கொளுத்தும் வெயிலுக்கு உகந்த பூசணி!
நம் கலாச்சாரத்தில் பூசணிக் காய்களுக்கு ஆன்மீக சடங்குகளில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு! அது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பூசணிக்காய் தரக்கூடிய பொன்னான பலன்கள் என்னென்ன என்பதை உமையாள் பாட்டி சொல்லக் கேட்டு அறியுங்கள்!
 
கொளுத்தும் வெயிலுக்கு உகந்த பூசணி!, Koluthum veyilukku ugantha poosani
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 23

நம் கலாச்சாரத்தில் பூசணிக் காய்களுக்கு ஆன்மீக சடங்குகளில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு! அது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பூசணிக்காய் தரக்கூடிய பொன்னான பலன்கள் என்னென்ன என்பதை உமையாள் பாட்டி சொல்லக் கேட்டு அறியுங்கள்!


“உனக்கு மட்டுமில்ல இந்த வெயிலுக்கு சரியான உணவு எடுத்துக்கலன்னா, எல்லாருக்குமே உஷ்ண பாதிப்பு வரத்தான் செய்யும். ஏற்கனவே உனக்கு உஷ்ண உடம்பு வேற! அதான் பூசணிக்காய் ஜூஸ் குடுத்தேன்.”

எதிர் வீட்டுக்காரர், வீட்டின் முன் உள்ள கல்லில் ஆம்லெட் போட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். “என்னங்க கேஸ் காலி ஆகிடுச்சா?” என்று கேட்க, இவ்வளவு சூடாக கல் இங்கு இருக்க எதற்கு கேஸை வீணாக்க வேண்டுமென்றபடி ஆம்லெட்டை ருசி பார்த்தார்.

பக்கத்து வீட்டுக்காரரோ வீட்டைக் காலி செய்துவிட்டு, வட்டிக்கு கடன் வாங்கி இந்த இரண்டு மாதங்களுக்கு ஊட்டியில் போய் செட்டிலாகி விடுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தார். இவர்களையெல்லாம் வாட்டி வதைக்கும் வெயில் என்னை மட்டுமென்ன விட்டுவைக்குமா?! காலை ஏழரை மணிக்கே உடலில் வெட்கை பற்றிக்கொள்கிறது. மாலை ஆறரை மணி வரை சூரியனின் உஷ்ணம் மக்களை பாரபட்சம் பாராமல் வாட்டியெடுக்கிறது.

என்னைப் போன்ற உஷ்ணதேகம் உள்ளவர்களுக்கு சாதாரணமாகவே உஷ்ண கடுப்பு வந்துவிடும். எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பதும், வேலைகள் அனைத்தும் முடங்கிப்போவதும் தொடர் கதையாகும். இந்த கத்தரி வெயிலுக்கு கேட்க வேண்டுமா என்ன?!

சரி... இந்த விஷயத்திற்கு உமையாள் பாட்டியிடம் தீர்வு நிச்சயம் இருக்கும் என்று ஆழ்மனதில் ஓர் அசரீரி ஒலித்தது. ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு கிளம்பினேன், பாட்டியைப் பார்க்க.

உமையாள் பாட்டியின் கூரைவீடு வெயிலுக்கு குளுகுளுப்பாக இருந்தது. வரவேற்று அமர வைத்த பாட்டி, குடிப்பதற்கு ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்தாள். ஒரு வாய் பருகிய பிறகு தெரிந்தது, அது ஏதோ ஒரு சாறு என்று. அதைக் குடித்து முடித்ததும் உடலில் ஒருவித குளுமையை உணர முடிந்தது. எனது உஷ்ணக் கடுப்பும் சற்று சரியானது போல் இருந்தது.

பாட்டி பரபரப்பாக அடுப்படியில் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருக்க, நானும் அங்கு சென்று பாட்டிக்கு உதவலாமென உள்ளே சென்றேன். என்னைப் பார்த்ததும், “என்னப்பா இப்ப எப்படி இருக்கு உஷ்ண கடுப்பு, சத்த தேவலாமா?” என்று நலம் விசாரித்துக் கொண்டே குவித்து வைத்திருந்த பூசணிக்காய்களில் ஒன்றை எடுத்து, ஏதோ பக்குவம் செய்துகொண்டிருந்தாள் பாட்டி.

“எனக்கு உஷ்ணக் கடுப்பு இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும் பாட்டி?!” ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“உனக்கு மட்டுமில்ல இந்த வெயிலுக்கு சரியான உணவு எடுத்துக்கலன்னா, எல்லாருக்குமே உஷ்ண பாதிப்பு வரத்தான் செய்யும். ஏற்கனவே உனக்கு உஷ்ண உடம்பு வேற! அதான் பூசணிக்காய் ஜூஸ் குடுத்தேன்.”

“ஓ... அது பூசணிக்காய் ஜூஸா? எங்க வீட்டுல எப்போதாவது விசேஷ நாட்கள்ல பூசணிக்கூட்டு வச்சு சாப்பிடுறதோட சரி, பூசணிக்காய ஒரு மருந்தா பாக்குறதில்ல!”

