இந்த சத்குரு ஸ்பாட்டில், இந்தியாவில் கல்வியைப் புதுப்பிப்பது குறித்த தன் தொலைநோக்குப் பார்வையை சத்குரு நம்முடன் பகிர்கிறார். நம் கலாச்சாரத்திற்குப் பொருத்தமான ஒரு கல்விமுறையை, நம் நாடு முன்னேறுவதற்குத் தேவையான கல்விமுறையை விளக்குகிறார். இத்துடன், நவம்பர் 5ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில், மனிதவள மேம்பாட்டிற்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவதேகர் அவர்களும் பல கல்வியாளர்களும் பங்கேற்ற "Innovating India’s Schooling" மாநாட்டின் புகைப்படத் தொகுப்பும் உள்ளது.

கடந்த சனிக்கிழமை, இங்கு ஈஷா யோகா மையத்தில், கல்விமுறையைப் புதுப்பிப்பதற்கான முதல் மாநாட்டை நடத்தினோம். நாம் கல்வியைப் பரிமாறும் விதத்தை சற்று கவனமாகப் பார்க்கும் நோக்கத்துடன் இது நடத்தப்பட்டது. புதிதாக ஏதோவொன்றைக் கற்பது மிகப்பெரிய ஆனந்தமாக இருக்கமுடியும். பிறகு ஏன் பள்ளிக்குச் செல்வது இவ்வளவு வலி தருவதாய் உள்ளது? நான் பள்ளிக்குச் செல்லவேண்டிய நாட்களில், நான் அங்கு போகாமல் இருக்க என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். குழந்தைகள் போக விரும்பும் விதத்தில் நாம் பள்ளிகளை உருவாக்கவேண்டும். அது நிகழ்வதற்கு முதலில் நாம் வயதில் பெரியவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். குழந்தைகள் இயல்பாகவே ஆனந்தமாக இருக்கிறார்கள், பலவித மக்களின் மத்தியில் அவர்களிடம் வேலை செய்வது மிக சுலபமானது. பிறகு ஆனந்தமான வழியில் கல்வியை வழங்கும் முறையை உருவாக்குவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? நீங்கள் இனிமையான உணர்வு நிலையில் இருக்கும்போது உங்கள் உடலும் மூளையும் சிறப்பாக வேலை செய்கின்றன என்பதைக் காட்டுவதற்கு இன்று போதுமான அறிவியல் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் உள்ளன. ஒரு கணம் கூட உங்களுள் கிளர்ச்சி, பதற்றம், எரிச்சல், கோபம் ஆகியவை இல்லாமல் ஆனந்தமாக இருந்தால், உங்கள் புத்தியை பயன்படுத்தும் ஆற்றல் ஒரே நாளில் நூறு சதவிகிதம் அதிகரிக்க முடியும் என்கிறார்கள்.

ஆனந்தமான நிலையில் இருப்பது உயர்நிலையிலான கிரகிப்பிற்கும் செயலாற்றலுக்கும் ஒரு மனிதன் செல்ல வழிவகுக்கிறது. நீங்கள் ஆனந்தமாக இல்லாமல் இன்னொருவரை ஆனந்தமாக இருக்க எப்படி ஊக்குவிப்பீர்கள்? "ஆம், நான் ஆனந்தமாக இருக்க விரும்புகிறேன், ஆனால்... அவர் என்ன செய்தார் தெரியுமா?" "நான் ஆனந்தமாக இருக்க விரும்புகிறேன், ஆனால் தட்பவெப்பம் சரியாக இல்லை." இப்படி நிறைய சாக்குப்போக்குகள் உள்ளன. இந்த சாக்குகளை நாம் நம் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிவிட்டால், ஆனந்தமான கல்விமுறையை உருவாக்குவது தானாக நடக்கும். நாம் ஆனந்தமாக இருந்தால், நாம் என்ன செய்தாலும், என்ன உருவாக்கினாலும், அதற்கு அந்தத் தன்மை இருக்கும். இப்போது நாம் செய்யும் ஒரு மிகப் பெரிய தவறு என்னவென்றால், இலக்கின்மீது நமக்கு அதீத கவனம் வந்துவிட்டது, இது மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து வந்தது. நமக்கு மிகப்பெரிய மாம்பழங்கள் வேண்டும், ஆனால் நமக்கு மரம் மீது ஆர்வமில்லை, மண் மீது கவனமே இல்லை. இலக்கின்மீது நாம் ஒரு கண்ணை வைத்துவிட்டால், அதை சென்றடையும் பாதையின் மீது நமக்கு ஒரு கண் தான் இருக்கும் என்று யோக மரபில் சொல்வதுண்டு. இது சிறப்பாக வேலைசெய்யாது. பாதையில் இரண்டு கண்களும் இருந்தால், நிச்சயம் வழியைக் கண்டுபிடிப்பீர்கள்.

