கேள்வியாளர்: சத்குரு, காதல் முறிவை எவ்வாறு கடந்து செல்வது?

சத்குரு: உங்களது உடலுக்கு மிகப்பிரமாண்டமான அளவுக்கு ஞாபகப்பதிவு உள்ளது. இந்தப் பதிவானது பல்வேறு நிலைகளில் உள்ளது. பரிமாண ஞாபகப்பதிவு மரபணுப்பதிவு, கர்மப்பதிவு, தன்னுணர்வான மற்றும் தன்னுணர்வற்ற நிலைகளின் பதிவுகள், தெளிவான மற்றும் தெளிவற்ற நிலைகளின் பதிவுகள் என்று பல ஞாபகப்பதிவுகள் உண்டு. உங்கள் முப்பாட்டன் எவ்வாறு இருந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் அவரின் மூக்கு உங்கள் முகத்தில் உள்ளது. எனவே தெளிவாக உங்களது உடல் மிகச்சிக்கலான ஞாபகப்பதிவின் செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

உங்களுடைய உடல் இத்தகைய சிக்கலான ஞாபகப்பதிவை உணரும் திறனைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் தொட்டு, உணர்ந்து, தொடர்பு கொள்வது என்னவாக இருந்தாலும், அதைப் பற்றிய ஞாபகப்பதிவைச் சேகரிக்காது என்று எண்ணுகிறீர்களா? அது எண்ணற்ற அளவிலான பதிவைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் சுலபமான ஒன்றாக தோன்றுகிறது. ஆனால் அது மிகச் சிக்கலானது. உங்களது உடல் ஞாபகம் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் இவ்வளவு சுலபமாக அதனால் மேலே ஏறவும் கீழே இறங்கவும் முடியாது. இன்றைக்கு, தசை நினைவு என்பதைப் பற்றி விளையாட்டு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் – அதாவது, ஒரு குறிப்பிட்ட நிலையிலான திறனுடன் அந்த விளையாட்டு விளையாடப்படும் வண்ணம் அவர்களின் உடலமைப்பில் ஞாபகப் பதிவை உருவாக்குகிறது. இது விளையாட்டுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட செயலுக்கோ மட்டும் அல்ல; ஒவ்வொரு நாளும் நீங்கள் அளவற்ற ஞாபகங்களை கிரகித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த ஞாபகப் பதிவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான இணக்கம் இருந்தால் அது ஆக்கப்பூர்வமாக இருக்கும். இந்தப் பதிவுகளுக்கு ஒரு விதமான குழப்பமான உணர்வு இருந்தால், அப்போது உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கலாம், ஆனால் இந்த பதிவு உங்களுக்கு எதிராக வேலை செய்யும். ஏனெனில் அது தனக்குள் ஒன்றுக்கொன்று முரணாகவும், எதிராகவும் இருக்கிறது.

ஏனெனில் எது மோசமாக நிகழ்ந்திருந்தாலும் அதில் உங்களுக்கு ஐம்பது சதவிகித பங்களிப்பு கட்டாயம் இருக்கிறது, இல்லையா? இந்த ஆறு மாதம் அல்லது ஒரு வருட காலத்தை அந்த ஐம்பது சதவிகிதத்தை சரிசெய்வதற்கு உபயோகப்படுத்துங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே இந்த கேள்வி எழுவதற்கான காரணம் அது உங்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது. உங்களது எண்ணம், உணர்ச்சிகள் – ஏன் உங்கள் உடலைக்கூட அந்த உறவில் நீங்கள் முதலீடு செய்துள்ளீர்கள். இந்த மூன்று விஷயங்களையும் நீங்கள் முதலீடு செய்துவிட்டீர்கள் என்றால் அது குறித்த நினைவுப் பதிவின் ஆழமான உணர்வு இருக்கிறது. உங்கள் உடலமைப்பில் பல்வேறான முரண்பாடான ஞாபகப்பதிவை நீங்கள் உருவாக்கினால், உங்களிடம் அனைத்தும் இருக்கும், ஆனால் ஒன்றும் இல்லாதது போல் நீங்கள் உணர்வதை, நீங்கள் பார்ப்பீர்கள். ஏனெனில் அது குழப்பமாக, ஆனந்தமிழந்து இருக்கிறது; அதற்கு உற்சாகம் இருப்பதில்லை. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நுட்பமான செயல்முறையை இளைஞர்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். மனித அமைப்பு வெறும் சதைப்பிண்டமாக இருந்தால், அதனுடன் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்துகொண்டிருக்க முடியும். ஆனால் இது ஒரு அதிநவீன இயந்திரம். இதை புத்திசாலித்தனமாக நீங்கள் கையாண்டால், அது எல்லாவற்றையும் அதிசயத்தக்கவகையில் செயல்படுத்த முடியும். இல்லையெனில் அது சாதாரணமான விஷயங்களைச் செய்யும்.

