இந்த வார ஸ்பாட்டில் சத்குரு அவர்கள், ஊடகங்களின் போக்கையும், இவ்வுலகில் மாறி வரும் இந்தியாவின் பங்கினைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். தனக்கு அரிதாக வாய்க்கும் அமைதியான சூழ்நிலையில், தில்லியிலிருந்து துபாய் வழியாக ஆப்பிரிக்காவின் இதயப்பகுதிக்கு சென்ற அவரது சமீபத்திய பயணத்தைப் பற்றியும் விவரித்துள்ளார்...

ஜூன் 9, 2016, துபாய் டூ என்டெபி

கடந்த வாரம் முழுதும், சர்வதேச யோகா தினத்திற்கான ஆயத்தமாகவும், ஐ.நா சபையில் ஜுன் 20, 21 தேதிகளில் நடக்கவுள்ள நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாகவும், ஊடகங்களின் சொல் அம்புகளை சந்திக்கும் சூழ்நிலையே பெரும்பாலும் இருந்தது. பல்வேறு மாநிலங்கள், மொழிகள் மற்றும் பல்வகையான ஊடகங்களை சந்தித்தது மிகவும் சுவாரஸ்யமான பயணமாக அமைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அறிவாளிகள் முதல் மந்தமானவர்கள் வரை, நற்குணமுடையோர் முதல் ஈனகுணமுடையோர் வரை, நல்லெண்ணம் கொண்டோர் முதல் குதர்க்கமாய் சிந்திப்போர் வரை - அனைத்து விதமானவர்களும் இருந்தனர். நாம் தினசரி பார்க்கும் அத்தனை அமளி-துமளிகளுக்கு இடையிலும் இன்னும் சில நல்ல பத்திரிக்கையாளர்கள் இருப்பதைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாள் முழுவதும், கேமிராவுக்கு முன், பிரகாசமான விளக்கொளியில் அமர்ந்துவிட்டு, பெரும்பாலும் ஒரே விதமான கேள்விகளின் முடிவற்ற வேள்விக்கு பின், அதிகாலை 2 மணிக்கு விமான நிலையத்தில் இருக்கத் தேவையிருக்கிறது.

நாம் அற்பமானதை மிகைப்படுத்தவும், மிகப்பெரிய விஷயங்களை ஒன்றுமற்றதாகவும் ஆக்கத் தெரிந்துள்ளோம் என்பது வியக்கத்தக்க ஒரு விஷயம். கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான குழந்தைகள் தற்கொலை செய்துக் கொண்டதை ஊடகங்களில் விவாதிக்கத்தக்க விஷயமாக எடுத்துச் செல்ல அத்தனை முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால், பெரும்பாலானவர்களின் ஆர்வம், உத்திர பிரதேசத்தில், கடந்த ஆண்டு கொல்லப்பட்ட அந்த ஒரு மனிதர் மீதே இருந்தது. என்னையும், "இந்தியா ஒரு சகிப்புத்தன்மை அற்ற நாடு," என்ற அபத்தமான கருத்தினை ஒப்புக்கொள்ள வைக்கவே அவர்கள் முயன்றனர். இந்தியா ஒரு சகிப்புத்தன்மையற்ற நாடு என்ற கருத்தினை பதிய வைக்க முயலுகிறவர்கள், உலகின் பிற நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும். சோமாலியாவிற்கோ, மோசமான சூழ்நிலைகளில் இருக்கும் பிற நாடுகளுக்கோ அல்ல; மிக வளர்ச்சி பெற்றது, பரந்த கொள்கை கொண்டது எனப் பெயர் பெற்ற நாடுகளுக்கு, அவர்களின் "Trump" கணங்களை அனுபவிக்கச் செல்லட்டும்.