இலக்கின் மீதுள்ள அதிகப்படியான கவனத்தினால், பள்ளிக்குச் செல்வது மட்டுமல்ல, நாம் தொழில் நடத்தும் விதம், நாட்டை ஆளும் விதம், உலகில் எல்லாவற்றையும் நடத்தும் விதம் என அனைத்தும் இறுதியில் கிடைக்கப்போவது பற்றியே இருக்கிறது, இது வாழ்க்கை பற்றியதாக இல்லை. கடைசியில் கிடைக்கப்போவது கல்லறை மட்டும்தான் என்பதை நாம் பார்க்கத் தவறுகிறோம். நாம் செய்வது எதுவாயினும், அதிலிருந்து என்ன வந்தாலும், அடிப்படையில் நம் கவனம் அதை எப்படி மிக அழகாகச் செய்வது என்பதில்தான் இருக்கவேண்டும். வழிமுறைகளுக்கும் கருவிகளுக்கும் நாம் நிபுணர்களின் உதவியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த கருவிகளை வேலை செய்யும் விதத்தில் பயன்படுத்துவதற்கு, தங்கள் வாழ்க்கையை எப்படி அழகாக்குவது என்பதை அறிந்த ஆனந்தமான மக்கள் தேவை. உங்கள் வாழ்க்கையையே உங்களால் அழகாக்க முடியவில்லை என்றால், பிறர் வாழ்க்கைக்கு உங்களால் எப்படி அழகுசேர்க்க முடியும்?

இந்த நாட்டின் பாரம்பரிய கல்விமுறையை திரும்பிப்பார்த்தால், அறிவார்ந்தவராக மட்டுமில்லாமல் பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் இருப்பவராக அவர்கள் கருதிய ஒரு ஆசிரியரிடமோ ஆச்சாரியரிடமோ குருவிடமோ, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒப்படைத்துவிடுவார்கள். தங்கள் குழந்தைகளை அவர்கள் கைகளில் கொடுத்தால் குழந்தைகள் இயற்கையாகவே மலர்வார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். கல்வியை யார் வழங்குகிறார்கள் என்பதுதான் மிக முக்கியமானது. ஆசிரியரின் பரிணாம வளர்ச்சி மிக முக்கியமானது. அவர்கள் கல்வியைப் பற்றி நிறைய தந்திரங்கள் அறிந்திருக்க வேண்டிய என்று அவசியமில்லை. இன்னும் ஆனந்தமான, அன்பான, கருணையான, விழிப்புணர்வான மனிதர்களாக ஆசிரியர்கள் மலர்ந்திருக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் தன்மீது தானே வேலைசெய்ய வேண்டும். கல்விக்குள் ஆன்மீகத்தையும் யோகாவையும் கொண்டுவரவேண்டும், ஏனென்றால் ஆன்மீகமும் தேடுதலும் சேர்ந்தே இருப்பவை. நீங்கள் ஆன்மீகத் தேடுதலுடன் இருக்கலாம், ஆன்மீக நம்பிக்கை உடையவராக இருக்கமுடியாது. அதேபோல், விஞ்ஞானிகள் தேடுதலுடையவர்கள். ஆசிரியர்களும் தேடுதலுடையவர்களாக இருப்பது முக்கியம். ஆன்மீக செயல்முறை, அதன் அடிப்படை சாரத்தில், கல்வித்துறையில் கட்டாயம் இருக்கவேண்டும், ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து தேடுபவர்களாக இருக்கவேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆன்மீகம் என்று எதுவாக இருந்தாலும், அடிப்படையில் அது வாழ்க்கையில் ஏதோவொரு அம்சம் பற்றிய உண்மையைத் தேடுவதாகவே இருக்கிறது.

