உங்களையும் தாண்டி உயிர்வாழ்ந்திடுங்கள்
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நதிகளுக்கான இயக்கம் இதுவரை நடந்தேறிய விதம் குறித்தும், இனி நடக்கவிருக்கும் அடுத்த படிக்கு நம்மை எப்படி தயார் செய்வது என்பது குறித்தும் சத்குரு பகிர்ந்துகொள்கிறார். அதோடு, இது வெறும் சுற்றுச்சூழல் நன்மைக்கான இயக்கமாக இல்லாமல், இவ்வியக்கத்தோடு தொடர்பில் வந்த பலரின் ஆன்மீக செயல்முறைக்கு வித்திடும் விதமாக இது விரியும் என்றும் கூறுகிறார்.
நதிகள் மீட்புப் பேரணி நடத்தவேண்டும் என்று என் மனதில் சில காலமாகவே இருந்த போதிலும், இதைத் துவங்குவதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் இது குறித்து நம் குழுக்களிடம் நான் பேசினேன். சாத்தியமில்லாத அளவு குறுகிய கால அவகாசமும், உயிரைக் குடிக்கும் அளவு இடைவெளியில்லாத நிகழ்ச்சி நிரலையும் கொடுத்தால், நம் குழுக்கள் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள். அதுதான் நம்மை முழுவீச்சில் செயல்பட அனுமதிக்கும். கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே இது இப்படித்தான் இருந்து வந்துள்ளது. இதுவரை செய்யப்படாத ஒன்றை நீங்கள் செய்ய விரும்பினால், அதிலும் பிரம்மாண்டமும் இன்னும் பல அம்சங்களும் சம்பந்தப்பட்டிருந்தால், எல்லோருடைய தலையும் உடையவேண்டும். பெரும்பாலான மனிதர்கள் தங்கள் தலையை பீரங்கி பந்தைப் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஏதோவொன்று தீ மூட்டவேண்டும், இல்லாவிட்டால் அது எங்கும் போகாது. அதனால் அதற்கு தீ மூட்டப்பட்டது, எனவே இவ்வியக்கம் உந்தித்தள்ளப்பட்டது.
நாம் செய்துள்ளது, நம் தேசத்தின் சமீபகாலத்தில் மிகவும் வியக்கத்தக்க ஒரு சாதனை. இதில் உள்ள முயற்சியையும் இதன் பின்னால் உள்ள சக்தியையும் பார்த்தால், இது விழிப்புணர்வின் சக்தி மட்டுமே. ஈஷாவைப் பற்றி சில காலம் முன்பு நான் சொன்னபோது, "நாம் வியக்கத்தக்க விஷயங்களைச் செய்யும் முட்டாள்க்கூட்டம்" என்றேன். ஈஷாவில் மிகக் குறைவானவர்களே குறிப்பிடத்தக்க அளவு படித்துள்ளார்கள், மற்றவர்கள் அனைவரும் என்னைப் போன்றவர்கள். அற்புதமான ஒன்றை உருவாக்க மிகப்பெரிய அறிவாற்றலும் கல்வித்தகுதியும் தேவையில்லை. நீங்கள் செய்ய விரும்புவதன் மீது முழுமையான பக்தி மட்டுமே தேவைப்படுகிறது. உங்கள் சக்திகள் ஒரு திசை நோக்கி குவிந்துவிட்டால், எல்லாம் உங்களுக்காக வேலை செய்யும். ஞாபகம், புரிதல், எல்லைகள், கல்வி, அறிவு ஆகியவற்றைக் கடந்து சித்தம் எனும் பரிமாணத்தைத் தொட்டுவிட்டால், கடவுள் உங்கள் அடிமையாகிவிடுவார் என்று யோக மரபில் சொல்வதுண்டு. இதற்கு ஒரு எடுத்துக்காட்டே இந்த நதிகளுக்கான பேரணி, இது தேசம் முழுவதையும் நெகிழச் செய்துவிட்டது.
