இந்த ஸ்பாட்டில், சத்குரு, மிகச் சிலரே தேர்ந்தெடுக்கும் பாதையில் தான் பயணமிட விழைந்தபோது, தனது வாழ்க்கையில் நடந்த இளமைப்பருவ நிகழ்வுகள், சுதந்திர வேட்கை, எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் குறித்த ஒரு கண்ணோட்டத்தை இங்கு நமக்கு வழங்குகிறார். ஆனால் முழுமையான புரிதல் என்னும் ஆழமான பரிமாணத்தில் திளைத்திருக்கும் அந்த ஞானிக்கு இவையெல்லாம் ஆரம்ப நிலைகள்தான். மேலும் சத்குரு, வாசனை உணர்வைப் பயன்படுத்தி செய்யும் ஒரு சிறிய பயிற்சியினை நமக்கு இங்கு வழங்குகிறார். அதன் மூலம், "நீங்கள் அந்த வாசனையாகவே மாறிப் போனால், பிறகு படைப்பிற்கு மூலமானவராகவே இருக்கக்கூடிய நிலையை அடைவீர்கள்" என்னும் உண்மையையும் புரிய வைக்கிறார்.

எனக்கு அப்போது 19 வயதிருக்கும். எங்காவது ஓடிப்போகவோ அல்லது மோட்டார் சைக்கிள் எடுத்துக் கொண்டு எங்காவது பறந்து போகவோ விரும்பிய காலம் அது. அந்தக் காலத்தில், பல முறை இந்திய எல்லைகளைத் தொட்டிருக்கிறேன். இந்திய எல்லையைக் கடக்க வேண்டுமெனில் அதற்கான ஆவணங்களும் பணமும் வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனவே தேவையான பணத்தை ஓரிரு வருடங்களில் சம்பாதிக்கத் தீர்மானித்து அதற்கேற்ற ஒரு தொழில் ஆரம்பிக்க முடிவெடுத்தேன். அதுதான் அப்போது எனக்கு கனவாக இருந்தது. அந்த நேரத்தில், கோழிப் பண்ணை தொழில் மிகவும் செழிப்பாக இருந்தது. எனவே அந்தத் தொழிலையே தேர்ந்தெடுத்தேன். அதற்காக பலரிடமிருந்தும் சிறிய அளவில் பணம் கடன் பெற்று ஒரு நிலத்தை வாங்கினேன். வேலையற்ற பட்டதாரிகளுக்கான திட்டத்தின் கீழ் வங்கியிலிருந்து கடன் வாங்கி சிறிய முதலீட்டில் கட்டிட வேலைகள் தொடங்கினேன். வெடி வைத்து கிணறு தோண்டக் கற்றுக்கொண்டு ஒரு கிணறு தோண்டினேன். தண்ணீரும் கிடைத்தது. அதன் பிறகு கட்டிட வேலைகள் மற்றும் பிற வேலைகளையும் முடித்தேன். அங்கு நான் மற்றும் ஒரு வேலையாள் ஆகிய இருவர் மட்டுமே இருந்தோம்.

வாசனையாகவே மாறிவிடுங்கள்!, Vasanaiyagave marividungal

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பல நேரங்களில், அந்த வேலைகள் காரணமாக, என் கைகளில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. ஆனாலும் என் வாழ்க்கையில் அது ஒரு வசந்த காலம். பண்ணை ஒரு அளவிற்கு நிலைபெற்று விட்டால் அதன் பிறகு அனைத்தையும் விற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் எங்கெங்கும் பறக்கத் தீர்மானித்தேன். அதற்கான காலம் கனிவதற்காகக் காத்திருந்தேன். காலையிலேயே வேலை முடிந்துவிடும். அதன் பிறகு, மீதி நேரத்திற்கு, அந்த அழகிய மரங்கள் அடர்ந்த தொலை தூர பிரதேசத்தில் தனியாகவே இருந்தேன். ஒரு மரத்தின் மேல் அமர்ந்திருப்பேன் அல்லது அருகிலுள்ள கிணற்றிலோ குளத்திலோ நீந்திக் கொண்டிருப்பேன். நான் பார்த்த ஒவ்வொன்றின் மீதும் - அது ஒரு புல்லாகலோ, வெட்டுக்கிளியாகவோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் - கவிதைகள் எழுதினேன். நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதினேன், சில நேரங்களில் படித்தேன், நிறைய நேரங்களில் தியானத்தில் இருந்தேன். ஆனால் கோழிப்பண்ணை குறித்து எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் இருந்தது, அது துர்நாற்றம். எனவே நிலம் முழுவதும் மல்லிகை பயிரிடத் தீர்மானித்தேன். அதிலிருந்தும் பணம் பெறலாம் என நினைத்தேன். விவசாயிகளிடமிருந்து நேரடியாக மல்லிகை வாங்கி எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளும் அருகில் இருந்தன. ஒரு கிலோ பூ இவ்வளவு விலை என்றால் ஊர் சுற்றத் தேவையான பணம் சம்பாதிக்க நமக்கு எத்தனை மாதங்கள் ஆகும் என்றெல்லாம் கணக்கிட்டு வைத்திருந்தேன்.