கல்வி என்பது உண்மையைத் தேடுவது பற்றியது - உச்சபட்ச உண்மையைத் தேடுவதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இப்போது எதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களோ அதைப் பற்றிய உண்மையைத் தேடுகிறீர்கள். மாணவர்கள் இயல்பாகவே தேடுதலுடையவர்களாக இருக்கிறார்கள். ஆன்மீக செயல்முறை என்பது குழந்தைகளுக்குள் இந்த ஒழுக்கத்தைக் கொண்டுவர வேண்டும், அவர்கள் எதையும் நம்பக்கூடாது, அதேசமயம் எதையும் அவதூறாகக் கருதி அவமதிக்கவும் கூடாது. யாரோ ஒருவர் சொல்வது எதுவாயினும் நீங்கள் நம்பத்தேவையில்லை, ஆனால் தேவையான கரிசனத்துடனும் மரியாதையுடனும் இணைத்துக்கொள்ளும் தன்மையுடனும் அதை கேட்டுக்கொள்ளவோ, கேள்வி கேட்டு மறுக்கவோ வேண்டும். இது ஒவ்வொரு மனிதரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. மரியாதையுடன் நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் பற்றி கேள்வி எழுப்புவது சமுதாயத்திற்கு முக்கியமானது, ஆன்மீகத் தேடுதலின் அடிப்படையும் இதுதான். இந்த விதத்தில் பார்த்தால், ஆன்மீக செயல்முறை என்பது ஒவ்வொரு உண்மையான மாணவருக்கும் அவசியம் தேவைப்படுகிறது. நீங்கள் பிழைப்பை சம்பாதிப்பதற்காக மட்டுமே படித்தால் வேண்டுமானால் தேவைப்படாமல் இருக்கலாம். அதேபோல் ஆசிரியர்களும் ஒருவித பண்படுத்தும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும். யோகா என்பது உங்கள் எல்லைகளைக் கடப்பது பற்றியது, யோகா என்றால் சங்கமம். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் ஓரளவு சங்கமம் இல்லாவிட்டால் கல்வியே இருக்கமுடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உடலளவில் கூட ஆசிரியர்கள் துடிப்பாக மாறவேண்டும். குழந்தைகளின் கண்களில் வெளித்தோற்றம் நிச்சயம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. யோகாவில் இருக்கும் ஒரு சாதகமான விஷயம், அதைச்செய்ய உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டால், அதை நீங்களாகவே செய்திடமுடியும். இந்தியாவின் பெரும்பகுதி இன்னும் அடிப்படை உணவு கூட கிடைக்காமல் இருப்பதால், ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் மன உற்சாகம் கொண்டுவர யோகாவை அறிமுகப்படுத்துவது இன்னும் முக்கியமாகிறது. தவறான காரணங்களுக்காகவே நான் யோகா செய்ய ஆரம்பித்தேன், ஆனால் அது எனக்கு அற்புதமாக வேலை செய்தது. அதுதான் பிரபஞ்சத்தின் அழகு - உங்கள் நோக்கம் எதுவாக இருப்பினும், சரியான விஷயங்களைச் செய்தால் சரியான விஷயங்கள் உங்களுக்கு நடக்கும். உடலையும் மனதையும் புரிந்துகொண்டு அதை சிறப்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதே யோகாவின் அறிவியல். குழந்தைகளின் உற்சாகமும் துடிப்பும் எப்படிப்பட்டது என்றால், அவர்களைக் கையாளவே உங்களுக்குப் பத்து மனிதர்களின் சக்தி வேண்டும். குறிப்பாக ஆசிரியராக இருக்கும்போது, உங்கள் கைகளில் நூறு குழந்தைகள் இருப்பார்கள், நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கவேண்டும். அதற்கு உங்களுக்கு யோகா தேவை.

