நிலையான எதிர்காலதிர்கான தீர்வுகள்
@இந்தவார சத்குரு ஸ்பாட்டில், Sustainability Summit Asia 2018 மாநாட்டில், சுற்றுச்சூழலை வருங்கால சந்ததியினர் வாழத்தகுதியாக நிலைத்திருக்கச் செய்ய என்னென்ன செய்யமுடியும் என்பதை விளக்குகிறார். The Economist magazine பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், நவம்பர் 15ம் தேதி மலேஷியாவில் குவாலா லம்ப்பூர் (Kuala Lumpur, Malaysia) நகரத்தில் முக்கியவுரை ஆற்ற சத்குரு அழைக்கப்பட்டிருந்தார்.
மாநாட்டில் சத்குரு பேசியதன் தமிழாக்கம்
கேள்வி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இப்படி அக்கறை உருவாக்க எப்படிப்பட்ட தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சத்குரு: சுற்றுச்சூழல் பற்றிய கவனம் அனைவருடையதாகவும் மாறாததற்குக் காரணம், சுற்றுச்சூழல் போராளிகள் பேசுவது பொருளாதார நன்மைக்கு எதிரான ஒரு கண்ணோட்டமாக இருக்கிறது. "சுற்றுச்சூழலா? பொருளாதாரமா?" என்றுதான் நாம் எப்போதும் பார்க்கிறோம். இந்தியாவில் இந்த அடிப்படையை நான் மாற்ற விரும்பினேன். நான் இப்படி சொல்லவும் செய்தேன், "பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான திருமணத்தை நான் நடத்திவைக்கிறேன்!" ஏனென்றால் இவ்விரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கமுடியாது. இருந்தால் இதை நடத்த வழியேயில்லை. இவ்விரண்டும் ஒருங்கே நடந்தேற வேண்டும். அடிப்படையாக வெளியே போகவேண்டிய செய்தி இதுதான் - நாம் தொழில்களை அழிக்கவேண்டிய அவசியமில்லை, தொழில்களை மாற்றியமைக்க மட்டுமே வேண்டும். அதற்குத் தேவையான நேரம், இடம் மற்றும் கொள்கை மாற்றத்தின் உதவியை நாம் வழங்கவேண்டும்.
விவசாயத்தில் மாற்றம் ஏற்படுத்துவது
சுற்றுச்சூழல் மாசுபடுவது என்றாலே பெரும்பாலும் நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் மாசு என்றுதான் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், பூமியில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்துவது நமது விவசாயமுறைதான் என்பதை அவர்கள் தவறவிடுகிறார்கள். மண்வளம் குறைந்து வருவதுதான் உண்மையான பிரச்சனை. மற்றவை அனைத்தையும் சில ஆண்டுகளில் நம்மால் சரிசெய்துவிட முடியும். பூமி முழுவதும் மண்வளம் குறைந்துவருவதை நம்மால் உடனே சரிசெய்துவிட முடியாது; அதை சரிசெய்ய ஐம்பது முதல் நூறு வருடங்கள் ஆகும். மண்வளத்தைப் பெருக்க இரண்டே வழிகள்தான் உள்ளன - ஒன்று, மரங்களிலிருந்து விழும் இலைகள், மற்றொன்று விலங்குகள் மற்றும் மனிதர்களின் கழிவுகள். மரங்கள் என்றோ அழிந்துவிட்டன. அடுத்து தேவைப்படுவது விலங்குகளின் கழிவுகள், விலங்குகள் இல்லாமல் மண்வளத்தைப் பெருக்கமுடியாது. உரமூட்டைகளைக் கொண்டு மண்வளத்தை பெருக்கமுடியாது.
சுற்றுச்சூழலுக்கு ஆன்மீகம்
கேள்வி : நம்மைச் சுற்றியுள்ள சூழலியலுடனான உறவில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆன்மீக செயல்முறை இருப்பதாக உணர்கிறீர்களா?
