32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், ஆனந்தம் நிறைந்த, மனஅழுத்தமற்ற புதிய பாதையை சாதனாவின் மூலம் தங்கள் வாழ்க்கையில் தாங்களே அமைத்துக் கொள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட தலமான கோவை ஈஷா யோகா மையத்தில் ஒன்றிணைந்துள்ளார்கள். சாதனாபாதை பங்கேற்பாளர்கள் அனைவரும் தீவிரமான மற்றும் கட்டுக்கோப்பான சாதனாவில் ஈடுபட்டு, பயிற்சிகளை முறையே செய்து, தங்களின் திறமைகளை ஈஷாவின் செயல்பாடுகளில் ஒரு அர்ப்பணிப்பாக வழங்குவதன் மூலம் பங்கெடுத்து, ஆசிரமத்தில் நடக்கவுள்ள பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களில் திளைக்க உள்ளார்கள். அடுத்த ஏழு மாதங்கள் அவர்கள் மேற்கொள்ள உள்ள சாதனாபாதை பயணத்தில் சந்திக்கும் ஏற்ற தாழ்வுகளின் பின் உள்ள நிகழ்வுகளை இந்த வலைப்பதிவுத் தொடரின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்...

ஆசிரம வேகத்திற்கு ஈடுகொடுக்க தயார்!

sadhanapada-moving-beyond-likes-and-dislikes-pic1

8 நாள் தீவிர ஒருங்கிணைப்பில் ஹட யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டதுடன் இன்னர் இஞ்சினியரிங் அடிப்படைகளையும் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்து, தீவிரம் மிகுந்த ஆசிரம வாழ்க்கையின் வேகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள் சாதனா பாதை பங்கேற்பாளர்கள். தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவதும், அதில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதும் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றியமைக்க வல்லது. அதுவும் சக்திமிக்க அதிர்வுகள் நிறைந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஷா யோகா மையத்தின் சூழல் ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நிலையில், தங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் சாதனா பாதை பங்கேற்பாளர்கள்.

சாதானா பாதையில் தினசரி யோகப் பயிற்சிகளுடன் தன்னார்வத் தொண்டு முக்கிய இடம் வகிக்கிறது. சில பங்கேற்பாளர்கள் தியானலிங்கம், லிங்கபைரவியில் உதவியாக இருக்க, மற்றவர்கள் அக்ஷயா (ஈஷா சமையற்கூடம்)வில் உதவுவதுடன், திட்ட மேலாண்மை, பொறியியல், சமுதாய நலத்திட்ட பணிகள், கிராஃபிக் வடிவமைப்பு, எழுத்தாக்கம், மொழி பெயர்ப்பு, வீடியோ எடிட்டிங், சமூக ஊடகங்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு - என தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை செய்கிறார்கள்.

சாதனா பாதை நிகழ்வுகள் காலை 4:30 மணிக்கு துயில் எழுப்புதலில் துவங்கி இரவு 9:30 மணிக்கு நிறைவடைகிறது. வழிகாட்டலுடன் சாதனாவிற்கான நேரம், தீர்த்த குண்டத்தில் நீராடல், தியானலிங்கம், லிங்கபைரவி தேவி, ஆதியோகி பிரதக்ஷனம், தினசரி பயிற்சித் திருத்தங்கள் என எல்லா அம்சங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எல்லாமே எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுவதில்லை! சிலநேரங்களில் எதிர்பார்ப்புகள் நிஜத்துடன் மோதவும் செய்கிறது. டம்! டமால்!

"குடிசையில் தங்கி, பழங்களை சாப்பிடுவோம் என்று நான் நினைத்தேன்"

