ஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை
தனிச்சிறப்புமிக்க ஆதியோகி ஆலய பிரதிஷ்டை குறித்து சத்குரு பேசுகிறார். அடுத்துவரும் பல்லாயிரம் தலைமுறைகளுக்காக உருவாகியுள்ள இந்த இடத்தின் பிரதிஷ்டை நிகழ்வில், சுமார் 11,049 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதோடு, அதன்மூலம் உள்நிலையில் மகத்தான மாற்றத்தையும் பெற்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் ஓய்வின்றி உழைத்ததன் மூலமே இது சாத்தியமானது. அதோடு, பிரதிஷ்டையும் மிக அற்புதமாக நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளும் செயல்முறைகளும் வழக்கமாக ஒரு பிரத்யேக குழுவினருடன் நிகழ்த்தப்படும். ஆனால் நம்முடன் 11,049 தன்னார்வத் தொண்டர்கள் இருந்தனர். அவர்களின் உணர்ச்சியும், தீவிரமும் ஒத்துழைப்பும் நீங்கள் வேறெங்கும் கண்டிர முடியாத நிலையில் இருந்தது. அந்த அரங்கம் மக்களால் நிரம்பி வழிந்தது. அந்த இடம் முழுவதும் கட்டிமுடிக்கப்படும் முன்பே நாம் அங்கே பிரதிஷ்டை செய்தோம்!