அடிப்படையில் பார்த்தால், இது எல்லோர் மனதிலும் எங்கோ இருந்த ஒன்று என்பதையே நிரூபிக்கிறது. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? பூனைக்கு மணி கட்ட ஒரு முட்டாள் தேவைப்பட்டார், அது வீட்டுப்பூனையா, புலியா என்று தெரியாத முட்டாள் தேவைப்பட்டார். பல சூழ்நிலைகளில் இப்படி நடப்பதுண்டு. ஏதோவொன்று வீட்டுப்பூனை என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள், அது திடீரென கர்ஜிக்கத் துவங்கி உங்கள் தலையையே துண்டிக்கப் பார்க்கும். என் நற்பெயரை நான் பணயம் வைக்கிறேன் என்று பல பேர் என்னை எச்சரித்தனர். "என் நற்பெயரையும் என் உயிரையும் நான் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறேன், ஏனென்றால் இது அத்தியாவசியமானது. நம் எதிர்கால சந்ததியினருக்கு நதிகள் ஓடுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்." என்றேன்.
முப்பது நாட்கள் நாம் சாலையில் பயணம் செய்ததால் எல்லாம் சரியாகிவிடாது. நாளை காலை நம் நதிகளனைத்தும் ஓடும் என்று கிடையாது. எவரும் கவனிக்காமல் இருக்கமுடியாத பிரம்மாண்டமான இயக்கமொன்று நமக்கு தேவைப்படுகிறது. இது வெறும் சுற்றுச்சூழலுக்கான இயக்கமாக இருக்காது. நம்மோடு தொடர்பில் வந்த பலருக்கு இது ஒரு ஆன்மீக செயல்முறையாக மலரும். இது அடிப்படையில் ஆன்மீக செயல்முறையே. இப்போது நமது இலக்கு சுற்றுச்சூழலுக்கானதாக இருக்கிறது. கௌதம புத்தர் மரத்தடியில் ஞானோதயம் அடைந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் பெரிய அளவில் ஞானோதயம் நிகழ்வதற்கான செயல்முறையைத் திட்டமிட்டுள்ளேன். அந்த நாள் வரும்போது, அமர்வதற்கு பாங்கான ஒரு மரம் வேண்டுமே (சிரிக்கிறார்).
இந்தப் பேரணி எவ்வளவு நாட்கள் தொடரும்? மிஸ்டு கால் முயற்சியை நாம் அக்டோபர் 31 வரை தொடர்வோம். இதுவரை பன்னிரண்டு கோடி மிஸ்டு கால்களைக் கடந்துள்ளோம். நான் சொன்ன முப்பது கோடியில் இது நாற்பது சதவிகிதம் மட்டுமே. இந்நாட்களில் நான் அறுபது கோடி மிஸ்டு கால் வேண்டும் என்று சொல்கிறேன். எண்ணிக்கை முறை இந்தியர்களால் கண்டறியப்பட்டதால் பூஜ்ஜியத்தை சற்று தாராளமாக பயன்படுத்தும் சுதந்திரம் நமக்கு உண்டு. எழுபது ஆண்டுகளில் நம் ஜனத்தொகையை நம்மால் நான்கு மடங்காக பெருக்க முடிந்தபோது, மிஸ்டு கால் எண்ணிக்கையை நம்மால் பெருக்க முடியாதா? இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை பற்றியது அல்ல. அவரவர் வாழ்க்கையில் என்ன செய்துகொண்டு இருந்தாலும், ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்கேற்க வேண்டும். அதுதான் இவ்வியக்கத்திற்கு பலம் சேர்ப்பது.
இவ்வியக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதையும் எடுத்துக்கொண்டாலும் ஈடு இணையில்லாதது. பூமியில் வேறெங்கும் ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் இவ்வளவு பிரம்மாண்டமாக உருவெடுக்கவில்லை. பொதுவாக, ஓரத்தில் இருக்கும் சில குழுக்கள் மட்டுமே சுற்றுச்சூழல் நலனுக்காக போராடுவார்கள். "இது ஒரு போராட்டமல்ல, ஆர்ப்பாட்டமல்ல, எவரையும் எதிர்ப்பதல்ல" என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தி சரியான முறையில் இதைத் துவக்கியதால், தேசம் முழுவதும் இதற்கு பதில் கொடுத்தது. ஊடகங்கள் அற்புதமாக பதில் கொடுத்தார்கள்.