ஆசிரமம் வருகிறோம் என்றதுமே, நம்மை ஒரு குடிசையில் தங்க வைப்பார்கள், பழங்கள் மட்டுமே சாப்பிட கிடைக்கும், அப்படியே நதியில் இருந்து தண்ணீர் குடிப்போம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால் இங்கே வந்ததும்தான் இங்கே தண்ணீர் கூட அப்படியே இயற்கையாக இருக்காது, தண்ணீரும் இங்கே சக்தியூட்டப்பட்டதாகத்தான் இருக்கவேண்டும் என்பதை கண்டுகொண்டேன். ஏனென்றால், இது சத்குருவின் இடம். ஆசிரமம் அளவில் சிறியதாக இருக்கும் என்பதாகவும் நினைத்திருந்தேன். ஆனால் விசாலமாக, மிகுந்த எழிலுடன் இருக்கிறது. முதன்முறையாக வரவேற்பு மையத்தில் அமர்ந்தபோது, ஒவ்வொரு அம்சமுமே கவனிக்க வைக்கும் ஈர்ப்புடன் இருப்பதை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தேன். நாங்கள் தூங்கும் அறைகள் நன்றாக பராமரிக்கப்படுகிறது, நாங்கள் இங்கு இலவசமாக தங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். உணவு அற்புதமாக, மிக சுவையாக இருக்கிறது. இதற்கு முன் சைவ உணவில் இவ்வளவு வகைகளை நான் ருசி பார்த்ததில்லை. வாழ்க்கை இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை. எங்கள் சாதனா சிறப்பாக நிகழ வேண்டும் என்பதற்காக எல்லாமே கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் எனக்கு மிக விருப்பமானதாக இருக்கிறது! - பீம், 18, ஜார்க்கண்ட்

sadhanapada-moving-beyond-likes-and-dislikes-pic2

"எல்லா சூழ்நிலையும் என் வளர்ச்சிக்கான படிக்கல்"

சாதனா பாதைக்கு முன், சாதனா என்றால் என்னளவில், அது ஹடயோகா மற்றும் கிரியா பயிற்சிகள் மட்டும்தான். எனது பயிற்சிகள் இல்லாமல் எனது சாதனா இல்லை என்றிருந்தேன். இப்போது எல்லாமே சாதனாவாக மாறியிருக்கிறது, அத்துடன் எனது வளர்ச்சிக்கான கருவியாகவும் இருக்கிறது. எனது அறையை சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி, யாருக்காவது உதவியாக இருப்பதானாலும் சரி, கடினமான சூழ்நிலையை சந்திப்பதாக இருந்தாலும் சரி, அல்லது வெறுமே உணவு உண்ணுவது அல்லது தூங்குவதாக இருந்தாலும் சரி, அதை எனது வளர்ச்சிக்கான படிக்கல்லாகவே பார்க்க முயற்சிக்கிறேன். இது எனது செயல் வல்லமையை, வாழ்க்கை பற்றிய அனுபவத்தை உயர்த்தியிருப்பதுடன், ஒவ்வொரு சூழ்நிலையையும் எப்படி அனைவரின் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்பதற்கான வழிகளையும் பார்க்க உதவுகிறது. - மானஸன், 21, கனடா

இன்னொரு "ஆன்மீக விடுமுறை" அல்ல

விடுமுறை என்றாலே ஓய்வும், ஆனந்த தேடலும் ஒருவர் நாடுவார். ஆனால் அப்படி இல்லாமல், சாதானா பாதை வளர்ச்சிக்கான தீவிரமான செயல்முறையாகவும், ஒருவரது வளர்ச்சிக்கு தினமும் சவால்களை முன்வைப்பதாகவும், மிகுந்த கவனமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தாங்கள் எதை செய்ய விருப்பமாக இருக்கிறார்களோ, பெரும்பாலும் அந்த இடங்கள் பங்கேற்பாளர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் "அதிசயத்தக்க" வகையில், அவர்கள் இதுவரை தங்களின் குறையாக நினைத்துக் கொண்டிருந்த பணிகளில் அல்லது சூழ்நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை பகிர்ந்து கொண்டுள்ளனர்‌. தன்னைத்தானே மாற்றியமைத்துக்கொள்ளும் இந்த பயணம் சாதாரணமானதால்ல. தீவிர ஈடுபாடு, மன உறுதி மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனநிலை இந்த பயணத்திற்கு அவசியம் தேவையானது.

