கேன்சர் - நவீன சமூகத்தின் நோய்!
கேன்சர் நோயைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, அதற்கான காரணிகளையும், அதனால் உண்டாகும் அபாயங்களை நவீன சமுதாயம் எப்படி குறைக்க முடியும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார்...
கேன்சர் நோயைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, அதற்கான காரணிகளையும், அதனால் உண்டாகும் அபாயங்களை நவீன சமுதாயம் எப்படி குறைக்க முடியும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார்...
நோய் குறித்த நமது புரிதலின் படி புற்று நோய் என்பது ஒரு நோயே அல்ல. நமது உடலின் உயிரணுக்கள் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு எதிராக திரும்புகின்றன - இது வெளி சூழ்நிலைகளால் தூண்டி விடப்பட்டும் நிகழலாம். நவீன சமூகம் என்று அழைக்கப்படும் இன்றைய உலகில் இந்த புறத் தூண்டுதல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் இருக்கின்றன. பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஒரு ஒழுங்கற்ற முறையில் இருப்பதே மிகவும் அடிப்படையான காரணமாக இருக்கின்றன. நாம் உண்ணும் விதம், தண்ணீர் குடிக்கும் விதம், சுவாசிக்கும் காற்றின் தன்மை, நம் உடலை பாதித்து, அதற்கு எதிராகவே அதை திருப்புகிறது. மரபணு ரீதியாக இது முன்னரே வகுக்கப்படலாம், ஆனால் புற்று நோயின் உண்மையான காரணம் அதுவல்ல.
Subscribe
இந்த போக்கை திருத்தி அமைப்பது என்பது எளிதான செயல்முறை அல்ல. மனித உடலை பல வழிகளில் சீர்கெடுக்கும் ஒரு வாழ்க்கை முறையை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், உணவுப்பதார்த்தங்கள் கெடாது இருக்க பயன்படுத்தும் பொருட்கள், மற்றும் நாம் மாசுபடுத்திய நீரும், காற்றும் கூட புற்று நோய் சாத்தியங்களை அதிகப்படுத்தவே செய்யும். எளிதாக நாம் செய்யக் கூடியது என்னவென்றால் சுத்தமான காற்று இருக்கும் சூழ்நிலையில் வசிப்பது, பாட்டில் தண்ணீர் அருந்தாமல் இயற்கையாக கிடைக்கும் தண்ணீர் அருந்துவது, நம் வாழ்விடத்தின் அருகே விளையும் உணவுப் பொருட்களை உண்பதே. நீங்கள் வாழும் இடத்தில் இருந்து ஒரு நாளில் நடந்து செல்லக் கூடிய தொலைவில் விளையும் உணவு பொருட்களையே உண்ண வேண்டும் என்று யோகக் கலாச்சாரம் சொல்லி வந்திருக்கிறது. இன்றைய சூழலில் அது சாத்தியம் இல்லை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆப்பிள், சீனாவின் திராட்சை, வேறு எங்கோ இருந்து வரும் ஏதோ ஒன்றை உண்பதில் மிகுந்த பெருமை அடைகிறோம். நம் சந்தைத் திறனைக் கட்டமைத்திருக்கும் விதம் குறித்து நமக்கு பெருமை. ஒரு நிலையில் இது அற்புதமான விஷயமாக இருந்தாலும், அதற்கான பின்விளைவுகளும் இருக்கவே செய்யும்.
