இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மனிதர்கள் அறியாமையால் தங்களைச் சுற்றி சுவரெழுப்பி தங்களைத் தாங்களே சிறைபடுத்திக் கொள்வதைக் காணும்போது அவருக்கு எவ்வளவு வலிதருவதாய் இருக்கிறதென்று சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். "சுவர்" எனும் தனது கவிதை மூலம், நம்மைச் சுற்றியுள்ளவற்றுடன் நாம் சங்கமிப்பதைத் தடுக்கும்விதமாக நாம் எழுப்பும் சுவர்கள் குறித்து எழுதியுள்ளார்.

உலகம் முழுதும் பயணம் செய்யும்போது, கசப்பான, துயரமான, வருத்தமான முகங்களுடன் பல மனிதர்கள் நடமாடுவதை நான் காண்கிறேன். உலகில் பல பிரச்சனைகள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு சாத்தியமாகவே இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனையையும் அதன் கொம்பைப் பிடித்துப் பார்த்து பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று பார்த்தால் தான் உங்கள் புத்திசாலித்தனத்தின் தாள்திறப்பீர்கள். அப்போதுதான் ஒவ்வொரு மனிதரும் சுமக்கும் உள்பரிமாணங்களின் புத்திசாலித்தனத்தை நீங்கள் தொடுவீர்கள். புத்திசாலித்தனத்தின் மிக ஆழமான பரிமாணம் திறந்தால், நீங்கள் படைத்தவருக்குச் சமம். இயற்கையின் விதிகளுக்குட்பட்டு செய்யக்கூடிய எல்லாவற்றையும் உங்களால் செய்யமுடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் பிரச்சனையை எதிர்த்து, ஏற்றுக்கொள்ள மறுத்தால், மாற்றமும் வளர்ச்சியும் சாத்தியமில்லை. முளைக்காத ஒரு விதை வீணான விதை தான். முளைவிடுவது என்றால், நீங்கள் இதற்கு முன் எதுவாக இருந்தீர்களோ, அதை அப்படியே உதிர்த்துவிட்டு புதிதாய் மாறுவது. முளைக்காத விதையாக இருப்பதில் பாதுகாப்பு இருக்கிறது, ஏனென்றால் அதைச் சுற்றி ஒரு கூடு இருக்கிறது. முளையாக துளிர்த்தால், நீங்கள் மிகவும் மென்மையாக, காயப்படக்கூடியவராக மாறிவிடுவீர்கள். அப்படி மாற நீங்கள் விரும்பவில்லை என்றால், மாற்றத்தை நீங்கள் விரும்பவில்லை என்று அர்த்தம். எதில் தன்னிலை மாற்றம் நிகழவில்லையோ, அது இறந்ததற்குச் சமம். உயிருள்ள ஒன்று எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.

ஆன்மீகப் பாதையில் இருந்துகொண்டு உங்களுக்கென சிறுபிள்ளைத்தனமான கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் வைத்துக்கொண்டு, பிரபஞ்சத்தின் மீதியிடமிருந்து உங்களை மூடிக்கொள்வது, உங்கள் வாழ்க்கையை வீணாக்குவதாகும். இந்த அருளுடன் தொடர்பு ஏற்படுவது, பல ஜென்மங்களில் ஒருமுறையே கிடைக்கக்கூடிய கிடைப்பதற்கரிய வாய்ப்பு. தங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எதிர்த்து சுவர்கள் கட்டிக்கொள்பவர்களைக் காண்பது எனக்கு வலி தருகிறது. சுய-பாதுகாப்பிற்காக கட்டப்படும் சுவர்களே சுய-சிறைக்கான சுவர்களாகவும் இருக்கின்றன. இதைப் பற்றித்தான் இந்தக் கவிதை.

சுவர்

ஒரு சிள்வண்டின் அழைப்பு
நெஞ்சை உருக்கும்
காதல் பாடலாய் இருக்கக்கூடும்.
ஒரு புலியின் உறுமல்
மூர்க்கத்தனத்தால் அன்றி
தனிமையால் இருக்கக்கூடும்.
காற்று ஊளையிடுவது
அழிவை அறிவிக்காது
மழையெனும் வரத்தைத் தரக்கூடும்.
ஒரு பாம்பின் சீற்றம்
எப்போதும் விஷமுள்ளதன்று.
சங்கமத்திற்கான அழைப்பைத்
தவறவிட்டு, வாழ்க்கையை எதிர்த்து
சுவர்கட்டிக் கொள்கிறீர்களா நீங்கள்.

Love & Grace