நிறைய பணம்; பெரிய வீடு! - எது நல்வாழ்வு?
சொத்து சேர்ப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவிடும் பெரும்பான்மையானோர், நல்வாழ்வை மட்டும் அனுபவிக்க தவறிவிடுகிறார்கள்! அப்படியென்றால் பணமும் செல்வமும் நல்வாழ்வினை தருவதில்லையா? உண்மையான நல்வாழ்வு எது? சத்குருவின் இந்த கட்டுரை உண்மையை உணர்த்துகிறது!
சொத்து சேர்ப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவிடும் பெரும்பான்மையானோர், நல்வாழ்வை மட்டும் அனுபவிக்க தவறிவிடுகிறார்கள்! அப்படியென்றால் பணமும் செல்வமும் நல்வாழ்வினை தருவதில்லையா? உண்மையான நல்வாழ்வு எது? சத்குருவின் இந்த கட்டுரை உண்மையை உணர்த்துகிறது!
சத்குரு:
இவ்வுலகில் இப்போதைய தேவை ‘செல்வம் சேர்ப்பது’ மட்டுமல்ல, ‘நல்வாழ்வு’ம் தான். செல்வம் என்பது நல்வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கான பல கருவிகளில் ஒன்று. அதை வைத்து, வெளிசூழ்நிலைகளைத் தான் நாம் இனிமையாய் அமைத்துக் கொள்ள முடியுமே தவிர்த்து, அதுவே எல்லாம் அல்ல. ஆனால் இன்று, அதையே மதம் போல் பலரும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் என்பது நல்வாழ்விற்கான ஒரு வழி மட்டுமே. பணம் மட்டுமே நல்வாழ்வு அல்ல. தேவையே இன்றி அதற்கு முக்கிய இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ‘செல்வம் நல்லதா? கெட்டதா?’... செல்வம் என்பது நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. அது நாம் உருவாக்கிக் கொண்ட ஒரு சாதனம். அவ்வளவு தான்.
இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு யாருமே செல்வத்திற்கு ஆசைப் படவில்லை. இது நம்பமுடியாததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அவர்கள் விரும்புவது பணத்தை அல்ல. அவர்கள் விரும்புவது நல்வாழ்வைத்தான். அதை அடைவதற்கான ஒரு கருவியாக பணம் இருக்கிறது, அவ்வளவுதான்.
எல்லோருக்குமே அவர்கள் வாழ்க்கை இனிமையாய் அமைய வேண்டும் என்பது தான் ஆசை. இந்த இனிமை என்பது ஐந்து வழிகளில் நடக்கலாம். உங்கள் உடல் இனிமையாய் இருந்தால், அதை சுகம் என்போம். உங்கள் மனம் இனிமையாய் இருந்தால், அதை அமைதி என்போம். இதுவே மனம் மிக இனிமையாய் இருந்தால், அதை மகிழ்ச்சி என்போம். உங்கள் உணர்வுகள் இனிமையாய் இருந்தால், அது அன்பு. அதுவே மிகவும் இனிமையாய் இருந்தால், அது கருணை. உங்கள் உயிர்சக்தி இனிமையாய் இருந்தால், அது பேரானந்தம். அதுவே மிகவும் இனிமையாய் இருந்தால், அது பரவசம். உங்கள் சூழ்நிலைகள் இனிமையாய் இருந்தால், அது வெற்றி. உங்களுக்கு இவ்வளவு தானே வேண்டும்?
Subscribe
‘இல்லை. இல்லை. எனக்கு சொர்க்கத்திற்குப் போகவேண்டும்’. உங்களுக்கு ஏன் சொர்க்கத்திற்குப் போகவேண்டும்? ஏனெனில் இதுவரை நீங்கள் கேட்ட கதைகள் எல்லாமே சொர்க்கத்தை மிக இனிமையான இடமாக வர்ணித்திருக்கின்றன. ஆக எல்லா நேரத்திலும் நீங்கள் விரும்புவது இனிமைதான். இந்த உலகத்தில் இருக்கும்வரை அந்த இனிமையை பணம் கொண்டு வாங்கிவிடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். இது ஓரளவிற்கு மட்டுமே நிஜம்.