சத்குரு: அடிப்படையில், ஆன்மீகம் என்றால் உங்கள் வாழ்க்கை அனுபவம் உங்கள் உடலைக் கடந்து விரிந்துவிட்டது என்று அர்த்தம். எனவே உங்கள் உடலைக் கடந்து உங்களை நீங்களே உணர்கிறீர்கள் என்றால், உங்கள் அனுபவம் என்னவாக இருக்கும்? இயற்கையாகவே உங்களைச் சுற்றியுள்ள உயிர்களை இணைத்துக்கொள்வீர்கள்.
எனவே நான் என்ன வெளிமூச்சு விடுகிறேனோ அதை மரங்கள் உள்மூச்சாக எடுத்துக்கொள்கின்றன; மரங்களின் வெளிமூச்சை நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் உள்மூச்சாக எடுத்துக்கொள்கிறோம். ஆன்மீக செயல்முறை சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்டதல்ல, ஆனால் சுற்றுச்சூழல் நம் இருப்பின் அங்கமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் நாம் புத்தகத்தில் படிக்கும் பாடமல்ல. சுற்றுச்சூழல்தான் நம் இருப்பின் அடிப்படையே. இந்த அனுபவத்தை பெரிய அளவில் மக்களுக்கு கொண்டுசெல்வது மிக மிக முக்கியம். ஏனென்றால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாடம் புகட்டலாம், பிரச்சாரம் செய்யலாம், ஆனால் மக்கள் தங்களது வாழ்க்கை அனுபவத்தைச் சுற்றித்தான் தங்கள் வாழ்க்கையை வடிவமைக்கிறார்கள். குறிப்பாக பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் வகிப்பவர்கள், உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பதால், அவர்களின் வாழ்க்கை அனுபவம் தற்போது இருப்பதைவிட அதிகம் இணைத்துக்கொள்வதாக மாறவேண்டும். நான் உங்களுக்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.
இருபத்தி ஏழு வருடங்களாக நான் என் பிறந்த ஊருக்கு செல்லவில்லை. என் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றுள்ளேன், ஆனால் அங்கு எந்த யோகா வகுப்பும் நடத்தவில்லை, ஏனென்றால் என் ஊரில் நான் சற்று பரிட்சயமில்லாதவராக இருக்க விரும்பினேன். ஆனால் அது வேலை செய்யவில்லை, அதனால் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு வகுப்பு நடத்தச்சொல்லி என்னை வற்புறுத்தினார்கள், எனவே நானும் நடத்தினேன். அங்கு எனக்கு முன்பே தெரிந்தவர்கள் எல்லோரும் வந்தார்கள், பள்ளியில் உடன் படித்தவர்கள், எனது பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், நீண்ட காலமாக எனக்குத் தெரிந்திருந்த பலதரப்பட்ட மக்கள் அனைவரும் வந்தார்கள்.
வகுப்பு முடிந்ததும் என் ஆங்கில ஆசிரியர் வந்து என்னை கட்டியணைத்து, "ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதிய கவிதையை கற்றுக்கொடுக்க நீ ஏன் அனுமதிக்கவில்லை என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது" என்றார். நான் அவரிடம், "அம்மா, ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதியதை நான் ஏன் உங்களை கற்றுக்கொடுக்க விடாமல் செய்யப்போகிறேன், எனக்கு அவரது எழுத்தின்மேல் மிகுந்த பிரியமுண்டு, அவர் குரலில் பேசிப்பதிந்த கவிதைகளின் தொகுப்பு என்னிடம் இருக்கிறது." என்றேன். அதற்கு அவர், "உனக்கு நினைவில்லையா?" என்று கேட்டு அந்த சம்பவத்தை நினைவுபடுத்தலானார். ஆங்கில கவிஞர்கள் பற்றி நாங்கள் படித்துக்கொண்டு இருந்தபோது, அவர் எங்களுக்கு ராபர்ட் ஃபிராஸ்ட் ஒரு மகத்தான கவிஞர் என்று அறிமுகப்படுத்தி, அவரின் கவிதை ஒன்றின் முதல் வரியை இப்படி வாசித்தார்: "Woods are lovely, dark and deep…" உடனே அவரை நான் நிறுத்தச் சொன்னேன். மரங்களை "wood" என்று சொல்லும் இவர் கவிதையை நான் கேட்க விரும்பவில்லை என்றேன். அதற்கு அவர் "இல்லையில்லை அவர் பெரிய கவிஞர்," என்றார். நான், "அவர் எவ்வளவு மகத்தானவராக இருந்தாலும், மரங்களை "wood" என்றால் அவர் சொல்வதை நான் கேட்க விரும்பவில்லை" என்றேன்.
