தியானலிங்கத்துடன் தொடர்புகொள்ள மூன்று வழிகள்!
ஒருவர் தியானலிங்கத்துடன் எந்தெந்த விதத்தில் தன்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்பதையும், தியானலிங்கத்துடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கான வழிமுறைகளையும் சத்குரு கூறுகிறார்.
கேள்வி : உடலளவில் தியானலிங்கத்தின் அருகாமையில் இல்லாமலே, அதனோடு நெருங்கிய தொடர்பில் இருக்க முடியுமா?
சத்குரு : நீங்கள் கேட்பது, தியானலிங்கத்தை உங்கள் வீட்டிற்கு எப்படி எடுத்துக்கொண்டு, இல்லை, திருடிக்கொண்டு போவது என்பதுதானே? (சிரிக்கிறார்). இல்லை, இல்லை, திருடிப் போகத் தேவையில்லை. அவர் உங்களுக்காகத்தான், நீங்கள் எடுத்துக்கொண்டு போவதற்குத்தான், நாங்கள் பாதுகாத்து வைத்துகொள்வதற்கு இல்லை. இதுவே சிறிய லிங்கமாக இருந்திருந்தால், நான் எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொன்னவுடன், அந்த லிங்கத்தையே பெயர்த்துக்கொண்டு சென்றிருப்பீர்கள். அதனால்தான் இவ்வளவு பெரிய லிங்கத்தை உருவாக்கியிருக்கிறோம் (சிரிக்கிறார்).ஒன்றும் சொல்ல தேவையில்லை. வெறுமனே அமருங்கள், வெறுமனே அந்த வடிவத்துடன் இருங்கள். உங்களுடைய கவனம் முழுமையாக, தீவிரமாக இருக்குமேயானால், அந்த வடிவம், தியானலிங்கம் உங்களுடனே, உங்களுக்குள்ளேயே இருந்துவிடும்.
நீங்கள் விரும்பினால் தியானலிங்கத்தை எடுத்துக்கொண்டு போகலாம்; இல்லை, நீங்கள் கண்டிப்பாக அவரை எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தியானலிங்கத்தை எப்போதுமே உங்கள் மனத்திரையில் வைத்திருந்தால், அவர் உங்களுக்குள் முற்றிலும் வேறு பரிமாணத்தில் செயல்படுவார்.
Subscribe
நீங்கள் மூன்று விதங்களில் தியானலிங்கத்துடன் இருக்கமுடியும்.
- நீங்கள் அவரிடம் பிரார்த்தனை செய்யலாம்; பிரார்த்தனை என்றால் இதைக்கொடு, அதைக்கொடு என்று கோரிக்கை வைப்பதல்ல. பிரார்த்தனையாகவே நீங்கள் மாறிவிடும் தன்மை. பிரார்த்தனையாக மாறிவிட்டால், அவருடைய ஆசிர்வாதங்கள் உங்கள் மேல் கொடையாகப் பொழியும்.
- நீங்கள் அவருடன், அந்த வடிவத்துடன் மிகுந்த ஈடுபாட்டுடன் விளையாட ஆரம்பித்தால், அதாவது உங்கள் உணர்ச்சியளவில் அவருடன் தொடர்புபடுத்திக் கொண்டால், உங்கள் தன்மையே பேரானந்தமாகிவிடும்.
- அல்லது உங்களையே அந்த வடிவத்துடன் கரைத்துக்கொள்ள விரும்பினால், அதனுடன் நீங்கள் ஒன்றிவிடலாம்.
இந்த மூன்று விதங்களில் எப்படி வேண்டுமானாலும், நீங்கள் தியானலிங்கத்துடன் இருக்கலாம். இப்படி இல்லையென்றால், அங்கு வெறும் கோரிக்கைத்தான் நடக்கும். கோரிக்கை வைப்பவர்களை அவர் சில காலம் சகித்துக்கொள்வார், அவர்கள் பக்குவப்படும் வரையில், வேறென்ன செய்ய முடியும்?
தியானலிங்கத்திடம் பிரார்த்தனை செய்யத் தேவையில்லை. வெறுமனே அங்கு அமரவேண்டும் என்றுதானே குறிப்புகள் வழங்கப்படுகின்றன. அங்கு போய் என்ன செய்யவேண்டும்? இதைப் பார்க்க வேண்டுமா? இதைச் சொல்ல வேண்டுமா? என்றால்... ஒன்றும் சொல்ல தேவையில்லை. வெறுமனே அமருங்கள், வெறுமனே அந்த வடிவத்துடன் இருங்கள். உங்களுடைய கவனம் முழுமையாக, தீவிரமாக இருக்குமேயானால், அந்த வடிவம், தியானலிங்கம் உங்களுடனே, உங்களுக்குள்ளேயே இருந்துவிடும்.
குறைந்தது, அந்த வடிவத்தோடு வெறுமனே இருக்கவேண்டும். இதைத்தான் தரிசனம் செய்வது என்று அழைக்கிறோம். கோரிக்கையல்ல, தரிசனம்.
அதனால் உள்ளுக்குள் சென்றபின், வெறுமனே அவரைப் பாருங்கள். அவரோடு இருங்கள். அந்த வடிவத்தை அப்படியே பருகிக்கொள்ளுங்கள். பின், அந்த வடிவம் உங்களுடன் அப்படியே தங்கிவிடும். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுடன் அவரும் வருவார். உங்களுடன் அவரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம்.
நீங்கள் தியானலிங்கத்துடனே உறங்கலாம். காலையில் அவருடனே விழித்துக் கொள்ளலாம். அவருடன் நடந்து செல்லலாம்; அவருக்குள்ளேயே உங்களை புதைத்தும் கொள்ளலாம். அது ஒவ்வொருவரின் தீவிரத்தை, ஈடுபாட்டினைப் பொறுத்தது. ஆனால் குறைந்தது, அந்த வடிவத்தோடு வெறுமனே இருக்கவேண்டும். இதைத்தான் தரிசனம் செய்வது என்று அழைக்கிறோம். கோரிக்கையல்ல, தரிசனம்.
ஆசிரியர் குறிப்பு : உள்நிலை, புறச்சூழ்நிலை இரண்டையும் கையாளும் விதமாய், மனிதன் தனக்குள்ளே இருக்கும் மகத்தான ஆற்றலை உணர்ந்து கொள்ள வழிகாட்டும் தியானலிங்கம்... மெய்ஞ்ஞானத்தின் விஞ்ஞானம்.
தியானலிங்கம்... மெய்ஞ்ஞானத்தின் விஞ்ஞானம் என்ற இந்த புத்தகத்தை Isha Shoppe மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.