அரிசிக் கஞ்சியில் உள்ள அளவில்லா நன்மைகள்!
தமிழகத்தின் பிரதான உணவாக விளங்கும் அரிசியைக் கஞ்சியாக உட்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை அறியும்போது நீங்கள் அசந்துபோவது நிச்சயம்! அரிசிக் கஞ்சிகள் தரும் அளவில்லா மருத்துவ பலன்கள் குறித்து உமையாள் பாட்டி சொல்வதைக் கேளுங்கள் கொஞ்சம்!
 
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 37

தமிழகத்தின் பிரதான உணவாக விளங்கும் அரிசியைக் கஞ்சியாக உட்கொள்ளும்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை அறியும்போது நீங்கள் அசந்துபோவது நிச்சயம்! அரிசிக் கஞ்சிகள் தரும் அளவில்லா மருத்துவ பலன்கள் குறித்து உமையாள் பாட்டி சொல்வதைக் கேளுங்கள் கொஞ்சம்!

நான் ஒரு டீ பிரியன் என்பதால் அடிக்கடி டீக்கடையோரங்களில் வண்டி நின்றுவிடும். அதிலும் நீண்ட தூர பயணங்கள் என்றாலோ சொல்லவும் வேண்டாம்! பயணத்தினால் வந்த சூடு மற்றும் அளவுக்கு அதிகமாக பருகப்பட்ட தேநீரும் சேர்ந்து பித்தமாக மாற, கடந்த சில நாட்களாக பலவித உடல் உபாதைகள் அலைக்கழித்தன. அவசரத்திற்கு அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்ட நான், இந்த வாத-பித்த-கபம் குறித்து சற்று யோசிக்கலானேன். அதிகமானாலும் குற்றம் குறைந்தாலும் குற்றம்; இந்த மூன்றையும் மருந்து இல்லாமலே சமநிலையில் வைத்திருக்கும் வழி இருந்தால் எப்படி இருக்கும்?! யோசித்துக் கொண்டே நுழைந்தேன் உமையாள் பாட்டியின் வீட்டிற்குள்.

பலரும் சாதத்தை வடித்தெடுத்து, சாதத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு கஞ்சியைக் கீழே ஊற்றிவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால், அந்த வடித்த கஞ்சியில்தான் தேவையான சத்தும் பலன்களும் நிறைந்துள்ளன என்பது பாட்டியின் பேச்சின் மூலம் தெரிந்தது.

“என்னப்பா ரொம்ப நாளா ஆளக்காணோம்... பாட்டிய மறந்துட்டியா?” பாட்டி அடுப்பில் இருந்த சாதத்தை வடித்துக் கொண்டே கேட்க, நான் அடுக்கறைக்குள் பாட்டியின் அருகிலிருந்த மரப்பலகையில் அமர்ந்தபடி பாட்டியை நலம் விசாரித்தேன். அதோடு, நான் வெகுநாட்களாக பாட்டியை பார்க்க முடியாததற்கு காரணமான என் நீண்டதூர பிரயாணம் குறித்தும் கூறிவிட்டு, கூடவே என்னுடைய உடல் உபாதைகள் குறித்தும் பாட்டியிடம் முறையிட்டேன்.

“என்ன பாட்டி... ஆடி மாசம் அம்மன் கோயிலுக்கு கூழ் காய்ச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன், ஆனா நீங்க வழக்கம் போல அரிசி சாதம் வடிச்சிட்டு இருக்கீங்க? வடிச்ச சாதத்துல சத்து கம்மியா இருக்கும்னு சொல்லுவாங்களே?! நீங்க வடிச்சுதான் சாப்பிடுறீங்களா?”

“ஆமாம்ப்பா... நீ சொல்றது சரிதான், ஆனா நான் சாப்பிடப்போறது சாதத்த இல்ல, கஞ்சிய! நீயும் நல்லா மோப்பம் புடிச்சு சரியான நேரத்துக்குதான் வந்திருக்கே! இது ‘இருமுறை வடிச்ச கஞ்சி’னு சொல்லுவாங்க. உன்னோட பிரச்சனைக்கு இது நல்ல பலன் குடுக்கும்ப்பா! ஆனா நீ இத தினமும் குடிக்கணும்; அப்படி செஞ்சா வாத-பித்தம்-கபம் மூணும் சமநிலையில இருக்கும். இந்த கஞ்சிய உணவாவே குடிக்கலாம். மருந்தா பார்க்கத் தேவையில்ல!”

