இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நதிகளுக்கான இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக்குவதில் பங்களித்துள்ள ஒவ்வொருவருக்கும் தமது நன்றிகளை சத்குரு தெரிவித்துக் கொள்கிறார்.

நதிகளுக்கான இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 30 நாட்களில், 16 மாநிலங்கள் வழியாக பயணம், 142 நிகழ்ச்சிகள், 186 நேர்காணல்கள், அதோடு பற்பல சிறிய நிகழ்வுகள். இவையனைத்தும் என் தொண்டையை மட்டுமே சற்று பதம் பார்த்தது - மற்றவை அனைத்தும் நன்றாகவே இருக்கிறது. இந்த செயல்முறை முழுவதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்தது. அளப்பரிய உற்சாகத்துடன் இதற்காக தேசம் முழுவதிலிருந்தும் பாடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா விதமான மக்களையும், இதற்கு முன் நம்மை அறிந்திராதவர்களைக் கூட, இந்த நோக்கம் தீயாய் பற்றிக்கொண்டது.

உள்ளம் நெகிழும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு கிராமத்தின் வழியாக நான் வண்டி ஓட்டிச்சென்றபோது மழை பெய்துகொண்டு இருந்தது. அங்கு கொட்டும் மழையில், ஒரு வயதான பெண்மணி, நான்கைந்து குழந்தைகளுடன் "நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்" பலகைகளை ஏந்தியபடி காத்திருந்தார். யாரோ அவர்களிடம், "சத்குரு வரப்போகிறார்" என்று சொல்லியிருக்கிறார்கள். நான் வேகமாகச் சென்றதால் அவர்களைக் கடந்து சென்றுவிட்டேன். பிறகு நீலநிற பலகைகளைக் கண்டதும் மீண்டும் பின்னால் வந்தேன். அவர்கள் உணர்வில் இருந்தது, "நீங்கள் நதிகளுக்காக ஏதோ செய்கிறீர்கள். அதனால் நாங்கள் இங்கு நிற்கிறோம்." என்பதுதான். இது மிகவும் அதிசயமாக நிகழ்ந்தது. பலவிதங்களில் நெஞ்சைத் தொடும் விஷயங்கள் நிகழ்ந்தன.

தேசம் முழுவதும் மக்கள் வியக்கத்தக்க உறுதியுடன் இதற்கு பதில் கொடுத்தனர். ஐந்தாறு இடங்களில், இரவு பதினோரு பன்னிரண்டு மணியளவில், சேரவேண்டிய இடம் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் ஒரு சிறு ஊரில் எங்களை சிலர் நிறுத்தி, "இல்லையில்லை, மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த இடத்திற்கு நீங்கள் வரவேண்டும்." என்றார்கள். அங்கிருந்து ஒரு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கோ ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று திருமணத்திற்குச் செல்வது போல புத்தாடைகள் உடுத்தி இருநூறு பேர் உற்சாகத்துடன் காத்திருந்தார்கள். பக்கவாத்திய இசை உட்பட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அதனால் இரவு பன்னிரண்டு மணிக்கு அங்கு நான் பேசினேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாங்கள் தினமும் தோராயமாக ஒன்பது முதல் பத்து மணி நேரம் வண்டி ஓட்டிச்சென்றோம். சில நாட்களில் பதினெட்டு மணி நேரம் வரை பயணித்தோம். இந்திய ரோடுகள் சற்று சவாலாகத்தான் இருந்தன. எட்டு பத்து வருடங்களுக்கு முன் இருந்த ரோடுகளோடு ஒப்பிட்டால், இப்போது 80% ரோடுகள் என் கருத்தில் நன்றாகவே உள்ளன. நெடுஞ்சாலைகள் மிகவும் மாறியுள்ளன. ஒரே பிரச்சனை என்னவென்றால், அமெரிக்காவில் இருப்பதாக நினைத்துக்கொள்ளும் சிலர் இருக்கிறார்கள், அவர்கள் திடீரென எதிர்திசையில் வண்டி ஓட்டிக்கொண்டு வருவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் வட்டாரங்களில் இருப்பவர்கள் இதற்கு பதில் கொடுக்கும் விதத்தைப் பாராட்டவேண்டும். அவர்கள் தங்களுக்குள் உள்ள கசப்பான பிரச்சனைகளை ஓரமாக வைத்துவிட்டு, இந்நிகழ்ச்சிகளில் ஒன்று சேர்ந்து கலந்துகொண்டு, ஒருவரோடு ஒருவருக்குள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி, நதிகளுக்கான இவ்வியக்கத்திற்கு தங்கள் முழு ஆதரவைத் தரும் விதத்தைப் பார்த்தால், கட்டாயம் அவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்.

தேர்தலுக்குள் நுழையும் சில மாநிலங்கள் இருந்தன, கட்சிகளுக்கு இடையே மிக மோசமான மோதல்கள் வெடித்துக்கொண்டு இருந்தன. ஆனால் நம்மோடு மேடையில், முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், ஒரு குறிப்பிட்ட கட்சி ஜெயித்தால் வரக்கூடிய எதிர்கால முதல்வர் என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து நதிகளுக்காக ஒரே குரலில் பேசினார்கள். நாம் பல பிரச்சனைகளை உருவாக்கியிருந்தாலும், நம்மால் தீர்வுகளையும் கண்டறிய முடியும் என்பதற்கு இது தெள்ளத்தெளிவான சான்று.

சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. நீங்கள் பல வீடியோ பதிவுகளைக் கண்டிருப்பீர்கள், சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடரவும் செய்திருப்பீர்கள். நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்காக நாம் பரிந்துரைக்கும் செயல்திட்ட வரைவை பிரதமரிடம் கொடுத்தோம். இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் செயல்படத் துவங்கிவிட்டார்கள், அதனால் செயல்திட்ட வரைவின் சாஃப்ட் காப்பி வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டார்கள். அவர்கள் அதிவேகமாக செயல்படுவதைப் பார்த்தால், எல்லோரும் இதை செயல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதையே காட்டுகிறது. நான் மாலை ஆறு மணியளவில் இந்த செயல்திட்ட வரைவை பிரதமரிடம் கொடுத்தேன், அடுத்தநாள் பதினோரு மணியளவில் சாஃப்ட் காப்பி வேண்டுமென்று கேட்டார்கள்.

இத்திட்டத்தின் மீது செயல்படுவதற்கு ஏற்கனவே ஒரு சிறிய குழுவை உருவாக்கிவிட்டார்கள், இது அற்புதமானது. அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து இதை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு உயர்மட்ட நிபுணர்கள் குழுவை இப்போது நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறோம். பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இவற்றை ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. நான் இன்னும் அதிகமான வேலைகளுக்குள்தான் நுழைகிறேன். சில நாட்களுக்கு முன்பு என்னிடம் ஒருவர், "சத்குரு, நீங்கள் 60 வயதைத் தொடுகிறீர்கள். உலகெங்கும் 60 கால்ஃப் கோர்ஸ்களில் நீங்கள் விளையாட வேண்டும்." என்றார். "ஏன் கூடாது, செய்யலாமே!" என்றேன். சமீபத்தில் அவர் என்னை மீண்டும் சந்தித்தபோது, "சத்குரு, அந்த 60 கால்ஃப் கோர்ஸ் திட்டம் என்னவாகியது?" என்று கேட்டார். "அதற்கு பதிலாக 60 நதிகளுக்கான திட்டம்தான் நடக்கப்போகிறது." என்றேன்.

தேசம் முழுவதும் பிரம்மாண்டமான இயக்கமாக இது நிகழ்ந்துள்ளது. இது கட்டாயம் நடந்தாகவேண்டிய ஒன்று. கடந்த ஆறேழு வருடங்களாக இது என் மனதில் இருந்துள்ளது. சாதாரணமாக என் மனதில் ஒன்றை விதைத்துவிட்டால், அதை தினசரி கவனிக்காவிட்டாலும் அது தன்னால் வளர்ந்துவிடும். மூன்று மாதங்களுக்கு முன்புதான் இது பற்றி நம் குழுக்களிடம் நான் பேசினேன். ஆனால் பேரணியை நிர்வகித்தவர்கள், ஈஷா யோகா ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், என அனைவரும் செயலில் இறங்கினார்கள். திட்டமிடுதல், தகவல் பரிமாற்றம், சமூக வலைதளங்கள், ஊடகங்கள், ஸ்பான்சர்கள் என்று எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, அறுபதிற்கும் குறைவான நாட்களில் ஒரு மாபெரும் இயக்கம் நடந்தேறியது.

இதுதான் ஈஷா. வியக்கத்தக்க விஷயங்களைச் செய்யும் முட்டாள் கூட்டம் நாம். நாம் விழிப்புணர்வின் சக்தியை நிரூபித்துள்ளோம். இங்கு பெரிய அறிஞர்கள் எவரும் இல்லை, பாதிபேர் வேறெந்த வாழ்க்கை சூழ்நிலையிலும் பொருந்தாதால் இங்கு இருக்கிறார்கள். நதிகளுக்கான இந்தப் பேரணி நடந்தேறிய விதம் தேசம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேசத்தில் மிகவும் உயர்மட்டத்தில் இருப்போரும் கூட வெளிப்படையாக இப்படிச் சொல்கிறார்கள், "ஒரு பெரிய அரசியல் கட்சியால் கூட இப்படியொரு பேரணியை நடத்த முடியாது. ஈஷாவைப் போன்ற ஒரு நிறுவனத்தால் இதை எப்படி நிகழ்த்த முடிகிறது?" இந்த "முட்டாள் கூட்டம்" இத்தகைய செயல்களைச் செய்யவல்லது. ஏனென்றால், "எனக்கு நிறைய தெரியும்" என்ற சுமையை இவர்கள் சுமப்பதில்லை. இதற்கு வேண்டியதெல்லாம் நெஞ்சம் நிறைய பக்தியும் தீவிரமான நோக்கமும் மட்டுமே, இவ்விரண்டும் இருந்தால் எதையும் நிகழ்த்திவிடலாம்.

இந்த மாபெரும் இயக்கத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். உற்சாகமான குழந்தைகள், பிரபலங்கள், பொதுமக்கள், தேசம் முழுவதுமுள்ள தன்னார்வத் தொண்டர்கள், யோகா ஆசிரியர்கள், பிரம்மச்சாரிகள், தங்கள் அலைபேசியை ஒரு நல்ல காரியத்திற்காக பயன்படுத்திய 13 கோடி மக்கள்! உங்கள் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

sadhguru signature