மண்ணுடன் ஆழமான தொடர்புகொள்ளுங்கள்
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தாய்மண் என்று நம் மண்ணை அன்புடன் அழைப்பதன் அர்த்தத்தையும், தாயிடம் ஊட்டம்பெறுவதற்கான வழியையும் சத்குரு சொல்கிறார். தட்சிணாயனம் துவங்கும் இவ்வேளையில், ஆன்மீக சாதனை செய்வதன் மகத்துவத்தை உணர்த்த நாமே முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தாய்மண் என்று நம் மண்ணை அன்புடன் அழைப்பதன் அர்த்தத்தையும், தாயிடம் ஊட்டம்பெறுவதற்கான வழியையும் சத்குரு சொல்கிறார். தட்சிணாயனம் துவங்கும் இவ்வேளையில், ஆன்மீக சாதனை செய்வதன் மகத்துவத்தை உணர்த்த நாமே முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
யோக மரபில், வருடத்தின் இப்பாதி, தட்சிணாயனம் அல்லது சாதன பாதா என்று அழைக்கப்படுகிறது. இது நம்மீது நாம் வேலை செய்வதற்கான நேரம். விவசாயத்திலும் தோட்டவேலையிலும் உள்ளது போல, வேலைசெய்ய ஒரு காலமிருக்கிறது, ஓய்வாக உட்கார்ந்து பூக்களும், கனிகளும் வளர்வதைப் பார்ப்பதற்கு ஒரு காலமிருக்கிறது. வளர்வதும், மலர்வதும் நேரடியாக நாம் செய்வதல்ல. அவை நிகழ்வதற்கு, நம்மை இயங்கச்செய்யும் அம்சங்கள் அனைத்தையும் நமது ஆளுமைக்குள் எடுத்துவரவேண்டும். நம் உடல், நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் சக்திகள், இவ்வுடலை உருவாக்கும் பஞ்சபூதங்கள், நாம் இங்கு எவ்வளவு காலம் இருக்கப்போகிறோம் என்பதை நிர்ணயிக்கும் காலம், இவ்வனைத்தையும் நம் ஆளுமைக்குள் எடுத்துக்கொண்டால், மலர்கள் மலர்வதை எவராலும் தடுக்கமுடியாது.
Subscribe
அடுத்த ஆறு மாதங்களில், பூமியுடன் சூரியன் கொண்டுள்ள தொடர்பு மாறுபட்டதாக இருக்கப்போகிறது. அதனால் பூமியுடனான உங்கள் தொடர்பையும் அதற்கேற்ப நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நாம் பூமியின் மீதுதான் நடக்கிறோம், பூமியில் விளைவதையே உண்கிறோம், பூமியோடுதான் சுவாசிக்கிறோம். சொல்லப்போனால் நீங்கள் இந்த பூமியின் ஒரு சிறு துளி, ஆனால் அதைப் பெரும்பாலான நேரங்களில் மறந்துவிடுகிறீர்கள். தட்சிணாயனம் என்பது பூமியுடன் ஆழமான தொடர்பில் இருப்பது பற்றியது. மண்ணோடு உள்ள இந்த ஆழமான உறவு நம் தேசத்தின் கலாச்சாரத்திலும் பிரதிபலிக்கிறது. விந்திய மலைத்தொடரின் தெற்கே உள்ள கலாச்சாரங்கள் மண் நோக்கி அமைந்தவை. இங்கு பஞ்சபூதங்களில் மண்ணும் நீரும் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. வடக்கில் உள்ள கலாச்சாரங்களோ, நெருப்பும் விண்ணும் நோக்கியவை. வடக்கில் "தெய்வீகம்" என்றால் மக்கள் மேலே பார்ப்பார்கள். "மேலே இருப்பவன்" என்பது வடக்கில் இருந்து வந்த கருத்து. தென்பகுதியில் "தெய்வீகம்" என்றால் மக்கள் கீழே பார்ப்பார்கள்.
தமிழில் மண்ணை "தாய்மண்" என்கிறோம். நம் கலாச்சாரத்தில் மண்தான் நம் தாய் என்ற ஆழமான புரிதல் இருக்கிறது. இந்த மண்ணிலிருந்தே பிறக்கிறோம். நம்மை ஈன்றெடுத்த தாய், அதே மண்ணிலிருந்து பிறந்த மண்ணின் பிரதிநிதி மட்டுமே. உண்மையான தாய் என்றால், நாம் உடலாக சுமக்கும் இந்த மண்தான். ஆனால் இந்நாட்களில் மண்ணை "அழுக்கு" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். குழந்தைகள் மண்ணில் கைவைத்தால், இன்றைய தாய்மார்கள் "உன் கைகள் அழுக்காகிவிடும்" என்பார்கள். அது அழுக்கல்ல, உங்கள் உயிரின் மூலத்தைத் தொடுகிறீர்கள். உங்கள் உயிரின் மூலத்தை அழுக்கு என்று தவறாக புரிந்துகொள்ளும்போது, உங்கள் வேர்களை ஆழமாக மண்ணில் செலுத்தி, உங்கள் முழுத்திறனுக்கும், முழுஆற்றலுக்கும் வளர்ந்து பூவும், கனியும் காண்பதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
ஒரு மரம், "என் வேர்கள் அழுக்காகின்றன" என்று நினைத்தால் பூவும் இருக்காது கனியும் இருக்காது. ஒரு மரம் மண்ணுக்குள் தன் வேரைச் செலுத்தும்போது, அதுதான் தன் உயிரின் மூலம் என்பதை அறிந்திருக்கிறது. ஆனால் பூமியிலேயே மிக புத்திசாலி உயிரினமாகக் கருதப்படும் நம்மால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது மனிதர்கள் அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு இதுவே மூலம். ஞானோதயத்தை மறந்துவிடுங்கள், உயிரின் பிற பரிமாணங்கள் உணர்வதை மறந்துவிடுங்கள், மற்ற உயிரினங்கள் முயற்சியின்றி ஆரோக்கியமாக இருக்கும்போது மனிதர்களால் அதுகூட முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் தங்கள் வேர்களை மண்ணுக்குள் ஆழமாகச் செலுத்துவதில்லை. அவர்கள் மனதில் எங்கோ சிக்கியிருப்பதால், மண் என்பது அழுக்கு என்றாகிவிட்டது.