முப்பது நாட்களாக நதிகளுக்கான இந்த பேரணி குறித்து வந்த செய்திகளைப் போல இதுவரை சுதந்திர இந்தியாவில் வேறெப்போதும் வந்ததில்லை. திரையுலகம் மற்றும் விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பதில் கொடுத்தார்கள். இது இவ்வியக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்கள் அனைவருக்கும் நம் நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தேசம் முழுவதிலுமுள்ள தன்னார்வத் தொண்டர்களாகிய நீங்கள் பித்துப் பிடித்தவர்கள் என்றே சொல்லலாம். அது ஒரு நல்ல தகுதி. பித்துப் பிடித்தது போன்றதொரு இதயம் உங்களுக்கு இல்லாவிட்டால், மலச்சிக்கல் வந்தது போன்ற வாழ்க்கை வாழ்ந்து மரிப்பீர்கள். மிகக் குறைவாகவே உங்கள் வாழ்க்கை நிகழ்ந்தால், அது மலச்சிக்கல் போன்றது. இன்னும் எவ்வளவோ நடக்கமுடியும், ஆனால் மிகக்குறைவாகவே நடந்தது என்றால், அது மலச்சிக்கல் வந்த வாழ்க்கை.
உங்களிடம் என்ன இருக்கிறது என்ன இல்லை என்பது பற்றியதல்ல வாழ்க்கை. நீங்கள் என்ன சேகரித்தீர்கள் என்ன சேகரிக்கவில்லை என்பது பற்றியதல்ல இது. என்ன உடை உடுத்தினீர்கள், எங்கு வாழ்ந்தீர்கள், என்ன வாகனம் ஓட்டினீர்கள் என்பது பற்றியதல்ல உங்கள் வாழ்க்கை, உங்கள் அனுபவத்தின் ஆழம் பற்றியதே வாழ்க்கை. உங்கள் வாழ்க்கையின் ஒரே செல்வம், உங்கள் வாழ்க்கை அனுபவம் எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதுதான். நீங்கள் சேகரிக்கும் விஷயங்களுக்காக வாழ்க்கை அனுபவத்தின் ஆழத்தை நீங்கள் பறிகொடுத்துவிட்டால், இந்த சேமிப்புக் கிடங்கை கடைசியில் எங்கு கொண்டு செல்லப்போகிறீர்கள்? வாழ்வும் சாவும் கடந்து நீங்கள் எடுத்துச்செல்லக்கூடிய ஒரே ஒரு செல்வம், அனுபவத்தின் ஆழம் மட்டுமே.
Subscribe
உங்கள் வாழ்க்கையில் உங்களிடம் இருக்கும் ஒன்றே ஒன்று வாழ்க்கை மட்டுமே. உங்கள் சிந்தனையிலும் உணர்வுகளிலும் தோன்றும் மற்றவை அனைத்தும் உங்கள் கற்பனை மட்டுமே. அனுபவத்தின் ஆழம் என்பது முற்றிலும் மாறுபட்ட நிலையில் வேலைசெய்து, புதியதொரு வாழ்க்கை நிலைக்கு உங்களை இட்டுச்செல்லும். நீங்கள் முதிர்வான ஒரு உயிராக மலர்வீர்கள். தேசம் முழுவதிலுமுள்ள பல தன்னார்வத் தொண்டர்களுக்கு, இந்த ஒரு மாதம் அவர்கள் வாழ்க்கையிலேயே மிகவும் ஆழமான அனுபவமாக இருந்துள்ளது. வேறெதையும் விட இதுதான் எனக்கு முக்கியமானது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இதற்கு முன்பு இருந்ததைவிட வாழ்க்கை ஆழமாகிவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ, "எனக்கு என்னவாகும்?" என்பதை அவர்கள் சற்றேனும் மறந்ததாலேயே அவர்கள் வாழ்க்கை ஆழமாகியது.