Subscribe
இது ஒரு புலி உங்களைப் பார்த்து, "காலை உணவு!" என்று நினைப்பதற்கு சமம். நம் மனதில் இது மாறவேண்டும். ஒரு மரம் என்பது டேபிள் இல்லை, சேர் இல்லை, மரச்சாமான் இல்லை, மரம் என்பது அபாரமான ஒரு உயிர், அதுதான் நம் உயிரின் அடிப்படையே. இது அனைவருக்கும் அனுபவப்பூர்வமாக உண்மையானால் மட்டுமே சுற்றுச்சூழலுக்கு நிலையான தீர்வுகள் கிடைக்கும்.
தனிமனிதர்கள் மேல் ஏற்படுத்தும் தாக்கம்
கேள்வி : தனிமனிதர்கள் தாங்கள் நுகர்வது மேல் உள்ள அபிப்பராயத்தை மாற்ற வேண்டுமா? அல்லது அதனினும் பெரிய தீர்வுகள் தேவைப்படுகிறதா?
சத்குரு: தனிமனிதர்கள் இன்று சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு நல்ல விஷயம், இன்று சமூக ஊடகங்கள் உள்ளன. எனவே அவர்களால் வீட்டில் இருந்தபடியே நிறைய வேலை செய்யமுடியும். அது தவிர, பூமியில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயகமாக இருக்கின்றன. தேசத்தின் பிரஜைகள் இதை தங்களுக்குள் நிலைப்படுத்தி அரசுக்கு தெளிவாக்கவில்லை என்றால், ஜனநாயகத்தால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் எதுவும் செய்யாது; எது மக்கள் மத்தியில் பிரபலமானதோ அதைத்தான் அவர்கள் செய்வார்கள். நெடுங்காலத்தில் நிலையான நன்மையை வழங்கக்கூடிய ஒன்றிற்காக, சில வசதிகளை நாம் தியாகம் செய்ய விருப்பத்துடன் இருக்கிறோம் என்பதை நாம் வெளிப்படுத்தவில்லை என்றால், எந்த அரசாங்கமும் இதற்காக கொள்கைகள் உருவாக்காது.
அரசாங்கத்தின் தாக்கம்
அரசாங்கங்கள் மெதுவாகத்தான் செயல்பட முடியும். மிகப்பெரிய கன்டெயினர் லாரியால் அதிரடியாக யூ-டர்ன் செய்ய முடியாது. இது எனக்கு தெளிவாகத் தெரியும். நான் அவர்கள் ஒரே ஒரு டிகிரி திரும்பவேண்டும் என்றுதான் கேட்கிறேன். வாகனத்தை ஒரே ஒரு டிகிரி திருப்பி அப்படியே பிடித்துக்கொண்டால், அது மெதுவாக யூ-டர்ன் ஆகிவிடும்.
கேள்வி : இன்று காலை, இதற்கு முன் ஒருவரை ஒருவர் சந்தித்திராத இந்திய அரசின் அங்கத்தினரை ஒன்றுசேர்த்தீர்கள் என்று குறிப்பிட்டீர்கள்.