உலகம் முழுவதன் கலாச்சாரமும் இப்படி மாறிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்கள் தாங்கள் சொர்க்கத்தில் இருந்து விழுந்ததாக நினைத்துக்கொள்கிறார்கள். பல மதங்கள் நீங்கள் சொர்க்கத்தில் இருந்து விழுந்ததாகச் சொல்கின்றன. உங்கள் திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்கின்றன - அதனால்தான் அது பலருக்கு "வேற்றுலக" அனுபவமாக இருக்கிறது. நீங்கள் இந்த பூமியிலிருந்தே முளைத்தீர்கள். பலவிதங்களில் ஆதியோகி இதை வலியுறுத்தினார்: பஞ்சபூதங்களை உங்கள் ஆளுமைக்குள் எடுத்துக்கொள்வதால் மட்டுமே உங்கள் தன்மையை நீங்கள் உணர்ந்து வாழ்க்கையின் சுழற்சிகள் மீது சவாரி செய்யமுடியும் என்றார். இந்த மண்தான் உங்கள் மூலம், மண்ணிடமிருந்து நீங்கள் ஊட்டம் பெறாவிட்டால் - வெறும் பொருள்தன்மையில் அல்ல, எல்லா விதத்திலும் - அதனுடன் நீங்கள் ஒத்திசைவாக இல்லாவிட்டால், சுழற்சிகள் மீது சவாரி செய்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.
நீங்கள் மலர விரும்பினால், உங்கள் வேர்களை மண்ணுக்குள் ஆழமாகச் செலுத்த வேண்டும். மண்ணில் வாழும் உயிராக மாறவேண்டும். உங்கள்மீது மண்ணை அள்ளிப்போடும்போது அனைவரும் அழுவதுபோல் பாசாங்கு செய்யும் அந்த நாளுக்காகக் காத்திருக்காதீர்கள். இதை உணர்வதற்கு இன்றே நல்லநாள். சரித்திரத்தில், முன்பு எப்போதும் இல்லாத அளவு நம் புத்தி செயல்படும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். முன்பு எப்போதும் இல்லாத அளவு மனிதர்கள் தங்களுக்காக தாங்களே சிந்தித்துக்கொள்கிறார்கள். நம்மால் கண்டம் விட்டு கண்டம் தொடர்புகொள்ள முடிகிறது, இது முன்பு எப்போதும் சாத்தியமாக இருந்ததில்லை. மனிதர்களைச் சென்றடையும் நம் திறனுக்கு இன்று எல்லையே இல்லை என்று சொல்லலாம். இதன் மகத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். இப்படியொரு சாத்தியம் இருக்கும்போது, பூமியில் மிகப்பெரிய செய்தி எதுவோ அதை நீங்கள் தவறவிடக்கூடாது. தனக்கு இருக்கும் மிக உயர்ந்த சாத்தியங்கள் என்னென்ன என்று ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். இப்பாதையை முழுவதுமாக நடந்து கடப்பார்களா இல்லையா என்பது அவர்கள் விருப்பம்.
வாழ்க்கையை நடத்துவதற்கு உயர்ந்த வழிகள் உள்ளன என்பதை அனைவரும் அறியவேண்டும். அதை இன்று செய்யப்போகிறார்களா, நாளையா, பத்து வருடங்களுக்குப் பிறகா, அல்லது மரணப்படுக்கையிலா என்பது அவர்கள் தேர்ந்தெடுப்பது, அது அவர்களின் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கிறது. அது அவர்கள் விருப்பம், ஆனால் இருக்கும் சாத்தியங்களை அவர்கள் அறியவேண்டும். உங்கள் ஆன்மீக சாதனை பலனளிக்கிறது என்பதை நீங்கள் வாழும் விதத்தில் காட்டவேண்டும். உங்களுக்கு நடக்கும் அற்புதமான விஷயங்களை உங்கள் முகத்தில் அவர்கள் பார்க்கவேண்டும். உங்களைப் பிடிக்காதவர்கள் கூட உங்களைப் பற்றிய அற்புதமான ஒன்றைப் பார்க்க முடியவேண்டும். இதுதான் அடுத்த ஆறு மாதங்களுக்கு உங்கள் வேலை. உங்களுக்கு இதை நிகழச்செய்யுங்கள்.