யோகா என்றால் என்னவென்று புரியாமல் பலரும் பல தவறான புரிதலைக் கொண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. யோகா என்றால் என்னவென்று எளிமையாகவும் தெளிவாகவும் சத்குரு இந்த வீடியோவில் தரும் விளக்கமானது, யோகா குறித்த சரியான புரிதலை வழங்குகிறது.

கேள்வி

யோகா என்றால் என்ன?

சத்குரு

யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது முழுப்பிரபஞ்சத்தையும் உங்களுக்குள் ஒரு பகுதியாக நீங்கள் உணரத் தொடங்கும்போது நீங்கள் யோகத்தில் இருக்கீறீர்கள்.

யோகா என்பது பயிற்சி அல்ல. உங்கள் உடலை முறுக்கிக்கொள்வது, மூச்சைப்பிடித்துக் கொள்வது, தலையில் நிற்பது இவையெல்லாம் யோகா அல்ல. எல்லாமே உங்கள் அனுபவத்தில் ஒன்றாகும்போது உங்களுடைய இயல்பான தன்மையை நீங்கள் உணரும்போது யோகா என்று சொல்கிறோம். அதை அந்த நிலையை அடைவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அது எப்படிப்பட்ட வழிமுறையாக இருந்தாலும் சரி, அந்த நிலையை அடைவதற்கு ஒரு வழிமுறை பயன்படுமானால் அதை யோகா என்று சொல்ல முடியும்.

கேள்வி

யோகா என்பது எல்லோருக்குமானதா? யோகாவைக் கற்றுக் கொள்ள உள்ள நிபந்தனைகள் என்ன?

சத்குரு

நிச்சயமாக இது எல்லோருக்கும் ஆனதுதான். ஏனென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ, உணர்ச்சியின் மூலமாகவோ, தங்கள் உடலின் மூலமாகவோ, தங்களின் சக்தியின் மூலமாகவோ ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் ஏற்கனவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதை நாம் சற்றே முறைப்படுத்த மட்டுமே முயன்று கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்தால் அவர்களின் முயற்சிகள் பலனுடையதாக இருக்கும்.

மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. பன்னெடுங்காலமாகவே இங்கிருக்கும் ஒரு முறை தான் யோகா. ஈஷா யோகா என்றால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும், நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும், உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உங்களுடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருந்தால் அதுதான் யோகா. எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.