி விற்பனை செய்யத் தொடங்கினார்கள். அதனால் வருமானமும் கொஞ்சம் கூடியிருக்கு." என்ற செந்தில் தொடர்ந்து...

"கரும்பை சர்க்கரையா ஆட்டிதான் கொடுக்கிறோம் நல்ல வரவேற்பு இருக்கு, இயற்கை சர்க்கரையை பாலில் போட்டுக் குடிக்கும்போது அதன் சுவையே தனிதான். மாதம் ஒன்றரை டன் கரும்பு ஆட்டினாலும் சர்க்கரையை எளிதா விற்கமுடியுது. மஞ்சளை சிறிதளவு ஏற்றுமதியும் செய்கிறோம். மஞ்சள் தூளும் கொஞ்சம் விற்கிறோம். நெல்லை அரிசியா அரைத்துதான் கொடுக்கிறோம். பாய்லரில் வேகவச்சு சத்து போயிடக் கூடாதுன்னு நாங்களே நெல்லை பானையில் அவித்து, காயவைத்து அரைக்க கொண்டு போகிறோம். அரிசி தரமா இருக்கிறதால எவ்வளவு இருந்தாலும் உடனே விற்பனையாயிடும்."

இரண்டாம் பகுதியில்….

இந்த நேர்காணலில் இரண்டாம் பகுதியில் இயற்கை விவசாய பொருட்களை விற்பனை செய்வதில் உள்ள நுட்பமான விஷயங்கள் பற்றி திருமதி.சாமுண்டீஸ்வரி அவர்கள் நம்மிடம் பேசுகிறார்..

தொடர்புக்கு:

திருமதி சாமுண்டீஸ்வரி : 9842734002

தொகுப்பு: ஈஷா விவசாய இயக்கம் - 8300093777

முகநூல்: Isha Agro Movement

Youtube: Isha Agro Movement