மனித விழிப்புணர்வை மேலெழுப்புவோம்...

இரண்டாவது வருடமாக மிகுந்த சிறப்புடன் இன்சைட் நிகழ்ச்சி ஈஷா யோகா மையத்தில் நடந்தது. இதில் பங்குபெற்ற மிகப் பெரிய தொழில் தலைவர் ஒருவர், ஈஷாவின் இயக்கமுறையை பார்த்து அசந்து போய், "ஈஷாவை நீங்கள் எப்படி உருவாக்கினீர்கள்" என சத்குருவிடம் கேட்க, அவரது கேள்விக்கு விடையாய் இதோ இங்கே சத்குரு ஸ்பாட். ஈஷா மலர்ந்த ரகசியம் தொழில் தலைவர்களுக்கு மட்டுமல்ல, இங்கே உங்களுக்காகவும்... படித்து மகிழுங்கள்!


Question: அன்பார்ந்த சத்குரு, கடந்த மூன்று நாட்களாக ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சிகள் (இன்சைட் 2013 நிகழ்ச்சி) மாசற்றதாகவும் அற்புதமானதாகவும் இருந்தது. எந்தவொரு அமைப்பும் இதுபோன்ற சேவையை வழங்கவே விரும்பும். ஈஷா தன்னை எப்படி நடத்திக் கொள்கிறது? இந்த அமைப்பை, அதன் அடிமட்டத்திலிருந்து எப்படி எழுப்பினீர்கள்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் பால்ய வயதிலிருந்தே, ஒரு அமைப்பு உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. சில காலங்களுக்கு ஒர் அமைப்பை உருவாக்குவதை நான் தவிர்த்து வந்தேன். பலபேர் நம்மிடம் கூடினர், அதனால் நம்மால் இப்படியொரு அமைப்பை உருவாக்குவதை தவிர்க்க இயலாமல் போனது. இடம்விட்டு இடம்பெயரும் என் பயண சுதந்திரத்தை நான் பெரிதும் விரும்பினேன். மக்களுள் தீயிலிருப்பதைப் போன்ற தீவிரத்தை ஏற்றிவிட்டு மற்றொரு இடத்திற்கு பிரயாணம் செய்துவிடுவேன். நான் திரும்ப வந்து சேரும் வரை, அடுத்த சில மாதங்களுக்கு நான் எங்கிருக்கப் போகிறேன் என்று அவர்களுக்கு தெரியாது. சுமார் பத்து வருடங்களுக்கும் மேல், என் வாழ்க்கை இதுபோல் நகர்ந்தது. ஈஷாவை ஒர் அமைப்பு என நாம் சொல்வது சரி வராது, ஏனென்றால் நம் கலாச்சாரத்தில் சில யோகிகளை "ஆயிரம் கரம் கொண்டவர்" என நாம் வர்ணிப்பதுண்டு.

என்னுள் ஏற்பட்ட அந்த சில விஷயங்களை நான் பலருக்கும் கொடுக்க விரும்பினேன். நான் செய்ய நினைத்ததும், செய்து கொண்டிருப்பதும் இதைத்தான். சில மணி நேரங்களில் என்னுள் நடந்த அந்த மாற்றத்தை, அனுபவமாக பிறர் மேல் தேய்த்துவிட எண்ணினேன். அந்தவொரு அனுபவம் என்னை பரிபூரணமாக மாற்றிவிட்டது. இதனை நான் சில பேரிடம் வெற்றிகரமாக நிகழ்த்திய பின், எத்தனை பேர் இதனை நாடுகின்றனர், அதனைச் செய்வதற்கு என்னிடம் எத்தனை கைகள் உள்ளன எனப் பார்த்தபோது அது போதாக்குறையாகவே இருந்தது. அதனால் நிறைய கைகளை வளர்த்துக் கொள்ள நான் முடிவு செய்தேன். தற்சமயம் நான் வளர்த்துள்ளது சில கோடி கரங்களை மட்டுமே.

நீங்கள் நடக்கும் இந்த பூமி, நீங்கள் உண்ணும் அந்த உணவு இவையெல்லாம் வெறுமனே வாழ்வை உருவாக்கும் சமாச்சாரங்கள் மட்டுமல்ல. இவை இல்லாமல் நீங்கள் ஒரு கணம் கூட வாழ முடியாது. இதனை சிறிதளவாவது தங்கள் அனுபவத்தில் உடைய மக்களை உருவாக்குவதில் தான் ஈஷாவின் அடிப்படையே உள்ளது.

ஈஷாவை அமைப்பு என்று சொல்வதைவிட, ஒர் உயிர் என்று சொல்லலாம். அதனால் தான் ஈஷா தன் சொந்த புத்திசாலித்தனத்தினால் செயல்படுகிறது, தனக்குத் தானே எதிராக செயல்படுவதில்லை. உங்கள் கை உங்களை குத்துவதில்லை, அப்படியொரு காரியம் நிகழவே நிகழாது. உங்கள் கால் இடறி நீங்கள் விழும் சம்பவம் ஒருவேளை என்றோ ஒருநாள் நிகழ்ந்திருக்கலாம். கோடிகளில் ஒரு முறை உங்கள் கால் இடறி நீங்கள் கீழே விழுந்திருக்க முடியும். அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தால், உங்களுக்கு மரணம் சம்பவித்துவிடாது. ஈஷா ஒர் உயிர், ஆரம்பக் காலத்தில் பல கரங்கள் கொண்டதாய் இருந்தது, இன்று மெல்ல பல தலைகள் கொண்டதாய் நாம் மாற்றி வருகிறோம். மிகுந்த ஆற்றல் வாய்ந்த முறையில், நாம் இத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இதனை பலக் கரங்கள் உடையதாய் செய்ததைவிட, பல தலைகள் உடையதாய் செய்வது சற்றே சவால் நிறைந்ததாய் இருந்தது. இதுவரை அத்தனை கரங்களும் ஒரு தலையிலிருந்து உத்தரவுகளை வாங்கிக் கொண்டன, தற்சமயம் அத்தனை தலைகளையும் சிந்திக்கச் செய்வதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இதனை நாம் கொஞ்சம் அக்கறையோடும் வெற்றிகரமாகவும் செய்து கொண்டிருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும். நான் ஆறு மாதங்கள் இல்லாமல் போய்விட்டால், ஈஷா யோகா மையமும், மையத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை செயல்களும் நின்றுப் போய்விடாது. ஒரு சில புது விஷயங்கள் செய்யும்போது மட்டுமே நான் தேவைப்படுகிறேன்.