உங்களுக்கு கணினிகளைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில், நான் உங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஒன்றைக் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அது மிகச்சன்னமாக கூர்மையாக இருப்பதால், நீங்கள் அதை வீட்டுக்குக் கொண்டுசென்று, அதை வைத்து வெள்ளரிக்காய் வெட்டுவதற்குத் தொடங்கினீர்கள் என்றால், அது நல்லமுறையில் வெட்டக்கூடும். ஆனால் ஒரு கணினியை நீங்கள் வெள்ளரிக்காய் வெட்டுவதற்குப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பரிதாபத்துக்குரிய ஒன்றல்லவா? வெள்ளரிக்காயில் தவறேதுமில்லை. ஆனால் கட்டாயமாக உங்களிடம் ஏதோ தவறாக உள்ளது! உங்கள் கைகளில் என்ன இருக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளாத போது, ஏதோ மிக அடிப்படையான தவறு உங்களிடம் உள்ளது.

ஏதோ ஒன்றை நீங்கள் தொடுவதற்கு அல்லது உங்களையே ஈடுபடுத்திக்கொள்வதற்கு முன்பு, எந்த அளவுக்கு ஈடுபாடு கொள்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதுடன், இதை எங்கே கொண்டு செல்ல விரும்புகிறீர்கள் என்றும் பார்க்கவேண்டும். உங்கள் மேல் அது ஏற்படுத்தும் பல்வேறு தாக்கங்கள் என்ன என்று நீங்கள் பார்க்கவேண்டும். இந்த உயிருக்கு இது நல்ல முறையில் வேலை செய்யுமா அல்லது இந்த உயிருக்கு எதிராக செயல்படுமா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் கட்டுப்பாடற்ற ஒரு உயிராக மாறிவிடுவீர்கள். நான் "கட்டுப்பாடற்ற” என்ற வார்த்தையை ஒழுக்கத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தவில்லை. உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பும் திசையில் செல்வது நிறைவேறாமல் போவதைப் பற்றித்தான் நான் "கட்டுப்பாடற்ற" என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறேன். உங்கள் வாழ்வில் அறிவு நிலையில், உணர்ச்சி நிலையில் மற்றும் உடல் நிலையில் சிறிது முழுமையைக் கொண்டு வருவது மிக முக்கியமாக இருக்கிறது.

முழுமையான உயிராக மாறுங்கள்

ஒரு உறவில் இருந்து நீங்கள் வெளியேறினால் நீங்களே உங்களுக்குப் போதுமான அளவு அவகாசம் கொடுங்கள். குறைந்தது ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை நீங்கள் நீங்களாகவே இருக்கும் வகையில் உங்களுக்கு நீங்களே நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் எது மோசமாக நிகழ்ந்திருந்தாலும் அதில் உங்களுக்கு ஐம்பது சதவிகித பங்களிப்பு கட்டாயம் இருக்கிறது, இல்லையா? இந்த ஆறு மாதம் அல்லது ஒரு வருட காலத்தை அந்த ஐம்பது சதவிகிதத்தை சரிசெய்வதற்கு உபயோகப்படுத்துங்கள்.