சத்குரு: இந்தியாவில் பல்வேறு அமைச்சகங்கள் உள்ளன - நீர் மேலாண்மை அமைச்சகம் இருக்கிறது, நீர்ப்பாசண அமைச்சகம் இருக்கிறது, கிராம மேம்பாட்டு அமைச்சகம் இருக்கிறது, விவசாய அமைச்சகம் இருக்கிறது - ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை. எனவே அவர்களை ஒருவரையொருவர் சந்திக்க வைத்து, ஒன்றாக அவர்களால் என்ன செய்யமுடியும் என்று பார்க்கவைத்தோம். அதுதான் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது திட்டமிடல் கமிஷன், அல்லது இன்று 'நிதி ஆயோக்' என அழைக்கப்படும் அமைப்பு, இருபத்தி ஒன்பது மாநிலங்களுக்கும் நதிகள் மீட்பு இயக்கம் பரிந்துரைக்கும் கொள்கைகளை செயல்படுத்தச்சொல்லி அறிக்கை அனுப்பியுள்ளது. பல மாநிலங்கள் இதை ஏற்கனவே ஏற்றுவிட்டன. சில மாநிலங்களில் நாங்கள் நேரடியாக கலந்துகொள்கிறோம்; மற்ற மாநிலங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறோம்.
தீர்வுகளுக்கு ஒன்றாக வேலைசெய்வது
பல சுற்றுச்சூழல் போராளிகளிடம் நான் பேச முயன்று வருகிறேன், அவர்கள் எதிர்த்துப் போராடும் பிரச்சனைகளுக்கு அவர்களிடம் தீர்வுகள் இருக்கிறதா என்று கேட்கிறேன். ஆழமாகப் பாருங்கள் என்கிறேன். தீர்வு இருக்கிறதென்றால், பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதற்கு பதில் தீர்வுகளை பரிந்துரையுங்கள் என்கிறேன். உதாரணத்திற்கு குளிர்பானம் தயாரிப்பவர்கள் கண்ணாடி பாட்டிலிலிருந்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலிற்கு மாறியது, இது அதைவிட மிகவும் சௌகரியமாக இருக்கிறது என்பதால். இதை மறுசுழற்சி செய்யமுடியாமல் இருப்பது, அதில் ஒரு பேப்பர் லேபிள் இருப்பதால்தான். எனவே கொஞ்சம் ஆராய்ச்சி செய்தோம், இதற்குத் தீர்வாக பெயரை பாட்டிலில் அச்சிடமுடியுமா என்று பார்த்தோம். சிக்காகோவில் (Chicago) ஒரு கம்பெனி ஒருவித சாயத்தை தயாரிக்கிறார்கள், அதைக்கொண்டு அச்சிட்டால் அது பேப்பர் போலவே காட்சியளிக்கும். அந்த ஒரு விஷயத்தை செய்துவிட்டால், இந்த பிளாஸ்டிக் பாட்டில் அனைத்தையும் மறுசுழற்சி செய்துவிடலாம்.
இப்படி தொழில் செய்பவர்கள், தாங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் அரசாங்கத்திடம், "இப்படி எங்களால் மாற்றம் செய்ய முடியும், ஆனால் அதற்கு எங்களுக்கு நீங்கள் சில சலுகைகள் வழங்கினால் நாங்கள் மாற்றுகிறோம்" என்று சொல்லலாம். இப்படி தொழிற்சாலைகள் அரசாங்கத்துடன் கைகோர்த்து, "இந்த மாற்றங்களை நாங்கள் செய்ய விரும்புகிறோம், ஆனால் அதற்கு எங்களுக்கு பலனளிக்கும் விதமான இந்த கொள்கை மாற்றங்கள் தேவை" என்று பரிந்துரைக்க வேண்டும்.