சில ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பயிரிட்டேன், அவை அனைத்தும் பூத்துக் குலுங்கின. இரவில் உட்கார்ந்து இரசித்த அந்த மல்லிகை மலர்ந்திருந்த காட்சிகள் இன்னமும் மறக்க முடியாதவையாக இருக்கின்றன. மல்லிகைப் பூக்கள் நட்சத்திர மண்டலங்கள் போல மின்னின, மல்லிகைச் செடியின் இலை மற்றும் பிற பாகங்கள் அந்த இருளில் கலந்து மறைந்திருந்தன. இந்தக் காட்சியை மிக அதிக அளவில் இரசித்தேன். அதன் வாசனை மிகவும் மயக்குவதாக இருந்தது. எனவே ஒரு தனி பூவைக்கூட நான் விற்கவே இல்லை. அங்கு சுற்றிலும் மல்லிகையே நிறைந்திருந்ததால், அந்தப் பண்ணைக்கு "வசீகரப் பண்ணை" எனப் பெயரிட்டேன். நாகங்களுக்கு மல்லிகைப் பூ மிகவும் பிடிக்கும். எனது நாகங்கள், எனது மல்லிகைகள் மற்றும் எனது தியானம் - அற்புதமான நாட்கள் அவை. சில நேரங்களில் எனது மோட்டார் சைக்கிளைக் கூட மறந்திருந்தேன். ஆரம்பத்தில், பூவை முகர்ந்து பார்ப்பதே ஒரு அழகிய அனுபவமாக இருந்தது.

வாசனைக்கு அந்தக் குணம் உண்டு. வாசனைக்கு காரணமாக இருப்பது பூ அல்ல, நீங்கள்தான் என்னும் பின்னணியில் நீங்கள் எளிமையாக நோக்கினால், அது உங்களுக்கு ஒரு வித்தியாசமான பரிமாணத்தை திறந்துவிடும். பூ என்பதே வாசனை அல்ல. வாசனைக்குக் காரணம் அந்தப் பூ அல்ல, நீங்கள்தான். உங்கள் முகர்வுணர்வு தான் அந்த வாசனைக்குக் காரணமாக இருக்கிறது. அந்த வாசனை உணர்வை ஒவ்வொரு உயிரும் ஒரே விதமாக அனுபவிப்பதில்லை. உதாரணத்திற்கு ஒரு நாயை எடுத்துக் கொண்டாலே, முகர்வு உணர்ச்சி அதிகமாகக் கொண்ட பிராணி அது. ஆனால் அது மல்லிகையை முகர்ந்து பார்க்க நேர்ந்தால் அது தன் தலையை திருப்பிக்கொள்ளும். அதே நேரத்தில் ஒரு கறித் துண்டை அது முகரும்போது, மிகவும் ஆர்வமாகிவிடும். அடிப்படையாக பார்த்தால், அழகு அந்த மல்லிகையில் இல்லை, அந்த முகர்வில்தான் இருக்கிறது. அதனால்தான், யோகாவில், வெளிப்புறத்திற்கு நாம் அதிகம் கவனம் கொடுப்பதில்லை. புரிதலுக்குக் காரணமான கருவிகள் மீதே நாம் அதிகக் கவனம் கொடுக்கிறோம். உங்கள் தன்மைதான் புரிதலின் தன்மையையும் நிர்ணயிக்கிறது. புரிதல் என்னும் பரிமாணத்திற்கு முகர்வுணர்வை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் அது மிகவும் எளிமையான மற்றும் எல்லைக்குட்ட பரிமாணமாக இருப்பதால், புரிந்து கொள்ள ஒரு எளிய செயல்முறையாகவும் அது இருக்கிறது.

