இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பரபரப்பாய் பேசப்பட்டு வரும் ரூபாய் நோட்டு தடைகள் குறித்து பேசும் சத்குரு அவர்கள், பிரதமரின் இம்முயற்சி நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதனையும் விளக்குகிறார். மேலும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மனநிலையிலேயே நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம் என்பதனை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. சிறப்பு தொகுப்பாக, இன்சைட் நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களை இங்கு உங்களுக்காக காட்சிப்படுத்துகிறோம்...

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அதிக மதிப்புகொண்ட இந்திய பணத்தினை ரத்து செய்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. தொழில்துறையினரும், தனியாரும் ஆரம்பக்கட்ட சிரமங்களிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் ஓரிரு மாதங்களில் வெளிவந்துவிடுவார்கள் என்று நம்பப்பட்டாலும், இன்னும் சில காலங்கள் பிடிக்கும் எனலாம். அரசியல்ரீதியாக பார்த்தால், இது அரசிற்கு சற்றே அபாயமான நடவடிக்கைதான். அவர்களுக்கு அதுபற்றி தெரிந்திருந்தும், விழிப்புணர்வாய் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

ரிசர்வ் வங்கி கணக்குப்படி, 10 லட்சத்திற்கு 250 ரூபாய் கள்ளநோட்டுக்களாய் உள்ளது, அதாவது, 0.025 சதவிகிதம். ஆனால், கள்ளநோட்டுக்களின் சதவிகிதம் பலமடங்கு அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்கோ ஓர் மூலையில், இருள்சூழ்ந்த ஓர் அச்சகத்தில் இந்த நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை. இந்தியாவிற்கு வெளியே இருக்கும் அச்சகங்களில் இவை முறையாய் அச்சடிக்கப்பட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன், நாம் நியமித்த நோட்டு அச்சகங்களே, கள்ளநோட்டுக்களையும் அச்சடித்து உள்ளதாக தெரிகிறது. இவை கள்ளநோட்டுக்கள் என கண்டுபிடிப்பதில் வங்கிகளுக்கே சில சமயம் சவாலாய் இருக்குமளவுக்கு இவை சிறப்பாய் அச்சடிக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கையின் மற்றொரு அம்சம், கறுப்புப் பணத்தை முடக்குவது. இது ஓரளவிற்குத்தான் நிறைவேறும் என்று நான் நினைக்கிறேன். இருப்பத்தைந்திலிருந்து நாற்பது சதவிகித கறுப்பு பணத்தை நம்மால் முடக்க முடியும். மற்றவர்கள் வேறு வழிகளை கண்டறிந்து கொள்வார்கள். துரதிர்ஷ்டவசமாக, நம் தேசத்தில் தினசரி ரீதியில் நடக்கும் வர்த்தக பரிமாற்றங்களில் கிட்டதட்ட 50 சதவிகிதம் வரை வரித்துறை அதிகாரிகளின் ரேடார் பார்வையின் கீழ் வருவதில்லை. நம் பொருளாதாரத்தின் 40 சதவிகிதம் நிழலுக்குள் ஒளிந்திருக்கிறது. இதன்மூலம், அவை அதிகாரப்பூர்வ, முறையான பொருளாதாரத்திற்குள் வந்துவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த சம்பாத்தியங்களை வரித்துறையின் பார்வைக்குள் கொண்டு வருவதன் மூலம், நம் பொருளாதார பலத்தை தேசங்களின் முன் நன்மதிப்புடன் காண்பிக்க முடியும். இது முக்கியம். 158 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதாரம் 210 லட்சம் கோடிகள் மதிப்புடைய பொருளாதாரமாய் உயரும். ஒரு தேசமாய், ஒன்றுகூடி இதனை நிகழச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. இடைப்பட்ட இந்த சிரமங்களை எதிர்கொண்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை இன்னும் உறுதியான அஸ்திவாரத்தில் ஏற்றி, அது மலர்வதற்கான வாய்ப்பினை உருவாக்குவோம். பொருளாதார பரிவர்த்தனைகள் கணக்கிடப்பட்டு, வரியிடப்பட்டால் மட்டுமே இது நடக்க இயலும்.

இந்தியாவில் எப்போதுமே தொழில்கள் இருந்திருக்கின்றன. அரசர்கள் காலத்திலேயே வரிவிதிப்பு முறைகளும் இருந்தன. ஆங்கிலேயர்கள் வந்தபோது, மாவட்ட ஆட்சியர்களை "கலெக்டர்" என அழைத்தனர். ஏனென்றால், அவர்களது வேலையே வரிப்பணத்தை திரட்டுவதுதான், பொது மக்களுக்கு சேவை செய்வதல்ல. துரதிர்ஷ்டவசமாக, இன்றும்கூட நாம் அவர்களை அப்பெயரிட்டே அழைக்கிறோம். அந்த பேச்சுவழக்கினை தக்கவைத்துக் கொண்டோம். வரி கட்டுவதை தவிர்த்தால், சாமர்த்தியமானவர் என்று பல தலைமுறைகளாய் நாம் நினைத்து வந்திருக்கிறோம்.

நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை அரசிற்கு வழங்கும் எண்ணம் மக்களுக்குள் ஆழமாய் செல்லவில்லை. குற்றநோக்குடன் இதைச் செய்யவில்லை, வரி செலுத்துவதற்கு பதில் பொதுத்தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிப்பதுடன் மக்கள் தங்களுக்குள் ஒப்பிட்டுக் கொள்கின்றனர். தங்கள் பங்கினை கோவில்களுக்கும், ஏழைகளுக்கும், அநாதை இல்லங்களுக்கும் நன்கொடையாய் அளிப்பதுதான் சிறந்தது என்று மக்கள் நினைக்கின்றனர். இதனால்தான், வெவ்வேறு சமூகங்கள் கொண்ட வெறும் ஒரு புவிவியல் சார்ந்த ஓர் அமைப்பாய் நாம் இருந்து வருகிறோம். தங்கள் சமூகங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்கிறார்கள், பல சமயங்களில் அதை மீறிச் செல்வதில்லை.

பணம் ஒரு பொருள் என நினைப்பதால், கோடிக்கணக்கான ரூபாயின் மீது சிலபேர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பணம் என்பது பொருளல்ல - அது பரிவர்த்தனை செய்து கொள்வதற்கான ஒரு கருவி. பரிவர்த்தனை செய்துகொள்வதற்கான கருவி புழங்கிக் கொண்டே இருக்கவேண்டுமே ஒழிய ஒரே கையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. இதைத்தவிர, நம் தேசத்தில் சட்டத்தை உடைப்பது தங்கள் உரிமை என பலபேர் நினைக்கிறார்கள். நாம் இன்னமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் சிக்கிப் போயிருக்கிறோம். சட்டத்தை உடைப்பதே வீரம், தேசியவாதம், தொலைநோக்கு பார்வை என்கிற கண்ணோட்டத்தில் இருக்கிறோம். மகாத்மா காந்தி இதனை மிகுந்த வேகத்துடனும், மிகுந்த நிபுணத்துவத்துடனும் செய்தார். நீண்ட காலமாய் நாம் ஆக்கிரமிக்கப்பட்ட தேசமாய் இருந்திருக்கிறோம். நிர்வாகமும் நமக்கு எதிராக இருந்தது. அதனால், சட்டத்தை உடைத்தவர்களை வீரர்களாய் பார்த்தோம்.

இப்படியொரு மனநிலையும், அணுகுமுறையும் அந்த காலகட்டத்திற்கு தேவைப்பட்டது. ஆனால், அந்த நாட்கள் கடந்தோடிப் போய் வெகுகாலம் ஆகிவிட்டது என்பதனை நாம் புரிந்துகொள்வது மிக அவசியம். ஒரு அரசன் நம்மை ஆளவேண்டிய ஒரு நிலையிலேயே நாம் இன்னமும் இருக்கிறோம். ஒரு மனிதனுக்கு துதிபாடி, தனிப்பட்ட அந்த மனிதனிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைக்கும் நிலைக்கு உயர்த்துவதையே விரும்புகிறோம். குறிப்பிட்ட அந்தஸ்தும், பதவியும் வைத்திருப்பவர்கள் கேமிராவிற்கு முன் அப்பட்டமான பொய்களை கூறும் நிலையில்தான் இன்றைய பொதுவாழ்க்கை இருக்கிறது. இது ஆச்சரியத்தை அளிக்கிறது.

அவர்கள் பேசும்போதே அனைவருக்கும் அது பொய்யென்று தெரியும், இருந்தும் அவர்கள் அதிலிருந்து மீண்டுவிடுகிறார்கள். யாரோ ஒருவர் உள்நோக்கத்துடன் பொதுமக்களை தவறாய் வழிநடத்தினால், அடுத்த நாளே அவர் நீக்கப்பட வேண்டும். அவர்களுடைய தனிப்பட்ட ஈர்ப்புத்திறனும், பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களும் இருப்பதால், அவர்கள் நினைப்பதைச் சொல்லிவிட்டு அதற்கு பொறுப்பேற்காமல் போவதற்கான வாய்ப்புகளை வழங்கிவிடுகிறது. நாம் முன்னேற வேண்டுமென்றால் இதுபோன்ற விஷயங்களை ஒழித்துக் கட்டுவது அவசியமாகிறது.

தேசம் என்பது புவியியல் ரீதியான ஒரு அமைப்பு மட்டுமல்ல, அதுவொரு ஸ்தாபனம், சங்கம். இந்த ஸ்தாபனத்திற்குள், சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும், பங்கேற்புகள் வழங்கப்பட வேண்டும், அதன்மூலம் பலன்களும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஒரு குடிமகனாய், கட்டமைப்பு வசதிகள், சேவைகள் மூலம் நாம் பலன்களைப் பெறாவிட்டால், அதனை வேண்டிப் பெறுவதற்கான உரிமை நம்மிடம் உள்ளது. நமது பணம் எங்கு செல்கிறது என்று கேள்வி கேட்க நமக்கு உரிமையுண்டு.

தற்சமயம், நாம் பங்களிப்பதும் இல்லை, உரிமைகளை கேட்டுப் பெறுவதும் இல்லை. இதனை நாம் புரிந்துகொள்ளவும் இல்லை. கட்டமைப்பு வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு, அரசு இயங்குவதற்கு பணம் கொடுப்பது நமது பொறுப்பு என்பதை நாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம் தேசம் சிறப்பாய் இயங்க, அனைவரும் பங்களிக்க வேண்டும். அனைவரும் பின்பற்றக்கூடிய தெள்ளத் தெளிவான சட்டதிட்டங்கள் நிலவவேண்டும். சட்டதிட்டங்களை எளிமைப்படுத்தி, தவறாய் புரிந்துகொண்டுள்ளவற்றை குடிமக்களுக்கு தெளிவுப்படுத்துவது தேசத்தின் இப்போதைய தேவை.

Love & Grace