நிலையான தொழில் முறைகள்
எது லாபம், எது வெற்றிகரமான தொழில் என்பது பற்றிய நமது கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். இது ஒரு நாளில் நடக்கக்கூடிய மாற்றமல்ல. இது மெதுவாக நடக்கவேண்டும். இது நிச்சயம் நடக்கிறது. இன்று நிறைய தொழில்கள், தாங்கள் சுற்றுச்சூழல் நிலைத்திருப்பதற்கு என்ன செய்யமுடியும் என்று பார்க்கிறார்கள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இப்படியொரு கவனம் இருக்கவேயில்லை. அந்த திசையில் இப்போது முதலீடு செய்யத் துவங்கியுள்ளார்கள். இதற்காக மக்கள் பணத்தை செலவுசெய்தால், அவர்களுக்கு சரியான நோக்கம் இருக்கிறது என்று நாம் நம்பலாம்.
நாம் எத்தகைய திருத்தங்கள் செய்யப்போகிறோம் என்ற வகையில், அடுத்த இருபத்தைந்து வருடங்கள் மனிதகுலத்தின் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது. மண், ஆறுகள், காடுகள், விவசாயம் மற்றும் மனித ஆரோக்கியத்தை நாம் கவனித்துக்கொண்டால், நாம் எல்லாவற்றையும் கவனிப்பவர்களாக இருப்போம். அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்நிலையை நாம் மாற்றினால், சரியான விஷயங்களை நாம் செய்தால், முப்பது நாற்பது வருடங்களில் நல்லவிதத்தில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆனால் நாம் இருபத்தைந்து முப்பது வருடங்கள் இடைவெளி விட்டு அதற்குப் பிறகு இதை சரிசெய்ய முயன்றால், என் கணிப்பில் இதை சீர்செய்ய நூறு நூற்றைம்பது வருடங்கள் எடுக்கும். ஏனென்றால் நாம் ஒரு எல்லையைக் கடக்கவிருக்கிறோம். அந்த எல்லைக்கோட்டைக் கடந்துவிட்டால், இதை மீளுருவாக்கம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களாக நம்மிடம் இந்த பொறுப்பு இருக்கிறது, அடுத்து பத்து பதினைந்து ஆண்டுகளில், கொள்கை அளவிலாவது சரியான விஷயங்கள் நடக்கவேண்டும்.
நான் ஏன் கொள்கை வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்றால், கொள்கை மாற்றம் இருந்தால்தான், பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்படும், அப்போதுதான் அதை செயல்படுத்துவது நோக்கி நிலையாக நகரமுடியும். குறிப்பாக உலகில் மிக அதிகமான மக்கள்தொகை இருக்கும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நாம் சரியான கொள்கைகள் உருவாக்கினால், உலகத்தின் மீதியும் அதை பின்தொடரும் என்றே நான் கருதுகிறேன்.
'ஒரு கட்டிட நகரம்'
ஆசியாவில் இருக்கும் ஒரு சாதகமான விஷயம், நமக்கு குறையே இல்லாமல் சூரிய ஒளி கிடைக்கிறது. எனவே சூரிய சக்தியை பயன்படுத்துவது மிகப்பெரிய படியாக இருக்கும். தொழில்நுட்பம் மேலும் வளரவேண்டும், ஆனால் பல தீர்வுகள் கிடைக்கத் துவங்கியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாம் உருவாக்கிய இந்த மின்சார விநியோக கிரிட் (power distribution grid) அமைப்புகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும். எங்கு பயன்படுத்துகிறோமோ அங்குதான் நாம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்.