நீங்கள் அனைவரும் தினமும் இந்த உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்: நாம் என்ன செய்தாலும், நாம் பொய்மையிலிருந்து உண்மைக்கு நகரவேண்டும், எது வேலை செய்யாதோ அதிலிருந்து, உண்மையில் வேலைசெய்யக்கூடியதற்கு நாம் மாறவேண்டும். குறிப்பாக கல்வித்துறையில் இது தேவை, ஏனென்றால் எதிர்காலத்தில் பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை கல்வி எனும் செயல்முறையே நிர்ணயிக்கிறது. அடுத்த இருபத்தைந்து வருடங்களில் நம்மிடம் எப்படிப்பட்ட உலகம் இருக்கப்போகிறது என்பதை, கல்வி மூலம் நாம் நம் பள்ளிகளிலும் வீடுகளிலும் என்ன செய்யப்போகிறோம் என்பதே நிர்ணயிக்கும். மற்ற அனைத்து உயிரினங்களுக்கும், இயற்கை இரு கோடுகள் வரைந்துள்ளது, அதற்குள் அவை வாழ்ந்து இறந்துபோகலாம். மனிதர்களுக்கு கீழ்க்கோடு மட்டுமே உள்ளது, மேலே எல்லைக்கோடில்லை. அதனால் மனித வாழ்க்கை என்பது தொடர்ந்து பரிணமித்து வளரும் செயல்முறையாக இருக்கிறது. நாம் என்ன செய்தாலும் எப்படிச் செய்தாலும், அதை இன்னும் சிறப்பாகச் செய்ய இடமிருக்கிறது. அந்த விதத்தில், நாம் தொடர்ந்து பரிணமிக்கும் உயிர்களாக இருக்கிறோம்.

சரியான நேரத்தில் சரியான விஷயங்களை நாம் செய்யாவிட்டால், நாம் மனிதர்களுக்கு பதிலாக மனித உருவம் கொண்ட மிருகங்களை உருவாக்கிவிடுவோம். உலகில் நாம் ஏற்கனவே அப்படி நிறையபேரை உருவாக்கிவிட்டோம். அதனால் தான் கல்வி அதிமுக்கியமாகிறது. குறிப்பாக உலகின் மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கான 125 கோடி மக்கள் இருக்கும் நம் நாட்டில் இது மிகவும் முக்கியமானது. கடந்தகாலத்தின் கவிஞர்கள் நம் தேசத்தின் அழகைப் பற்றி மிக அழகாக கவிதை பாடியிருக்கிறார்கள். அதை நான் நிச்சயம் போற்றிப் பாராட்டுகிறேன், ஆனால் இன்று நம்மிடம் 125 கோடி மக்களுக்குத் தேவையான நிலம், மலைகள், ஆறுகள், ஏன்? ஆகாயத்தின் ஒரு துண்டு கூட இல்லை என்பதை நம்மால் மறுக்கமுடியாது. நம்மிடம் இருப்பதெல்லாம் ஜனத்தொகை மட்டும்தான். அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்த ஜனத்தொகையை ஒரு சமநிலையான, ஒருநோக்குடைய, உற்சாகமான, திறமைவாய்ந்த ஜனத்தொகையாக மாற்றினால், நாம் மிகப்பெரிய அற்புதமாக இருப்போம். உலகம் முழுவதும் நம்மை கவனிக்கும். மாறாக, நம் ஜனத்தொகையை நாம் திறனற்ற, நோக்கமற்ற, சமநிலையற்ற, ஊக்கமற்ற ஜனத்தொகையாகவே இருக்க அனுமதித்தால், நாம் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம்.