இல்லாவிட்டால், முக்கியமான ஏதோவொன்றைச் செய்வதாக நினைத்துக்கொள்ளும் மனிதர்கள் மிக மோசமான மலச்சிக்கல் வந்தவர்கள் போல காட்சியளிப்பார்கள். வாழ்க்கையின் மிகவும் சீரியஸான விஷயங்களை எப்படி ஆனந்தமாக அணுகுவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், வாழ்க்கை பெரிய சுமை போல உங்கள் இதயத்தில் கனக்கும். உயிர்வாழும் போதே அவ்வளவு கனமாக உணர்ந்தால், உயிர்வாழும் போதே மண்ணில் புதைந்துவிட்டது போல உணர்வீர்கள். பலபேர் இதை தங்களுக்குத் தாங்களே செய்துகொள்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பப், பார், அல்லது ரெஸ்டரென்ட் செல்கிறார்கள், அங்காவது தங்களை சற்று தளர்த்திக்கொண்டு, சற்றேனும் சுவாசிக்க விரும்புகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே புதைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கணப்பொழுதும் சுதந்திரமாக சுவாசிப்பதில் உள்ள ஆனந்தத்தை நீங்கள் உணரவேண்டும் என்பதே என் விருப்பம். "எனக்கு என்னவாகும்?" என்ற ஒரு எண்ணத்தை நீங்கள் விடுத்தால் போதும். உங்களுக்கு என்னவாகும் என்று நான் சொல்கிறேன், ஒருநாள் உங்களை புதைத்துவிடுவார்கள். அதற்கு முன்பு உங்கள் வாழ்க்கை அனுபவம் எவ்வளவு ஆழமாக இருந்தது என்பது மட்டுமே கேள்வி. இது இவ்வளவுதான். அனுபவத்தின் ஆழம் நீங்கள் செய்யும் செயலால் வருவதில்லை. நீங்கள் உருவாக்குவது உங்களை விடப் பெரிதாக மாறினால் மட்டுமே அனுபவம் ஆழமாகும்.
இதற்கு தேசம் தழுவிய மிகப்பெரிய இயக்கம் செய்தால்தான் நடக்கும் என்று இல்லை. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இது நடக்கமுடியும். உங்கள் இருப்பையும் பிழைப்பையும் தாண்டி நீங்கள் செய்யும் செயல் மிகவும் முக்கியமாக இருக்கிறது - நீங்கள் எல்லாவற்றையும் இப்படி அணுகினால், வாழ்க்கை மிகவும் ஆழமாகிவிடும். வாழ்க்கை அவ்வளவு ஆழமாக மாறிவிட்டால், அமானுஷ்யம் என்று கருதப்படும் அளவிற்கு நீங்கள் செயல்படுவீர்கள். நீங்கள் அமானுஷ்ய மனிதராக மாறிவிடமாட்டீர்கள், உங்கள் மலச்சிக்கல் குணமடைந்துவிடும்.
நான் குறிப்பாக ஒரு அருவருப்பான உதாரணத்தை எடுத்திருப்பது எதற்காக என்றால், மக்களால் நறுமலர் மற்றும் நன்னிலவின் அழகைத் தவறவிடமுடியும். ஆனால் முகத்தில் சற்று மலம் பட்டுவிட்டால் திடீரென விழிப்புணர்வாக மாறிவிடுவார்கள். அவர்களை விழிப்புணர்வாக்க சற்று மலத்தை முகத்தில் பூசவேண்டும். உங்களுக்கு மலச்சிக்கல் இருந்து திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உங்களுக்குள் இவ்வளவு கழிவுகள் இருந்ததா என்று உங்களாலேயே நம்பமுடியாது. அதேபோல, தொடர்ந்து "எனக்கு என்னவாகும்?" எனும் எண்ணத்தால் உங்கள் வாழ்க்கையில் மலச்சிக்கல் ஏற்பட்டிருந்தால், திடீரென அந்த எண்ணத்தை நீக்கிவிட்டால், உங்கள் சுமை சொல்லமுடியாத அளவு தணிந்துவிட்டத்தை உணர்வீர்கள்.