திக்குமுக்காட வைக்கும் தில்லி போக்குவரத்தில் நேற்று கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, அவுரங்க சீப் தெருவிற்கு வெகு அருகில், மிக பக்தியாய் தோற்றமளித்த சீக்கியர்களின் சிறு குழு ஒன்றினைப் பார்த்தேன். முகலாய அரசினை எதிர்த்து போராடிய இராணுவ தலைவரும், ஒரு சீக்கிய துறவியுமான பாபா பந்தா சிங் பகதூர் அவர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக அவர்கள் விழா எடுத்திருந்தனர். அவரையும், மேலும் பல சீக்கிய வீரர்களையும் முகலாயர்கள் சிறைப் பிடித்தனர். மதமாற்றம் செய்ய அவர்கள் மறுத்தபோது, பேரரசர் பருக்சியரின் ஆணையின் பேரில், முகலாயர்கள், பந்தா சிங்கின் கண்களைப் பிடுங்கி, உயிருடன் தோலுரித்து, கை கால்களை முடமாக்கி, தலையினை துண்டித்தனர். அவருடன் நூற்றுக்கணக்கான வீரர்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் இதோ... இவ்விடத்திலேயே நடைபெற்றிருக்கலாம்.

மென்மையான ஒரு சீக்கிய ஆண், அத்தனை மென்மையில்லாத அவரது துணைவியார், இருவருடன் நான் இருந்தேன். சரித்திரத்தின் கொடூரமான இப்பகுதியைப் பற்றி அவர்களுக்கு தெரியுமா? ஆம், அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதுகுறித்து அவர்களுக்கு கோபமா? இல்லை. ஆனால், ஆழமான வலியுடன் இருந்தனர். தனது வழிபாட்டுக்குரிய குருவான தேக் பகதூரை கொன்றவரின் பெயரினை சாலைக்கு பெயராய் கொடுத்தவர்களின் மீது அவர்களுக்கு கசப்புணர்வு இருந்ததா? அவர்களது கண்களில் கண்ணீர். "சகிப்புத்தன்மையற்ற நாடு," என்று நீங்கள் சொல்வது இதைத்தானா?

என்னுடைய ஏழாவது வயதில், என் அருமை தந்தை அவரது நான்கு குழந்தைகளுக்கும், இளையவனான எனக்கும் சேர்த்து, அணிசேரா நாடாக இருப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி எடுத்துரைக்க முயன்றார். "அப்படியென்றால், நமக்கு நண்பர்களே இல்லை என்று அர்த்தம் கிடையாதா?" என்ற எனது கேள்வி அவரை தடுமாறச் செய்தது.

சசி (தரூர்) ஒருமுறை புலம்பியது போல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, ஒவ்வொரு நாட்டின் மீதும் எழுந்த, "தார்மீக வர்ணணை"யின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. முதல் முறையாக, நமது பிரதமரின் முயற்சியால், இந்தியா ஒரு முக்கிய கூட்டணியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வுலகில், இந்நாட்டிற்கு ஒரு வலிமையான இடமும், துரதிருஷ்டவசமான ஏழ்மை நிலைகளிலிருந்து விடுதலையும் அளிக்கக் கூடிய ஒன்றாகவும் இது இருக்க முடியும். ஏழ்மை நிலையை உயர்வாக எண்ணி துதி பாடுவதை நிறுத்த வேண்டிய தருணம் இது. எளிமைக்கு சரி, ஏழ்மைக்கு துதி கிடையாது.

தற்போது, விமான கடத்தலுக்கு பேர் பெற்ற என்டெபி (உகாண்டா) விமானத்தில் பயணப்படுகிறேன். 9 நாட்களில், 3 நாடுகளுக்கு குடுகுடுவென ஒரு பயணம். முடிவில்லா நிகழ்ச்சிகள், கம்பாலாவில் இன்னர் என்ஜ்னியரிங் வகுப்புடன் நிறைவுக்கு வருகிறது.

எனது மெழுகுவர்த்தியின் இருபுறத்தினையும் எரித்துக் கொண்டிருக்கிறேன். நான் உங்கள் அனைவருக்கும் பயனுள்ளவனாக இருக்கிறேன் என நம்புகிறேன்.

Love & Grace