உங்கள் மாயைகள் உடைக்கப்பட்டால் வாழ்க்கையானது உங்களை உண்மைக்கு நெருக்கமாக கொண்டுவருகிறது என்பதே அதற்கு அர்த்தம். "என் வாழ்வின் இயல்பு என்ன?" என்று நீங்கள் அமர்ந்து ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இது இருக்கிறது.

இவ்வாறு வாழ்க்கை உங்கள் கதவை தட்டும் போது உங்களுக்குள் ஆழமாக உற்று நோக்க வேண்டிய தருணம் அது. உங்களுடைய மாயைகள் உடைந்துவிடும் போது, தற்போது மாயை இல்லாமல் நீங்கள் இருந்தால் அது மிக நல்ல விஷயம். உங்கள் மாயைகள் உடைக்கப்பட்டால் வாழ்க்கையானது உங்களை உண்மைக்கு நெருக்கமாக கொண்டுவருகிறது என்பதே அதற்கு அர்த்தம். "என் வாழ்வின் இயல்பு என்ன?" என்று நீங்கள் அமர்ந்து ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இது இருக்கிறது.

ஒரு மாயையான நிலையில் இருந்து உச்சபட்ச நிதர்சனத்தை நோக்கி யாரோ ஒருவர் உங்களை நகர்த்துகிறார் என்றால், அந்த நபருக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். இத்தகைய விஷயங்கள் எல்லாம் எவ்வளவு பலவீனமானவை என்று உங்களை உணரவைப்பதன் மூலம் உங்களுக்குள்ளாக ஒரு ஆன்மீகப் பரிமாணத்தை அவர்கள் ஆரம்பித்து வைக்கின்றனர். அவர்கள் உங்களை ஏமாற்றி இருக்கலாம் அல்லது விலகி ஓடியிருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒன்றாக இருக்கலாம். அடிப்படையில் நீங்கள் மறுக்கப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் ஒரு பாதி உயிராக இருக்கிறீர்கள் மற்றும் வேறு எங்கிருந்தோ மறுபாதி தேவைப்படுகிறது என்று ஒருவிதமான மாயையான நம்பிக்கையில் நீங்கள் இருக்கும் காரணத்தால் மட்டும்தான் நீங்கள் மறுக்கப்பட முடியும். இல்லை, ஒரு சிறு துளி உயிராக இருக்கும் நீங்கள் ஒரு முழுமையான உயிர்த் துளியாக, படைப்பவரும் படைப்பும் ஒருங்கே இணைந்த அற்புதமான சேர்க்கையாக இருக்கிறீர்கள். ஆகவே, இந்த உயிரை பூர்த்தி செய்வதற்கு, மற்றொரு நபர் தேவைப்படுமளவுக்கு முழுமையற்றதாக ஏன் அது உணருகிறது? ஏதோ ஒரு நிலையில் அதன் முழுமையான இயல்பை அது உணரவில்லை. தற்போது, இந்த நபர் மற்றும் அந்த நபர் இல்லாமல் இது வாழ முடியாது என்ற வகையில் இதை உருவாக்கி வைத்துள்ளீர்கள். ஒரு முழுமையான உயிராக நீங்கள் மலர்ந்து இருந்தால் உறவுகள் முற்றிலும் வித்தியாசமான இயல்பில் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். யாரோ ஒருவரிடமிருந்து ஏதோ ஒன்றைப் பிழிந்தெடுப்பதாக இல்லாமல், இணைந்து வந்து, பரிமாறிக்கொள்ளக் கூடியவாறு மேலானதாக அது இருக்கும்.

ஆசிரியர்குறிப்பு: உணர்ச்சிரீதியாக கடினமான ஒரு தருணத்தில் இருக்கின்றீர்களா? ஈஷா யோகா ஆன்லைன் மூலம் சிறந்த முறையில் வாழ்க்கையைக் கையாள உங்களைத் தயார்ப்படுத்துங்கள். சவாலான காலகட்டம் தொடர்வதால், கொரோனா செயல் வீரர்களுக்கு ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு இலவசமாகவும், மற்ற அனைவருக்கும் பாதிக் கட்டணத்திலும் தற்போது வழங்கப்படுகிறது.

iyo-blog-mid