கேள்வியாளர் : நம் கலாச்சாரத்தில் வானபிரஸ்தா (வனபிரஸ்தா) என்பது வழக்கத்தில் இருந்தது. ஒரு வயதிற்கு மேற்பட்டவர்கள் தம் மரணத்தை எதிர்நோக்கி காட்டில் சென்று வசிக்கும் பழக்கம் இது. இப்படி செய்தால் அவர்களுக்கு நல்ல மரணம் நிகழும் என்றார்கள். இதன் பின்னணி என்ன? இதுபோன்ற முடிவுகள் இக்காலத்திற்குப் பொருந்துமா?

சத்குரு : இக்காலத்தில் "வனபிரஸ்தா" செல்கிறேன் என்று காட்டிற்குள் சென்றால், அங்கிருக்கும் புலிகள் உங்களைக் கொன்றுவிடும் என்ற அபாயம் கூட எதுவுமில்லை ஏனெனில் புலிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. ஆனால் ஒரு பிரச்சினை, நீங்கள் கைதாவதற்கு வாய்ப்புகள் அதிகம். வனபிரஸ்தா என்றால் காட்டிற்குத்தான் செல்லவேண்டும் என்றல்ல. வனம் எனும் சொல் காட்டைக் குறிப்பினும், வனம் என்பது ஒரு சோலைவனமாகக் கூட இருக்கமுடியும். இதன் அடிப்படை என்னவெனில், நான்கு சுவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து விலகி வாழ்வது. ஏன் இப்படி? என்றால், நான்கு சுவர்களுக்குள் வாழும்போது அது நமக்கு அழிவில்லை என்பது போன்ற தவறானதொரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே ஒரு பெட்டிக்குள் (வீடு) வாழும்போது, அது "சவப்பெட்டிக்குள்" இருப்பது போன்ற உணர்வை அளிக்கும். சவப்பெட்டிக்குள் வாழும்போது, அவ்விடம் நமக்கு நிரந்தரம் என்ற எண்ணம் இருக்கும் அல்லவா?

நீங்கள் இதை செய்து பார்க்கவேண்டும். பௌர்ணமி இரவுகளில் பெண்கள் வெளியே தூங்கவேண்டும். அமாவாசை இரவுகளில் ஆண்கள் வெளியே தூங்கவேண்டும். அன்றிரவு குளிராக இருந்தாலும் சரி, மழை பெய்தாலும் சரி, அல்லது வேறு என்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் சரி. நீங்கள் வெளியில் தூங்கும்போது, உங்களுக்கு "பாதுகாப்பற்ற" ஒரு உணர்வு ஏற்படும். நீங்கள் நிரந்தரமில்லை, உங்கள் உயிர் சாசுவதமில்லை என்பது உங்களுக்கு, ஏன் உங்கள் உடலிற்குமே தெளிவாகப் புரிந்துவிடும். வனபிரஸ்தா என்பதன் அடிப்படை இதுதான். நாம் வீடுகள் கட்டியது, நமக்கு அழிவில்லாமல் இருப்பதற்காக அல்ல. மனிதக் குழந்தைகள் வளர்வதற்கு அதுபோன்ற ஒரு பாதுகாப்பான சூழல் தேவை. இதுபோன்ற அமைப்பில்லாமல் வெளியிலே வளரும்விதமாக மனிதக் குழந்தைகள் படைக்கப்படவில்லை. ஒரு யானைக்குட்டி பிறந்ததும், முதல் 3 நாட்களுக்கு அதன் தாய் அதனருகிலேயே எப்போதும் நிற்கும். அதன்பின் தாய் யானை, குட்டி யானை இரண்டும் அவரவராக காட்டிற்குள் நடந்துசெல்லும்.

உங்கள் சிந்தனையில் இந்த நினைவூட்டல் நிகழாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் உடலில் இது நிகழும். தோன்றி மறையும் நீர்க்குமிழி போல், இப்பூமியில் நீங்கள் மீண்டும் அமிழ்வீர்கள் என்பதை உங்கள் உடலிற்கு இப்பூமி நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