ஆனால் பணம் கொண்டு நீங்கள் வெளி சூழ்நிலையில் மட்டுமே இனிமையை உருவாக்கிக் கொள்ளமுடியும், உள்சூழ்நிலையில் அல்ல. உங்களிடம் நிறைய பணம் இருந்தால், நீங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கலாம். ஆனால் உங்கள் உடல், மனம், உணர்வுகள், சக்திநிலை இனிமையாய் இல்லையென்றால், அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்கமுடியுமா? முடியாது. ஆனால் அதுவே, இந்த நான்கும் இனிமையாய் இருந்தால், மரத்தடி நிழலில் கூட நீங்கள் ஆனந்தமாக இருக்க முடியும்.
‘அப்படியென்றால், நான் பணம் வைத்துக்கொள்ளக் கூடாதா?’ அப்படிச் சொல்லவில்லை. ஆனால் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கும் இனிமையாய் இருந்து, உங்களிடம் பணமும் இருந்தால், உங்களின் வெளிசூழ்நிலையையும் நீங்கள் இனிமையாய் அமைத்துக் கொள்ளலாம். அதனால் பணத்தைப் பொறுத்தவரை, அது நல்லதோ, கெட்டதோ அல்ல. ஆனால் அது உங்கள் சட்டைப்பையில் இல்லாமல், உங்கள் தலைக்குள் போய்விட்டதென்றால், பின்பு அது துன்பத்தை வரவழைத்து விடும்.
சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் ஒரு மனிதரை அழைத்து வந்தனர். அவர் மிக மோசமான நிலையில் இருந்தார். மனமுடைந்து தற்கொலை செய்யும் அளவிற்கு அவர் சென்றுவிட்டார். ஏன்? ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் 3,000 கோடி ரூபாய் இருந்ததாம். பின்பு பங்குச் சந்தையில் செய்திருந்த சில தவறான முதலீடுகளால், அவரிடம் வெறும் 250 கோடி ரூபாயே மிஞ்சியது என்பதால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்யத் துணிந்தாராம். இந்தியாவில் பலரிடம் அப்பணத்தைக் கொடுத்து, ‘உங்களுக்கு இந்த பணம் வேண்டுமா? அல்லது சொர்க்கத்திற்குப் போகவேண்டுமா?’ என்று கேட்டால், சிறிதும் தயங்காமல், அவர்கள் அந்தப் பணமே வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த மனிதரோ இதற்காகத் தற்கொலை செய்யும் வரை சென்றுவிட்டார். பணத்தை உங்கள் சட்டைப்பையில் வைத்திருந்தால், அது ஒரு நல்ல சாதனம். அதை வைத்து இவ்வுலகில் பல நல்ல விஷயங்கள் செய்யலாம். ஆனால் அதே பணம் உங்கள் தலைக்குள் நுழைந்துவிட்டால் மட்டுமே, அது துயரமான விஷயமாக ஆகிவிடுகிறது. ஏனெனில் பணத்திற்கான இடம் அதுவல்ல. அது உங்கள் சட்டைப்பையில் தான் இருக்கவேண்டும்.
இன்று பணத்தைக் கடவுளாக மாற்றிவிட்டு, அதைத் தேடி ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறோம். செல்வத்தை ஈட்டும் முயற்சியில் நம் வாழ்வின் ஆதாரமான இந்த பூமியையே அழித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஒரு ஊசியைச் செய்தாலும், கம்ப்யூட்டர், கார், அல்லது வேறு எந்த பெரிய எந்திரத்தைச் செய்தாலும், அதற்கு இந்த பூமியைத் தான் தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பூமியை எந்த அளவிற்குத் தோண்டலாம், எந்த அளவிற்குத் தோண்டினால் இந்த பூமி தாங்கும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த அளவிற்குத் தெளிவு இல்லையென்றால், செல்வம் சேர்க்கும் நம் முயற்சியில், இப்பூமியை நாம் முழுவதுமாக அழித்துவிடுவோம். பலவகைகளில் நாம் இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம்.
