உள்நலனுக்கு நேரம் ஒதுக்குங்கள்
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஒவ்வொரு மனிதரும் உள்நலனுக்காக நேரம் ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை சத்குரு விளக்குகிறார். "உண்மையான நலனுக்கு வழிசெய்கிறதா?" என்று நாம் செலவுசெய்யும் நேரத்தையும் சக்தியையும் கணக்கெடுக்காவிட்டால், வாழ்க்கை நம்மைக் கடந்து நழுவிச்செல்லும் அபாயம் இருப்பதையும் எடுத்துக்கூறுகிறார்.
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஒவ்வொரு மனிதரும் உள்நலனுக்காக நேரம் ஒதுக்குவதன் முக்கியத்துவத்தை சத்குரு விளக்குகிறார். "உண்மையான நலனுக்கு வழிசெய்கிறதா?" என்று நாம் செலவுசெய்யும் நேரத்தையும் சக்தியையும் கணக்கெடுக்காவிட்டால், வாழ்க்கை நம்மைக் கடந்து நழுவிச்செல்லும் அபாயம் இருப்பதையும் எடுத்துக்கூறுகிறார்.
தனிமனிதர்களும் சமுதாயங்களும் தேசங்களும் பொருள்வசதிக்காக வேலைசெய்வதன் நோக்கமே, அவர்கள் வாழ்க்கையில் விரும்புவதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். மனிதர்கள் ஏதோவொன்று தங்கள் வாழ்க்கையில் மதிப்பானதாக இருக்கிறது என்று பார்க்கும்போது, வாழ்வின் போக்கை அதற்கேற்ப அவர்களால் மாற்றிக்கொள்ள முடியவேண்டும். மகத்தான ஒன்றை நீங்கள் கண்டுணர்ந்தால், உங்கள் வாழ்வின் திசையை மாற்றிக்கொள்ளக்கூடிய நிலையில் நீங்கள் இருப்பது முக்கியமல்லவா? ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகில் வசதிபடைத்த பெரும்பாலான சமுதாயங்கள், மாற்றமுடியாதபடி தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துள்ளார்கள்.
மனிதர்கள் விரும்பியபடி தங்கள் வாழ்க்கை திசையை மாற்றிக்கொள்ள இயலவில்லை என்பதால், அவர்களுக்கான ஆன்மீக சாத்தியங்கள் நிரந்தரமாக அழியக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஒருவரை உண்மையான தேடுதலுடன் இருப்பதிலிருந்து தடுக்கும் ஒரே பிரச்சனை, அடையவிரும்பும் இலக்கு நெருங்கி வரும்போது அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். தினமும் எத்தனையோ மனிதர்கள் மிகவும் நெருக்கமாக வந்தபிறகு எதிர்ப்பதை நான் கவனிக்கிறேன், ஏனென்றால் அவர்களிடம் முப்பது வருடம் கட்டவேண்டிய வீட்டுக்கடன் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இப்படி நடக்கிறது, மற்றவர்களும் வேகமாக இந்தத் திசையில் செல்கிறார்கள். அவர்கள் ஆயிரம் வருடம் இங்கு இருக்கப்போவது போல தங்கள் வாழ்க்கையை திட்டமிடுகிறார்கள்.
Subscribe
ஒருவேளை நாளை காலை நீங்கள் தெய்வீகத்தை சந்திக்கிறீர்கள் என்றால், கட்டுவதற்கு ஸ்டூடண்ட் லோனும், வீட்டு லோனும், நாற்பத்தைந்து வருட ஹெல்த்கேர் பிளானும் இருந்தால், உங்களால் உங்கள் வாழ்க்கை திசையை மாற்றமுடியாது. உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் இன்சூரன்ஸ் கம்பெனியும் வங்கியும் அரசாங்கமும் சேர்ந்து திட்டமிட்டுவிட்டார்கள், அத்திட்டத்தை நீங்கள் மாற்றமாட்டீர்கள். ஆனால் நீங்கள் முழுவீச்சில் இருக்கும் மனிதராக ஆகவேண்டும் என்பதே படைத்தவன் உங்களுக்கு வைத்திருக்கும் திட்டம். உயிரின் இந்த சிறிய துளிக்கு, படைப்பின் மூலம் எதுவோ, அது வைத்திருக்கும் திட்டம் மட்டும்தான் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரே திட்டம். உங்கள் இன்சூரன்ஸ் கம்பெனி வகுத்திருக்கும் திட்டம் உங்கள் நன்மைக்கு வேலை செய்கிறது என்றால், இங்கும் அங்குமாக சற்று தவணை செலுத்திக்கொள்ளலாம். ஆனால் உங்கள் வாழ்க்கை முழுவதையும் "எனக்கு என்னவாகுமோ? எனக்கு என்னவாகுமோ?" என்ற பயத்தின் அடிப்படையில் மட்டுமே நீங்கள் திட்டமிட்டிருந்தால், அது பரிதாபமானது.