கல்விமுறையைப் புதுப்பிக்கும் இந்தப் பொறுப்பு இப்போது நம் கைகளில் உள்ளது. இந்த நாட்டின் இளைஞர்கள் அனைவரும் தங்களால் முடிந்த விதங்களில் கல்வி செயல்முறையில் பங்கேற்க வேண்டும். இது அனைவரின் கருத்திலும் இருக்கவேண்டும். இன்று சுற்றுச்சூழல் பற்றி நிறைய பேசுகிறார்கள், சிறிய விதங்களிலாவது மக்கள் அவர்கள் பங்கினைச் செய்ய முயல்கிறார்கள், அதேபோல் அனைவரும் கல்வி செயல்முறைக்கு பங்களிக்க வேண்டும். நாளைய தலைமுறை இதை சார்ந்ததாக இருக்கிறது. எப்படிப்பட்ட மனிதர்களை நாம் உருவாக்குகிறோம் என்பதே நம் சுற்றுச்சூழலின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கிறது. கல்வி என்பது இவ்வளவு முக்கிய பங்கு வகிக்கும்போது, இது குறைவான சம்பளம் வாங்கும் ஏதோவொரு ஆசிரியர் அல்லது தேவையான வசதிகளற்ற ஏதோவொரு அரசுத் துறையின் வேலை மட்டுமல்ல, இது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகிறது. அதோடு கல்வியில் வாழ்க்கை அம்சங்களும் கலந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்வியறிவு எந்த அளவு அதிகரிக்கிறதோ, அந்த அளவு வாழ்க்கைத் திறனற்றுப் போவீர்கள். இதுவரை நம் கவனம் கல்வியெனும் கம்பளத்தை முடிந்த அளவு அகலமாக விரிப்பதாகவே இருந்துள்ளது. அதை விரிக்கும் முயற்சியில் அது பல இடங்களில் கிழிந்திருக்கிறது, அதில் மிக அதிகமான ஓட்டைகள் ஏற்பட்டுவிட்டது. அந்த ஓட்டைகளை சரிசெய்வது மட்டுமல்ல, நம் குழந்தைகள் இரசித்து மகிழ்ந்து நாம் பெருமைப்படக்கூடிய ஒரு அழகான கம்பளத்தை உருவாக்குவதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.

கல்வி சென்றடையும் இடங்களையும் அதிகரித்து, அதேசமயம் நுட்பமான, தரமான கல்வியையும் வழங்குவதில் நாம் கவனம் செலுத்தவேண்டும். நீண்ட காலத்திற்கு, சரிசமமாகவும் மதமின்றியும் இருப்பது குறித்த சிறுபிள்ளைத்தனமான புரிதலால், அனைவரும் ஒரேவிதமான பள்ளிக்குச் சென்று ஒரே விஷயங்களைக் கற்கவேண்டும் என்று நாம் நினைத்தோம். ஒவ்வொரு மாணவரும் எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளார், அவர் புத்திக்கூர்மை எப்படிப்பட்டது, அவர் பின்னணி என்ன, என்று கல்வியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் துரதிர்ஷ்டவசமாக கருத்தில் கொள்ளப்படவில்லை. இதன் ஒரு முக்கிய காரணம், கல்வியின் பெரும்பகுதி அரசினால் கையாளப்படுகிறது. அரசு என்பது தேவையான கோட்பாடுகளை வகுக்கவேண்டும், அவற்றை செயல்படுத்த முயற்சிக்கக் கூடாது, அது வேலைசெய்யாது. கல்வித்துறைக்குள் பிற அமைப்புகள் நுழைய விரும்பாதபோது, அடிப்படை கல்வியை அரசு வழங்கவேண்டியிருந்தது. இப்போது தொழில் முனைவோரும் பெரிய தொழில் நிறுவனங்களும் கல்வித்துறைக்குள் வர விரும்புகிறார்கள், இது முக்கியமானது. நகர்ப்புறங்களிலாவது, தம்பதிக்கு மூன்று முதல் ஐந்து குழந்தைகள் என்ற நிலையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்ற நிலை வந்துவிட்டது. அப்படியானால் தங்கள் குழந்தைகள் கல்விக்கு அவர்களிடம் அதிக நிதி உள்ளது.

