ஈஷா உதவியால் பெட்டிக்கடை நடத்தி லாபம் ஈட்டும் மலைவாழ் மக்கள்!

ஈஷாவில் ஆதியோகி அருகே பெட்டிக் கடை மற்றும் பேட்டரி வாகனம் (Battery Car) இயக்கி வரும் தாணிக்கண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட மகளிர் குழுவினர் ஈஷா யோகா மையத்தின் உதவியால் வெறும் பத்தே மாதத்தில் ரூ.6.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளனர். அந்த மகளிர் சுய உதவிக்குழுவினரை நேரில் சந்தித்தபோது, பல்வேறு புதிய தகவல்களும் அவர்களின் வாழ்க்கை சூழல் ஈஷாவால் எவ்விதத்தில் மாறியுள்ளது என்பதும் தெரியவந்தது. அந்த வெள்ளந்தி மனிதர்களின் மனம் திறந்த பதிவுகளைத் தொடர்ந்து படித்தறியுங்கள்.
 

ஈஷாவின் ஆதியோகி அருகே பெட்டிக் கடை நடத்தி வரும் அந்த மலைவாழ் பழங்குடி பெண்களை சந்திப்பதற்காக ஒரு ரம்மியமான மாலை பொழுதில் அங்கு சென்று இருந்தோம். வாகன நிறுத்துமிடத்துக்கு அருகே ஒரே ஒரு கடை மட்டும் தனியாக இருந்தது. டூரிஸ்ட் வண்டிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் கூட்டமாக டீ குடித்து கொண்டிருந்தனர். நாமும் ஒரு டீயை வாங்கி குடித்து கொண்டே கடையில் இருந்த விஜயாவிடம் பேச்சு கொடுத்தோம்.

11 பேர் சேர்ந்து ஆளுக்கு வெறும் 200 ரூபாய முதலீடா போட்டு கடைய ஆரம்பிச்சோம். வெறும் பத்தே மாசத்துல ஆறரை லட்சம் லாபம் சம்பாதிச்சிருக்கோம்.

”ஒரு வருசத்துக்கு முன்னாடி ஈஷால இருந்து ஸ்வாமி சிதாகாஷா வந்து, ஆதியோகி பக்கத்துல ஒரு பெட்டிக் கடை வச்சு தர்றோம், அதோடு, ஒரு பேட்டரி வண்டியும் கொடுக்குறோம், நீங்க எல்லாரும் ஒரு குழுவா சேர்ந்து கடைய நடத்துங்கனு சொன்னாரு. ஆரம்பத்துல யாருக்கும் பெரிசா எந்த ஆர்வமும் இல்லாம தான் இருந்தோம். ஆனா, சுவாமி விடாம தொடர்ந்து வந்து எங்கட்ட பேசிக்கிட்டே இருந்தாரு. ஈஷா மேல இருந்த நம்பிக்கையில சரினு ஒத்துக்கிட்டோம். 11 பேர் சேர்ந்து ஆளுக்கு வெறும் 200 ரூபாய முதலீடா போட்டு கடைய ஆரம்பிச்சோம். வெறும் பத்தே மாசத்துல ஆறரை லட்சம் லாபம் சம்பாதிச்சிருக்கோம்” என்று வெற்றி பூரிப்பில் பேசினார் செல்லமாரியம்மன் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவி விஜயா.

 “அம்மா, கடைக்கு எவ்வளவும்மா வாடகை கொடுக்குறீங்க” என்று கேட்டபோது,

“வாடகையெல்லாம் எதுவும் இல்லண்ணா. ஈஷால இருந்து இலவசமா கொடுத்துருக்காங்க, கரண்ட் பில்லும் அவங்களே கட்டிருவாங்க அண்ணா” என்றார்.

சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம்

”நாங்க எல்லாரும் தாணிக்கண்டி கிராமத்தல இருந்து வர்றோம். எங்க கிராமம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்குற ஒரு மலைவாழ் கிராமம். ஈஷா வர்றதுக்கு முன்னாடி நாங்க தெனமும் சாப்பாட்டுக்கே ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தோம். ஈஷா வந்ததுக்கு அப்பறம் தான் எங்க தாணிக்கண்டி கிராமத்துக்கே ஒரு விடிவு காலம் பொறந்துச்சுனு சொல்லலாம். எங்க கிராமத்துல இருக்குற நெறைய பேரு ஈஷால தான் வேலை பாக்குறாங்க. எங்க குழந்தைகள அவங்க தான் படிக்க வைக்கிறாங்க. எங்க கிராமம் காட்டுக்குள்ள இருக்குறனால குழந்தைகள ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறதுக்காக தினமும் காலையில ஈஷால இருந்து வண்டி வரும். அதே மாதிரி சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் வண்டியில திரும்பவும் கொண்டு வந்து விடுவாங்க. அந்த குழந்தைங்க சாயங்காலம் வரும் போது ஈஷால சாப்பிட்டு வந்துருவாங்க.

எங்களுக்கு உடம்புக்கு ஏதாவது ஒண்ணுனா முட்டத்துவயல்ல இருக்குற ஈஷா ஆஸ்பத்திரிக்கு தான் போவோம். எங்க ஊர்ல இருக்குற எல்லாருக்கும் அரசாங்கம் மூலமா வீடு கட்டி கொடுத்துருக்காங்க. நாங்க கேட்டத்துக்காக செல்லமாரியம்மன் கோயில் ஒண்ணு கட்டிக் கொடுத்துருக்காங்க. வருசாவருசம், தீபாவளிக்கு புது துணி, பட்டாசு, சுவீட் பாக்ஸ்லாம் கொடுப்பாங்க. இப்படி ஏராளமான உதவிங்கள ஈஷா எங்களுக்கு பண்ணிருக்கு.

2,200 ரூபாய வைச்சு பெரிசா என்ன பண்ண முடியும்?

அப்படி தான் இந்த பெட்டிக் கடையையும், ஒரு பேட்டரி வண்டியையும் போன வருசம் இலவசமா கொடுத்தாங்க. எங்க குழுவுல மொத்தம் 11 பேரு இருக்கோம். ஆளுக்கு 200 ரூபாய முதலீடா போட்டு ஏப்ரல் மாசம் கடைய ஆரம்பிச்சோம். எல்லாரும் அவங்கவங்க வீட்டுல இருந்து கடைக்கு தேவையான பாத்திரங்க, ஸ்டவ் அடுப்பு, மண்ணெணெய்லாம் எடுத்துட்டு வந்தோம். வெறும் 2,200 ரூபாய வைச்சு பெரிசா என்ன பண்ணிற முடியும்னு அப்ப தோணுச்சு.

ஆரம்பத்துல டீ, வடை, பஜ்ஜி, போண்டா மட்டும் விக்க ஆரம்பிச்சோம். அதுல இருந்து கிடைச்ச பணத்தையும் பேட்டரி வண்டி ஓட்டுறது மூலமா கெடைச்ச பணத்தையும் வைச்சு அடுத்துடுத்து நிறைய பொருட்கள் வாங்க ஆரம்பிச்சோம். அப்போ ஸ்கூல் லீவ் மாசமா இருந்தனால கடைக்கு மக்கள் அதிகமா வந்தாங்க. வியாபாரமும் கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிக்க ஆரம்பிச்சுச்சு

படிப்படியா கூல் டிரிங்க்ஸ், ஸ்நாக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், மதியம் டிபன், சாயங்காலம் பனியாரம்னு நிறைய ஐட்டங்கள விக்க ஆரம்பிச்சோம். சபரிமலை சீசன்லயும், மஹா சிவராத்திரியப்பவும் எக்கச்சக்க கூட்டம். வியாபாரம் பிரமாதமா நடந்துச்சு. நல்ல வருமானம். நாங்களும் எங்க குடும்பமும் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம்” என மகிழ்ச்சி பொங்க பேசினார் விஜயா.

