பன்னெடுங்காலமாய், இஞ்சி இந்தியா மற்றும் சீனாவில் விளைவிக்கப்பட்டு, சமையலில் முக்கிய பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால், இஞ்சி பச்சையாகவும் காயவைத்தும் மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என அறியப்படுகிறது.

கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு குறிப்புகளின் படி இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது தெரிகிறது. சீன மூலிகையாளர்களும் கூட இஞ்சியை இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

5ஆம் நூற்றாண்டில் ஸ்கர்வி எனப்படும் விட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகும் நோய்க்கு இஞ்சியை மருந்தாக சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கிய மூலிகைப் பொருளாக முன்னிறுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர்கள் இஞ்சியை ஜீரணசக்தியை பெருக்குவதற்காகவும் பசியைத் தூண்டுவதற்காகவும் உடலின் நுண்ணிய பாதைகளை சுத்திகரிப்பதற்காகவும் சக்திவாய்ந்த மருந்தாகவும் பரிந்துரைக்கின்றனர். உடல் தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய ஊட்டச்சத்துகளை மேம்படுத்துகிறது. மேலும், இஞ்சி ஆயுர்வேதத்தில் மூட்டு வலிகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

இத்தகைய அளப்பரிய பயன்பாடுகளால் இஞ்சி ஐயாயிரம் வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கீழ்க்கண்ட இக்கால நோய்களுக்கும் இயற்கை மருத்துவ தீர்வாக இஞ்சி உள்ளது.

இஞ்சியால் உண்டாகும் 10 மருத்துவ பலன்கள்! - பாகம் 1

#1 பிரபல ஜீரண மருந்து:

வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்..

தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

உணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. முழு உணவிற்குப் பின், இஞ்சி டீ குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும்போது இஞ்சி சாப்பிட்டு வருவதால் ஃபுட் பாய்சனிங் தவிர்க்கப்படுகிறது.

நாட்பட்ட அஜீரணக் கோளாறான டைஸ்பெப்ஸ்யாவிற்கு (dyspepsia) பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்குவதோடு, பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுப்போக்கையும் குணமாக்குகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

#2 குமட்டலுக்கான சிகிச்சை:

பயண வாந்திக்கு நிவாரணம்...

குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலைநேர உபாதை, பயணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையின்போது உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் குணமளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி கீமோதெரபிக்கு முன்னதாக தினமும் 0.5 முதல் 1 கிராம் அளவிற்கு இஞ்சி சேர்த்துக் கொண்டு வரும் நோயாளிகளில் 91% பேருக்கு குமட்டல் வாந்தி போன்ற பாதிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதைக் காண முடிந்தது.

அதோடு அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.

இஞ்சியிலுள்ள வேதிப்பொருட்கள் மூளையில் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி குமட்டல் வாந்தி மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

#3 மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு

இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

மேலும், பல அறிவியல் ஆய்வின்படி, மூட்டுகளில், குறிப்பாக ருமட்டாய்ட் மூட்டு பிரச்சனைகளின் ஆரம்பநிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி செயல்புரிவதை குறிப்பிடுகிறது. இஞ்சியை தொடர்ந்து எடுத்து வரும் ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் மூட்டு பிரச்சனையுள்ள பல நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் அவர்களின் வலி வெகுவாக குறைந்து, கால்களின் இயக்கமும் மேம்பாடு அடைந்துள்ளது.

ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மூட்டு வலியுள்ள நோயாளிகளுக்கு தசை இறுக்கத்தை சரிசெய்யவும் வலியைக் குறைக்கவும் மசாஜ் தெரப்பியில் இஞ்சி எண்ணெயும் ஆரஞ்சும் உபயோகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

உடற்பயிற்சியின்போது ஏற்படும் சுளுக்கு, தசைவலி போன்றவற்றை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஜார்ஜியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 34 மற்றும் 40 தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய இரு குழுக்களுக்கு பச்சையாகவும் வறுத்தும் இஞ்சியை தொடர்ந்து 11 நாட்களுக்கு வழங்கி, அவர்களை கவனித்தனர். ஜேர்னல் ஆஃப் பெய்னில் வெளியான முடிவுகளின்படி, உடற்பயிற்சியால் விளைந்த தசைவலியை 25% அளவிற்கு குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

#4 வலி நிவாரணி: மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணம்

மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு என்பதை ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ‘பைட்டோ ரீசர்ச்’ பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இஞ்சி பொடியாலான ‘சுமாட்ரிப்டன்’ எனும் மருந்து மைக்ரேன் தலைவலியின் அறிகுறிகளுக்கு நல்ல பலனை வழங்குகிறது என்பதுதான்.