அதிகம் செலவுசெய்ய இயலாதவர்களுக்கு வேறுவிதமான கல்வி இருக்கவேண்டும், அவர்கள் விடுபட்டுப் போகக்கூடாது. ஆனால் தேவையான வசதி உள்ளவர்கள், விலைமதிப்பான ஆடைகள், வெளிநாட்டுப் பயணம், சொகுசுக் கார் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக, தங்கள் பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்யட்டும். மக்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கு வெளிநாடு அனுப்புவதால் இந்தியாவிலிருந்து சிலநூறு கோடி ரூபாய் நாட்டிற்கு வெளியே போகிறது. வெளியில் கிடைக்கும் அதே கல்வியையும் வாய்ப்புகளையும் நம்மால் இதுவரை வழங்க முடியவில்லை. உயர்ந்த தரத்துடைய கல்வியை நாம் வழங்க விரும்பினால், நாம் அதில் முதலீடு செய்யவேண்டும். அதனை அரசு செய்திடும் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது. இது தனிமனிதர்களிடமிருந்தும் தொழில் நிறுவனங்களிடமிருந்தும் வரவேண்டும். முதலீடு என்பது இலாபம் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே நிகழமுடியும். சுய இலாபத்திற்காக யாரையாவது தவறாக பயன்படுத்தாத வரை, தொழில் என்பது தவறானது கிடையாது. அநியாயமாக நடந்துகொள்ளும் போக்கை ஒழிக்க சட்டங்களாலும் அதிகாரத்தாலும் முடியாது, போட்டியினால் மட்டுமே முடியும், மக்களை முடிவு செய்யச் சொல்வதால் மட்டுமே இது நிகழமுடியும். போட்டி என்பது, யாரிடம் சிறந்த பொருள் இருக்கிறதோ, அதைநோக்கி மக்கள் செல்லும்படி செய்கிறது. எப்படிப்பட்ட கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கும் பள்ளிக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்க வேண்டும்.

இப்போது, நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்றே நினைக்கிறார்கள். இது மாறவேண்டும். உங்கள் குழந்தையின் கல்விக்கு நீங்கள் உங்களை அர்ப்பணிக்கவில்லை என்றால், எதற்காக ஆசிரியர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்? பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகள் செல்லும் பள்ளிக்கு, வருடத்திற்கு மூன்று முறையாவது சென்று, ஒருநாள் முழுவதுமாவது அங்கு இருக்கவேண்டும் என்பது ஒரு விதிமுறையாக்கப்பட வேண்டும். அவர்கள் அங்கு வழங்கப்படும் கல்விமுறைக்கும், அது பரிமாறப்படும் விதத்திற்கும், அவர்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதற்கும் தங்களை பரிட்சயமாக்கிக் கொள்ளவேண்டும். தங்கள் குழந்தைகளின் கல்வியில் பெற்றோர்களின் ஈடுபாடு இருக்கும் ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்கவேண்டும். ஈடுபாடு இல்லாமல் அழகான எதுவும் நடக்கப்போவதில்லை. கல்வி என்பது, நம் குழந்தைகளை அதற்குள் போடக்கூடிய இயந்திரத்தைப் போல இருக்கக்கூடாது. இதுவரை நாம் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவது பற்றி மட்டுமே சிந்தித்து வந்துள்ளோம். ஆசிரியர்களும் தொடர்ந்து பரிணமிப்பது அதிமுக்கியமானது, அவர்கள் கற்றுக்கொடுக்கும் திறனில் மட்டுமின்றி மனிதர்களாகவும் தொடர்ந்து பரிணமிக்க வேண்டும். அதற்குத் தேவையான கருவிகள், வாய்ப்புகள், மற்றும் செயல்முறைகளை நாம் நாட்டில் உருவாக்கவேண்டும். ஈடுபாடு, முனைப்பு, உருவாக்கும் திறன் கொண்டு, அழகாக பரிமாறக்கூடிய உற்சாகமான ஒரு ஆசிரியரே, மாணவர்கள் கற்பதை இரசிக்கிறார்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது, அவர்கள் நடத்தும் பாடமல்ல.