தற்சமயம் ஈஷாவில் நடந்து கொண்டிருக்கும் செயல்களுக்கு, நான் தேவைப்படுவதில்லை. நம் ஆசிரியர்களிடம் யோக வகுப்பு செய்த மக்கள் என்னிடம் வந்து, "சத்குரு, உங்களுக்கு தெரியுமா, எனக்கு யோகா சொல்லிக் கொடுத்த என் ஆசிரியர் அற்புதமாக இருக்கிறார். உங்களை விட சிறப்பாக சொல்லித் தருகிறார்," என்பார்கள். நம் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய இருபதுகளில் இருப்பவர்களே. இப்படி அல்லவா இருக்க வேண்டும். அவர்கள் நிச்சயம் என்னைவிட சிறந்தவர்களாகவே இருப்பார்கள், ஏனெனில் அவர்களுக்கு பயிற்சி அளித்தது நான் அல்லவா? அதனால் ஈஷா என்பது ஒர் உயிராய் செயல்படுகிறது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே போல் செயல்பட வேண்டுமென்றால், அவர்களை நீங்கள் உங்களுள் ஒரு பாகமாக இணைத்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் இது நிகழாது.

இது வியாபார தந்திரம் அல்ல. மக்களின் உழைப்பைச் சுரண்டி நாம் இதனை நிகழச் செய்யவில்லை. இதுபோன்ற வியாபார யுக்தியை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளில் மட்டுமே நான் திறமை, சந்தை போன்ற அசிங்கமான வார்த்தைகளை பிரயோகிக்கிறேன். என் வாழ்வில், நான் இதுபோன்ற வார்த்தைகளை உச்சரிப்பதே கிடையாது. மனிதர்களை சந்தையாகப் பார்ப்பதை நான் அநாகரிகமாக பார்க்கிறேன். இதுபோன்ற வியாபார மாநாடுகளில் அமர்ந்து கொண்டு சந்தை என்று சொன்னால் எனக்கு பரவாயில்லை, இல்லாவிட்டால் என் வாழ்வில் நான் அந்த வார்த்தையை பயன்படுத்துவதே கிடையாது. நான் காய்கறிகளைக் கூட பொருளாகப் பார்ப்பதில்லை.

நான் பருகும் நீர், உண்ணும் உணவு, நடக்கும் இந்த பூமி எதனையும் நான் பொருளாக பார்ப்பதில்லை. இவற்றை நான் உயிர் செய்யும் மூலப்பொருட்களாகப் பார்க்கிறேன். என் எண்ணத்தால் அல்ல, என் அனுபவத்தால், இதனை நான் உயிர் செய்யும் பொருட்களாகப் பார்க்கிறேன். நீங்கள் நடக்கும் இந்த பூமி, நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் பருகும் நீர், நீங்கள் சுவாசிக்கும் காற்று இவையெல்லாம் வெறும் ஜடப் பொருளல்ல, இவை உயிரை உருவாக்கும் ஆக்கக்கூறுகள். இவை இல்லாமல் நீங்கள் இங்கு உயிர் வாழ முடியாது.

அதனால் இதனை மக்களின் அனுபவத்திற்குள் சிறிதளவேனும் கொண்டு வருவதே ஈஷாவின் நோக்கமாக இருக்கிறது. இங்குள்ள அனைவரும் குறிக்கோளுடன் தீவிரமாக செயல்படவில்லை மாறாக தங்கள் அனுபவத்தினால் உந்தப்பட்டுள்ளனர். நான் நடத்திக் கொண்டிருக்கும் திட்டங்களையும் அத்தனை நடவடிக்கைகளையும் கைவிட்டாலும் கூட, இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். இங்கே சும்மா இருப்பார்கள். செயல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே போலத்தான் இருப்பார்கள். நாம் கடந்த சில நாட்களாய் பேசி வரும் குறிக்கோள்களைப் போல் அவர்கள் குறிக்கோள்களினால் ஊக்கமடையவில்லை, அவர்கள் தங்கள் உள் அனுபவத்தால் உந்துதல் அடைகின்றனர், இதற்கு ஈடுஇணையே இல்லை.

நான் எதைச் செய்தாலும், எதைத் தொட்டாலும் அது என் வாழ்நாள் முழுக்க ஈடுபடும் செயல் ஆகிவிடுகிறது. நான் ஈடுபடும் எதிலும் நான் பாசாங்காய் காதல் கொள்வதில்லை, தொடும் ஒவ்வொன்றிலும் நெடுநாளைய காதல் பந்தம் கொள்பவன் நான்.

Love & Grace