ஒரு மனிதக் குழந்தை நல்லவிதமாக வளரவேண்டும் என்றால், அதற்கு சில வருடங்கள் நல்ல உணவும், பாதுகாப்பான சூழ்நிலையும் வேண்டும். அந்த சமயத்தில் அக்குழந்தைகளுடன் சேர்ந்து நாமும் நான்கு சுவர்களின் அந்த சௌகரியத்தை, பாதுகாப்பை அனுபவிக்கலாம். ஆனால் "எனக்கு அழிவில்லை" என்பதுபோன்ற எண்ணத்தில் வாழ்வது புத்திசாலித்தனமல்ல என்பதை மக்கள் உணர்ந்திருந்தார்கள். ஏனெனில் அந்த எண்ணமே ஒரு பொய். சிந்தனையளவில் மட்டுமின்றி எல்லா விதத்திலும் இது நமக்குப் புரியவேண்டும் என்றால், அதற்கு நாம் எடுக்கவேண்டிய முதல் படி, நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே வருவது. அதனால்தான் பெரும்பாலான சாதுக்களும், சந்நியாசிகளும் கட்டிடங்களுக்குள் தூங்குவதில்லை. அவர்கள் மரத்தடியிலோ, அல்லது மிகவும் குளிரான சமயம் எனில் குகைகளிலோ, அதுபோன்ற இடங்களிலோ தூங்குவார்கள். அப்படியே ஏதேனும் கட்டிடம் கட்டினாலும், அதற்கு கூரை மட்டும்தான் கட்டுவார்கள். பக்கவாட்டில் சுவர்கள் இன்றி அது திறந்தவெளியாக இருக்கும். அல்லது சுவர் கட்டவேண்டும் என்றால், அந்த சுவர் மண்ணால் கட்டப்படும். அவர்கள் தங்கும் இடத்ம் அதீத பாதுகாப்பு நிறைந்த இடமாக எப்போதும் இருக்காது.

எப்போதும் இம்மண்ணுடனும், பஞ்சபூதங்களுடனும் தொடர்பில் இருப்பது, இவ்வுடல் அழியக்கூடியது என்பதற்கு ஒரு தொடர்-நினைவூட்டலாக அமையும். உங்கள் எண்ணத்தின் அளவில், சிந்தனையில் இது நிகழாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் உடலில் இது நிகழும். சிறிது காலத்திற்கு மட்டும் தோன்றி மறையும் நீர்க்குமிழி போல், இப்பூமியில் நீங்கள் மீண்டும் அமிழ்வீர்கள் என்பதை உங்கள் உடலிற்கு இப்பூமி நினைவூட்டிக் கொண்டே இருக்கும். உடலில் பிரச்சினை, நலக்குறைவு என்று யாரேனும் வந்தால், அவர்களை முதலில் தோட்டத்தில் வேலை செய்யச் சொல்வேன். ஏனெனில் இவ்வுடல் மண்ணோடு தொடர்பில் இருக்கவேண்டும். நமக்கு உணவளித்து நம்மை ஆரோக்கியமாக வாழச்செய்வதும் இப்பூமிதான், கடைசியில் நம் நிரந்தர ஓய்விடமாக இருப்பதும் இப்பூமிதான். இங்கிருந்து வந்தோம், இங்கேயே சென்று மறைவோம். அனைவருக்கும் இதுதான் நிதர்சனம், "எலான் மஸ்க்" (டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற பல கம்பெனிகளின் நிறுவனர்) உடன் சென்று வேறு கிரகங்களில் உங்கள் உடலை புதைக்க முற்படாவிட்டால்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான்கு பக்கமும் சுவர் கொண்டு மூடப்பட்ட கட்டிடங்களில் இதுபோன்ற நினைவூட்டல் இருக்காது. தங்களுக்கு அழிவேயில்லை என்று மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். 90 வயதில் யாரேனும் இறந்தால்கூட, "நல்ல ஆரோக்கியத்தோடு நன்றாகத்தான் இருந்தார்... இப்படி திடீரென இறந்துவிட்டார்" என்று சொல்வார்கள். நிஜம் என்னவென்றால், அவர் 90 வருடங்களாக இறந்து கொண்டுதான் இருக்கிறார்! இன்று மக்களின் எண்ணத்தில் மரணம் என்பது வழக்கத்திற்கு மாறான விஷயம்போல் உள்ளது. மரணம் என்றால், ஒருவரை மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று, சில மாதம் சித்திரவதை செய்து, மருத்துவச் செலவு மிக அதிகமாகும் போது, "சரி... அவர் இறக்கட்டும் விடு" என்று அவரை விடுவிப்பதுபோல் இருக்கிறது.