எவ்வளவு இன்சூரன்ஸ் இருந்தாலும், நாளை காலையே நீங்கள் இறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது, அது சாத்தியம்தான். "நான் இறக்கக்கூடியவன், இது நிரந்தரமான வாழ்க்கையல்ல" என்ற விழிப்புணர்வை எப்போதும் வைத்துக்கொண்டால், இது அபாரமான சுதந்திரம். என்னைக் கடந்துசெல்லும் ஒவ்வொரு க்ஷணமும் என் கவனத்தில் இருக்கிறது, இன்னும் எவ்வளவு க்ஷணங்கள் மீதமுள்ளன என்பதும் எனக்குத் தெரியும், அது எண்ணிலடங்காதது இல்லை, அதற்கு ஒரு எண்ணிக்கை இருக்கிறது. உங்களுக்கு எத்தனை க்ஷணங்கள் மீதமிருக்கின்றன என்பதை நீங்கள் எண்ணவேண்டும். நீங்கள் செய்யவிரும்பும் விஷயங்களுக்கு நீங்கள் நேரம் ஒதுக்கவில்லை என்றால், கடனை திருப்பிச் செலுத்துவதாக மட்டுமே உங்கள் வாழ்க்கை இருந்தால், கடன் தீரும்முன் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடலாம். "Death of a Salesman" கதையில் வருவது போல, இறந்தவரிடம் கடனை திருப்பிக்கேட்க முடியாது என்பதால் நீங்கள் இறக்கும்போது வென்றுவிட்டதாக நினைப்பீர்கள்.
உங்கள் மதிப்பைக் கூட்டாத விஷயங்களைச் செய்வதில் உங்கள் வாழ்க்கை நேரமும் சக்தியும் எந்த அளவு வீணாகிறது? இதை நீங்கள் தினசரி அளவில் கவனித்து கணக்கெடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியம், இல்லாவிட்டால் ஏதோவொன்று செய்துகொண்டே இருப்பீர்கள். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு எல்லாம் பாழாகிவிட்டது என்பதை உணர்வீர்கள். பாழாகிவிட்டது என்றால் ஏதோ தவறாகிவிட்டது என்று அர்த்தமில்லை. அப்படி நடந்தால் உடனே விழித்துக்கொள்வீர்கள். ஏதோவொன்று மிக மோசமாக தவறாகிப்போனால், என்ன நடக்கிறது என்று உடனே எழுந்து கவனிப்பீர்கள். உண்மையாகவே பாழ்போவது என்றால், எல்லாம் அப்படியே கடந்துசென்றது, ஆனால் வாழ்க்கை மட்டும் நடக்கவேயில்லை. இந்த பரிதாபம் உங்களுக்கு நடக்காமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பரிதாபம் வெடிவெடிப்பது போல ஒரே நிகழ்வில் நடப்பதில்லை, மெதுவாக நடக்கிறது. வாழ்க்கையில் நீங்கள் பிஸியாக இருக்கும்போதும், சலிப்பாக இருக்கும்போதும், இருவிதங்களிலும் வாழ்க்கை உங்களை பைபாஸ் செய்து கடந்துவிடும். ஒரு பேருந்து உங்கள்மீது மோதியது என்றால் அது பரிதாபமல்ல, ஒரு விபத்து மட்டுமே, ஏனென்றால் சில எலும்புகள் உடைந்ததும் விழித்துக்கொள்வீர்கள். "இந்த வாழ்க்கை எதைப் பற்றியது?" என்று சிந்திக்கத் துவங்குவீர்கள். ஆனால் இங்கு உட்கார்ந்திருக்கும்போதே வாழ்க்கை உங்களை கடந்து சென்றுவிட்டால், அது மிகவும் பரிதாபமானது.