ஏதோவொன்றை அழிக்கும் செயலில் எவராவது ஈடுபட்டால், மற்றவர் அனைவரும், "அவர்கள் செய்கிறார்கள், அதனால் நானும் செய்தால் என்ன பிரச்சனை? எதிர்மறையான செயல்களைச் செய்வது நான் மட்டுமில்லையே" என்று நினைக்கிறார்கள். இதுதான் இன்று உலகை அழித்து வருகிறது. இப்படித்தான் மிக பிரம்மாண்டமான உயிரான நதியையே நாம் அழித்துவிட்டோம். நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்குப் புரியவில்லை என்றால், ஒரு படகு எடுத்துக்கொண்டு அலஹாபாத் முதல் காசி வரை நதியில் பயணமாகச் செல்லுங்கள். நதியை உணர்வதற்கு, அது எவ்வளவு பிரம்மாண்டமான உயிர் என்று புரிந்துகொள்வதற்குச் செல்லுங்கள். அது உங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
இப்படியொரு பிரம்மாண்டமான உயிரை நாம் பரிதாபமாக தவழச் செய்துவிட்டோம். "மற்றவர்கள் இப்படிச் செய்கிறார்கள், அதனால் நானும் செய்யலாம்" என்று நினைக்கிறோம். இப்படி எல்லோரும் செய்யும் சின்னச்சின்ன எதிர்மறையான விஷயங்கள் சேர்ந்து காலப்போக்கில் பேரழிவாக மாறுகிறது.
"எல்லோரும் மிஸ்டு கால் கொடுக்கிறார்கள், நான் மிஸ்டு கால் கொடுக்காவிட்டால் எதுவும் மிஸ் ஆகாது" என்று நினைக்காதீர்கள். பல மனிதர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்சனை. அவர்களுக்கு ஏதோவொன்று கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் பெரியவர்களாகிவிடுவார்கள், உரிமை கோருவார்கள். ஏதோவொன்றைக் கொடுக்கவேண்டும் என்றால் மிகச்சிறியவர்களாகவும் பணிவானவர்களாகவும் மாறிவிடுவார்கள். "எல்லாவற்றுக்கும் மேல் என்னால் என்ன செய்யமுடியும்?" என்பார்கள். இந்த சூத்திரத்தை மாற்றி எழுதினால், வாழ்க்கை பெரிய அளவில் மாற்றமடையும். நதிகள் மீண்டும் ஓடும் வரை நதிகளுக்கான இயக்கம் தொடரும். இதற்கு உறுதியான மனிதர்கள் வேண்டும்.
அடுத்த படி, தேசத்தின் அரசாங்கங்களை செயலில் இறங்கவைப்பது. இந்திய நதிகளை மீட்பதற்காக நாம் பரிந்துரைக்கும் செயல்திட்டத்தின் வரைவை நேற்று பிரதமரிடம் ஒப்படைத்தோம். இது அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான ஆவணம், இதில் உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் எப்படி நதிகளை புதுப்பித்துள்ளார்கள் என்பது குறித்த ஆய்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு மண்வகைகளிலும், பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும் இது எப்படி நிகழ்ந்துள்ளது, இந்தியாவில் இதை எப்படி நிகழ்த்த முடியும், இந்த அறிவியல் முழுவதும் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த நோக்கத்தின் மீது மிகுந்த மரியாதையுடனும், முழு உற்சாகத்துடனும் இது பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இதனை அமலாக்கம் செய்வதற்கு இன்னும் நிறைய செயல் செய்யவேண்டியிருக்கிறது. நாம் காலை ஆக்சிலரேட்டர் மீது அழுத்திப் பிடிக்காவிட்டால், இது பின்னுக்கு தள்ளப்பட்டுவிடலாம். தினசரி அளவில் அவர்கள் கைகளில் ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் உள்ளன.
நீங்கள் அனைவரும் உங்கள் குரல்களைக் கேட்கும் விதமாகச் செய்திட வேண்டும். நீங்கள் தினசரி பேசுவதில் பத்து சதவிகிதமும், நீங்கள் தினமும் அனுப்பும் மெசேஜ்களில் பத்து சதவிகிதமும் நதிகளுக்காக இருக்கவேண்டும். "ஆனால் சத்குரு, என் நண்பர்கள் என்னை பைத்தியக்காரன் என்று நினைத்துவிடுவார்கள்." இதை நீங்கள் செய்யவில்லை என்றால்தான் நீங்கள் பைத்தியக்காரர்.
நதிகள்தான் நம் உயிருக்கு ஆதாரம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால்தான் நீங்கள் பைத்தியக்காரர். நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டும் பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவன் முயற்சியில் அவன் வெற்றி கண்டால் கீழே விழுந்துவிடுவான். அந்த இடத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோம். இப்போதே நாம் செயலில் இறங்காவிட்டால், நம் பொருளாதாரமும் நாம் செய்யும் அனைத்தும் தோல்வியுற்றால் மட்டுமே நாம் பிழைப்பதற்கு வழியிருக்கும். இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம்தானே?