வனபிரஸ்தா என்றால் "வயதாகிவிட்டது. மரணம் நிகழ காத்திருக்கிறேன்" என்று அர்த்தமல்ல. நானும் இறப்பேன் என்பதை ஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து வாழ்வது.

இந்த உடல் அழியக்கூடியது என்று உங்களுக்குப் புரியவேண்டும், உங்கள் நினைவில் அது எப்போதும் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்யவேண்டிய முதல் செயல், பாதுகாப்பான சூழ்நிலைகளில் இருந்து வெளியே வந்து வசிப்பது. நான் நிரந்தரமல்ல, ஏதோவொரு கட்டத்தில் மறையத்தான் வேண்டும் என்பதை உங்கள் உடல் உணரவும் புரிந்துகொள்ளவும் இது உதவும். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், வனபிரஸ்தா மேற்கொண்டு வெளிசூழல்களில் வாழ்பவர்கள் இன்னும் ஆரோக்கியமாக ஆகிறார்கள்! இதை நம் ஈஷா யோக மையத்திலும், அமெரிக்க ஆசிரமத்திலும்(Isha Institute of Inner-sciences, USA) நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். 65 வயதைத் தாண்டிவிட்டோம் என்று எண்ணி ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் கடந்த 8 - 10 வருடங்களில் இன்னும் அதிக இளமையாக, ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள். வெளிசூழலில், இயற்கையோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாலும், அதிகம் நடப்பதாலுமே அவர்கள் முன்பைவிட வலுவான, திடமான உடலோடு ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

வனபிரஸ்தா செல்வது மரணத்தை எதிர்நோக்கி என்றல்ல, மரணம் என்பது உங்களுக்கும் நிகழும் என்ற விழிப்புணர்வோடு அதை மேற்கொள்வது. இது மிகவும் முக்கியமானது. ஏதோ ஒரு வயதை எட்டிவிட்டால், நீங்கள் இன்றோ நாளையோ இறக்கவேண்டும் என்று எண்ணுவது நோக்கமல்ல... மரணம் உங்களுக்கும் நிகழும் என்ற விழிப்புணர்வோடு இருப்பதுதான் இதன் அடிப்படை. நீங்களும் இறப்பீர்கள் என்பதை முழு விழிப்புணர்வோடு நீங்கள் உணரும்போது, உங்கள் பணம், சொத்து, உறவுகள் அனைத்தையும் சிறிது விலகி இருந்து பார்ப்பீர்கள். உங்கள் பிழைப்பிற்காக இந்த வளையை நீங்கள் உருவாக்கினீர்கள் என்பது உங்களுக்குப் புரியும். இந்த வளையில் எப்படியோ வேறு சிலரை இழுத்துக் கொண்டாலும், நீங்கள் அதிலேயே சிக்கிக் கொள்ளக்கூடாது. அதிலிருந்து சற்று விலகி இருக்கவேண்டும். அதை முழுவதுமாய் விட்டுவிலகும் நேரம் வரும் என்பதை புரிந்திருக்க வேண்டும்.

வனபிரஸ்தா என்றால் வனத்துடன் ஒன்றி வாழ்வது, அதாவது "எனக்கு அழிவில்லை" என்ற பொய்யிடமிருந்து விலகி வாழ்வது. "நானும் அழியமுடியும்" என்று அனுதினமும் உணரும் வாழ்வை மேற்கொள்வது. உதாரணத்திற்கு, பெரும் புயல்காற்றுடன் கனத்த மழை பெய்து கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்களோ உங்கள் வீட்டில், உங்கள் அறையில் மிக சப்தமாக இசையை ஒலித்துக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லது ஹெட்-ஃபோனில் சப்தமாக இசை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், அதை பற்றிய உணர்வேயில்லாமல் நீங்கள் இருக்கமுடியும். ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் காட்டில் இருந்தால், அந்த ஒரு புயல் போதும் உங்கள் உடல் எவ்வளவு பலவீனமானது என்பதை உங்களுக்குப் புரியவைக்க. இடியுடன் கூடிய அந்த மழையில், சுழற்றி அடிக்கும் புயல்காற்றில் நீங்கள் ஒரே ஒரு இரவு இருந்தால், திடீரென உங்களுக்குள் ஒரு புரிதல் மலரும். கடும் மலையேற்றங்களில் பங்கெடுக்கும் மனிதர்களிடம் இதை நான் பார்த்ததுண்டு. கடுமையான அந்த மலைப்பாதைகளில், வெட்டவெளியில் இயற்கையோடு இருப்பதும், சிறு தவறு செய்தாலும் உயிர் போகும் அபாயத்தில் தொடர்ந்து இருப்பதும், அவர்களுக்குள் ஒரு நிலையான தன்மையை, இறுக்கமற்ற ஒரு திறந்தநிலையை உருவாக்குகிறது. சிறு பிழை நேர்ந்தாலும், மரணம் நிச்சயம். அந்த சூழ்நிலையில் "எனக்கும் மரணம் நிகழும்", நானும் மடிவேன் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி புரியும்.

