புத்த பூர்ணிமா சத்சங்கம் - முழு நிலவில் அருள் மடியில்

கலிபோர்னியாவின் சாட்ஸ்வொர்த்தில் ஒரு அழகிய நிலப்பரப்பின் பின்னணியில், சிறப்புமிக்க புத்த பூர்ணிமா தினத்தன்று சத்குருவுடன் ஒரு சிறப்பு ஆன்லைன் சத்சங்கம் நடைபெற்றது. கௌதம புத்தரின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியதோடு, சத்குரு, ஒரு சக்திவாய்ந்த தியான செயல்முறையை குறிப்புகளுடன் பங்கேற்பாளர்களுக்கு வழங்கினார்.

அடுத்த பௌர்ணமி(குரு பௌர்ணமி)சத்சங்கம் வரும் ஜூலை 23ம் தேதி நடைபெறவுள்ளது. முன்பதிவு செய்து இலவசமாக அனைவரும் இந்த சத்சங்கத்தில் பங்கேற்கலாம். பதிவுசெய்ய: tamil.sadhguru.org/satsang

உலக யோகா தினத்தில் சத்குருவின் செய்தி

கடந்த ஜூன் 21ம் தேதி 7வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தனது உலக யோகா தின செய்தியை பகிர்ந்த சத்குரு, தெற்கு நோக்கி சூரியனின் கதிர் திருப்பம் துவங்கும் நாளை நாம் உலக யோகா தினமாகக் கொண்டாடுவதையும், கொரோனா பெருந்தொற்று பரவிவரும் சூழலில் நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாகவும் உயிர்த்துடிப்புடனும் வைத்துக் கொள்வதற்கான எளிய யோகப் பயிற்சிகள் அடங்கிய ஒரு தொகுப்பினை ஈஷா ஆன்லைனில் இலவசமாக வழங்கி வருவதைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

குணால் நய்யார் சத்குருவுடன் கர்மா பற்றி உரையாடுகிறார்

லாஸ் ஏஞ்சல்ஸில் “The Big Bang Theory” புகழ் நடிகர் குணால் நய்யார் சத்குருவைச் சந்தித்தார். இந்த உரையாடல் சத்குருவின் சமீபத்திய புத்தகமான "கர்மா"வை மையமாக வைத்து அமைந்தது. கர்மா என்பது நம்மிடமிருக்கும் மிகப் பெரிய அதிகாரம் என்றும், அதை விழிப்புணர்வுடன் கையாள்வது ஒருவர் பந்தங்களில் சிக்கிக்கொள்ளாமல் முழுமையான ஈடுபாட்டுடன் வாழ வழிவகுக்கும் என்றும் சத்குரு விளக்கினார்.

மனிதன் ஒரு வளமல்ல

மனித வள மேலாண்மை குறித்த பாரம்பரிய அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைக்கும் விதத்தில், 'மனிதன் ஒரு வளமல்ல' என்று பொருள்படும் “Human is Not a Resource” என்ற நிகழ்ச்சியை சத்குரு வடிவமைத்துள்ளார். துடிப்புமிக்க தொழில்முனைவோர் குழுவினர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியின் பல்வேறு அமர்வுகள், நடைமுறைக்கு ஒத்துப்போகும் அறிவின் மதிப்புமிக்க கூறுகளையும், தொழில் தலைமைகளின் நிபுணத்துவ வழிகாட்டுதல்களையும் வழங்கின. சத்குரு இதில் ஒரு நிகழ்வை வழிநடத்தினார். அப்போது அவர், வணிகங்களில் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் மற்றும் கிராமப்புற இந்தியாவின் திறன்கள் போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ளாதிருக்கும் நிலை குறித்தும் உரையாற்றினார். இந்த இரண்டு மணிநேர நிகழ்ச்சியில் கேள்வி-பதில் அமர்வும் இடம்பெற்றது. அதில் பங்கேற்பாளர்கள் சத்குருவிடமிருந்து தங்கள் கேள்விகளுக்கான விடையைப் பெற்றனர்.

சத்குருவுடன் டோனி ராபின்சன்

முன்னணி தொழில் முனைவோர், தலைசிறந்த வணிகத் தலைமை மற்றும் முன்னணி எழுத்தாளராகத் திகழும் டோனி ராபின்சன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார். கர்மா, முக்தி, பரவசநிலை, விழிப்புணர்வு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அமைந்த இந்த கலந்துரையாடல் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்ததோடு, பல ஆழமிக்க மறைஞான தரிசனங்களையும் வழங்கியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விஷேன் லக்கியானியுடன் மைண்ட்வேலி ஒலிபரப்பு

கல்வி தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட்வேலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஷேன் லக்கியானி அவர்கள் ஒரு எழுத்தாளராகவும், தொழில்முனைவோராகவும் மற்றும் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் விளங்குகிறார். ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலில், விஷேன், சத்குருவுடன் பல்வேறு தலைப்புகளில் கேள்விகளை முன்வைத்தார். இதில் சமுதாயத்தில் திரும்பத் திரும்ப கடைபிடிக்கப்படும் விஷயங்கள், தனித்தன்மை எனும் மாயை மற்றும் கர்மாவின் மேற்கத்திய பார்வை ஆகியவை அமைந்தன.