இப்படித்தான் நாம் உலகம் முழுவதிலும் இயங்குகிறோம், இந்தியாவில் மட்டுமல்ல. ஆனால் சிறிய நிலப்பகுதியில் வாழும் அதிக ஜனத்தொகையின் அழுத்தத்தால், இந்தியாதான் இதனால் ஏற்படும் பேரழிவில் முதலில் பாதிக்கப்படும். உலகிற்கும் இந்த பாதிப்பு வரும், ஆனால் சிலர் சற்று சிறப்பாக தங்களை ஒருங்கிணைத்துள்ளர்கள், சுவர்களும் எழுப்பியுள்ளார்கள் (சிரிக்கிறார்). அதனால் நதிகளுக்கான இந்த இயக்கம் தொடரவேண்டும். நதிகளுக்கான இயக்கத்திற்கு நீங்கள் அனைவரும் பதில் கொடுத்து, சமூக வலைதளங்களில் இதைத் துடிப்பாக வைத்திருக்க வேண்டும். தினமும் இல்லாவிட்டாலும், வாரம் ஒருமுறையாவது ஏதேனும் பதிவிடுங்கள்.
எதிர்மறையான விஷயங்களைக் காணும்போது, நீங்கள் அதன் அங்கமாக மாறிவிடலாம், அல்லது அதைக் கடந்து வளரலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இந்த வாய்ப்பு உங்கள் கைகளில் உள்ளது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களை வைத்தாலும், உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அதை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம், அல்லது அதை பயன்படுத்தி உங்களை ஒன்றுமில்லாது செய்துவிடலாம், அல்லது எல்லாவற்றிலிருந்தும் உங்களை விலக்கிக்கொள்ளலாம்.
ஆனால் ஈடுபாடு இல்லாமல் வாழ்க்கை அனுபவம் இல்லை. வாழ்க்கை ஆழமாவதற்கு, தடைகளின்றியும் பாரபட்சம் பார்க்காமலும் ஈடுபட வேண்டும். கணக்குப் பார்த்து ஈடுபட்டால் பிழைப்பை மட்டுமே நடத்திக்கொள்ளலாம், ஆனால் நீங்கள் பிழைத்திருப்பது எதற்காக? எப்படியும் ஒருநாள் நீங்கள் இறந்துபோவீர்கள். ஆழமாக ஈடுபட்டு, வாழ்க்கையை எவ்வளவு ஆழமாக உணரமுடியுமோ அவ்வளவு ஆழமாக உணர்வதுதானே மேலானது?
அதனால் அடுத்த படி, இதனை ஒரு செயல்திட்டமாக்குவது. ஒரு பெரிய நல்லவிஷயம் என்னவென்றால், பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த இயக்கத்திற்காக ஒன்று கூடியுள்ளார்கள். ஒரு தடையை நாம் கடந்துவிட்டோம். சட்டம், தொழில்நுட்பம், நிர்வாகம், செயல்படுத்துதல் சார்ந்த மற்ற சவால்கள் உள்ளன. இவற்றை விரிவாக நாம் ஆராய்ந்து அணுகவேண்டும். இதை சில மாதங்களில் சீர்செய்யப் பார்க்கிறோம், ஆனால் இதை வழிநடத்த தளத்தில் இறங்கி செயல்படும் மனிதர்கள் வேண்டும். பல மாநிலங்கள், நாம் நதிக்கரைகளில் பொருளாதாரரீதியான முன்மாதிரிகள் உருவாக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவற்றின் மூலம் இப்போது செய்யும் விவசாயத்தை விட மரங்களை வைத்து செய்யும் விவசாயம் விவசாயிகளுக்கு அதிக லாபகரமானது என்று நாம் நிரூபிக்க முடியும்.