"எனது பெரிய ஒரு விருப்பமின்மையை கடந்து வந்துவிட்டேன்"

எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, முதன்முறையாக பாகற்காயை சுவைத்து(?!) இப்படி ஒரு கசப்பான உணவுப்பொருள் இருக்கும் என்பதையே நம்பமுடியாமல் அதை சாப்பிட மறுத்திருக்கிறேன். அடுத்த முறை மீண்டும் எனது தட்டில் பாகற்காய் பரிமாறப்பட்ட போது, இந்த உணவு வகைகளை வடிவமைத்தது சத்குரு என்பது நினைவுக்கு வந்தது. அவரது முடிவின் மீது நம்பிக்கை வைக்க முடிவெடுத்தேன். எனது தட்டில் பரிமாறப்பட்டிருந்த பாகற்காய் துண்டுகள் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டது மட்டுமின்றி ஒவ்வொன்றையும் மெதுவாக விழிப்புணர்வுடன் மென்றேன்! எனக்கு விருப்பமில்லாதது என்று நினைத்த ஒன்றை கடந்து வந்ததும் என் மீது நான் முழு கட்டுப்பாடு வைத்திருக்கும் முடியும் என்பதை உணர்ந்தேன்.

குறிப்பு : அதன்பிறகு, பாகற்காயின் நன்மைகள் பற்றி கூகுள் செய்ததில், நீளும் நற்பலன்களின் பட்டியலையும், சத்துக்கள் நிறைந்துள்ளதையும்‌ பார்த்து அசந்து விட்டேன்‌.

- சமந்தா, 27, ஹைதி

sadhanapada-bisha-hall-seva

"விருப்பு வெறுப்புகளை கடந்து வளர துவங்குகிறேன்"

சாதனா பாதை வடிவமைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்க்கிறது. அது எனது நாளை திட்டமிடுதல் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடும் விதத்தில், என் மனதின் தேவையற்ற எண்ண ஓட்டங்களையும் செயல்பாடுகளையும் அகற்றிவிடுகிறது. எப்போது கண்விழிக்க வேண்டும், எப்போது தூங்கவேண்டும் எந்த நேரத்தில் எங்கே இருக்கவேண்டும் என எல்லாமே முன்னதாகவே நான் அறிந்திருக்கிறேன். அடுத்தது, உணவுக்கு என்ன சமைப்பது என்ற கவலையும் இல்லை. எப்போது மௌனமாக இருக்கவேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இது எனது ஒரு நாளை மிக எளிமையாகவும் ஆக்கப்பூர்வாகவும் மாற்றியிருக்கிறது. ஒரு நாளில் 16-17 மணிநேரம் எனது செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது, ஆனால் அதை நான் திட்டமிடக்கூட வேண்டியதில்லை. நான் செய்வதெல்லாம் வழங்கப்பட்டுள்ள திட்டத்தை பின்பற்றுவதுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மௌனமாக இருக்கவேண்டிய நேரத்தில் அப்படி இருக்க ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டதும் அதுவும் சரியானது. நான் இதற்காகவே இங்கே வந்திருக்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதோடு, சாதனா பாதையின் துவக்கத்தில் சத்குரு முதன்முறையாக எங்களை சந்தித்தபோது, இங்கே ஆசிரமத்தில் என்ன செய்ய சொன்னாலும் ஒருவேளை அது காரண அறிவிற்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்று எங்களை கேட்டார். அப்போது, முழு மனதுடன் "சரி" என்று நான் பதிலளித்திருந்தேன். எப்போதும் அந்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறேன்‌. மெதுவாக ஆனால் உறுதியாக, எனது விருப்பு வெறுப்புகளை கடந்து வளர துவங்கியிருக்கிறேன்.

- இந்து பெரூரி, 34, கலிபோர்னியா

தேர்ந்தெடுக்க ஏதுமற்ற தேர்வு

sadhanapada-moving-beyond-likes-and-dislikes-pic3

sadhanapada-moving-beyond-likes-and-dislikes-pic4

ஒருவர் தனது சௌகரியமான வட்டத்திலிருந்து வெளியே செலவழிக்கும் ஒவ்வொரு ஷணமும் வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருக்க முடியும். இத்தகைய வாய்ப்புகள் நிறைந்த ஒரு களமாக சாதனா பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதனா பாதையின் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லா ஆனந்தம், உள்நிலையை செம்மைப்படுத்தி ஆன்மீக செயல்முறையை துவங்குவதற்கும் அதன்மூலம் பலன் பெறுவதற்கும் துணைநிற்கிறது பழக்கமில்லாத சூழ்நிலைகளால் இது ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு ரோலர் கோஸ்ட்டர் பயணமாக ஒருவருக்கு இருக்கலாம். வீட்டை விட்டு 7 மாதங்கள் விலகி இருப்பது, ஒரு நாளில் இரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்வது, வழக்கமாக தூங்கும் நேரத்தைவிட குறைவான நேரமே தூங்குவது மற்றும் பலதரப்பட்ட மக்கள் நிறைந்த சூழ்நிலையில் பேசி பழகுவது என பங்கேற்பாளர்களுக்கான சவால்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