முதலில் ‘செல்வம்’ என்பது நம்மைப் பொறுத்தவரை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். செல்வம் என்றால் நிறைய வீடுகள், நிறைய கார்கள், நிறைய எந்திரங்கள், என இன்னும் நிறைய நிறைய, அப்படித்தானே? இப்படி நிறைய, நிறைய, நிறைய என்று போனால் அங்கு மரணம் தான் காத்திருக்கிறது. உலகின் மிக செல்வச் செழிப்பான நாடுகளில், உதாரணத்திற்கு அமெரிக்காவில், 20% மக்கள் மனோதத்துவ சிகிச்சை மேற்கொண்டு, அதற்கான மருந்தினை தொடர்ந்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த மருந்து மட்டும் கிடைக்காமல் போனால், அந்நாட்டின் 20% மக்களுக்கு பித்துப்பிடித்து விடும். இதை நல்வாழ்க்கை என்று சொல்லமுடியாது. பொதுவாக, பலர் கனவுகாணும் வசதிகள் அனைத்துமே ஒரு சாதாரண அமெரிக்கக் குடிமகனிடம் இருக்கிறது. அங்கு தேவையான செல்வம் இருக்கிறது, ஆனால் நல்வாழ்வு இல்லை. வாழ்க்கையே நன்றாக இல்லையென்றால், இந்த செல்வத்தை எல்லாம் வைத்து என்ன செய்வது? செல்வம் சேர்ப்பதை விடுத்து, மனித நல்வாழ்வை உருவாக்குவது பற்றி நாம் சிந்தித்தால், பின்பு என்ன தேவை, எந்த அளவிற்குத் தேவை, என்பதறிந்து நாம் செயல்படுவோம்.
நம் வாழ்வில் என்ன செய்யவேண்டும், எந்த அளவிற்குச் செய்யவேண்டும் என்பதை நாம் முடிவு செய்யவேண்டும். எந்த அளவிற்கு வெளிசூழ்நிலையில் செயல் செய்யவேண்டும், எந்த அளவிற்கு உள்நிலையில் செய்வது, எந்த அளவிற்கு சமூக நல்வாழ்விற்குச் செயல் செய்வது, உண்மையில் நாம் என்ன தான் செய்ய விரும்புகிறோம், எந்த அளவிற்குச் செயல் செய்தால், நம்மையும் கெடுக்காமல், சுற்றுப்புறச் சூழலையும் கெடுக்காமல் நம் வாழ்வைச் சமநிலையில் நடத்திக் கொள்ளலாம் இதையெல்லாம் நாம் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இந்தப் புரிதல் தான் இன்று இவ்வுலகில் இல்லை. செல்வம் சேர்க்கிறோம் என்று அளவுக்கு அதிகமாய் தோண்டியெடுத்து, இவ்வுலகிற்கு அதிகப்படியான கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் போகும் வேகம் மிகவும் மூர்க்கத்தனமானது. இன்றே 700 கோடி மக்கள் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனை மனிதர்கள் இந்த பூமியில் வாழ, பற்பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. இதேநிலை தொடர்ந்தால், 2050ல் நாம் 950 கோடி மக்களாய் பெருகி விடுவோம் என்று கணிக்கின்றனர். இன்னும் நாற்பதே ஆண்டுகளில் 950 கோடி மக்கள் இவ்வுலகில் வாழப் போகிறார்கள். இதை உங்களால் கற்பனையும் செய்ய முடிகிறதா?