இப்போது பொருளாதார சக்திகள் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கின்றன. கப்பலில் உல்லாசப்பயணம் செல்ல அழைப்பவர்கள், "எங்கள் க்ரூஸிற்கு வாருங்கள், இந்த வருடம் 50% தள்ளுபடி!" என்பார்கள். ஆடைகள் விற்பவர்கள், "உடனே வாங்குங்கள், 90% ஆடித்தள்ளுபடி!" என்பார்கள். 90% என்று சொல்லும்போதாவது இது ஏமாற்றுவேலை என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
உங்கள் பணத்தை எப்படி முதலீடு செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பம், ஆனால் உங்கள் உயிரை எப்படி முதலீடு செய்கிறீர்கள் என்பதை பொருளாதார சக்திகள் முடிவுசெய்யக்கூடாது, இல்லையா? ஏனென்றால் வாழ்க்கை என்பது நேரத்தை இலாபகரமாக உபயோகிப்பது, நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த கணப்பொழுதை நம் நல்வாழ்வுக்காக எந்த அளவு சிறப்பாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. பணம் வரும், போகும். இதுவும் அதுவும் வரும், போகும். நேரம் என்பது போக மட்டுமே செய்கிறது, என்றும் உங்களிடம் திரும்பி வருவதில்லை. எப்போதும் போய்க்கொண்டே இருக்கும் நேரத்தை, எப்படி செலவாகிறது என்று தொடர்ந்து பார்க்கவில்லை என்றால், நீங்கள் உணரும்முன் அது முடிந்துவிடும்.
அதனால் உங்கள் உள்நலனுக்கு நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கவேண்டும். நீங்களாகவே இங்கு முழுமையான உயிராக இருக்கமுடியும் என்றால், அதுதான் நல்வாழ்வு. நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யாமல் இருக்கிறீர்கள், இவையனைத்தும் அடுத்து வருவது. நாம் நலமாக இருக்கும்போது, மிக உயர்ந்த சாத்தியம் எதுவாக இருந்தாலும், அதற்கே நாம் குறி வைப்போம். நாம் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது, சாதாரணமாக, மிகத் தாழ்வான விஷயத்திற்கு குறி வைக்கிறோம், அதிக ரிஸ்க் இல்லாமல் என்ன செய்யமுடியுமோ அதை மட்டுமே செய்கிறோம். அதனால் உங்கள் வாழ்க்கையில் அனைத்திலும் முக்கியமான பொறுப்பு, நீங்கள் உண்மையாகவே நலமாக இருப்பதற்காக வேலை செய்வது, இல்லையா? "நலமாக" என்றால் வெறும் உடல் ஆரோக்கியமில்லை. "நலமாக" என்றால், நீங்களே ஒரு போராட்டமாக இல்லாமலிருப்பது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு பிரச்சனையாக இல்லாமலிருப்பது.
உலகில் மற்ற பிரச்சனைகள் இருக்கின்றன, அவற்றை நம்மால் முடிந்த அளவு நாம் கையாளவேண்டும். ஆனால் நீங்களே ஒரு பிரச்சனையாக ஒருபோதும் இருக்கக்கூடாது. இது நிகழவேண்டும் என்றால், அதற்கு முதலீடு வேண்டும். அதற்கென நேரம் ஒதுக்கவேண்டும். முடிந்தால் உங்கள் வீட்டில் செய்யுங்கள், அல்லது இதற்கென வசதிகள் உருவாக்கியிருக்கும் நமது ஆசிரமத்தில் நேரம் செலவிடுங்கள். உங்களுக்கு ஒரு இடமும் வசதியும் வேண்டுமென்றால், அது இருக்கிறது. ஆனால் உள்நலனுக்கு நீங்கள் முதலீடு செய்யவேண்டும். இல்லாவிட்டால் இலாபமிருக்காது. முதலீடு இல்லையென்றால் இலாபமும் இல்லை.