பாட்டி சொன்னதும் ‘இரு முறை வடிச்ச கஞ்சி’ செய்யும் முறை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் வந்தது. பாட்டி என்னிடம் சொன்ன செய்முறையை உங்களிடம் பகிர்கிறேன். ஒரு 35கிராம் அரிசியை எடுத்து, 700மி.லி தண்ணீரில் 20 நிமிடங்கள் வேக வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த தண்ணீரை வடித்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த சாதம் ஓரளவிற்குத்தான் வெந்திருக்கும். இப்போது மீண்டும் 700 மி.லி அளவில் இருக்கும்படியாக அந்த வடிகஞ்சியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது அதனை மீண்டும் சாதத்தில் ஊற்றி வேக வையுங்கள். பின்னர் மீண்டும் 20 நிமிடங்கள் கழித்து அந்த சாதத்தை வடித்தெடுத்தால் அதுவே ‘இருமுறை வடித்த கஞ்சி’ ஆகும். இதோடு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு (1 தேக்கரண்டி) சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்துவர ‘வாத-பித்த-கபம்’ உடலில் சமநிலை பெறும். இது உடலுக்கு ஊட்டமும் தரும். குறிப்பாக அம்மை நோய் பாதிப்பு மற்றும் சிறுநீர் எரிச்சல் மற்றும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்தக் கஞ்சி நல்ல மருந்தாக இருக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு சேர்க்காமல் குடிக்கலாம்.

சாதாரணமாக சாதத்தை வடித்தெடுத்து வைக்கும் வடிகஞ்சியைக் குடிக்கும்போது வயிறு சற்று திம்மென்று மந்தமாகும் என்றாலும், கண்களுக்கு நல்ல குளிர்ச்சி தரும். வடிகஞ்சியை சற்று நேரம் அப்படியே விட்டுவிட்டால் அது உறைந்ததுபோல் மேலே ஆடை மிதக்க ஆரம்பிக்கும். இதனை ‘உறை கஞ்சி’ என்பார்கள். குடிக்கும்போது அது வாதத்தையும் கபத்தையும் உடலில் அதிகரிக்கும். எனவே அதனை குடிக்க கூடாது. மேலும், சாதம் கொதித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே அந்த நீரை எடுத்தால், அது ‘கொதி கஞ்சி’ எனப்படும். இதைக் குடிக்கும்போது சிறுநீர் குறைவாக வரும் பிரச்சனை சரியாகும்.

பலரும் சாதத்தை வடித்தெடுத்து, சாதத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு கஞ்சியைக் கீழே ஊற்றிவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால், அந்த வடித்த கஞ்சியில்தான் தேவையான சத்தும் பலன்களும் நிறைந்துள்ளன என்பது பாட்டியின் பேச்சின் மூலம் தெரிந்தது.

“கடைசி காலத்துல கஞ்சி ஊத்த பிள்ளைங்க வேணும்னு சொல்றத நாங்கூட சாதாரணமா நினைச்சிட்டேன் பாட்டி, ஆனா நம்ம ஆளுங்க விவரமா கஞ்சியில சத்து அதிகம்கறத தெரிஞ்சுதான் சொல்லியிருக்காங்கல்ல?!” பாட்டியிடம் நையாண்டி செய்யும் தொனியில் கேட்க, பாட்டி சூடான கஞ்சி டம்ளரைக் கொண்டு செல்லமாக என் கையில் சூடுவைத்து விட்டு, ‘வாயை மூடிக்கிட்டு கஞ்சிய குடி’ என்றாள்.

வாயை மூடிக்கொண்டு எப்படி குடிப்பது?! பாட்டியிடம் கேட்டேன், பதிலில்லை!

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1