இந்த வார சத்குரு ஸ்பாட்டில், யுகாதி திருநாளின் முக்கியத்துவம் குறித்தும், இந்த சமயத்தில் இயற்கையில் ஏற்படும் மாற்றம் குறித்தும், இந்த இருபத்தொரு நாட்களுக்கு அதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.

இந்தியாவின் பல பகுதிகளில், இந்த நாள் புதுவருடம் மற்றும் இளவேனிற்பருவத்தின் துவக்கமாகக் கொண்டாடப்படுகிறது. பருவகாலங்களைக் குறிக்கும் விதமாக இல்லாத கிரகோரியன் காலண்டர் இதை கருத்தில் கொள்ளாது. ஆனால் உகாதி, யுகாதி, அல்லது குடிபாடுவா எனப்படும் இத்திருநாள், பூமியுடன் ஒப்பிடும்போது சூரியன் ஒரு தனித்துவமான இடத்தில் இந்நாளில் இருப்பதைக் குறிக்கிறது. நம் அடிப்படை பிழைப்பிற்கு உட்பட, பூமி மீதும் எல்லா உயிர்கள் மீதும் சூரியன் ஏற்படுத்தும் தாக்கத்தை நம்மால் மறுக்கமுடியாது. தியானம் செய்வதற்கும் உங்கள் எல்லைகளைக் கடப்பதற்கும் சூரியனின் ஓட்டத்தையும் கோள்களின் அமைப்பையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் இன்னும் சற்று விழிப்புணர்வாக மாறினால், இயற்கையாகவே வான்வெளியில் நடக்கும் அசைவுகள் உங்கள் கவனத்திற்கு வரும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் ஒருபோதும் இப்படித் திட்டமிட்டு செயல்பட்டதில்லை, ஆனால் என் வாழ்வின் முக்கியமான தருணங்கள் எப்படியும் சரியான நாட்களில் நடந்தேறும். சில விஷயங்கள் நடந்தேற அதற்கு உகந்த ஒரு சூழ்நிலை தேவைப்படுகிறது. அந்த உகந்த சூழ்நிலை எனக்கு இயற்கையாகவே ஏற்படுகிறது. மலரவேண்டும் என்ற நோக்கத்தால் மலர்கள் வசந்தகாலத்தில் மலர்கின்றன என்பதல்ல, உகந்த சூழ்நிலையால் மலர்கின்றன. அதைப்போலத் தான். உறுதியான சில செடிவகைகளோ எப்படியும் குளிர்காலத்திலும் மலரலாம். அதேபோல, கோள்களின் அசைவுகளும் வான்வெளியில் நடப்பவையும் ஏற்படுத்தும் தாக்கத்தை, ஒரு மனிதரால் ஓரளவிற்குத் தாக்குப்பிடிக்கமுடியும். ஆனால் இந்த செயல்முறைகளின் தாக்கங்களில் இருந்து எவரும் முழுமையாக விடுபட்டிருக்க முடியாது. சூரியமண்டலம் எனும் குயவனின் சக்கரத்தின் சுழற்சியால் உருவான மண்பாண்டமே மனித உடலமைப்பு.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதியோகி கூறியதுபோல, பலவிதங்களில் மனித உடல் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது. உடலளவிலும் சரி, நரம்பியல் அளவிலும் சரி, கிரகித்துக்கொண்டு, அறிந்து, அனுபவிக்கும் திறனைப் பொருத்தும் சரி, மனித உடல் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆனால் மனித விழிப்புணர்வு பரிணாம மாற்றமடைய இன்னும் திறந்தே இருக்கிறது. மனித உடல் என்பது பரிணமிக்கவேண்டும் என்றால், சூரிய மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழவேண்டும். மனித உடல் இதற்கு மேல் பரிணமிப்பதை நம் சூரிய மண்டலத்தின் இயற்கை விதிகள் அனுமதிக்காது. உடலிலுள்ள நூற்றுப்பதிநான்கு சக்கரங்களில் இரண்டு, பொருள் உடலின் அமைப்பிற்கு வெளியே இருக்கிறது. மீதமுள்ள நூற்றுப்பன்னிரண்டில் நூற்றியெட்டு சக்கரங்களை நீங்கள் தூண்டினால், மற்ற நான்கும் தானாக திறந்துகொள்ளும். உண்மையாக வேலை செய்யவேண்டியது இந்த நூற்றி எட்டு சக்கரங்கள் மீது தான். இதனால் தான் பாரம்பரிய முறையில் ஒரு மாலையில் நூற்றியெட்டு மணிகள் உள்ளன. ஒரு மந்திரத்தை நீங்கள் நூற்றியெட்டு முறை உச்சாடனம் செய்யலாம். சில சக்தி ஸ்தலங்களை நூற்றியெட்டு முறை பிரதக்ஷணம் செய்யலாம். இதற்குக் காரணம், மனித உடலமைப்பு மீது முழு ஆளுமை வேண்டுமென்றால், நீங்கள் நூற்றியெட்டு விஷயங்கள் செய்யவேண்டி இருக்கிறது.