நீங்களும் இறப்பீர்கள் என்பதை முழு விழிப்புணர்வோடு நீங்கள் உணரும்போது, உங்கள் பணம், சொத்து, உறவுகள் அனைத்தையும் சிறிது விலகி இருந்து பார்ப்பீர்கள். உங்கள் பிழைப்பிற்காக இந்த வளையை நீங்கள் உருவாக்கினீர்கள் என்பது உங்களுக்குப் புரியும்.

வனபிரஸ்தாவின் நோக்கமும் அதுதான். நானும் மடிவேன் என்ற ஆழமான புரிதலை இவ்வுடலுக்கு ஏற்படுத்துவது. நானும் இறப்பேன் என்பது இவ்வுடலுக்குப் புரியும்போது, அது தன்னை சரியான விதத்தில் அமைத்துக் கொள்ளும். முட்டாள்த்தனமாக தன் சக்திகளை விரயம் செய்யாது. அதனால் அதன் ஆயுளும் கூடும். வனபிரஸ்தா என்றால் "வயதாகிவிட்டது. மரணம் நிகழ காத்திருக்கிறேன்" என்று அர்த்தமல்ல. நானும் இறப்பேன் என்பதை ஒருவர் சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து வாழ்வது. இந்தப் புரிதல் இல்லாமல் வாழ்ந்தால், மனித வாழ்க்கை வீண் விரயமாக, முட்டாள்த்தனமானதாக ஆகிவிடும். கௌதம புத்தர் இவ்வுலகை முட்டாள்களின் உலகம் என்றார். அவர் கூறியது தவறல்ல... என்னவொன்று அவர் அதை இன்னும் மென்மையாக வெளிப்படுத்தி இருக்கலாம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர் இதைக் கூறினார். அக்காலத்தில் அவரால் இத்தனை வெளிப்படையாக பேசமுடிந்தது. ஆனால் நான் இருப்பதோ 21-ம் நூற்றாண்டு. நான் ஏதேனும் நல்லதாக கூறியாக வேண்டுமே.

வனபிரஸ்தாவின் அடிப்படை இதுதான்: உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிற்கும் நீங்கள் அழியமுடியும் என்பது புரிந்திருக்க வேண்டும். நீங்கள் அழியமுடியும் என்பது உங்களுக்குப் புரியும்போது, நீங்கள் உங்கள் சக்திகளை திறம்பட பிரயோகிப்பீர்கள். எதையும் விரயம் செய்யாமல் விழிப்புணர்வோடு நீங்கள் செயல்பட்டால், நீங்கள் ஒருவகையில் யோகா செய்கிறீர்கள். யோகத்தின் ஒரு பரிமாணம், அதன் பொருள்நிலை அம்சம், நம் உடலை திறம்பட செயல்படச் செய்வது. எவ்வித பிசிறுகளும் இன்றி மிக நயமாக நம் உடல் செயல்பட அதற்குக் கற்றுக்கொடுப்பது. இந்நிலையை ஒருவர் விழிப்புணர்வோடு வாழும்போதும்கூட எட்டமுடியும். உதாரணத்திற்கு நாகங்கள் உள்ளுணர்வோடு செயல்படும் உயிரினம். எவ்வித இறுக்கமுமின்றி நீங்கள் மிக எளிமையான, தெளிவான நிலையில் இருந்தால் அவற்றால் உங்களைத் தீண்ட முடியாது. நீங்கள் பதற்றத்தில், படபடப்போடு இருந்தால், உங்கள் பயத்தை அவற்றால் உணரமுடியும். அப்போதுதான் அவை உங்களைத் தீண்டும். நீங்கள் இறக்கமுடியும் என்பது உங்களுக்குப் புரிந்திருந்தால், நீங்கள் முழு விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். ஏனெனில் மரணம் எப்படி வேண்டுமானாலும், ஏன் பாம்பின் ரூபத்திலும் கூட வரமுடியும்.