நவீன தொழில்நுட்பம் வழங்கியுள்ள வசதியால், தகவல்களைப் பொறுத்தவரை வேண்டுமானால் ஒரு ஆசிரியர் தேவைப்படாமல் இருக்கலாம். தகவல்கள் சுலபமாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு ஆசிரியரிடம் தேவைப்படுவது ஊக்கம் மட்டுமே. ஊக்கம் என்பது பேச்சுத்திறமையாலோ, உரையாற்றுவதாலோ நிகழாது, எடுத்துக்காட்டாக வாழ்வதால் மட்டுமே நிகழும். நீங்கள் இருக்கும் விதமே உற்சாகமூட்டுவதாக இருக்கவேண்டும். ஆசிரியர்கள் உடலளவிலும் மனதளவிலும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கவேண்டும், இது கல்வி முறைக்குள்ளும் ஆசிரியர் பயிற்சிக்குள்ளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குழந்தைகள் உங்களை கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்கள் நீங்கள் சொல்வதைத் தவறவிடலாம், ஆனால் நீங்கள் இருக்கும் விதத்தை அவர்கள் தவறவிடுவதில்லை. ஆசிரியர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் சமநிலைக்கு கவனம் கொடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். அது மட்டுமல்ல, இந்த ஒரு காலாச்சாரத்தை சமுதாயம் முழுவதிலும் நாம் கொண்டுவர வேண்டும். ஊக்கமான மனிதர்களை நாம் உருவாக்கவில்லை என்றால், தரத்தில் நம்மை விடக் குறைவான ஒரு தலைமுறையை நாம் விட்டுச்செல்வோம். இது ஒவ்வொரு தலைமுறைக்கும் அடிப்படையான பொறுப்பு, நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறை நம்மைவிட ஒரு படியாவது மேலானதாக இருக்கவேண்டும். நம்மை விட மோசமான ஒரு தலைமுறையை உருவாக்குவது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றம்.

மக்கள் தங்கள் வாழ்க்கையின் பல வருடங்களை கல்விக்கூடங்களில் கழிக்கிறார்கள். அதுதான் அவர்கள் வார்க்கப்பட்டு வடிவமைக்கப்படும் இடம், அதனால் அவை தரமாக இருக்கவேண்டியது அவசியம். தற்போது நாம் பின்பற்றும் கல்விமுறையின் பெரும்பகுதி, ஆங்கிலேய ஆக்கிரமிப்பு விட்டுச்சென்றதாகவே இருக்கிறது. நாம் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறோம், ஆனால் நாம் உண்மையில் கல்வியைப் பற்றி மறுஆய்வு செய்ததில்லை. அடிப்படையில் இந்த கல்விமுறை, மறுத்துப்பேசாத கீழ்ப்படிதலைக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதுதான் அவர்களுக்குத் தேவைப்பட்டது, அதைத்தான் அவர்கள் செய்தார்கள். நாம் நம் கல்விமுறையை நமக்குப் பொருந்தும் விதத்தில் புதுப்பிக்க வேண்டும். ஏனென்றால் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தேடுதலுடையவர்களின் தேசமாக இருந்துள்ளோம். காலங்காலமாக, பிறர் நம்மை அடிமையாக்கியபோதும் கூட, இந்தத் தேடுதல் நம் கலாச்சாரத்தைப் பாதுகாத்துள்ளது. தேடுதல் என்றால் நமக்கு ஒரு உயிர்ப்பான அறிவுத்திறன் தேவை, கற்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. தேடுதல் என்பது சுதந்திரம் மற்றும் விடுதலையின் பாதையில் இருப்பதைக் குறிக்கிறது. இதற்குத்தான் கல்வி வழிவகுக்கவேண்டும்.