இதை நாமே சரிசெய்யவில்லை என்றால், இயற்கை இதை சரிசெய்து விடும். பேரழிவுகளை விளைவித்து, இயற்கை இதை சரிசெய்தது என்றால், அது மிகக் கொடூரமாக இருக்கும். அதனால் விவேகத்துடன் வாழப் போகிறோமா, அல்லது விவேகமற்று வாழப் போகிறோமா என்பது தான் நம் கையில் இருக்கும் தேர்வு. செல்வந்தனாக வாழ்வதா அல்லது ஏழையாய் வாழ்வதா என்பதல்ல நமது தேர்வு. ஏழையாக வாழ்வதில் யாருக்குமே உடன்பாடில்லை. அதனால் நாம் தேர்வு செய்யவேண்டியது, நம் தேவைகளை நல்லறிவுடன் நிறைவேற்றிக் கொள்ளப்போகிறோமா அல்லது மூடத்தனமாய் அளவின்றி இப்பூமியின் வளங்களை சூறையாடப் போகிறோமா என்பது தான். உதாரணத்திற்கு, ஒரு நாளுக்கு இருவேளை உணவு கிடைத்தாலே, நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்வேன், ஆனால் சிலர் ஒரு நாளிற்கு பத்து வேளை உண்ண நினைக்கலாம். இது மரணத்திற்கு சமம். ஏழ்மையில் வாடும் குடும்பங்களில் இருந்து வருவோர், ஓரளவிற்கு பணம் சேர்க்கும் போது, அவர்களுக்கு என்ன நிகழ்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? அவர்களில் ஏற்படும் முதல் மாற்றம், அவர்கள் குண்டாவதுதான்.
சமீபத்தில், ஒரு அமெரிக்க எழுத்தாளர் சீன நாட்டிற்குச் சென்றார். அங்கு இவரை கவனித்துக் கொண்ட சீன முகவர், ஒரு உணவு விடுதிக்கு இவரை அழைத்துச் சென்றார். அப்போது ஒரு சீன பத்திரிக்கையாளர் இந்த அமெரிக்க எழுத்தாளரிடம், ‘சீன கலாச்சாரம் உணவிற்குப் பெயர்போனது. அமெரிக்கக் கலாச்சாரம் உடலுறவை முதன்மையாகக் கொண்டது. இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு அந்த அமெரிக்க எழுத்தாளர் சிறிதும் தாமதிக்காமல், ‘அப்படியா? அது உண்மை என்றால்... எங்கள் நாட்டில் மனிதர்கள் குண்டாகவும், உங்கள் நாட்டின் மக்கட்தொகை 100 கோடியாகவும் எப்படி ஆனது?’ என்று கேட்டாராம்.
நம் மனதில் பலவற்றையும் நாம் குழப்பிக் கொண்டு விட்டோம். என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கே புரிவதில்லை. நாம் செய்யும் செயல்களை நியாயப்படுத்த, ஒவ்வொன்றிற்கும் ‘நல்ல சாயம்’ பூசுகிறோம். நான் வணிக நோக்குடைய செயல்களுக்கு எதிராக இல்லை. அவையெல்லாம் வேண்டும்தான். உண்பதற்கு உணவின்றி உங்கள் வயிறு பசித்துக் கொண்டிருக்கையில், உங்களால் தியானம் செய்ய முடியுமா? பிழைப்பதற்கே வழியில்லாத நிலையில் நீங்கள் தியானம் பற்றிச் சிந்திக்கக்கூட முடியுமா? பிழைப்பு சரிவர நடந்தால் தான், நீங்கள் தியானம் பற்றிச் சிந்திக்க முடியும்.
ஒரு அமெரிக்க எழுத்தாளர் இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களுக்கும் (பொதுவாக அவை தான் இருப்பதிலேயே சுத்தமும், சுகாதாரமும் அற்ற மிக அழுக்கான இடங்கள்) நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், தன் தாய்நாட்டிற்குத் திரும்பிச் சென்ற அவர், ‘எனக்குப் புரிந்த அளவில், மிக ஏழையாக, வயிற்றுக்கு போதிய உணவு கிடைக்காத, மிகக் குறைந்த அளவிலே ஆடைகள் அணிந்து, வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்றும் கூடத் தெரியாவிட்டால், நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதாக அர்த்தம்’ என்று ஆன்மீகத்திற்கு விளக்கம் அளித்தாராம். அதுவல்ல ஆன்மீகம். ஆன்மீகம் என்பது உங்களுக்குள், உங்கள் உள்நிலையில் நீங்கள் செய்யும் செயல். அது வெளிசூழ்நிலை சார்ந்தது அல்ல. வெளி சூழலை உங்களுக்கு வேண்டிய வகையில், வேண்டிய அளவிற்கு நடத்திக் கொள்ளலாம்.
