அசைவில்லா தியானத்தில் யார் இவர்?

“காலையில் இருந்து ஒரு சுவாமி தியானலிங்கத்தில் அமர்ந்து இருக்கிறாராமே.. நீ பார்த்தியா?” “அவர் தியானத்தில் அமர்ந்து இப்போ 12 மணி நேரம் ஆகிறது,” பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் இப்படி ‘கிசுகிசுப்பதை’ கேட்க முடிந்தது. “யார் இவர்? எங்கிருந்து வருகிறார்? சத்குருவை பார்த்து விட்டாரா?” எழுந்த ஒவ்வொரு கேள்வியும் பதில் தெரியாமல் விழித்தது. ஆழமான தியானத்தில் அமிழ்ந்திருந்தவரை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் அனைவரிலும் துளிர்த்தது. அந்த எளிமையான சுவாமி, ஆசிரமத்தின் பரபரப்பான பேசு பொருளானார்.

“காலையில் இருந்து ஒரு சுவாமி தியானலிங்கத்தில் அமர்ந்து இருக்கிறாராமே.. நீ பார்த்தியா?” “அவர் தியானத்தில் அமர்ந்து இப்போ 12 மணி நேரம் ஆகிறது”

சோதனைகளும் பரிசோதனைகளும்

சுவாமி அத்வைதானந்தா “நாகர்கள்” மரபை சேர்ந்த சன்னியாசி. பத்ரிநாத் அருகில் உள்ள குகையில் தனிமை தவத்தில் ஈடுபடும் வழக்கமுடையவர். தனது ஒன்பதாவது வயதில் இவருக்கு முதல் தீட்சை கிடைத்தது. அப்போது முதற் கொண்டே சாதனாவை தொடர்ந்து வந்தாலும், வாழ்க்கை சூழ்நிலை காரணமாக தனது 30 வயதுகளில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெற்றிகரமாக நடந்து வந்த ஒரு தொழிலின் அதிபராக வளர்ந்திருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.
ஏழு மாதங்கள் வெளிச்சம்கூட புகமுடியாத அறையில், பிரத்யேகமாக பதப்படுத்தப்பட்ட நெல்லிக்கனியை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு தனிமையில் இருந்ததும் உண்டு

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் கத்தாரில் உள்ள தீவிரவாத குழுவினரால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 48 நாட்களுக்குப் பிறகு ஒரு குரல் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் வழியை அவருக்கு காட்டியது. “தெள்ளத்தெளிவாக ஒலித்த அந்தக் குரல் நான் வெளியேறும் வழியை தெளிவாக குறிப்பிட்டது. வாழ்க்கையை புலனுணர்வு தாண்டி பார்க்க வேண்டும் என்பதை நினைவூட்டவே இது நடந்ததோ என்ற உணர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. பொருள் உலகின் வெற்றியை அதன்பிறகு திரும்பிக்கூட பார்க்க வேண்டும் என தோன்றவில்லை. என் சாதனாவை தீவிரப்படுத்தினேன். பல்வேறு கலாச்சார வழிமுறைகளையும் நான் பரிசோதனை செய்து பார்க்க துவங்கினேன். ஏழு மாதங்கள் வெளிச்சம்கூட புகமுடியாத அறையில், பிரத்யேகமாக பதப்படுத்தப்பட்ட நெல்லிக்கனியை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு தனிமையில் இருந்ததும் உண்டு,” என தன் ஆன்மீக பரிசோதனை முயற்சிகளையும் நம்முடன் அறிமுகம் செய்துகொண்டார்.

குருவருள்

தியானலிங்கத்தை அனுபவப்பூர்வமாக பார்க்கவேண்டும் என்று தோன்றவே நமது ஆசிரமம் வந்திருக்கிறார். தினமும் 12 மணிநேரம், தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தியானலிங்கத்தின் அருள்மடியில் அமர்ந்திருக்கிறார். எளிமையும், ஆனந்தம் நிறைந்த இவரது சிரிப்பும் ஆசிரமவாசிகளின் இதயத்தை கொள்ளை கொள்வதாக இருந்தது. “சத்குரு என்னை தன் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என தன் விருப்பத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். ஆசிரமத்தில் இருந்த சத்குருவை சந்திக்கும் வாய்ப்பும் அவருக்கு அமைந்தது. தன் விருப்பத்தை சத்குருவிடமே தெரிவிக்க...

நாம் உங்களை எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டோம். நீங்கள்தான் எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும்

“நாம் உங்களை எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டோம். நீங்கள்தான் எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார். குருவின் அருள்மொழியை கேட்டதும் என் கண்கள் நிறைந்தது, சாஷ்டாங்கமாக அவர் பாதம் பணிந்தேன்,” என பேசும்போதே சத்குருவை சந்தித்த கணங்கள் சுவாமியின் கண்களில் மின்னுகிறது.

மீண்டும் வருவேன்

“தியானலிங்கத்தில் அமர்ந்திருந்ததும், பிறகு சத்குருவை சந்திக்க கிடைத்த வாய்ப்பும் என் வாழ்க்கையின் ஆழமான தருணங்களில் ஒன்றாக இருக்கிறது. வரவிருக்கும் குருபௌர்ணமி மற்றும் அடுத்த சம்யமா வகுப்பில் கலந்துகொள்ள நான் மீண்டும் வருவேன்,” அன்பு மலரும் புன்னகையும், குரலில் உறுதியுமாக விடை பெற்றார் சுவாமி அத்வைதானந்தா.