நானும் இறப்பேன் என்பது நாம் வளர்க்கும் சிந்தனையல்ல. அது நிஜம். இவ்வுடலை ஒவ்வொரு நொடியும் அழைக்கும் நிதர்சனம்.

இதனால்தான் நாமும் ஒரு காட்டிற்கு அருகில் நம் இடத்தை அமைத்துள்ளோம். இயற்கை சூழலை நீங்கள் உணரவேண்டும். இயற்கையுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தால், நீங்கள் ஒரு உயிர் என்பதும்கூட உங்களுக்குப் புரியாது. பெரும்பாலான நேரம் எண்ணம், உணர்வுகள், சிந்தனைகள், முடிவுகள், முன்முடிவுகள் மற்றும்பிற அபத்தங்களின் கலவையாகவே நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு இரவு நீங்கள் புயல்காற்றில் சிக்கினாலும், உங்கள் பிரமாதமான எண்ணங்கள், முடிவுகள், உணர்வுகள் எல்லாம் மறைந்துவிடும். நீங்களும் இந்த இயற்கையில் ஒரு அங்கம் என்பது உங்களுக்குப் புரியும். துரதிர்ஷ்டவசமாக, வெளிசூழலில் இயற்கையோடு தொடர்பு ஏற்படும் விதத்தில் இன்று யாரும் அவ்வளவாக வாழ்வதில்லை.

நாடோடிகள் போல் இயற்கையை உணர்ந்து வாழ்பவர்களுக்கு மட்டும்தான் அவர்களின் நிலையற்ற தன்மை புரிந்திருக்கிறது. நீங்கள் வீடுகளைக் கட்டினீர்கள், பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டீர்கள், வாழ்வின் ஒரு கட்டத்தை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டீர்கள். எல்லாம் சரிதான், ஏனெனில் மனிதனுக்கு சமூக அமைப்புகளும் தேவைப்படுகிறது. ஆனால் அத்தேவைகள் முடிந்தபின், நீங்கள் வனபிரஸ்தாவை மேற்கொள்ள வேண்டும். இன்று காட்டிற்குக் குடிபெயர்வது சாத்தியமில்லை. அதனால் பலரும் ஆசிரமங்கள் தேடிச் செல்கின்றனர். சிலர் சீக்கிரமாகவே வருகின்றனர் என்றாலும், இதுபோன்ற வாழ்வை மேற்கொள்வதற்கு எந்த வயதும் "சீக்கிரமாக" இருக்கமுடியாது.

முன்காலத்தில் மக்கள் வனபிரஸ்தா மேற்கொண்ட போதும்கூட, அவர்கள் அப்படியே வெட்டவெளியில் வாழவில்லை. காட்டிற்குள் அமைக்கப்பட்டிருந்த ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்குத்தான் அவர்கள் குடிபெயர்ந்தார்கள். அங்கு துணி, சாப்பாடு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய ஆனால் மிக எளிமையான, குறைவான வசதிகள் இருக்கும். அங்கு இயற்கையோடு தொடர்பில் இருக்கும்விதமான வாழ்க்கைமுறை பின்பற்றப்படும். காட்டில் வசிக்கும்போது, நீங்களும் இறக்கமுடியும் என்பதை நீங்கள் மறக்கமுடியாது. நானும் இறப்பேன் என்பது நாம் வளர்க்கும் சிந்தனையல்ல. அது நிஜம். இவ்வுடலை ஒவ்வொரு நொடியும் அழைக்கும் நிதர்சனம். உங்கள் உடலிற்கு அந்த அழைப்பு கேட்கவில்லை என்றால் உங்கள் மனம் முட்டாளாகிவிடும். வனபிரஸ்தா என்பது அந்த முட்டாள்தனத்தில் இருந்து விடுபடும் முயற்சி. ஒவ்வொரு மனிதரும் தனக்குத்தானே உருவாக்கும் பொய்யான வளையில் இருந்து விடுபடும் முயற்சி.

வரும் வருடங்களில் வனபிரஸ்தா மேற்கொள்ள மேலும் பல ஏற்பாடுகள் செய்வோம், ஏனெனில் இங்கு இளைஞர்களாக வந்தவர்களுக்கும் இப்போது மெதுவாக வயதாகி வருகிறது.

அன்பும் அருளும்,