எதையுமே ஒரு மதமாகவோ, வேதாந்தமாகவோ மாற்றிக் கொள்ளாதீர்கள். செல்வம் சேர்ப்பதோ, தகர்ப்பதோ... ஏன் இப்படிப்பட்ட முட்டாள்தனமான பேச்சுகள்? ஒவ்வொரு மனிதனுமே ஓரளவிற்குச் சுகமாய் வாழவேண்டும் என்றுதான் விரும்புகிறான். எந்த அளவிற்கு என்பது தான் கேள்வி. உங்கள் வீட்டில் நான்கு பேர் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள், மூன்றோ நான்கோ படுக்கையறைகள் கொண்ட வீட்டைக் கட்டிக் கொள்வீர்கள். அவ்வப்போது வந்துபோகும் உறவினர்களுக்கும் தேவை என்று நினைத்தால், ஆறு படுக்கையறைகள் கொண்ட வீட்டைக் கட்டிக் கொள்வீர்கள். ஆனால் சிலர் 150 படுக்கையறைகள் கொண்ட வீட்டைக் கட்டி வசிக்கிறார்கள். வீட்டில் விருந்தினர்கள் இல்லை என்றால், அது ஏதோ ‘பேய் பங்களா’ மாதிரி இருக்கும். ஒருவேளை அத்தனை அறைகளுக்கும் விருந்தினர்கள் வந்து, எல்லா அறைகளும் நிரம்பி வழிந்தாலும், அப்போதும் அது ஏதோ ஒரு விடுதி போல் தான் இருக்குமே தவிர்த்து, அது ஒரு வீடாக இருக்காது. ‘சரி... அப்படியென்றால் எத்தனைப் படுக்கையறைகள் கொண்ட வீட்டைக் கட்டிக் கொண்டால், அதை ஆன்மீகம் என்று சொல்வீர்கள்?’ இது ஆன்மீகம் பற்றியதல்ல. இது சாதாரண அறிவு. எது வேலை செய்யும், எது வேலை செய்யாது என்று யோசிக்கக்கூடிய, அடிப்படை அறிவைச் சார்ந்தது.
மனிதர்களும் சரி, மனித இனமும் சரி, எந்த அளவிற்குச் செயல்களை ஏற்றால், படபடப்பின்றி தன்னால் சமாளிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற் போல் தங்கள் செயல்களைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இது ஆன்மீகம் பற்றியல்ல, இது வெறுமனே அடிப்படை அறிவு. இந்த அளவிற்கும் கூட உங்களுக்குத் தெளிவான சிந்தனை இல்லையெனில், நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதும் கூட சாத்தியப்படாது.
மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும்போது, ‘நீங்கள் ஏன் தியானம் செய்வதில்லை?’ என்று நான் அவர்களைப் பார்த்துக் கேட்டால், ‘எங்கிருந்து தியானம் செய்வது? எனது மாதாந்திர செலவுக் கட்டணங்களை சமாளிப்பதற்கே நான் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது’ என்கிறார்கள். ‘எதற்காக இத்தனை செலவினங்களை இழுத்துக் கொள்கிறீர்கள்? உங்கள் முழு வாழ்க்கையையும் இதற்காக செலவிட நேர்கிறது என்றால், உங்கள் தேவைகளைச் சுருக்கி இன்னும் சுகமாய் வாழலாமே? இத்தனை செலவினங்களை சமாளிப்பதற்காக முடிவில்லாமல் உழைக்கிறீர்களே, இதில் என்ன அர்த்தம் உள்ளது?’ என்றால், ‘இல்லை, இல்லை... இந்த சமுதாயம் இப்படித்தான் செயல்படுகிறது’ என்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கை நடத்தும் விதம் மற்றவர்களைப் பார்த்து இருக்கிறது. நீங்கள் ஓரளவாவது சிந்திப்பவராக இருந்தால் நீங்கள் சுகமாக இருப்பதற்கு எந்த அளவு தேவையோ அந்த அளவிற்கு மட்டும் உழைப்பீர்கள். ஒரு நாளில் ஆயிரம் வேலைகளைச் செய்தாலும் சிறிதளவும் மன அழுத்தம் வராதவர்கள் இருக்கலாம். ஆனால் உங்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு நாளில் மூன்று வேலைகள் மட்டுமே செய்ய முடிவதாக இருக்கலாம். அது பரவாயில்லை. எப்போது வசதியாய் உணரவில்லையோ அது மேற்கொண்டு செயல் செய்யத் தேவையில்லை. அப்படியில்லாமல் அடுத்தவர் செய்வதைப் பார்த்து அவற்றையெல்லாம் நீங்களும் செய்ய முற்படாதீர்கள். வெளிசூழ்நிலைகளைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவிலான திறனுடன் தான் வந்திருக்கிறோம். எந்த இரண்டு மனிதர்களுமே ஒரே விதமான திறனுடன் பிறப்பதில்லை.