அடுத்த சில வருடங்களில், பதினாறு மாநிலங்களில் குறைந்தது 1200 பேர் முழுநேரம் இதற்காக எழுந்து நின்று இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உடனடியாக, தளத்தில் இறங்கி செயல் செய்யும் உறுதிகொண்ட சிலநூறு பேராவது நமக்கு வேண்டும். சில மாநிலங்களில் ஒரு செயல்திட்டம் உருவாக்காமலே இது நடந்தேறும். சில மாநிலங்களில் இது ஒரு போராட்டமாக இருக்கும். சில மாநிலங்களில் இது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் போதிய அளவு பெரிதான, வெற்றிகரமான முன்மாதிரிகளை நாம் உருவாக்கிவிட்டால், நம் வேலையை முடித்துவிட்டோம் என்றே சொல்லலாம். அதற்குப் பிறகு இதை எந்த அளவு எடுத்துச்செல்ல விரும்புகிறார்கள் என்பது தேசம் மற்றும் மக்களின் விருப்பம்.
இளைஞர்கள் இதற்காக எழுந்து நிற்கவேண்டும். "எனக்கு என்னவாகும்?" என்ற ஒரு சிந்தனையை நீங்கள் விட்டுக்கொடுத்துவிட்டால், வாழ்க்கை வெள்ளமென பாய்ந்தோடும், வற்றிய ஓடையாக இருக்காது. உங்களை விடப் பெரிய ஒன்றை நீங்கள் செய்தால் மட்டுமே நீங்கள் என்றென்றும் நிறைவாக உணர்வீர்கள். உங்களை விட சிறிய விஷயங்களை செய்தால், வாழ்க்கை வெளி ரசாயனங்களின் உதவியின்றி நடக்காது. குடித்து, அல்லது வேறு ஏதாவது செய்யாவிட்டால் உங்களால் சிரிக்கமுடியாது, பாடமுடியாது, ஆடமுடியாது. உலகம் முழுவதும் இந்தத் திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
நதிகளுக்கான இந்த இயக்கம் நடப்பதில் பலபேர் பங்களித்துள்ளார்கள் - பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள், பிரம்மச்சாரிகள். இதுவே தங்கள் வாழ்க்கையின் கடைசி நாள் என்பது போல பலபேர் வேலை செய்திருக்கிறார்கள். அப்படித்தான் வாழவேண்டும். நதிகளுக்கான இவ்வியக்கத்தை, உங்கள் வாழ்க்கையை எல்லா விதங்களிலும் மேம்படுத்த நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். நதிகளோடு உங்கள் வாழ்க்கையும் ஓடவேண்டும். ஆனால், "எனக்கு என்னவாகும்?" என்ற ஒரு சிந்தனையை விடுத்து நீங்கள் வரவேண்டும்.
நிறையப்பேர் தங்களுக்கு பிடிக்காத விஷயங்களை, தங்கள் கடமை என்று கருதும் ஒரே காரணத்தால் செய்கிறார்கள், அதனால் தங்கள் வாழ்க்கை முழுவதும் அவதிப்படுகிறார்கள். புத்திசாலிகள் தாங்கள் செய்ய விரும்பும் விஷயங்களை செய்கிறார்கள் - அவர்கள் வாழ்க்கையை ஓரளவு ரசிக்கிறார்கள். ஆனால் ஒரு அதிபுத்திசாலியோ, என்ன தேவைப்படுகிறதோ அதை ஆனந்தமாக செய்திட கற்றுக்கொள்கிறார். அப்போதுதான் உங்கள் மேதைமை மலர்கிறது. அது உங்களைப் பற்றியதாக இல்லாமல் போகும்போது, வாழ்க்கையை எல்லையில்லாமல் காண்பதற்கு வழி பிறக்கிறது.
நதிகளுக்கான இந்த பேரணியின் பல்வேறு அம்சங்கள் குறித்து நான் பலருக்கு சொல்லக்கூடத் தேவையிருக்கவில்லை, அவை தம்மால் நிகழ்ந்தன. உலகின்மீது எனக்குள்ள விருப்பத்தை நான் நிறைவேற்றிக்கொள்கிறேன் என்பதால் அல்ல, பிரபஞ்சத்தின் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன் என்பதால் இப்படி நிகழ்கிறது. இது நடந்தாக வேண்டும், தங்களுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து இதைச் செய்பவர்கள் இதில் நிறைவைக் காண்பார்கள்.
நான் உங்களுடன் இருக்கிறேன்.