இன்று எந்த நகரத்தை நீங்கள் பார்த்தாலும், நேற்று இரவு 9 மணிக்கு நான் குவாலா லம்ப்பூர் (Kuala Lumpur) நகரத்தில் வாகனம் ஓட்டிச்சென்றபோது, சாலை முழுவதும் டிராஃபிக் ஜாம். எல்லா நகரங்களிலும் இதுதான் நடக்கிறது, இங்கு வசிப்பவர்கள் அங்கு வேலை செய்கிறார்க்ள், அங்கு வசிப்பவர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். ஏன் என்று எனக்கு புரிவதில்லை. இவை நாம் செய்யக்கூடிய எளிய மாற்றங்கள். எனவே நான் 'ஒரு கட்டிட நகரம்' என்பதை வடிவமைத்துள்ளேன். இவற்றை நாம் நகரம் என்றே அழைக்கவேண்டும். ஐம்பது ஏக்கர் நிலம் இருந்தால், அதில் ஒரு ஏக்கர் மட்டும் கட்டிடம் கட்டவேண்டும், அதில் ஐம்பது தளங்கள் இருக்கலாம். மற்ற நாற்பத்தொன்பது ஏக்கரையும் அப்படியே விட்டுவிட வேண்டும், அதில் மரங்கள் நட்டு காடு வளர்த்து, நீர்நிலைகள் உருவாக்கலாம். இந்த நிலத்திலிருந்து எந்த கழிவும் வெளியேறாத விதமாகச் செய்யலாம். இதை வெகு சுலபமாக செய்திட முடியும்.
மக்கள் இன்னும் நலமாக வாழ்வார்கள். எல்லாம் அங்கேயே அமைத்துவிடலாம். அவர்கள் அங்கேயே வாழலாம், அங்கேயே வேலைசெய்யலாம், குழந்தைகள் அங்கேயே பள்ளிக்கூடம் செல்லலாம், அங்கேயே ஷாப்பிங் செய்யலாம். வாரம் ஒருமுறை எங்காவது வெளியே செல்ல விரும்பினால் செல்லலாம். ஆனால் தினமும் உங்கள் வாகனத்தை வெளியே ஓட்டிச்செல்ல வேண்டிய அவசியமிருக்காது.
நீர்வளமும் மரங்களும்
நதிகள் மீட்பு இயக்கத்தைத் துவங்கும்முன், பசுமைக்கரங்கள் திட்டம் கிட்டத்தட்ட 3.3 கோடி மரங்கள் நட்டது, ஒரு மாநிலத்தின் மரப்போர்வையை அதிகரித்தது. ஆனால் இப்போது நதிகள் மீட்பு இயக்கம் மூலம் நாம் ஆறு மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளோம், அதன்மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 700 கோடி மரங்கள் நடப்படவுள்ளது. அதுவும் பெரும்பாலும் அரசு நிதியில் செய்யப்படவுள்ளது.
பல மாநிலங்கள் தாங்கள் நதிக்கரைகளில் ஒரு கிலோமீட்டருக்கு மரங்கள் நடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். ஆனால் இப்போது நிலத்தில் 62 முதல் 64 சதம் விவசாயிகளுக்கு சொந்தமானதாக இருப்பதால், அவர்களிடம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பற்றி நம்மால் பேசமுடியாது, ஏனென்றால் அவர்கள் பிழைப்பிற்கே போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் நாம் வேளாண் காடுகள் திட்டத்தை உருவாக்கியுள்ளோம், அதன் மூலம், மரவளர்ப்புக்கு மாறிய ஐந்து ஆண்டுகளில் வெகு சுலபமாக வருமானத்தை மூன்று முதல் ஐந்து மடங்காகப் பெருக்கமுடியும் என்பதைக் காட்டியுள்ளோம்.
அடிப்படையில், மிகவும் முக்கியமானது, மனிதர்கள் உயிருடனும், உயிருக்கு ஊட்டம்தந்து பேணிவளர்க்கும் எல்லாவற்றுடனுமான தொடர்பை இழந்துவிட்டார்கள். இந்த அழிவுதான் நம்மைச் சுற்றிலும் சுற்றுச்சூழலின் சீரழிவாக பிரதிபலிக்கிறது. அடிப்படையில் நாம் மனதளவில் இயங்கும் உயிர்களாக மாறிவிட்டோம், உயிரோட்டமான உயிர்களாக நாம் இயங்கவில்லை. நாம் மனிதர்களை மீண்டும் உயிரோட்டமானவர்களாக மாற்றவேண்டும்.