தூய உணர்வு புரிதலை எந்தவித முன்முடிவும் இன்றி உணர நீங்கள் விரும்பினால், ஒரு மல்லிகைப்பூவை முகரும் ஒரு எளிய செயல்முறையை நீங்கள் முயற்சிக்கலாம். அந்தப் பூவின் வாசனையை அனுபவிப்பதற்கான ஒரு செயல் அல்ல இது. உணர்வின் புரிதலை அடைவதற்கு வாசனையை ஒரு கருவியாக பயன்படுத்தும் ஒரு செயல் இது. உணர்வுகளை எப்படித் திறக்க வைக்கலாம் என்பதை அனுபவப்பூர்வமாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு இது. எந்த ஒன்றையும் நல்லது கெட்டது என்னும் எந்த முன்முடிவும் இல்லாமல் அணுகும் செயல்முறை இது. எப்படி இருக்கிறதோ அப்படியே அணுகுவது. பல நேரங்களில், உங்கள் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் உங்கள் மகிழ்ச்சியும் இருக்கிறது. ஏதோ ஒன்றை நீங்கள் மிகவும் நல்லதாக நினைத்தால் நீங்கள் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்கள். அதே நேரத்தில் அதை நல்லதல்ல என நீங்கள் நினைத்தால், பிறகு அதை நீங்கள் துன்பமாக உணர்கிறீர்கள். நீங்கள் அதை இப்படி பார்க்கலாம்: மல்லிகை வெறுமனே தனக்கான மணத்துடன் அப்படியிருக்கிறது, அதன் தன்மையை நாம் தீர்மானிக்கத் தேவையில்லை. ஆனால், முகர்வதற்கான உங்கள் திறமையை உங்கள் விழிப்புணர்வில் கொண்டுவருவதற்கு, நீங்கள் அந்த வாசனையை பயன்படுத்தலாம்.

வாசனையாகவே மாறிவிடுங்கள்!, Vasanaiyagave marividungal

நீங்கள் செய்யத் தேவையானது இதுதான்: ஒரு மல்லிகைப் பூ எடுத்து, உங்கள் இடது கையில் கட்டை விரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையில் வைத்துக் கொள்ளுங்கள். தலையை லேசாக மேற்புறம் தூக்கிக்கொண்டு கண்மூடி அமருங்கள். உங்கள் வலது கட்டைவிரல் கொண்டு மென்மையாக உங்கள் வலது மூக்குத் துவாரத்தை மூடி இடது மூக்குத் துவாரம் மூலமாக சுவாசியுங்கள். வழக்கத்தை விட 10 சதவீதம் ஆழமாக சுவாசம் இருக்கட்டும். உங்கள் மூக்கிலிருந்து ஆறு அங்குலம் தள்ளி பூவை பிடித்து கொள்ளுங்கள். கவனம் கொடுக்க நீங்கள் தயாராக இருந்தால், ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்தே வாசனையை நீங்கள் உணர முடியும். தேவையானால் பூவை சிறிது நெருக்கமாகக் கொண்டு வரலாம். வெறுமனே அந்த வாசனையை உணருங்கள். உங்கள் கண்கள் மூடியே இருக்கட்டும். உங்களைச் சுற்றிலுமிருந்து வரும் சத்தங்களை பொருட்படுத்தாதீர்கள். அப்படி செய்யும்போது, முகரும் உங்கள் திறன் அதிகமாகும். கேட்டல், முகர்தல், சுவைத்தல், பார்த்தல் ஆகிய உங்கள் உணர்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, உடற்கூறுநிலையிலும் கூட. ஒரு உணர்வை அதிகப்படுத்த வேண்டுமானால் மற்ற உணர்வுகளை நீங்கள் குறைக்க வேண்டும். உங்கள் முகர்வுணர்விற்கு மட்டும் கவனம் கொடுங்கள், மல்லிகையின் மணத்திற்கு கவனம் கொடுக்காதீர்கள். அதை நல்லது அல்லது கெட்டது என்ற எந்த முடிவிற்கும் வராதீர்கள்.

வாசனையின் இயல்பே இதுதான்: வாசனையின் அழகை மட்டும் நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் காதல் உணர்வு கொண்டவராக ஆகிறீர்கள். வாசனையின் இரசாயனத்தை மட்டும் அறிந்திருந்தால் நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஆகிறீர்கள். வாசனையின் பரவச நிலையை நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் ஒரு ஞானியாக ஆகிறீர்கள். நீங்கள் வாசனையாகவே மாறினால், படைப்பினுடைய மூலமாகவே மாறிவிடுவீர்கள்.

Love & Grace