"எனது ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவர முயற்சிக்கிறேன்"

இங்கே ஆசிரமம் வந்தபிறகுதான் எனது ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி இருப்பதை என்னால் உணர‌ முடிந்தது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் கட்டாய உணர்வு என்னிடம் இருக்கிறது என்பதை நான் நினைத்துகூட பார்த்ததில்லை. ஏனென்றால், சாதாரணமாக ஃபோனை பயன்படுத்துவதே என் வழக்கம். சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பவனும் இல்லை. ஆனால், குறைந்தபட்சமாக ஃபோனை பயன்படுத்துவது மிக சிரமமானது என்பதை உணர்ந்தேன். எனது தன்னார்வத் தொண்டு போது ஏதேனும் ஒரு தேவை காரணமாக வாட்ஸ்அப்பை திறந்ததும், அப்படியே மற்ற குழுக்கள் மற்றும் தனிப்பட்ட செய்திகளுக்கு பதிலளிக்க துவங்கி விடுகிறேன். எனது தன்னார்வத் தொண்டின் பகுதியாக இல்லையென்றாலும், யூ டியூபில் சத்குருவின் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வுடன் ஃபோனை பயன்படுத்துவது, நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தேன், ஆனால், என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்று மனதளவில் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் கவனிப்பது என இந்த கட்டாய உணர்வில் இருந்து வெளிவர முயற்சி செய்கிறேன்‌.

- கீர்த்தன் கஜ்ஜார், 23, குஜராத்

"என் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன், இப்போது அதே வேலையை சாதனாவாக மேற்கொள்கிறேன்"

sadhanapada-moving-beyond-likes-and-dislikes-pic-simi-das

மருத்துவராக பணியில் இருந்த நான், சாதனா பாதையில் பங்கேற்க வேண்டும் என்று ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். ஆனால், இங்கே அதையே சேவையாக மேற்கொள்ள வேண்டும் என்றதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மாற்றம் எதிர்பார்த்து வந்த எனக்கு முதலில் சேவையில் ஈடுபடவே சிரமமாகவும், உள்ளிருந்து எதிர்ப்புணர்வும் இருந்தது. ஆனால், இப்போது மெதுவாக எல்லாமும் மாறி வருகிறது. சேவையின் போதும், தினசரி கடமைகளின் போதும், வெளி சூழ்நிலையை சிரமமாக உணர்ந்தால் இன்னர் இஞ்சினியரிங் கருவிகளை பயன்படுத்துகிறேன்.

தன்னார்வ தொண்டை என் சாதானாவாக பார்க்க துவங்கியதும், எனக்குள்ளிருக்கும் எதிர்ப்புணர்வு குறைகிறது. முன்பு, முடிவில்லாத கேள்விகளுடன் மக்கள் எங்கேயும் எப்போதும் அணுகி துளைப்பது போல உணர்வேன். இப்போதும் அதே சூழ்நிலை ஏற்பட்டாலும் பொறுமையுடனும், புன்னகை மலர்ந்த முகத்துடனும் மக்களுக்கு பதிலளிக்கிறேன்.

- டாக்டர் சிமி தாஸ், 29, அசாம்

"எளிமையான குறிப்புகள் என் வளர்ச்சிக்கு உதவுகிறது"

இதைப்போன்ற ஒரு இடத்தில் என்னை தங்க அனுமதித்து, என்னை கவனித்து, பல்வேறு வழிகளிலும் என்னை வளர அனுமதிக்கும் சத்குருவையும் மற்றும் இங்குள்ள அனைவரையும் நினைக்கும்போதே எனக்குள் நன்றியுணர்வு பொங்குகிறது. தங்கள் நல்வாழ்வுக்காக மட்டுமின்றி, அனைவரின் நல்வாழ்க்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள இத்தனை மக்களை பார்க்கும்போது என் கண்களில் தானாகவே கண்ணீர் பெருகுகிறது.