ஒவ்வொரு மனிதனும் தன்னளவில், ‘எந்த அளவிற்குச் செயல் எனக்குச் சரி?’ என்பதை முடிவு செய்யவேண்டும். உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் நூறு படுக்கையறை கொண்ட வீட்டில் வசிக்கட்டும். அவருக்கு ஹோட்டலில் வாழ்வது பிடிக்கிறதோ, என்னவோ? ஆனால் உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். அவர் செய்வதெல்லாம் நீங்களும் செய்யத் தேவையில்லை. இதுதான் இப்போதிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை. நாம் அடுத்தவரைப் போல் செயல் செய்ய முனைகிறோம். வேறொருவரைப் போல் இருப்பது ஆன்மீகம் அல்ல. ஆன்மீகம் என்பது உங்கள் உள்நிலை சம்பந்தப்பட்டது. நீங்கள் வெளியில் செய்யும் செயல்களுக்கும் உள்நிலையில் இருக்கும் நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வெளியில் எவ்வித செயல்களைச் செய்து கொண்டிருந்தாலும், உள்நிலையை ஒரு குறிப்பிட்ட வகையில் வைத்துக் கொள்ளலாம்.
உள்நிலையை எப்படி வைத்துக் கொள்வது என்று உங்களுக்குப் புரிந்துவிட்டால், வெளிச்செயல்களை சூழ்நிலைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு இருந்தால், இனி நீங்கள் செய்யும் செயல்கள் உங்களைப் பற்றியதாக இருக்காது. உண்மையில், செயல்கள் என்றுமே உங்களைப் பற்றியதல்ல. அவை எப்போதுமே சூழ்நிலையைப் பற்றியதுதான். சூழ்நிலைகளைச் சமாளிக்கவே செயல்கள் இருக்கின்றன. ஆனால் மக்கள் தங்களுக்குள் நிலையாய், தெளிவாய் இல்லாததினால், துரதிர்ஷ்டவசமாக, செயல்கள் சூழ்நிலைக்காக இல்லாமல் அவர்களைப் பற்றியதாக மாறிவிட்டது.
இந்த அளவிற்குச் செயல்கள் செய்து, உங்களுக்குள் நீங்கள் வேறுயாரோ ஒருவர் போல ஆக முயற்சிப்பது, வாழ்வை அணுகுவதற்குத் தவறான வழி. அதை விடுத்து நீங்கள் முதலில் உங்கள் உள்நிலையை வகுத்துக் கொண்டுவிட்டால், பின் சூழ்நிலைக்குத் தேவையானதை நீங்கள் செய்வீர்கள். இப்போது சூழ்நிலைதான் முக்கியமாக இருக்கிறது என்றால், உங்கள் செயல் முழுக்க முழுக்க சூழ்நிலைக்காகத் தேவை என்றால், உங்கள் முழுத்திறனிற்கு ஏற்ப நீங்கள் அதில் ஈடுபடுவீர்கள். ஒருவேளை நீங்கள் செய்யும் செயல்கள் இப்போது இவ்வுலகிற்குத் தேவையில்லை எனில், கண்மூடி அமர்ந்திடுங்கள். தியானம் என்பது சோம்பேறித்தனம் அல்ல. இன்னும் சொல்வதானால், இவ்வுலகில் பலர் கண்கள் மூடி அமர்ந்தார்கள் என்றாலே, இவ்வுலகை நாம் காப்பாற்றிவிடலாம்.