“India@75” - மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கு ஆரோக்கியம்

விரைவில் இந்தியா தனது 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் நிலையில், இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர மிஷன் மற்றும் ஜெனீவாவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் இணைந்து ஒரு ஆன்லைன் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதில், மனித குலத்தின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் யோகா வகிக்கும் முக்கிய பங்கு குறித்து சத்குரு தனது உரையில் குறிப்பாக வலியுறுத்தினார். கேள்வி-பதில் அமர்வின்போது, ஆரோக்கிய கலாச்சாரத்தை வடிவமைத்தல், யோகா மற்றும் ஆயுர்வேதம் குறித்த சரியான புரிதலை உண்டாக்குதல், இந்த பெருந்தொற்றை விழித்துக்கொள்வதற்கான ஓர் எச்சரிக்கை மணியாக அணுகுவது மற்றும் மனிதர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கான தேவை ஆகியவை குறித்து பேசப்பட்டன.

வலையொலி நிகழ்ச்சியில் பாரிஸ் ஹில்டனுடன் சத்குரு

பாரிஸ் ஹில்டன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், ஊடக ஆளுமை, சமூக ஆர்வலர், மாடல், பாடகி, நடிகை மற்றும் டிஸ்க் ஜாக்கி(DJ) என பன்முகத் தன்மை கொண்ட பெண்மணி. சமூக ஊடகங்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான பின்பற்றுபவர்களைக் கொண்ட இவர், சத்குருவுடன் நிகழ்த்திய இந்த கலந்துரையாடல், ஒரு புதிய தளத்திலிருக்கும் பார்வையாளர்களுக்கு சத்குருவை அறிமுகப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பாக அமைந்தது. ஒரு குருவாக இருப்பதன் அர்த்தம், இந்த ஷணத்தில் வாழ்வது மற்றும் "கர்மா" என்ற வார்த்தையைச் சுற்றியுள்ள தவறான கருத்துகள் குறித்து பாரிஸ், சத்குருவிடம் கேட்டறிந்தார்.

பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தடுக்கும் நோக்கில் UNCCD உலக தினம்

இந்த உலகளாவிய ஆன்லைன் நிகழ்வு, பாலைவனமாதல் மற்றும் வறட்சி தினத்தை முன்னிட்டு பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிலம் பாலைவனமாகும் பிரச்சனையை சத்குரு ஒரு தனித்துவமான கோணத்தில் முன்வைத்தார். நமது சொந்த உடலே எப்படி நாம் பாதம் பதித்து நடக்கும் இந்த மண்ணால் ஆகியுள்ளது என்பதையும், நமது மண் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அந்தளவுக்கு நம் உடலும் வலிமையாகும் என்பதையும் அவர் விளக்கினார். வருங்கால சந்ததியினருக்கு மண்ணை வளமாகவும் செழிப்பாகவும் விட்டுச்செல்ல முயற்சிக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்டம்

கடந்த ஜூன் 24ம் தேதி 22வது தியானலிங்க பிரதிஷ்டை தினக் கொண்டாட்டம் தியானலிங்க வளாகத்தில் நிகழ்ந்தேறியது. ஈஷா ஆசிரமவாசிகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் பிரம்மச்சாரிகள் என பலரும் காலை 6 மணி முதல் மாலை 4:45 வரை தொடர்ந்து பல்வேறு மதங்களின் உச்சாடனங்களை தியானலிங்கத்தில் உச்சாடனம் செய்தனர். இந்நிகழ்வின் ஒலிப்பதிவு நேரலையில் ஒலிபரப்பப்பட்டது.

வன மகோத்சவத்தில் காவேரி கூக்குரலின் பங்களிப்பு

தேசிய அளவில் கொண்டாடப்படும் ‘வன மகோத்சவத்தை’ முன்னிட்டு, ஜூலை முதல் வாரத்தில் #காவேரிகூக்குரல் இயக்கம் மூலமாக தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சுமார் 650 ஏக்கர் விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்தனர். #CauveryCalling

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பரவிய ஆனந்த அலை

தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2011ல் மாபெரும் அளவில் ஈஷா யோகா வகுப்புகளை தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சத்குரு நேரடியாக வந்து நிகழ்த்தினார். இந்த முதல் ‘ஆனந்த அலை' தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பத்து வருடங்களுக்கு பிறகு ஆனந்த அலைக்கு உத்வேகமளிக்கும் விதமாக, ஈஷா யோக வகுப்பை பூர்த்தி செய்த அனைவருக்கும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சமீபத்தில் வழிகாட்டுதலுடன் கூடிய ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா, பல்வேறு தலைப்புகளில் சத்குரு அவர்களின் ஆழமிக்க உரையினைக் கொண்ட வீடியோக்கள், ஈஷா யோகா கருவிகளை சற்று ஆழமாகப் பார்த்தல் போன்ற பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டது.

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐந்து நாள் ஆன்லைன் ஆனந்த அலை வகுப்பில், சுமார் 11,000 பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். தங்கள் உள்நிலை வளர்ச்சி எனும் நெருப்பை இந்த வகுப்பு தூண்டியதாகவும், இந்த பெருந்தொற்று காலத்தில் பெரும் ஆதரவாக இருந்ததாகவும் பங்கேற்பாளர்கள் பலரும் பகிர்ந்து கொண்டனர்.

மற்ற மொழிகளிலும் இதே போன்ற ஆன்லைன் வலுவூட்டும் பயிற்சி வகுப்புகள் வரும் நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.