“நம்ம கலாச்சாரத்துல மருந்தே உணவு, உணவே மருந்துதானப்பா?!”

“ஆமாம் பாட்டி, சரி... இந்த பூசணிக்காய்களோட வேற பலன்களப் பத்தி சொல்லுங்க பாட்டி!” பூசணிக்காயின் சதைகளை கத்தியால் வெட்டி பாட்டிக்கு ஒத்தாசை செய்தபடி பாட்டியிடம் கேட்டேன்.

“இந்த பூசணிக்காய் சதையை வேக வெச்சு, அதோடு கற்கண்டு சேத்து தினமும் ரெண்டு வேள சாப்பிட்டு வந்தா, சிறுநீர் தடையில்லாம வெளியேறும். பூசணிக்காய குடைஞ்சு, அதுக்குள்ளாற செம்பருத்திப்பூவ போட்டு ஊறவெச்சு, அப்புறம் சாறெடுத்து சர்க்கரை சேத்து குடுத்து வந்தா, வெள்ளப்படுதலும், சிறுநீர் எரிச்சலுடன் வெளியேறுவதும் தீரும். பூசணி விதை கூட நல்ல மருத்துவ குணம் உள்ளது. பூசணி விதைய 35கி அரைச்சு, வெறும் வயிற்றில் குடுத்து (12 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு), பிறகு 2-3 மணி நேரம் கழிச்சு விளக்கெண்ணெய் கொடுத்தா வயித்துல இருக்குற தட்டைப் புழுவெல்லாம் வெளியேறிடும். தினசரி பூசணிக்காயை உணவுல சேத்தா உடல் அலுப்பு-வலி குணமாகும். அப்புறம்... உனக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?”

“ஏம் பாட்டி அப்படி கேக்குறீங்க, எனக்கு யாரும் எதிரியில்ல! நான்தான் சிலநேரம் எனக்கே எதிரியாகிடுறேன். இப்போதைக்கு இந்த கடும் வெயில்தான் எதிரி.”

“ஹா.. ஹா... நல்லா சொன்ன போ! வெயில் நமக்கு எதிரியில்ல, நாம நம்ம மூளைய உபயோகிச்சு தேவையானத உணவுல சேத்துகிட்டா வெயில் எதிரியில்ல! நான் ஏன் இந்தக் கேள்வி கேட்டேன்னா... முன்னாடியெல்லாம் மன்னர்களுக்கு யாராவது எதிரிங்க உணவுல slow poison கலந்து கொடுத்திடுவாங்க. அதனால அடிக்கடி உடல்நலமில்லாம போயிடும். அப்படி ஏதாவது நஞ்சு வயித்துல தங்கியிருக்குதான்னு பாக்குறதுக்கு பூசணிக்காயும் பச்சை பயறும் சேத்து சமைச்சு கொடுப்பாங்க. அது ஜீரணமாயி வெளியேறிச்சின்னா நஞ்சு இல்லனு அர்த்தம். ஜீரணமாகாம வெளியேறுச்சுன்னா வயித்துல ஏதோ எதிர்மறை பொருள் தங்கி இருக்குன்னு தெரிஞ்சுக்குவாங்க. இது சித்த வைத்தியத்துல இன்னும் கடைபிடிக்குறாங்க!”

“ஓ interestingஆ இருக்கு பாட்டி!”

“நம்ம ஈஷாவுல கூட வெண் பூசணிக்காயும் ஜூஸும் அடிக்கடி உணவுல சேர்க்குறத பார்த்திருப்ப. வெண்பூசணி உஷ்ணத்த தணிக்குறதுல சிறப்பான உணவு. வெண்பூசணிச் சாறோட (30மிலி) தேன் கலந்து (1 டீஸ்பூன்) குடிச்சா வெள்ளை படுதல் குணமாவதுமட்டுமில்லாம, இரத்தமும் சுத்தமாகும்.”

“ஓகே பாட்டி! நான் போய் மார்க்கெட்ல பூசணி வாங்கிட்டு, அப்படியே வீட்டுக்கு கிளம்புறேன்”

“எதுக்குப்பா இங்கதான் நிறைய பூசணி இருக்குதே, எடுத்துட்டு போ! ஆனால் திரிஷ்ட்டி பூசணிக்காயா வாசல்ல கட்டாம, உணவுல சேத்துகிட்டு சாப்பிடணும் சரியா?!”

பாட்டி வேடிக்கையாக சொல்லிவிட்டு சிரிக்க, பாட்டியிடம் விடைபெற்றுக்கொண்டேன்.

குறிப்பு:

  • மஞ்சள் மற்றும் வெண்பூசணி இரண்டுமே உஷ்ணத்தை தணித்து நன்மை பயக்கும் தன்மைகொண்டது. வெண்பூசணி சற்று கூடுதல் பலன் தரும்.
  • நாட்பட்ட நோய்களுக்கு சித்த மருந்து உட்கொள்பவர்கள், பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் பூசணி, மருந்தை வேலை செய்யவிடாமல் செய்துவிடும். மாதம் இருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை என சேர்த்துக்கொள்ளலாம்!

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1