எங்க கடையோட ஸ்பெஷலே பணியாரம் தான்

டீயை குடித்து முடித்த போது தான் கவனித்தேன். கடைக்குள் ஒரு அக்கா பணியாரம் சுட்டு கொண்டிருந்தார்.

“ஓ!. உங்க கடையில பணியாரம்லா இருக்கா? என அந்த அக்காவிடம் கேட்ட்போது, அதற்கு அவர் “எங்க கடையோட ஸ்பெஷலே இந்த பணியாரம் தாண்ணா” என்றார்.

”சும்மா, டேஸ்ட் பண்ணி தான் பார்ப்போமே” என்று ஒரு பிளேட் பணியாரம் ஆர்டர் செய்தேன். ஒரு சின்ன தட்டில் தக்காளி சட்னியுடன் தட்டு நிறைய பணியாரம் கொடுத்தார். குழுவின் துணைத் தலைவராக இருக்கும் அந்த சிவகாமி அக்காவிடம் பேசினோம்.

“எங்க குழுவுல இருக்குறவங்களுக்கு கூலி வேலைக்கு போயி தான் பழக்கம். இந்த மாதிரி கடை வச்சு நடத்துறதுலாம் எப்படினு சுத்தமாவே தெரியாது. ஸ்வாமி சிதாகாஷா தான் தினமும் கடைக்கு வந்து கூடவே இருந்து எங்களுக்கு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாரு. வெரைட்டி ரைஸ் எப்படி சமைக்கிறது, பணியாரம் சுட்றது எப்படினு ஒவ்வொரு விஷயமா சொல்லி கொடுத்தாரு. நாங்க பண்ற தப்பெல்லாம் கரெக்ட்டா கண்டுப்பிடிச்சு அதை சுட்டிகாமிப்பாரு. நாங்களும் அதை ஒவ்வொண்ணா திருத்திக்கிட்டோம்.

என்னோட கனவு நெனவாச்சு

காலை எட்டரை மணியில இருந்து நைட் எட்டரை மணி வரைக்கும் கடைய திறந்துருப்போம். நாங்க எல்லாரும் லேடீஸா இருக்குறனால நைட் கடை முடிச்சத்தும் தினமும் ஈஷால இருந்து ஒரு வண்டிய அனுப்பி பத்திரமா எங்க வீட்டுக்கு கொண்டு போயி விடுவாங்க.

எனக்கும் எங்க வீட்டுகாரருக்கும் இங்கிலீஷ் தெரியாது. அதனால, என்னோட குழந்தைய ஒரு நல்ல இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேக்கணுங்கிறது என்னோட பெரிய கனவா இருந்துச்சு. அந்த கனவு ஈஷா மூலமா தான் நிறைவேருச்சு 

எனக்கும் எங்க வீட்டுகாரருக்கும் இங்கிலீஷ் தெரியாது. அதனால, என்னோட குழந்தைய ஒரு நல்ல இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேக்கணுங்கிறது என்னோட பெரிய கனவா இருந்துச்சு. அந்த கனவு ஈஷா மூலமா தான் நிறைவேருச்சு. இப்போ என்னோட பையன் ஈஷா வித்யா ஸ்கூல்ல எல்கேஜி படிக்கிறான். நான் ரொம்பவும் சந்தோசமா இருக்கேன்” என்று கூறினார்.

இவரை போன்று ஏராளமான பழங்குடியின தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்காதா? என ஏங்கி தவிக்கின்றனர். இச்சூழலில் அவரின் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் இடம் கிடைத்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.

சூடான, சுவையான பணியாரம் வயிறை நிறைத்தது. ஆமாம். ”அந்த பேட்டரி வண்டி ஒண்ணு கொடுத்தாங்கனு சொன்னீங்களே. அது எதுக்கு?” என கேட்டோம்.

அடுத்த பகுதியில்….

சர்ப்ப வாசலிலிருந்து ஆதியோகிக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதற்கான பேட்டரி வண்டி மூலம் நல்ல லாபம் ஈட்டி, தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் மலைவாழ் மகளிர் குழுவினர் கூறுவது என்ன என்பதை அடுத்த பதிவில் காணலாம்!

 

 

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1