ஒரு மருத்துவ ஆய்வில், கடுமையான அறிகுறிகள் கொண்ட 100 மைக்ரேன் பாதிப்பாளர்களை பொதுவாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘சுமாட்ரிப்டன் அல்லது இஞ்சிப் பொடி வழங்கப்பட்டது. இரண்டுமே ஒரேபோல் திறமிக்கதாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இஞ்சி ப்ராஸ்டாக்ளான்டின்ஸை தடுப்பதன் மூலம் மைக்ரேனில் செயல்புரிகிறது. தசை இறுக்கத்தை தளர்த்தி, இரத்த குழாய்களில் பாதிப்பை கட்டுப்படுத்துவதோடு சில ஹார்மோன்களிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மைக்ரேன் தலைவலியால் பாதிப்புக்குள்ளாக ஆரம்பிக்கும்போது இஞ்சி டீ குடிப்பதால் தீவிர வலியைத் தடுக்க முடிவதோடு அதன் பக்கவிளைவுகளான குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை தடுக்கமுடியும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஈரானில், 70 மாணவிகளிடத்தில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மாதவிலக்கின் முதல் 3 நாட்களில், ஒரு குழுவினருக்கு இஞ்சி வில்லைகளும், இன்னொரு குழுவினருக்கு ப்ளாசிபோவும் கொடுக்கப்பட்டது. 47.05% ப்ளாசிபோ எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் 82.85% இஞ்சி வில்லைகளை எடுத்துக்கொண்டவர்களிடம் வலிக்கான அறிகுறிகள் குறைந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பல கலாச்சாரங்களில், தீப்புண்களின் மேல் இஞ்சிச் சாறை தெளிக்கும் வழக்கம் இருக்கிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி எண்ணெயை உபயோகிக்கும் வழக்கம் நிலவுகிறது.

#5 புற்றுநோய்க்கு எதிரி: புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது

நவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மிஷிகன் காம்ப்ரிஹென்ஸைவ் புற்றுநோய் மையத்தில் (University of Michigan Comprehensive Cancer Center) மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இஞ்சி, கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல், இந்தப் புற்றுநோய் நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சனையான, கீமோதெரப்பி சிகிச்சைக்குப்பின் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது.

இஞ்சி பொடியையும் தண்ணீரையும் கலந்து கர்ப்பப்பை புற்றுநோய் செல்களில் ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து சோதனை செய்தனர். அவர்கள் செய்த ஒவ்வொரு சோதனையிலும் இஞ்சிப் பொடி கலந்து நீருடன் புற்றுநோய் செல்கள் தொடர்புக்கு உள்ளாகும்போது அவை அழிவதைக் கண்டனர். அல்லது, அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டோ (autophagy) அல்லது தற்கொலை செய்துகொண்டோ (apoptosis) மடிகின்றன.

பயோமெடிசின் மற்றும் பயோ டெக்னாலஜி பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இஞ்சி தாவரத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருள், சாதாரண செல்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மார்பகப் புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது. இந்தப் பொருட்கள் சைட்டோடாக்சிட்டி எனப்படும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கீமோதெரப்பி மூலம் மேற்கொள்ளப்படும் மற்ற பல புற்றுநோய் கட்டிகளுக்கான சிகிச்சை கடினமானதாக உள்ளது. அவை சிகிச்சையை எதிர்த்து தாக்குப்பிடித்து நீடித்து இருப்பதாக உள்ளன.

மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வது மட்டுப்படுகிறது. மேலும், இஞ்சி எளிதில் மாத்திரை வடிவத்தில் உபயோகப்படுத்தும் வகையில் இருப்பதுடன், அவற்றால் மிகக் குறைவான பக்கவிளைவுகளே உண்டாகின்றன. மேலும், இதன் மருத்துவ செலவும் மிகக் குறைவு.

2011ல் ஜியார்ஜியா பல்கலைக்கழகம் மூலிகையின் புற்றுநோய் எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் கூறுகளின் அடிப்படையில் இஞ்சியின் மீது மேற்கொண்ட பரிசோதனையில் பராஸ்டேட் புற்றுநோயில் இஞ்சி செயல்புரிவதாக கண்டறிந்தது. தி பிரிட்டிஷ் ஜேர்னல் ஆஃப் நியூட்ரிசன் எனும் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த ஆராய்ச்சியின் முடிவுகளின்படி இஞ்சி சாறு நலம்தரும் செல்களை பாதிக்காமல், ப்ராஸ்டேட்டில் உள்ள புற்றுநோய் செல்களைக் கொல்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இன்றைய நவீன அறிவியலில் இஞ்சி பெருங்குடலிலுள்ள வீக்கங்கள் மற்றும் புற்றுநோயின் மீது செயல்பட்டு பாதிப்பைக் குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 2 கிராம் இஞ்சித் துண்டு வேர்களை அல்லது ப்ளாசிபோவை 30 பேர் அடங்கிய நோயாளிகள் குழுவிற்கு 28 நாட்களுக்கு கொடுத்து வந்தனர். 28 நாட்கள் கழித்து அவர்கள் பெருங்குடல் வீக்கங்கள் உள்ள நோயாளிகளிடம் மாறுதல்களைக் கண்டதோடு, பெருங்குடல் புற்றுநோய் தடுப்புமுறையில் இயற்கையான வழிமுறையாகவும் இருக்கிறது.

இஞ்சியிலுள்ள மூலப்பொருட்கள் மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கட்டிகள் மற்றும் கணையப் புற்றுநோய் ஆகியவற்றிலும் நல்ல பலனை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Beta-Elemene எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப்பொருள்தான் இதற்குக் காரணம்.

(இஞ்சியின் பலன்கள் அடுத்த பதிவிலும்..)