காலை, மாலை இருவேளை பயிற்சியில் மட்டுமல்ல, நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும், சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எங்களின் சாதனா ஆசிரமத்தின் ஒவ்வொரு அம்சத்திலும்‌ இருக்கிறது. நாங்கள் பின்பற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள எளிமையான குறிப்புகள் எனது உள்நிலை வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு இடத்தை உருவாக்கி, பராமரிக்க வேண்டுமானால், எப்படிப்பட்ட மக்கள் இங்கிருக்க வேண்டும் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

- வைஷ்ணவி, 26, தெலுங்கானா

இது எப்படி என்னை மாற்றியமைக்கும்?

சாதனா பாதையின் முதல் மாதம் நிறைவடையும் இந்த தருணத்தில், பங்கேற்பாளர்கள் தங்களுக்குள்ளிருக்கும் இனம்புரியா தன்மைகளையும், வெளியில் இதுவரை பரிச்சயமில்லாத சூழ்நிலைகளை சந்திக்கிறார்கள். சிலநேரங்களில் தெளிவின்மை, குழப்பம், மற்றும் உண்மையை நேரில் சந்தித்ததால் ஏற்படும் தரைதட்டும் உணர்வு என எல்லாமும் நடந்திருக்கிறது. சிலருக்கு, இந்த பாதையை சத்குரு வடிவமைத்திருக்கிறார் என்று அறிந்து கொண்டதே போதுமானதாக இருக்கிறது. எப்போதுமே இன்னும் கொஞ்சம் தெளிவாக, தீவிரமாக, சமநிலையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள் (நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சியும் செய்கிறவர்கள்!) இருக்கிறார்கள். சிலர் சாதனா பாதையின் சாகசங்களை அனுபவிக்கிறார்கள்.

புதிதாக சவால்களை எதிர்கொள்ளும் போது, ஒவ்வொருவரின் வரம்புகளும், அவரவர் மனதின் தந்திரமும், "இது எப்படி எனது வளர்ச்சிக்கு உதவும்?" என்று எளிதாகத் தோன்றும் தர்க்கரீதியான கேள்வியும் அவ்வப்போது வெளிப்படும். இதையெல்லாம் கடந்து வந்த அனுபவம் பற்றி சாதானா பாதை 2018 பங்கேற்பாளர் என்ன பகிர்ந்து கொள்கிறார் பார்ப்போம்‌.

சாதனா பாதையில் தனது அனுபவங்களை முன்னாள் பங்கேற்பாளர் பகிர்ந்து கொள்கிறார்கள்.

sadhanapada-moving-beyond-likes-and-dislikes-aluminisharing

சாதனா பாதையில் பங்கேற்க விண்ணப்பித்த போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிறிதளவே அறிந்திருந்தேன்‌. தேர்வானதும், உற்சாகமிருந்த அதே அளவுக்கு பதட்டமும் இருந்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, என் உடல் மீதும் என் மனம் மீதும் உறுதியான ஆளுமையுடன் என் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்ற தீர்க்கத்துடன் நான் இருந்தேன்.

சாதனா பாதையின் போது, எனது எண்ணங்களும் உணர்ச்சிகளும் ஆயிரம் கதைகளை எனக்கு சொன்னதுடன், நான் இங்கே இருப்பது, தினமும் யோகாவும் சேவையும் செய்வதையும் கூட கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது. வெறுமனே குறிப்புகளை பின்பற்றுவதால் என்னில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதை புரிந்துகொள்ளவே சிரமப்பட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கும் போது, என் வாழ்க்கையிலேயே மிகச்சிறந்த நாட்களாக அந்த 7 மாதங்கள் தான் இருக்கிறது. வேறு எந்த வீடோ/கல்லூரியோ/பணியிடமோ இதற்கு ஈடாகாவே முடியாது. ஆசிரமத்தின் உறுதுணையான சூழலும் கட்டமைப்பும் அளவிட முடியாத பக்கபலமாக இருந்தது. ஆன்மீகத்தில் வளர வேண்டுமெஎன்ற நாட்டமுடைய மற்றவர்களுடன் இணைந்து ஆனந்தமாக செயலை செய்ய கற்றுக்கொண்ட அனுபவம், ஆன்மீக செயல்முறை பற்றிய எனது புரிதலை தலைகீழாக மாற்றியிருக்கிறது.