இதுதான் நம் கல்விமுறைகளை மறு சிந்தனை செய்து மறு வடிவமைப்பு செய்வதற்கான நேரம். ஏனென்றால் நமக்கு பொருளாதார வசதியும், உலகம் முழுவதையும் சென்றடையும் ஆற்றலும், முன்பு எப்போதும் இல்லாத அளவு இப்போது இருக்கிறது. அதோடு அதனை நிகழ்த்தவேண்டும் என்ற உறுதி கொண்ட தலைமையும் இருக்கிறது. அது தவிர, சம்ஸ்காரத்தின் உதவியும் நமக்கு இருக்கிறது, அதாவது இந்தியாவைப் பொறுத்தவரை அற்புதமான அறிவாற்றல் நம்மிடம் உள்ளது. தனிமனிதர்களின் கூர்மையான மதியால் வளர்ந்த பூமியிது. இப்போது நமக்கு இருக்கும் கல்வி முறையின் மூலம், மேற்கத்திய நிர்வாகமுறையைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். இந்தியாவில் ஒருங்கிணைந்து செயல்படுவதில் ஒழுங்குமுறை கொண்டுவருவது தேவைதான், ஆனால் தனிமனிதர்களின் மதிகூர்மைக்கு ஏதோவொன்று செய்யாமல் நம் நாடு செழிக்க முடியாது. இது நாம் அனைவரும் கவனம் செலுத்தவேண்டிய ஒன்று. தனிமனிதர்களின் அறிவுத்திறன் மலர்வதற்கு அனுமதிக்காவிட்டால் அற்புதமான மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அற்புதமான மனிதர்கள் இருக்கும் இடத்தில்தான் அற்புதமான தேசம் இருக்கும்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில், ஆசிரியர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதாவது அரசு நிர்வாகம், ஆசிரியர்களுக்கு கல்வி வழங்க முயற்சியெடுக்கிறது. ஆனால் இந்த பயிற்சி முகாமை யார் நடத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி. இவ்வளவு பெரிய அரசு அமைப்பை மாற்றியமைப்பதும் தரத்தை உயர்த்துவதும் ஒரே நாளில் நடக்கப்போவதில்லை. கல்வித்துறையும் இந்த பயிற்சி செயல்முறை முழுவதையும் வேறொருவர் கையில் ஒப்படைக்க விரும்பாது. ஆனால் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருக்கும் அரசு சாரா அமைப்புகள் அல்லது பல்கலைக்கழகங்கள் இப்பயிற்சியின் ஒரு பகுதியையாவது எடுத்து நடத்தலாம். இந்த பயிற்சி செயல்முறையில், ஆசிரியர்களை எப்படி உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக்குவது, கொஞ்சம் தியானம், யோகா, மற்றும் அவர்கள் வாழ்வை மேம்படுத்தக்கூடிய இன்னும் சில அம்சங்களைச் சேர்க்கலாம். இது ஆசிரியர்களுக்கு பலனளிப்பதாகவும் இருந்தால், அதில் பங்கேற்பதற்கு ஆசிரியர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். இப்படிப்பட்ட பயிற்சி முகாம்களில் பங்கேற்பதன் மூலம் ஆசிரியர்களின் மதிப்பீட்டைக் கூட்டும் ஒரு முறையை அமைத்தால், அந்த மதிப்பீடு ஒரு நிலைக்கு உயரும்போது கடைசியில் சம்பளமும் உயரும் ஒரு முறையை நாம் கொண்டுவரலாம். இவையனைத்தும் கொள்கை முடிவுகள், நம்மால் ஆலோசனை மட்டுமே வழங்கமுடியும். ஆனால் மற்ற கல்வி அமைப்புகளை பயிற்சி முறையின் சில பகுதிகளில் ஈடுபடுத்துவது, குறைவான கால அவகாசத்தில் அதன் தரத்தை குறிப்பிடத்தக்க விதத்தில் மேம்படுத்தமுடியும்.

எல்லா ஆசிரியர்களுக்கும் பயிற்சியளிப்பது இன்று சாத்தியமான ஒன்று. தொழில்நுட்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும், வேறெந்த தலைமுறையும் கற்பனை கூட செய்யமுடியாத ஆற்றல் இன்று நம்மிடம் உள்ளது. உண்மையை பிரதானமான போக்காக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. என்னை மிக உயர்ந்த நிலையிலான அனுபவத்தில் இருக்கவைப்பது என் இருப்புநிலையின் உண்மை தான். நீங்களும் ஒவ்வொரு மனிதரும் உங்கள் இருப்புநிலையின் உண்மையை உணர்ந்துவிட்டால், உங்களின் மிக உயர்ந்த நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் அது ஒரு சக்திவாய்ந்த செயல்முறையாக மாறும். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி வழங்குவதில் ஈடுபட்டிருக்கும் பிறரை வல்லமை படைத்தவர்களாக்க, தன்னிலை மாற்றத்திற்கான எளிய கருவிகளை நாம் வழங்க விரும்புகிறோம். அக்கருவியை வைத்து உங்களுக்கு நீங்களே ஏதோவொன்று செய்துகொள்ளலாம், அது உங்களை உங்களுக்குள் இன்னும் சிறப்பான இடத்திற்கு எடுத்துச்செல்லும். இது நிகழவேண்டும் என்பது என் ஆசையும் ஆசியும்.

Love & Grace