டமரு - சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் புதிய இசைத் தொகுப்பு!
யோகத்தை முதன்முதலாக வழங்கியருளிய ஆதியோகிக்கு ஓர் இசை அர்ப்பணிப்பாக, அவருக்கு பிடித்தமான இசைக்கருவியான 'டமரு'வின் பெயர்கொண்டு குருபௌர்ணமி நாளில் வெளியாகியுள்ளது இந்த இசைத்தொகுப்பு! ‘டமரு’ குறித்து ஒரு சிறப்பு கண்ணோட்டம் உங்களுக்காக!
 
 

யோகத்தை முதன்முதலாக வழங்கியருளிய ஆதியோகிக்கு ஓர் இசை அர்ப்பணிப்பாக, அவருக்கு பிடித்தமான இசைக்கருவியான 'டமரு'வின் பெயர்கொண்டு குருபௌர்ணமி நாளில் வெளியாகியுள்ளது இந்த இசைத்தொகுப்பு! ‘டமரு’ குறித்து ஒரு சிறப்பு கண்ணோட்டம் உங்களுக்காக!

டமரு இசைத் தொகுப்பில் ஆதியோகி சிவனை போற்றிப் பாடும் பாடல்களும் சமஸ்கிருத உச்சாடனங்களும் இடம்பெற்றுள்ளன. ஈஷாவில் அவ்வப்போது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரால் அரங்கேற்றப்பட, ஈஷா மக்களால் நன்கறியப்பட்டதும் இரசிக்கப்பட்டதுமான பாடல்களின் ஒரு தொகுப்பாக 'டமரு' அமைந்துள்ளது!

உயிரை உலுக்கும் அதிர்வுகளை வழங்கும் டமரு எனும் இசைக்கருவி ஒவ்வொரு ஆன்மீக சாதகர்களுக்கும் உத்வேகம் தருவதாகும். டமருவுடன் பல்வேறு தெய்வீக இசைக்கருவிகளின் உன்னத இசையதிர்வுகளுடன் இத்தொகுப்பிலுள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இசைத்தொகுபை டவுன்லோட் செய்ய: isha.co/Damaru

இத்தொகுப்பிலுள்ள 7 பாடல்கள் பற்ற சில குறிப்புகள் உங்களுக்காக...

1. ஆதியோகி பிரணமாம்யகம்

பஞ்சபூதங்களை ஆளுமையில் கொண்டுவந்த முதல் யோகியும் முதல் குருவுமான ஆதியோகி சிவனைப் போற்றும் விதமாக இப்பாடல் அமைகிறது. அனைத்து உயிர்களுக்கும் முக்தி எனும் சாத்தியத்தை வழங்கும் வகையில், யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு வழங்கி உலலெங்கும் யோகம் பரப்பிய ஆதிகுருவை இப்பாடல் வணங்கித் துதிக்கிறது!

2. சந்த்ரசேகர அஷ்டகம்

சிவ பக்தியால் மரணத்தை வென்று, என்றும் பதினாறாக தீர்க்க ஆயுளைப் பெற்ற சிவ பக்தர் மார்க்கண்டேயரால் பாடப்பட்டதாக அறியப்படுகிறது 'சந்த்ரசேகர அஷ்டகம்'. தன்னுடயை 16ஆம் வயதில் உயிர் பிரியப்போகிறது என்ற தன் விதியை அறிந்து, சந்திர பிறை சூடிய பெருமான் சந்திரசேகரனின் லிங்க சரீரத்தை கட்டியணைத்து, அந்த யமனையே வென்ற மார்க்கண்டேயரின் சொல்வளத்தின் அருமையையும் பக்தியின் மேன்மையையும் இந்த கீர்த்தனத்தில் காணலாம்.

3. கௌராங்க

ஆண் மற்றும் பெண்தன்மைகளை ஒருங்கே ஓர் உடலில் அமையப்பெற்றவராய் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர், டமருவை பிறழாத தாளத்தில் இசைக்க கூடியவராகவும் இருக்கிறார். இப்படியான சிவனின் பலவித தன்மைகளையும் குணங்களையும் விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பாடல்!

4. நா ஹி சிவ ஸ்நேகா

இப்பாடலின் மூலக்கரு சத்குரு அவர்கள் எழுதிய ஆங்கில கவிதையாகும். யோகீஸ்வர லிங்க பிரதிஷ்டையின்போது சத்குரு சிவனின் மேன்மைகளை குறிப்பிட்டு எழுதிய அந்த ஆங்கில கவிதையை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து, இந்த அழகிய கீர்த்தனையை வடிவமைத்து வழங்கியுள்ளது இதன் தனித்தன்மையாகும். ஆதியும் அந்தமும் இல்லா சிவன், முக்தியை வழங்கும் ஒப்பற்ற ஆதியோகி சிவன்... இன்னும் எத்தனையோ மனம் உருகச்செய்யும் அழகிய வர்ணனைகள்... இப்பாடலில் கேட்டு ரசிக்கலாம்!

5. குருவஷ்டகம்

பாரத கலாச்சாரத்தில், தன் வாழ்வில் ஒருவர் தன் குருவை பெறுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது! மாபெரும் யோகியாகவும் ஞானியாகவும் திகழ்ந்த ஆதிசங்கரரின் இந்த குருவஷ்டகம், குருவின் மேன்மையை அழகிய பாடல் வரிகளாலும் கற்பனை வளம் மிக்க உவமைகளாலும் உணர்த்துகிறது.

6. உமா மகேஷ்வர ஸ்தோத்திரம்

யோக கலாச்சாரத்தில் இருமை நிலை என்பது வண்ணமயமான வாழ்வின் அம்சமாக, வாழ்க்கை விளையாட்டை நிகழ்த்தும் அடிப்படையாக பார்க்கப்படுகிறது. ஆண் தன்மை- பெண் தன்மை, படைத்தல்-படைத்தவன், ஷிவா- சக்தி என இருமை நிலையின் கூறுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆதிசங்கரரால் எழுதப்பட்டுள்ளது உமா மகேஷ்வர ஸ்தோத்திரம். இதிலுள்ள உச்சாடனங்கள் சிவன் மற்றும் பார்வ்தியை போற்றும் விதமாய் அமைந்துள்ளன.

7. பார்வதி வல்லப அஷ்டகம்

சிவனின் உடனுறைந்த சக்தியான பார்வதியைப் போற்றும் விதமாக அமையப்பட்டுள்ள இந்த உச்சாடனத்தில், சிவனின் பல்வேறு தன்மைகளும் போற்றிப்பாடப்பட்டுள்ளன.

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1