இப்போது, மீண்டும் வீடு திரும்பிய பிறகுதான், சாதானா பாதை எனக்குள் எவ்வளவு உறுதியான ஒரு அஸ்திவாரத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், வெளி சூழ்நிலை எப்படி இருந்தாலும் எனக்குள் நான் எப்படி இருக்கிறேன் என்பது எனது தேர்வாகவே இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்.

-கௌரவ், 29, ராஜஸ்தான்

விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள் பற்றி சத்குரு

சத்குரு: உங்கள் குணங்களை வடிவமைப்பது உங்களின் விருப்பங்களும் வெறுப்புகளும்தான். "எனது குணம்" என்று நீங்கள் குறிப்பிடுவது விருப்புகளும் வெறுப்புகளும் சேர்ந்தமைந்த சிக்கலான ஒரு கலவை. உங்களுக்கும் இன்னொரு மனிதருக்கும் என்ன வித்தியாசம்? உங்கள் விருப்பமும், வெறுப்பும் வெவ்வேறாக இருக்கிறது, அவ்வளவுதானே. இப்போது யோகாவின் அடிப்படை, உங்களை இந்த விருப்பம் மற்றும் வெறுப்பை கடந்து செல்ல உதவுவதுதான். இங்கே நாம் என்ன செய்தாலும், அது அடிப்படையில் உங்கள் விருப்பு மற்றும் வெறுப்பை அழிக்கும் செயல்முறைதான்.

தர்க்கரீதியான மனமானது, "எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்வேன். இது எனது சுதந்திரம்" என்று நினைக்கும். உங்களை பிணைத்து வைத்திருக்கும் அடிப்படையே உங்களின் விருப்பமும் வெறுப்பும் தான். ஆனால், உங்களுக்கு விருப்பமானதை செய்வதிலேயே உங்களின் சுதந்திரம் இருக்கிறது என்று உங்கள் மனம் நம்ப வைக்கும்.

சுதந்திரம் பற்றி மக்களிடம் இந்த குழந்தைத்தனமான கருத்துக்கள் இருக்கிறது : "எனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை செய்வேன்" இது சுதந்திரம் இல்லை. இதற்கு கட்டாயம் என்று பொருள். சுதந்திரம் என்பது உண்மையில் என்ன? சுதந்திரம் என்பதற்கு, உங்களுக்குள் எந்தவிதமான கட்டாயங்களும் இல்லை என்று பொருள். அப்படி இருந்தால்தான், எது தேவையாக இருந்தாலும், அதை ஆனந்தமாக உங்களால் செய்ய முடியும்.

அடுத்து வருவது...

சில சாதனா பாதை பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் சேவை ஆர்வமூட்டும் சவாலாக இருப்பதுடன், அதன் புதுமையையும் அவர்கள் விரும்புகிறார்கள். சிலருக்கு அவர்களின் கடந்த காலத்தின் நிழலை மீண்டும் ஒருமுறை ஆசிரம சூழலில் வாழ்ந்து பார்ப்பதாக இருக்கிறது. ஈஷா யோகா மையத்தில் தன்னார்வத் தொண்டு என்பது எளிமையான செயல்கள் முதல், மிக நுட்பமான செயல்கள் வரை எல்லா நிலையிலும் நடக்கிறது. மக்களை நேரடியாகவும், ஆசிரமம் என்ற எல்லையை கடந்தும் இந்த செயல்களின் தாக்கம் இருக்கிறது. தொடரின் அடுத்த பகுதியில், தன்னார்வத் தொண்டு பற்றிய பங்கேற்பாளர்களின் அனுபவங்கள் மற்றும் உலக சுற்றுச்சூழல் பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் செயல்களில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு பற்றி பார்க்க இருக்கிறோம்.

sadhanapada-holding-saplings

ஆசிரியர் குறிப்பு : சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், அடுத்த வருடத்திருக்கான சாதனா பாதைக்காக முன்பதிவு செய்வதற்கும் இங்கே கிளிக் செய்யவும்.