நம் சூரிய மண்டலத்தின் அமைப்பில் இது மிக அழகாக பிரதிபலிக்கிறது. சூரியனின் விட்டம், பூமியின் விட்டத்துடன் ஒப்பிடும் போது நூற்றி எட்டு மடங்காக இருக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம், சூரியனின் விட்டத்தின் நூற்றி எட்டு மடங்காக இருக்கிறது. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம், சந்திரனின் விட்டத்தின் நூற்றி எட்டு மடங்காக இருக்கிறது. பூமியின் சுற்றுப்பாதை ஒரு வருடத்தில் நூற்றி எட்டு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றி பூமி செல்லும் பாதை, நூற்றி எட்டு மணிகளாக பூமி நிற்கும் நிலைகளாகும். அதற்கேற்ப நீங்கள் அணியும் மாலையிலும் நூற்றி எட்டு மணிகள் இருக்கும். இந்திய கலாச்சாரத்தில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், வான்வெளி மண்டலத்தின் அமைப்புக்கும் மனித உடலமைப்புக்கும் இடையிலான தொடர்பையும், அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் நிகழும் இந்த மாற்றங்களை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் புரிந்தே உருவாக்கப்பட்டவை.

இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் காலத்தில், உங்கள் மொபைலுடன், டிவியுடன் அல்லது கம்ப்யூட்டருடன் கட்டுண்டு இருக்காதீர்கள். வெளியே செல்லுங்கள், சுற்றியும் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் கவனியுங்கள். எந்தவொரு உயிராக இருந்தாலும், செடிகள், விலங்குகள் முதல் மனிதர்கள் வரை, இயற்கையுடன் ஒத்திசைவாக இருந்தால்தான் முழுமையாக தழைத்தோங்க முடியும். வரும் மூன்று வாரங்களில், மனித சக்தியின் மீதும் மனித விழிப்புணர்வின் மீதும் சூரியனின் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கப்போகிறது. ஈஷாவில் நமக்கு ஆதியோகி வழங்கிய அளப்பரிய சாத்தியங்களை மனிதகுலத்திற்குப் பரிமாறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. நம் நேரத்தையும் இயற்கையின் தாக்கத்தையும் சிறப்பாக பயன்படுத்தி, தனிப்பட்ட அளவில் நம் விழிப்புணர்வையும் உலகில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் விழிப்புணர்வையும் நாம் உயர்த்திட வேண்டும்.

அடுத்த இருபத்தொரு நாட்களுக்கு, நம் அரைக்கோளத்தில் சூரிய சக்தியின் தாக்கம் உச்சத்தில் இருக்கப்போகிறது. உங்கள் நல்வாழ்வுக்கும் செழிப்புக்கும் உங்கள் சோலார் பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

Love & Grace