இந்த வார சத்குரு ஸ்பாட்டில், வரும் பிப்ரவரி மாதத்தில், 20 வருடங்களுக்குப் பிறகு சத்குரு அவர்கள் நேரடியாக நடத்தப்போகும் ஆசிரியர் பயிற்சி பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

மனித வளர்ச்சியிலும், அடுத்த பத்து ஆண்டுகளில் உலகில் நடக்கவிருப்பதிலும், ஒரு குறிப்பிட்ட போக்கு தெரிகிறது. தொழில்நுட்பத்தில் நடந்திருக்கும் சில தவிர்க்கமுடியாத முன்னேற்றங்களால், முன்னெப்போதும் சாத்தியம் என்று கற்பனை கூட செய்திராத அளவு தனி மனிதர்கள் பல விதங்களில் சக்தி மிகுந்தவர்களாக இருக்கப் போகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பலன்களை மனிதர்கள் அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் உள்நிலையில் தயார்நிலையில் இருப்பது மிக மிக முக்கியமாகும். மக்கள் உள்நிலையில் தயாராக இல்லையென்றால், இப்படி வெளிநிலையில் சக்திபடைத்தவராகுவது பேரழிவைத்தான் ஏற்படுத்தும்.

நம் பங்கிற்கு நாம் செய்யவேண்டியதைச் செய்யவேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், தீர்வுகள் வழங்குவதில், பலவிதங்களில் நாம் பெரும்பாலானவர்களை விட அதிக திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறோம். இதன் ஒரு பகுதியாக, பல விஷயங்களை நாங்கள் கட்டவிழ்க்க விரும்புகிறோம். ஒவ்வொரு நாடும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொறியியல் வல்லுனர்கள், டாக்டர்கள், இராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள், அல்லது விளையாட்டு வீரர்களை உருவாக்கத் திட்டமிடுகிறது. அதுபோலவே, உள்நிலை நல்வாழ்விற்காக ஏதோ ஒன்றை முறையாக, அறிவியல்ரீதியாகப் பரிமாறக்கூடிய மனிதர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம், எல்லா நாடுகளுக்கும் வந்துவிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உள்நலனுக்காக ஏதாவது செய்யக்கூடிய ஆசிரியர்களை உருவாக்குவதில் பெரும்பொறுப்பு இந்தியாவிற்குத்தான் இருக்கிறது. யோக ஆசிரியர்களை உருவாக்குவதோடு நில்லாமல், ஒரு கட்டத்தில் யோகிகளையும் நாம் உருவாக்குவது அவசியம். திடமான உள் அனுபவம் கொண்ட மனிதர்கள் நமக்குத் தேவை. இது ஒரு அளப்பறிய பொறுப்பு. ஈஷா யோகா மையம், அதன் பங்கிற்கு அதிக எண்ணிக்கையில்யோக ஆசிரியர்களையும், யோகிகளையும் இந்த உலகிற்கு நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஏனென்றால், அதற்கான அடித்தளத்திற்கு நாங்கள் போதுமான செயல்களைச் செய்துள்ளோம்.

ஈஷா யோகா வகுப்புகளின் ஒரு முக்கிய அம்சமாக, அதில் என்ன வழங்கப்பட்டாலும், ஒருவிதமான உயிரோட்டம் அதில் எப்போதுமே இருந்துவந்துள்ளது. இவ்வகுப்பு, ஒரு ஆசிரியர் தகவல்களின் ஒரு தொகுப்பை வழங்குவது பற்றியதல்ல, மாறாக அதன் செயல்முறைக்கு ஓர் உயிரோட்டமான தன்மையை இவ்வகுப்பு கொடுக்கிறது. உங்களைவிட மிகப்பெரிய ஒன்று, உங்கள் மூலமாக நிகழ்வதை அனுபவத்தில் உணர்வது என்பது, மிகப்பெரிய வாய்ப்பு.ஒரு பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது அவள் அனுபவத்தில் மிகப்பெரிய அனுபவம், ஏனென்றால் அவளால் ஓர் உயிரை உருவாக்க முடியாது, ஆனால் அது அவள் மூலமாக நிகழ்கிறது. ஒரு ஆசிரியராக, இன்னொரு உயிரை ஈன்றெடுப்பதைவிட மிகவும் ஆழமான ஒன்று, அது என்னவென்று உங்களுக்குத் துளியும் தெரியாத போதிலும் கூட, அது உங்கள் வழியாக நடந்தேறமுடியும்.

உலகில் பெரும்பாலான மனிதர்களால் தங்கள் தகுதிக்குத் தகுந்த எதையும் செய்ய முடிவதேயில்லை. அதிலும், மிகக் குறைவானவர்களுக்கே தங்களை விட மிகப்பெரிய ஏதோ ஒன்றைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆசிரியராக ஆவது என்பது, உங்களைவிட மிகப்பெரிய ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பாகும். ஈஷா யோகா ஆசிரியர்களுக்கு இந்த பாக்கியம் இருக்கிறது, மக்கள் அவர்களுடன் ஏழு நாட்கள் இருக்கிறார்கள், அவர்கள் முதல் நாள் இருக்கும் விதத்தையும், கடைசி நாளில் இருக்கும் விதத்தையும் பார்த்தால், இரண்டையும் ஒப்பிட்டுக்கூட பார்க்கமுடியாது. குறைந்தபட்சம் 80 சதவிகித மக்களுக்காவது தங்கள் கண்களில் அன்பு மற்றும் ஆனந்தத்தின் கண்ணீர் வழிந்தோடுகிறது. பல வருடங்களாக ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்திடாத பலபேர், வகுப்பின் சில நாட்களிலேயே அன்பு மற்றும் ஆனந்தத்தின் கண்ணீர் மல்க உங்களைக் காண்கின்றனர். பூமியில் எந்தவொரு செயலும் உங்களுக்கு இந்த அளவு நிறைவைத் தரமுடியாது.

நம்மை நாமே திருப்திப்படுத்திட நாம் செய்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. நாம் வேலை செய்யமுடியும், தொழில் நடத்தமுடியும், அல்லது கலைகளில் கற்றுத்தேர்ந்தவராக இருக்கமுடியும். உங்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய ஒரே விஷயம், அல்லது மிகச்சிறந்த விஷயம் யோகா என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்கள் வாழ்வில், உங்களுக்கு நிறைவுதருவதைப் பொறுத்தவரை, உங்களை நீங்கள் முழுமையாகக் கொடுத்தால், உங்கள் செயலின்மூலம் நீங்கள் நிறைவை நாடவேண்டிய அவசியம் இருக்காது. வாழ்க்கை அப்படித்தான். இந்த நோக்கத்தில், வரும் பிப்ரவரி மாதம், தீவிரமான ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சியை நாங்கள் வழங்கவிருக்கிறோம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதன்முறையாக நானே இதை நடத்தவிருக்கிறேன். அதனால் ஒரு யோகாசிரியர், அல்லது ஒரு யோகி, இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், ஏதோ ஒன்றாக ஆவதற்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், இப்போது இது விருப்பத்தால் தேர்ந்தெடுக்கும் வசதியன்று, இந்த பூமிக்கு இது மிக அத்தியாவசியமான தேவையாகிவிட்டது.

Love & Grace

ஈஷா யோகா ஆசிரியர் பயிற்சி (ஆங்கிலத்தில்), வரும் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும். இதைப் பற்றிய விபரங்களுக்கு, உங்கள் மையத்தின் ஈஷா யோகா ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் teacherstraining@ishafoundation.org