மருத்துவ அறிவியல் பல தீர்வுகளை கண்டிருந்தாலும், வாழ்க்கை முறையின் காரணமாக புது புது பிரச்சனைகள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். ஏதோ ஒன்றை நீங்கள் தடுக்க முயன்றால் அது இன்னொரு வழி, மற்றொரு வழி என்று வெளி வருகிறது. மருந்து மூலம் நாம் குணப்படுத்த முயன்று கொண்டே இருக்க, இன்னும் சிக்கலான வடிவில் புற்று நோய் வடிவெடுக்கும். நவீன சமூகம் இதை எதிர் கொண்டே ஆக வேண்டும். நவீன சமூகம் இப்படித்தான் வாழ வேண்டியிருக்கிறது. ஏனெனில் நவீனம் என்றால் இயற்கைக்கு மாறாக என்றாகி விட்டது. இயற்கை வகுத்த முறையில் வாழ்ந்தால் நீங்கள் பழமைவாதி என்று கருதப்படுவீர்கள். இயற்கை முறையில் இருந்து முற்றிலும் விலகி வாழ்ந்தால் மட்டுமே, நீங்கள் நவீனமானவர் என்று கருதப்படுவீர்கள். அதிக எண்ணிக்கையில் புற்று நோய் உள்ளவர்கள் தெரிய வருவது, நம் கண்டறியும் திறன் மேம்பட்டிருப்பதால். ஆனால் அதற்கு முன் பலர் புற்றுநோய் என்று கண்டறியப்படாமல் இறந்து போனார்கள்.
நம் நல்வாழ்வுக்கு எதிராக செயல்படும் நவீனத்துவம் குறித்த நமது அடிப்படை கருத்தை மாற்றிக் கொள்ளா விட்டால், புற்று நோய் அதிகரிப்பது தொடரவே செய்யும்.
நம் உடலில் நிகழும் சிக்கலான விளைவுகளை கணக்கிட முடியாது. தொலைதொடர்பு, நுண் அலைகள் இன்னும் பல விதமான ஒலி, ஒளி பரப்புதல் இவை மூலம் நாம் உருவாக்கிய அதிர்வுகள் என பல விஷயங்கள் நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக பெங்களூரில் நகரமே மிகுந்த பரபரப்பாக இருக்கிறது. வாகன இரைச்சல் தவிர எதையுமே கேட்க முடியாது. பல்லாயிரக்கணக்கில் குருவிகள் இருந்த பிரதேசம் அது. அலைபேசி கோபுரங்கள் வெளிப்படுத்தும் கதிர்கள், மின் காந்த அலைகள் காரணமாக அவற்றில் முக்கால்வாசி அழிந்திருக்க கூடும். மனிதன் என்பது சற்று பெரிய உயிராக இருக்கலாம். அதனால் பாதிப்பு நிகழவில்லை என்று நினைக்க வேண்டாம். சில ஆய்வுகள், இந்த அதிர்வுகள் மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து எடுத்து காட்டுகின்றன.
தொழில் நுட்பம் குறித்த நமது ஆய்வுகள் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறது. நமக்கு என்ன விருப்பமோ அதை செய்து விட்டு, 25 வருடங்கள் கழித்தே விளைவுகளை ஆராய்கிறோம். அனைத்து விதமான ஈர்ப்புகள் மற்றும் அதன் வியாபாரப் பலன்கள் கடந்து நமக்கு நன்மையானதை உபயோகித்து, தேவையற்றதை நிராகரிக்கும் பக்குவத்திற்கு நம் அறிவியல், தொழில்நுட்பம் வராவிட்டால் புற்று நோய் அதிகரிப்பது தொடரும். இன்றைய சூழலில் இவற்றைத் தவிர்ப்பது முடியாத ஒன்று என்று எனக்கு தெரியும். இந்த பதிவையே உங்கள் கணினியில் தான் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய அதிர்வு மட்டுமில்லாது உங்கள் கணினியின் அதிர்வையும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இது தவிர்க்க முடியாது. இது வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. ஆனாலும் நீங்கள் தூங்கும் இடத்தை, தியானம் செய்யும் இடத்தை எந்த அளவு முடியுமோ, அந்த அளவு இந்த அதிர்வுகள் இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். இது முழுமையான தீர்வு அல்ல. ஆனால் யோகா பயிற்சிகள், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை என இருந்தால் புற்று நோயின் சதவிகிதத்தை நிச்சயம் குறைக்கலாம்.